கேள்வி: திருச்சபைக்கு வெளியே ஊடக ஊழியத்தின்மூலமே திரள்கூட்டத்தை ஈர்த்து தன்னிடம் வைத்துக் கொள்ளும் மீடியா மிருகங்கள் நாளுக்குநாள் செல்வத்திலும் செல்வாக்கிலும் பெருகும் இரகசியம் என்ன ?
பதில்: கிறிஸ்தவம் ஆர்வமிக்க எளிமையான தத்துவமாகும். எனவே இதை நோக்கி ஆயிரங்கள் இயல்பாகவே ஓடிவருகிறார்கள். சமூகத்தில் கலந்திருக்கும் கிறிஸ்தவ மக்கள் அப்படிப்பட்டவர்களை சரியான பாதையில் நடத்தி கர்த்தரிடமாய் சேர்த்திருக்கவேண்டும். மாறாக தாங்கள் அதற்கு அதிகாரமில்லாதவர்கள் என்பதைப் போன்ற பாவனையில் தத்தமது சபைக்கு அழைக்கிறார்கள். சபைக்கு அழைப்பது கூட தவறில்லை, சபைக்கு வெளியே கூடும் கூடார / திறந்தவெளி கூட்டங்களுக்கு அழைத்துச் செல்லுகிறார்கள். அங்கே புதியவர்களை சிறைபிடிக்கும் ஊடக ஊழியர்கள் அவர்களுடைய தொடர்பு முகவரி உள்ளிட்ட காரியங்களால் அவர்களை நெருங்குகிறார்கள். இதனால் புதியவர்கள் ஒருபோதும் சபை வளாகத்தினுள் வராமலே ஒரு விருந்தினர்போலவே இருந்துவிடமுடிகிறது. இதனால் பிரமாணிக்கமுள்ள விசுவாசிகள் பெருகுவதற்கு பதிலாக தனிநபரை சார்ந்திருக்கும் விசிறிகளே பெருகுகிறார்கள்.
மேலும் சத்தியத்தில் வேர்கொள்ளாத மெயின்லைன் சபையாரை இவர்கள் எளிதில் வளைத்துவிடுகிறார்கள். நிரந்தர சம்பளம் குடியிருப்பு மனைவிக்கு வேலை சமூக அங்கீகாரம் நிர்வாகத்தில் அதிகாரம் போன்ற சுயதிருப்தியில் முடங்கிப் போகும் பொறுப்பற்ற ஆயர்கள் தங்கள் திருச்சபையாரை விசாரிக்கிறதில்லை. ஏரோது பிலாத்து மோதல் காரணமாகவே இயேசு சிலுவையிலறையப்பட்டதைப் போல இந்த பொறுப்பற்ற குருட்டு மேய்ப்பர்களால் திருச்சபை அன்றாடம் சிலுவையிலறையப்படுகிறது. இந்த நிலைக்கு முக்கியக் காரணமானவர்கள், ஒழுங்குபடுத்தப்பட்ட சபைகளின் தலைவர்களே என்றால் அது மிகையல்ல. அவர்களுடைய சுயநலமே மார்க்கத்திற்குக் கேடாய் முடிகிறது. அரசன் செய்த தவறு காரணமாக மக்கள் அடிக்கப்பட்டதாக பைபிள் பேசுகிறது. அவ்வாறே ஆசாரியன் செய்யும் தவறுகளால் மார்க்கம் நாள்தோறும் அடிக்கப்படுகிறது.
ஆனாலும் இந்த ஊழியக்காரர் ஏன் பிதாவை நோக்கி ஜெபிக்கிறதில்லை ? சிஎஸ்ஐ சபையாரைச் சார்ந்து ஊழியஞ் செய்யும் இவர் ஏன் திருச்சபையின் விசுவாச அறிக்கையோ கர்த்தருடைய ஜெபத்தையோ சொல்வதில்லை ? பிதாவே இயேசுவாக வந்தாரென்ற கொள்கையைப் பரப்பும் இவர்கள் கிறிஸ்துவின் ஊழியர்கள் தானா ? இல்லவே இல்லை, வியாபாரிகளின் அரவணைப்பில் ஊடகத்தில் வலம் வரும் ஊடகப் பிரியர் மட்டுமே.