ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணிபுரிந்தாலும் அந்த நிறுவனமானது ஒவ்வொருவருடனும் தனிப்பட்ட விதத்தில் ஒப்பந்தம் செய்துள்ளது.அந்த பணியாளர் சம்பந்தமான அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டிருக்கும்; அவருடைய ஒவ்வொரு செயல்பாடும் கண்காணிக்கப்படும். அந்த பணியாளர் திடீரென வேலையிலிருந்து விலகிவிடமுடியாது. அவ்வாறு விலக நேர்ந்தால் குறைந்தது மூன்று மாத சம்பளத்தையும் சமீபத்தில் பெற்றிருக்கக்கூடிய போனஸ் போன்ற பலன்களையும் திருப்பி செலுத்த வேண்டிருக்கும்.
அண்மையில் இதுபோல ஒரு குறிப்பிட்ட நண்பர் தான் பணிபுரியும் நிறுவனத்திலிருந்து வெளியேறி வர தூண்டப்பட்டார்.ஆனால் அந்த நிறுவனமோ அவர் தான் பெற்ற மூன்று இலட்ச ரூபாய் போனஸ் மற்றும் மூன்று மாத சம்பளம் சேர்த்து ஐந்து இலட்ச ரூபாயை அபராதமாக செலுத்திவிட்டு தாராளமாக வெளியேறலாம் என்று சொல்லிவிட்டது. இந்த விவகாரத்தில் பணியாளரைக் கட்டுப்படுத்தும் காரியமாவது, ரிலீவிங் ஆர்டர் எனப்படும் பணி விடுதலை சான்றிதழ் ஆகும். அது இருந்தாலே அடுத்த நிறுவனத்துக்கு அவர் தகுதியுள்ள பணியாளராக முடியும்.
இதிலிருந்து கிறிஸ்தவர்களாகிய நாம் அறியவேண்டியது என்ன ?
உலகப் பிரகாரமான நிறுவனங்களிலேயே இத்தனை நேர்த்தியான ஒழுங்குகள் இருக்க அதற்கு எப்படிப்பட்ட முரட்டு மனுஷனும் கட்டுப்பட்டிருக்க தேவ ராஜ்யம் இதைவிட மேலான நோக்கத்துடன் ஸ்தாபிக்கப்பட்டது அல்லவா ? அதில் நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டவர்களாக சபையாகக் கூட்டிச் சேர்க்கப்பட்டிருப்பினும் நம் ஒவ்வொருவருடனும் தனித்தனியாக பரலோகம் ஒப்பந்தம் செய்திருக்கிறது. நாம் நமது இஷ்டப்படி செயல்படமுடியாது. நாம் ஏற்றுக்கொண்ட பணியைத் தவிர வேறு காரியங்களில் ஈடுபட்டால் அது நிச்சயமாக கவனிக்கப்படும். அதற்குரிய அமைப்பிலிருந்து நாம் கண்டனத்துக்கு ஆளாக நேரிடும். ஆனாலும் ஒரு பிரபல நிறுவனத்தின் பேரைச் சொல்லிக்கொண்டு ஊரைச் சுற்றிவரும் போலிகளும் சமுதாயத்தில் இருப்பது போல பரலோக அமைப்பிலும் உண்டு. அப்படிப்பட்டவர்கள் உரிய விதத்தில் தண்டிக்கப்படுவார்கள்.
உலகப் பிரகாரமான ஒரு நிறுவனத்தில் பொறுப்பான உத்யோகத்தில் இருக்கும் ஒரு மனிதன் அந்த நிறுவனத்துக்கு உண்மையாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவது இயல்பு. அதே நேரத்தில் அந்த மனிதன் தன் தகப்பனே இயக்குனராக இருக்கும் நிறுவனத்தில் மிக இயல்பாகவும் மற்ற பணியாளர்களை விட அதிக ஈடுபாடுடனும் உண்மையுடனும் பணிபுரிவான். காரணம் அது அவனுடைய சொந்த நிறுவனம் அல்லவா..?
அதே போல நாமும் கர்த்தருடைய பிள்ளைகளாக அதே நேரத்தில் அவருடைய களத்தில் பொறுப்பான வேலையாட்களாக இருக்கிறோம்.எனவே நாம் எல்லாவற்றிலும் மிகுந்த பொறுப்புடனும் உண்மையுடனும் இருக்க அழைக்கப்படுகிறோம். ஒரு பிள்ளை தன் சொந்த வீட்டில் திருடினால் அது எத்தனை மோசமான செயலாக இருக்குமோ அதேபோல ஊழியத்தின் பெயரால் செய்யப்படும் மோசடிகளும் பரலோகத்தினால் கவனிக்கப்படும்.
அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் அரசாங்கத்தை சுரண்டுகிறார்களே அதுபோல கர்த்தருடைய ஜனம் செய்யலாமா ? நாம் கர்த்தருடைய இரத்தத்தினால் மீட்கப்பட்ட அவருடைய ஜனமாக இருப்போமானால் இதுகுறித்து மிகுந்த பாரத்துடன் சிந்திக்கவேண்டும்.சபைத் தலைவர்களும் சபையாரும் எப்படியெல்லாம் கர்த்தருடைய தோட்டத்தை சுரண்டி பிழைக்கிறார்கள் என்று யோசிப்போமா ? அது வேதனை மிகுந்த தொடர்கதையாகும். உண்ட வீட்டுக்கு ரண்டகம் பண்ணுவதா..?
திருந்துவோம்...திருத்துவோம்...
உணர்வோம்...உணர்த்துவோம்...
திரும்புவோம் ...திருப்புவோம்..!
என் சம்பத்தை நான் சேர்க்கும் அந்நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ்செய்கிற தன்னுடைய குமாரனைக் கடாட்சிக்கிறதுபோல நான் அவர்களைக் கடாட்சிப்பேன்.
அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள்." (மல்கியா.3:16,17)
(Shared Today@8pm@Kmprm.Min. )
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)