#கர்த்தர் நம் மீட்பராகவும் சிருஷ்டிகராகவும் மகா மேன்மையில் உன்னதத்தில் இருந்தாலும் நம் வீட்டின் சமையலறையின்மீதும் கவனமாயிருக்கிறார்.
ஆம், நேற்றையதினம் எனது பல்சர் வாகனத்தின் பழுதுபார்த்து திரும்புகையில் சாலையோரம் இருந்த தானிய வகைகளின் கடையில் பருப்பு மற்றும் பயறு வகைகளை கொஞ்சம் கொஞ்சம் வாங்கி வந்தேன். பிறவி சைவர்களான எங்கள் குடும்பத்தில் அபூர்வமான தானிய வகைகள் இருந்தாலே விருந்து சாலைபோல் சந்தோஷம் நிரம்பிவழியும்.
அந்த வகையில் இன்று எங்க #வீட்டம்மா மொச்சை காராமணி போன்ற பயறுவகைகளைப் போட்டு செய்திருந்த குழம்பை காலையிலிருந்து மூன்று வேளையும் ருசித்து களித்தேன். மனதார ஆண்டவருக்கு நன்றி சொன்னேன். ஏனெனில் சமையலறையில் இல்லாத பொருட்களை நினைத்து இல்லத்தரசி பெருமூச்சுடன் ஜெபித்திருக்கிறார்.
அந்த ஜெபத்தை எனக்கான உணர்த்துதல் மூலம் கர்த்தர் நிறைவேற்றுகிறார், அதனால்தான் அவர்களிடம் இப்படி சொன்னேன், அவர் மஹாதேவன் மட்டுமல்ல, நம் வீட்டு அடுக்களை காரியத்திலும் கூட அக்கறையுள்ளவராயிருக்கிறார், நம்மை சத்தாகவும் தரமாகவும் உணவூட்டுகிறார் என்பதாக.
பெரிய பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் கொள்ளை விலைக்கு பெருமைக்காக சென்று இப்படி கொள்முதல் செய்வதைவிட சாமானியரின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த அவர்களிடம் வாங்குவதே நமக்கு புண்ணியமாகும். அங்கே ஒரு படி துவரம்பருப்பு 300 ரூபாய் என்றாலும் ஒரு படிக்கு மேல் மூன்றுமுறை கைநிறைய அள்ளிப் போடுகிறார்களே அதைக் காணும் சந்தோஷம் எங்கும் கிடைக்காது.
இரண்டின் விலையும் ஆகபோக அதேதான் என்றாலும் ஏழைகளின் பொருளாதாரத்தையும் நாம் வலுப்படுத்தவேண்டும். சாலையோரக் கடைகளில் ஜிஎஸ்டி போன்ற தொந்தரவுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கிடைத்தற்கரிய அபூர்வமான பொருட்களையும் வாங்கிவிடலாம். நேற்று நான் குதிரை வாளி சாமை வரகு கவுனி அரிசி போன்ற ஹெல்த் சமாச்சாரங்களும் கொஞ்சம் கொஞ்சம் வாங்கினேன்.