கல்வாரி மரத்தில் பூத்த ஏழு பூக்கள்
22 அவன்(பிலாத்து) மூன்றாந்தரம் அவர்களை நோக்கி: ஏன், இவன் (இயேசு) என்ன பொல்லாப்புச் செய்தான்? மரணத்துக்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகையால் நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
23 அப்படியிருந்தும் அவரைச் சிலுவையில் அறையவேண்டுமென்று அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அவர்களும் பிரதான ஆசாரியரும் இட்ட சத்தம் மேற்கொண்டது.
24 அப்பொழுது அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்து,
25 கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் இஷ்டத்துக்கு ஒப்புக்கொடுத்தான். லூக்கா 23 : 22-25
சொந்த ஜனத்தின் கூக்குரலால் ஒரு பாவமும் அறியாத பரிசுத்தரை அந்த பிலத்து சிலுவை மரணத்துக்கு ஒப்பு கொடுத்தான். காலகட்டத்தையே இரண்டாக பிரித்து மனுக்குலதுக்கும் இறைவனுக்கும் இடையே இருந்த திரை சீலையை இரண்டாக கிழித்த நம் இயேசு கொல்கத்தா மலையில் முன்று ஆணிகளில் தொங்கினவராய் தன்னுடைய கடைசி சொட்டு இரத்தத்தையும் நமக்காய் சிந்தி கல்வாரி சிலுவையல் ஏழு பூக்களை உதிர்த்தார்
1) மன்னிப்பு
"பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" (லூக்கா 23 : 34)
மத்தேயு 6:14 ல் அருள்நாதர் கூறுகிறார்
மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.
பொதுவாக இன்றைய நாட்களில் நாம் பல வாக்குறிதிகளை விடுகின்றோம் பலவற்றை பேசுகிறோம் ஆனால் நாம் பேசுவதற்கும் நமது வாக்குறிதிகளுக்கும் நமது வாழ்க்கையில் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அருள்நாதர் தன்னுடன் இருந்த மக்களுக்கு கூறினார் அதேபோல் அவர் மன்னித்தது மட்டுமல்ல பிதாவிடம் மன்னிப்பதற்காக பரிந்து பேசுவதையும் பார்க்கிறோம்
பிதாவே, இவர்களுக்கு மன்னியும்
சிறுவயதில் நாம் தவறுகள் செய்யும் போது தாத்தா பாட்டி , அப்பா அம்மாவிடம் சொல்லுவார்கள் அவன் தெரியாம செய்துவிட்டான். விட்டுவிடு என்று. அதுபோலதான் நம் தேவன் நமக்காக பிதாவிடம் பரிந்து பேசுகிறார். காரணம் என்ன? அவர்கள் அறியாமல் செய்தது. அதனால் தான் கூறுகிறார் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே. இன்று நாம் அறிந்து இயேசுவை தினம்தோறும் சிலுவையில் அறைந்துகொண்டிருக்கிறோம். நாம் அனைவரும் தேவனிடமிருந்து மன்னிப்பை பெற வேண்டியவர்களாக காணப்படுகின்றோம். வேதம் நமக்கு சொல்கிறது. நாம் எல்லோரும் பாவம் செய்திருக்கிறோம். "ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யதக்க நீதிமான் பூமியிலில்லை" என்று பிரசங்கி 7:20 ல் பார்க்கிறோம். "நமக்கு பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிகிறவர்களாயிருப்போம் சத்தியம் நமக்குள் இராது." என்று 1யோவான் 1:8 ல் பார்க்கிறோம். இதன் விளைவாக, நமக்கு தேவனின் மன்னிப்பு மிகவும் அவசியமானதாக இருக்கிறது. தேவன் அன்புள்ளவராகவும் இரக்கமுள்ளவராகவும் - நம் பாவங்களை மன்னிக்க தயை பொரிந்தினவராகவும் இருக்கிறார். "ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்" என்று நமக்கு 2 பேதுரு 3:9 சொல்கிறது. நமது பாவங்களுக்கான சரியான தண்டனை மரணமே. "பாவத்தின் சம்பளம் மரணம்" என்று ரோமர் 6:23 ல் பார்க்கிறோம். நாம் நமது பாவங்களினால் சம்பாதித்தது நித்திய மரணம் ஆகும். ஆனால் தேவன் தமது பரிபூரண திட்டத்தில், இயேசுகிறிஸ்துவாக மனிதனானார். நமது பாவங்களுக்கு தண்டனையான மரணத்தை அவர் ஏற்றுக் கொண்டு சிலுவை மீது மரித்தார். "நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்" என்று 2கொரிந்தியர் 5:21 ல் பார்க்கிறோம். நமது பாவங்களுக்கு தண்டனையான மரணத்தை அவர் ஏற்றுக் கொண்டு சிலுவை மீது மரித்தார். நமக்கு மாத்திரமல்ல முழு உலகத்தின் பாவத்திற்கும் மன்னிப்பை இயேசுவின் மரணம் அளித்தது. "நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே, நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல. சர்வலோகத்தின் பாவங்களை நிவர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்" என்று 1யோவான் 2:2 ல் பார்க்கிறோம். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமென்று விரும்புகிறீர்களா? மீளமுடியாதபடித்தோன்றும் குற்ற மனப்பான்மையால் வேதனைப் பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? இதோ நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசிக்கொண்டு கல்வாரியில் தொங்கும் இயேசுவை நோக்கி பார்ப்போமா?
"அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய (இயேசுகிறிஸ்துவின்) இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது" எபேசியர் 1:7
2) இரட்சிப்பு
"இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரலோகத்திலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்" (லூக்கா 23 : 43)
இரட்சிப்பு என்பது மிகவும் சுலபமானது! அவன் கஷ்டபட்டு அதை பெறவேண்டிய அவசியமே இல்லை! எப்படியெனில் இயேசுவின் இரட்சிப்பின் அடிப்படை என்னவென்றால்:
14. சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும், 15. தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். யோவான் -3:14,15
இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்திரத்தில் ஆண்டவரின் வழினடத்துதல்படி கானானை நோக்கி போய்கொண்டிருந்தபோது, அவர்கள் செய்த தவறுகளின் காரணமாக கொள்ளிவாய் சர்ப்பங்களால் கடிபட்டு மாண்டுபோயினர். அவர்கள் தேவனிடத்தில் முறையிட்டபோது, தேவன் ஒரு வெண்கல கொள்ளி வாய் சர்ப்பத்து உருவத்தை செய்து, அதை ஒரு கம்பத்தில் தூக்கி வைக்கும்படிக்கும், சர்ப்பத்தால் கடிபட்டவர்கள் உடனே அதை நோக்கி பார்த்தால் போதும் பிழைப்பார்கள் என்றும் கட்டளயிட்டார். கொள்ளிவாய் சர்ப்பத்தால் கடிபட்டவர்கள் மேலே தூக்கி வைக்கப்பட்ட்ட வெண்கலசர்ப்பத்தை நோக்கி பார்த்து, அவ்வாறு பார்த்த ஒரே காரணத்துக்காக எவ்வாறு தப்பிததார்களோ, அதுபோலவே சாத்தான் என்னும் சர்ப்பத்தால் கடிக்கப்பட்டு பாவம் என்னும் படுகுழியில் கிடக்கும் மனிதர்கள் சிலுவையில் தூக்கப்பட்ட இயேசுவை நோக்கி பார்த்தாலே போதும் அவரை விசுவாசித்தாலே போதும் சாத்தானின் இடத்துக்கு போவதிலிருந்து தப்பித்து விடலாம் அவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பு இல்லை! இந்த இரட்சிப்பை பற்றி யோவான் இவ்வாறு குறிப்பிடுகிறார் :
யோவான் -3:18. அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; என்றும் யோவான்-1:12. ல் அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். இங்கு இயேசுவை ஒருவர் ஏற்றுக்கொண்ட உடனேயே அவன் பிசாசின்பிள்ளை என்ற ஸ்தானத்திலிருந்து "தேவனின் பிள்ளை" என்ற ஸ்தானத்துக்குள் (அதாவது தேவனின் அன்பான கரத்துக்குள்) வந்துவிடுவாதால் "என்னிடத்தில் வந்த எவரையும் நான் புறம்பே தள்ளுவதில்லை" என்ற இயேசுவின் வார்த்தை அடிப்படையில் அவன் சுலபமான இரட்சிப்பை பெறுகிறான்!. இயேசுவும் அவன் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு, யாரையும் வேண்டாம் என்று ஒருபோதும் தள்ளுவதில்லை! அவன் கிருபைக்குள் இருப்பதால் பாவம் ஒருபோதும் மேற்கொள்ளவே முடியாது என்று பவுலும் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் குறிப்பிடுகிறார்! இந்த இரட்சிப்பு முற்றிலும் இலவசம்! கிரயம் எதுவும் இல்லை! அதை இயேசு செலுத்திவிடார். அது தேவனின் இலவச ஈவு! ரோமர் 3:24 இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; எபேசியர் 2:8 கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; பாருங்கள் இந்த இலவச இரட்சிப்பை கள்ளன் எப்படி பெற்று கொண்டான் முதலாவது பாவத்தை உணர்கிறான் லூக்கா 23 : 41(a) நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம் நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம் என கூறுவதை பார்க்கலாம்.இரண்டாவது இயேசுவை ஆண்டவர் என்று அறிக்கையிடுகிறான் லூக்கா 23 : 42(a) இயேசுவை நோக்கி: ஆண்டவரே முன்றாவது தேவனின் இரண்டாம் வருகையை அறிக்கையிடுகிறான் லூக்கா 23 : 42(b) நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் ஆம் நாமும் இந்த கள்ளனை போல நம்முடைய பாவத்தை உணர்த்து அதை அறிக்கையிட்டால் இந்த பெரிதான இரட்சிப்பை இலவசமாக பெற்றுகொள்ள முடியும்
தேவனுடைய இரட்சிப்பு என்பது நாளைக்கோ, ஒரு வாரம் விட்டோ, ஒரு மாதம் விட்டோ, ஒரு வருடம் விட்டோ கிடைப்பதுக்கிடையாது.
பாவத்தில் இருந்தும்,பாவத்தின் தண்டனையிலிருந்தும், விடுதலை கொடுக்க, நமக்கு ஒரு புது வாழ்வை கொடுக்க, பாவத்தினாலும், பாவத்தின் வல்லமையினாலும் மரித்துக்கொண்டிருக்கிற நம்முடைய வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையை தர இயேசு இன்று அழைக்கிறார். சிலுவையில் மரித்துக்கொண்டிருந்த கள்ளனுக்கு மாத்திரமல்ல இன்றைக்கும் அவரை நோக்கி கூப்பிடுகிற அனைவருக்கும், அவரோடு கூட இருக்கும்படியான பாக்கியம், ஸ்லாக்கியம் கிடைக்கிறது.
லூக்கா 15:7 அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ஒரு வேளை இதை வாசிக்கிற யாராவது, இந்த உன்னதமான நேசரின் அன்பை இழந்திருப்பீர்களானால், இழந்துப்போன சந்தோஷத்தை, சமாதானத்தை, உங்களுக்கும் எனக்கும் மறுபடியும் கொடுக்க இந்த இயேசு வல்லவர். அவரை மறுதலித்து அவரை விட்டு பின் வாங்கி போய்யிருப்போமானால், இன்று இந்த குரல் நம்மை நோக்கி வருகிறது. "இன்று" இன்றைக்கே உன்னுடைய வாழ்க்கையில், குடும்பத்தில், படிப்பில், தொழிலில், உன்னுடைய பெலவீனத்தில், நோய்களில், உனக்கு ஒரு முழு நிச்சயத்தை, நம்பிக்கையை கொடுக்க காத்துக்கொண்டிருக்கிறார்.. நாமும் நமது பாவத்தை உணர்ந்து சிலுவையில் தொங்கும் இயேசுவை நோக்கி பார்ப்போமா?
3) அரவணைப்பு
தம்முடைய தாயை நோக்கி : "அம்மா, இதோ, உன் மகன் என்றார்". சீடனை நோக்கி : "இதோ உன் தாய் என்றார்" (யோவான் 19 : 26-27)
இறுகிய; மன இருக்கத்தின் நேரமாகவே அது இருந்திருக்கும். ஒரு மகனை தம் சொந்த இனத்தவரே, மதத்தவரே கொலை செய்யப்படுமளவு குற்றம் சுமத்தி, சிலுவையில் அறையும் பொழுது அருகிலிருக்கும் தாய்க்கு ஓர் இறுகிய உடைந்து போன சூழலே இருக்கும். தன்னை, தன் இனத்தவரே "இவன் எங்கள் இனத்தைச் சார்ந்தவன் இல்லை" என்பதாக ஊருக்குப் புறம்பே அவமானமாகச் சாகடித்துக் கொண்டிருக்கும் காட்சியை, தன் தாயும் நேரில் காண நேரும் சூழல், ஒரு மகனுக்கு மன இறுக்கத்தையும், கையறு நிலையையும் தான் கொண்டு வந்திருக்கும். இருவரும் இதயம் வெடித்து இறக்குமளவுக்கு ஏதுவான சூழலே அது என்றாலும் மிகையில்லை. தேவனுக்குள், பரமதந்தையின் ஐக்கியத்துக்குள் இருப்பவரே, இந்த மனித இயல்பையும், இறுக்கத்தையும், கையறு நிலையையும் மீறி, இறைவன் சித்தப்படி எது நடப்பினும் அதற்கு ஆம் என்றும் ஆமென் என்றும் வாழ முடியும். இயேசு அப்படித்தான் வாழ்ந்தார்.
இன்று முதியோர் இல்லங்களில் இருக்கும் பெற்றோர் பெருகி விட்டனர்.தன் ரத்தத்தை பாலாக்கி தன் குழந்தையை ஊட்டி சீராட்டி வளர்த்த தாய் முதிர் வயதானதும்,பிள்ளைகளுக்கு பாரமாகி விடுவதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.தாய் தன் கடமைகளை செய்யாதிருந்தால் மகன்,மகள், இப்படியான ஆசீர்வாதத்தோடு வளர்ந்திருப்பார்களா என நினைக்க தோன்றுகிறதல்லவா? அனால், இத்தகைய பெற்றோர் தங்கள் பிள்ளைகளை குறை கூறாமல் அவர்களுக்காக பரிந்து பேசுவார்கள். இதுவே தாயின் அன்பு.
இயேசு கிறிஸ்து மரண தருவாயில் வேதனையின் மத்தியில் சிலுவையில் தொங்கி கொண்டு இருக்கும் போதும் தான் மூத்த மகனாய் இருந்ததை உணர்ந்து தன் பிரிய சீசனாகிய யோவானை பார்த்து, "இதோ உன் தாய்" என்று சொல்லி, தாய்க்கு ஒரு புகலிடத்தை ஏற்படுத்தினார். தன்னை நேசித்த யோவானை, தன் தாயையும் நேசிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
உன் தாய் வயது சென்றவளாகும் போது அவளை அசட்டை பண்ணாதே..(நீதி 23:22)
ஒரு தாயின் வல்லமையான ஊக்கமான ஜெபம் எப்படியாய் ஒவ்வொரு குடும்பங்களையும் கட்டுவதை நாம் காண்கிறோம். அந்த தாய் வயது சென்றவளாகும் போது அவர்களை கவனிப்பது நம் கடமையல்லவா? "உன் நாட்கள் நீடித்திருப்பதட்கு உன் தகப்பனையும்,உன் தாயையும் கனம் பண்ணுவாயாக (யாத் 20:12)
அப்பா என் பெற்றோரை நான் அலைக்கழிக்க மாட்டேன் என்ற பொருத்தனையோடு சிலுவையில் தொங்கும் இயேசுவை நோக்கி பார்ப்போமா?
4) தத்தளிப்பு
ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். (மத்தேயு 27 : 46)
இவர் தேவனுடைய குமாரனாயின் ஏன் இவ்வாறு கதறவேண்டும் என எல்லா மனிதர்களுக்குள்ளும் இது ஒரு கேள்விக்குரியான வார்த்தையாக காணப்படுகின்றது. வேதத்தை ஆராய்ந்து பார்த்தால் ஏசாயா 59:2 இப்படி கூறுகின்றது உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாக பிரிவினை உண்டாக்குகிறது, உங்கள் பாவங்களே அவர் உங்களுக்கு செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது. ஆகவே தேவனுடைய முகத்தை மனுஷன் பார்க்க முடியாமல் மறைப்பது பாவம் நமக்கும் தேவனுக்கும் இடையே பாவம் ஒரு இரும்பு திரையாக உள்ளது. தேவன் நம்மை பார்க்க முடியாத சந்தர்ப்பம் பாவத்தின் மூலம் வருகின்றது.
யோவான் 8:29 ல் பார்ப்போமானால் என்னை அனுப்பினவர் என்னுடனே கூட இருக்கிறார் பிதாவுக்கு பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னை தனியேயிருக்கவிடவில்லை என்றார். அதே போன்று மறுரூபமலையிலே எலியாவோடும் மோசேயோடும் பேசிக்கொண்டிருக்கையில் இவர் என் நேசக்குமாரன் இவருக்கு செவிகொடுங்கள் எனக் கூறினார். இங்கே பார்க்கும் போது பிதா எப்பொழுதும் அவரோடு உறவாடியதற்கு காரணம் அவரிடம் பாவமில்லை என்பதினால் தான். அன்று கல்வாரியிலே பிதா அவரை ஒரு நிமிடம் கைவிட வேண்டும் என்றால் அதற்கு அவருக்கும் பிதாவிற்கும் இடையில் ஒன்று வரவேண்டும் அது பாவம் ஆனால் அவர் பாவம் செய்யவில்லையே! எப்படியெனில் உலகமும் அதில் உள்ளவர்களும் செய்த பாவமே அதற்கு காரணம். 2கொரி 5:21 இப்படி சொல்லுகின்றது நாம் அவருக்குள் நீதியாகும் படிக்கு அவரை நமக்காகப் பாவமாக்கினார். எனவே இயேசு முதன் முறையாக பிதாவின் தொடர்பு இல்லாமல் இருந்தார்.
நம்முடைய பாவங்கள் அனைத்தையும் அவர் தாமே ஏற்றுக்கொண்ட போது இயேசு குற்றவாளியாகவும் பிதா நீதிபதியாகவும் நின்று ஒருகணம் தன்னுடைய முகத்தை அவருக்கு மறைத்தார் அது நியாயத்தீர்ப்பின் நேரமாய் காணப்பட்டது. அவ்வேளையிலே இயேசு தேவனை நோக்கி கதறிய வார்த்தை இது. ஆகவே இனி மனிதனுடைய பாவத்திற்காக ஆடு, மாடுகளின் இரத்தம் சிந்தப்பட வேண்டியதில்லை இயேசுவே நமது பாவத்தை தன் மேல் சுமந்து தன்னுடைய கடைசி சொட்டு இரத்தத்தையும் சிந்தி மீட்பை பெற்றுத்தந்துள்ளார்.
எபிரெயர் – 2:4 ல் பவுல் கூறுகிறார்
அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்து பரிசுத்த ஆவியின் வரங்களிலும், தேவன் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.
தண்டனைக்கு தப்பித்துக்கொள்ள சிலுவையில் தொங்கும் இயேசுவை நோக்கி பார்ப்போமா?
5) தவிப்பு
எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக : "தாகமாயிருக்கிறேன் என்றார்" (யோவான் 19:28)
தாகமாயிருக்கிறேன் என்ற வார்த்தையை யோவான் எழுதும் முன்பாக இயேசு ஏதோ ஒன்றை அறிந்து அதன் பின் இந்த வார்த்தையை சொன்னதாக எழுதுகிறார். இயேசு என்னதை அறிந்து கொண்டார் என்று பார்க்கும் பொழுது அவர் எல்லாம் முடிந்தது என்று அறிந்து என்று இந்த வசனம் சொல்கிறது.ஆனால் இயேசுகிறிஸ்து சொன்ன ஏழு வார்த்தைகளில் முடிந்தது என்பதும் ஒரு வார்த்தை உள்ளது.ஆனால் இயேசு இந்த இடத்தில் எல்லாம் முடிந்தது என்று அறிந்து தாகமாயிருக்கிறேன் என்று சொல்லுகிறார்.
இயேசுகிறிஸ்து மட்டும் தான் என்ன நோக்கத்துக்காக உலகத்தில் அவதரித்தாரோ அதில் ஒரு அச்சும் கூட பிசகாமல் அதை சாதித்து முடித்தார்.
எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக தாகமாயிருக்கிறேன் என்று சொன்னார்.
அப்படியானால் அந்த வேத வாக்கியம் என்ன?
சங்கீதம் 69:21 என் ஆகாரத்தில கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள்.
இயேசுகிறிஸ்து வேத வாக்கியங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பதை இதில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
இயேசு உண்ணும் போஜனமும்,அவருடைய தாகத்துக்கு தகுந்த தண்ணீரும் எதுவாக இருக்கும் என்ற கேள்வியை நாம் எழுப்புவோமானால்,வேத வசனம் இப்படியாக சொல்லுகிறது
யோவான் 4:34 இயேசு அவர்களை நோக்கி, நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடையகிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.
தன்னை அனுப்பின பிதாவின் சித்தப்படி செய்வதே இயேசுவுக்கு போஜனாமாக உள்ளது, இயேசுவின் தாகம் பிதாவின் சித்தம் செய்யப்படுவதே.அப்படியானால் இந்த உலகத்தில் இயேசுகிறிஸ்துவை அச்சடையாளமாக கொண்ட திருச்சபையே இன்றைக்கு நாம் இயேசுவின் தாகத்தை போக்க என்ன செய்துவருகிறோம்.பிதாவின் சித்தத்தை நாம் உணர்ன்து இருக்கிறோமா?
கீழே உள்ள வசனங்கள் பிதாவின் சித்தம் என்ன என்று நமக்கு அழகாக காண்பிக்கின்றது.
மத்தேயு 18:14 இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.
யோவான் 6:39 அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளைஎழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது.
இதுவே பிதாவின் சித்தம்.இதை நிறைவேற்றுகிறவனே இயேசுவின் தாகத்தை தீர்க்கமுடியும்.உலகில் உள்ள ஒவ்வொரு ஆத்துமாவும் கிறிஸ்துவின் அன்பை அறிய வேண்டும் என்பதே பிதாவின் சித்தம்.அப்படியானால் அந்த ஆத்துமாக்களை நேசிக்கிறவன் இயேசுவுக்கு சாப்படு கொடுக்கிறவனாக,தண்ணீர் கொடுக்கிறவனாக காணப்படுவான் என்று இயேசு சொல்லுகிறார்.
மத்தேயு 25:35 பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன் என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன் என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;
அப்பா உம்முடைய சித்தத்திற்கு என்னை ஒப்பு கொடுக்கிறேன் என்று சொல்லி சிலுவையில் தொங்கும் இயேசுவை நோக்கி பார்ப்போமா?
6) அர்ப்பணிப்பு
இயேசு காடியை வாங்கின பின்பு, "முடிந்தது" என்று சொல்லி தலையை சாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தார் (யோவான் 19 : 30)
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்ததன் நோக்கம் நித்திய நரகத்திற்கு நேராக போய் கொன்டு இருந்த நம்மை மீட்கும் படி தன்னையே பலியாக கொடுக்கும்ப்படியே.... அதை முறியடிக்க பிசாசு, வலுசர்ப்பம், அலகை, இப்படி பல பெயருடைய தந்திரமுள்ள இந்த உலகத்தின் அதிபதி முயற்சி செய்தான். ஆனாலும் ஆண்டவர் எல்லாவற்றையும் முறியடித்து இறுதியில் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றி முடித்தார். ஆக ஆண்டவரின் முடிந்தது என்ற இந்த வார்த்தை ஒரு சோகவார்த்தையல்ல. அது ஒரு வெற்றியின் வார்த்தை.
ஆம் சிலுவையில் வெற்றி சிறந்த நேசரின் வெற்றிக்குரல்.
நம்முடைய பாவங்களுக்கு மீட்பு இல்லை என்பது இத்தோடு முடிந்தது. நம்க்கு நித்திய ஜிவன் இல்லை என்ற வார்த்தை இத்தோடு முடிந்தது. எல்லாம் வெற்றிகரமாக முடிந்தது.அவருடைய மரணத்தை குறித்தான தீர்க்கதரிசனங்கள் முடிந்தது. தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இருந்த பிளவு இனி முடிந்தது. யூதர் பிற இனத்தார் என்ற பிரிவு இனி முடிந்தது.மனிதனின் பாவங்களுக்கும் நோய்களுக்கும் பரிகாரம் உண்டாக்கி முடிந்தது. நம்முடைய ஜெபங்களுக்கு தடையாக காணப்பட்ட எல்லா காரியங்களும் இனி முடிந்தது. சத்தானின் அதிகாரம் இனி முடிந்தது. எல்லாம் எல்லாம் வெற்றிகரமாக முடிந்தது. எனவே தான் ஒரு வெற்றியின் குரல் என்கிறேன். அது ஒரு கிழ்படிதலின் குரலும் ஆகும். நம் வாழ்கையிலும் இந்த வெற்றியின் குரல் தொனிக்க சிலுவையில் தொங்கும் இயேசுவை நோக்கி பார்ப்போமா?
7) ஒப்புவிப்பு
இயேசு பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கின்றேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டு சொன்னார், இப்படி சொல்லி ஜீவனை விட்டார். (லூக்கா 23:46)
ஆறு வார்த்தைகளையும் மகாவேதனையின் மத்தியில் கூறிய இயேசு, ஏழாவது வார்த்தையாக தன்னை அனுப்பின பிதாவின் சித்தத்தை செய்து முடித்தவராய் பூரண திருப்தியுடன் பிதாவினிடத்தில் தனது ஆவியை ஒப்புவிக்கின்ற வார்த்தையை கூறுகின்றார். ஏழு என்னும் இலக்கம் பரிபூரணத்தை குறிக்கிறது, ஆகவே அவர் கூறிய ஏழாவது வார்த்தை மிகவும் பரிபூரணமான வார்த்தையாக காணப்படுகிறது.
இங்கு ஒன்றை கவனிப்போமானால் மகா சத்தமாய்க் கூப்பிட்டு சொன்னார், இப்படி சொல்லி ஜீவனை விட்டார் என வேதம் கூறுகிறது. ஏன் இயேசு மகா சத்தமாய் கூப்பிட்டு ஜீவனை விட்டார்? பிதா எப்பொழுதும் அவருரோடே கூட இருந்தவர் மெதுவாய் அல்லது மனதிற்குள் சொன்னால் பிதாவிற்கு தெரியாதா? அல்லது விளங்காதா? ஏனெனில் தான் ஜீவனை விடுகின்ற அந்த தொணி ஏரோதிற்கு கேட்க வேண்டும், தன்னை ஏற்காதா இஸ்ரவேலருக்கு கேட்க வேண்டும், ஏன் இன்னும் இரண்டாயிரத்தி ஏழு வருடங்கள் கழிந்தும் தன்னை ஏற்காத, தன்னை மறுதலிக்கின்ற ஜனங்களுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே. யோவான் 10:17 18 ஆம் வசனம் இப்படி கூறுகின்றது நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்து கொள்ளும்படிக்கு அதை கொடுக்கிற படியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார் ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ள மாட்டான்; நானே அதை கொடுக்கிறேன் அதை கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் அதிகாரம் உண்டு. ஆகவே இந்த உலகத்தில் உள்ள எந்த மனிதனும் தன் ஆவி பிரிவதை அறியான். ஒரு வேளை நான் மரிக்கப் போகின்றேன் என்பதனை ஒருவன் உணரலாம் ஆனால் அது எப்பொழுது என்பது எந்தக் கணப்பொழுதில் என்பது அவனுக்கு தெரியாது ஏனெனில் தேவன் தான் ஜீவனைத்தருகின்றார் அவரே அதை மீண்டும் எடுத்துக்கொள்கின்றர்ர். ஆனால் இயேசு கிறிஸ்து தெய்வம் என்ற படியினால் தன் ஆவியை பிதாவின் கரத்தில் ஒப்புக்கொடுத்தார் என்பதனை இங்கு காண்கிறோம். இயேசுவிற்கு எத்தனையோ விதமான தண்டணைகளை, ஆக்கினைகளை அன்று கொடுத்தார்கள். ஆனால் யாராலும் அவரின் உயிரை எடுக்க முடியவில்லை. ஜீவனை கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் அதிகாரம் உண்டு, என அவர் சொன்ன வார்த்தையின் பிரகாரம் பிதாவின் கரத்திலே தனது ஆவியை ஒப்புக்கொடுத்தார். மறுபடியும் பிதாவின் கரத்திலிருந்து மூன்றாம் நாளில் தனது ஆவியை பெற்றுக்கொண்டார். மத்தேயு 3:16 ஆம் வசனத்திலே இயேசு ஞானஸ்நானம் எடுத்து கரையேறினவுடனே அவருக்கு வானம் திறக்கப்பட்டது என வேதத்தில் காண்கிறோம். இங்கு நமது ஆதி பெற்றோர்களாகிய ஆதாம் ஏவாளின் கீழ்படியாமையினால் அடைக்கப்பட்ட வானம் பிந்திய ஆதாமாகிய இயேசுகிறிஸ்துவின் கீழ்படிவினால் அதாவது ஞானஸ்நானம் எடுத்து கரையேறினவுடனே அவருக்கு திறக்கப்பட்டது. மீண்டும் சிலுவையிலே ஜெபத்துடன் தன்னுடைய ஆவியை பிதாவின் கரத்தில் ஒப்புக்கொடுக்கும் போது புத்திரசுவிகாரர்களாய் நாங்கள் யாவரும் பரத்துக்குச் செல்லும் பாதை திறக்கப்பட்டது. தேவாலயத்தின் திரைச்சீலை மேல் தொடங்கி கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது கன்மலைகளும் பிளந்தது. கல்லறைகள் திறந்தது நித்திரையடைந்த அனேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. இதிலே முக்கியமாய் கூறப்போனால் நூற்றுக்கு அதிபதியும் அவனோடே கூட இயேசுவை காவல் காத்திருந்தவர்களும் நடந்த சம்பவங்களை கண்டு இவர் மெய்யாய் தேவனுடைய குமாரன் என அறிக்கை செய்தார்கள்.
II கொரிந்தியர் 6:2 அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்.
இயேசுவின் சிலுவை பாடுகளை தியானிக்கின்ற நாம் அவர் சிலுவையில் எவ்வளவாக அவர் பிதாவின் சித்தம் செய்ய தன்னை அர்பணித்திருந்தார் என்பதை நமக்கு காட்டுகிறது. இன்றைக்கு நாம் இயேசுவுக்காக துக்கம் கொண்டாடாமல் இயேசு லுூக்கா 23:28 ல் சொன்னது போல்
இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி, எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். லுூக்கா 23:28
இது நமக்காகவும்,நம் ஜனத்துக்காகவும் துக்கப்படும் வேளை.இரட்டை கிழித்து சாம்பலில் உட்காராவிட்டாலும் வேத வசனம் சொல்கிறபடி நம் இருதயங்களை கிழித்து நம் மக்கள் மேல் வரப்போகும் கோபாக்கினைகளுக்கு தேவன் ஜனங்களை காக்கும் படி திறப்பிலே நின்று அவருக்கென்று கதறகூடிய ஆத்துமாவை ஆணடவர் தேடிக்கொண்டிருக்கிறார். கண்முன்னால் அழிந்துகொண்டிருக்கும் இத்தனை கோடி ஜனங்களுக்கு நாம் என்ன் பதில் ஆண்டவருகு சொல்லப்போகிறோம். நாம் சிந்திப்போம் ,ஆண்டவருக்காக எதையாகிலும் சாதிக்கிறவர்களாக அவரிடம் நம்மை ஒப்புக்கொடுப்பதே அவரின் சிலுவையை தியானிப்பதின் உண்மையான அர்த்தம் ஆகும்.
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக