#கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு உலகையே புரட்டிப் போட்டிருக்கிறது. ஏழை பணக்காரர் வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் இதனால் பாதிக்கப்பட்டு சொல்லொண்ணா துயரத்தின் பாதையில் செல்லுவதை நாம் அறிந்திருக்கிறோம். நம் அருகில் யாரோ ஒருவரை இந்த கொள்ளை நோய்க்கு பறிகொடுத்த துக்கம் நம் உள்ளத்தில் உண்டு. அநேகர் உயிர்தப்பியும் வாழ்வாதாரங்களை இழந்து திகைத்துப் போயிருக்கிறார்கள்.
இதனால் மனநிலை பாதிப்புகள் தூக்கமின்மை உள்ளிட்ட தொடர் பிரச்சினைகளையும் சந்திக்கிறோம். ஆன்மீகவாதிகள் இயன்றமட்டும் நம்மை சமநிலையில் வைத்துக் கொள்ளவே போராடுகிறார்கள். அவர்களிலும் சிலர் உள்நோக்கத்துடன் நம் மென்மை உணர்வுகளைத் தூண்டிவிட்டு நம்மிடமிருக்கும் மிச்சசொச்சம் காசையும்பிடுங்கிக் கொள்வதில் கவனமாய் இருக்கிறார்கள். என்ன பண்ண, அவர்களுக்கும் செலவு இருக்குமில்லை ? என்ன தான் சொத்து இருந்தாலும் அதை விற்று தின்னும் துணிச்சலோ அல்லது வறியோர்க்கு இக்காலத்திலாவது தங்கள் பொக்கிஷ சாலையைத் திறந்து கொடுக்கும் உதார குணமோ கிறிஸ்தவ ஸ்தாபனங்களுக்கே இருக்கவில்லையே ?
சமுதாயத்தில் சமநிலையை உண்டாக்கவே கடவுள் இப்படிப்பட்ட கேடுகளை அனுமதிக்கிறாரோ என்றும் கூட எண்ணத்தோன்றுகிறது. மேலும் மனிதனின் கர்வமும் ஆணவமும் இக்காலத்திலாவது ஒழியுமோ என்றும் எல்லாம்வல்ல இறைவன் எதிர்பார்க்கக்கூடும், ஏனெனில் இயேசு ஆண்டவர் சொன்னதைப் போல் உனக்கு கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏதுவானதை சிந்திப்பாயோ, உனக்கோ அதில் மனமில்லையே என்று நகரத்தாரைப் பார்த்து உருகுகிறார். அழிவு சக்தியை அழிக்கும் ஆற்றலுள்ள தெய்வத்தையே நாம் பூஜிக்கிறோம். அவரோ அழிவைக் கண்டும் காணாமல் விட்டு வைத்திருப்பதைப் போன்ற சூழல் நிலவுகிறது. இதனால் மருகிப் போகும் பக்தனின் உள்ளமோ அங்கலாய்க்கிறது.
இக்காலத்தில் தெய்வ நம்பிக்கையில்லாதோரும் பிறருக்கு உதவுவதில் சளைத்துப் போகவில்லை. ஆனால் தெய்வ நம்பிக்கை உள்ளவர்களே அடுத்தவர்மீது கரிசனையற்றவர்களாக இருக்கின்றனர். முக்கியமாக வர்க்க வேறுபாடுகளை ஒழித்து சமதர்ம சமுதாயத்தை அமைக்கவே பாடுபட்ட கிறிஸ்தவ மார்க்கமானது தற்காலத்தில் சில சுயநலமிகளின் பிடியில் சிக்கி சீரழிந்து கொண்டிருப்பதைக் கண்ணாரக் காண்கிறோம். நம்மில் எண்ணற்ற சபைப் பிரிவுகள் பிரிவினைகள் சாதிய மனப்பான்மைகள் தலைவிரித்தாடுகிறது. தேவையுள்ளோர் தேவை சந்திக்கப்பட தன்னலம்பாராது உதவாமல் அவருக்கு ஒன்றை செய்தால் அதினால் நமக்கு என்ன கிடைக்கும் என்று பேருக்கும் புகழுக்கும் பெருமைக்கும் மட்டுமே சிலர் வள்ளல்பெருமான் வேடமிடுவதைக் காண்கிறோம்.
இன்றைய அமர்வில் இந்த பொருளைப் பேசுவதற்கு எடுத்துக் கொண்ட காரணம், தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தையொட்டிய மலைக் கிராமங்களில் அருட்பணியாற்றிவரும் விசாரிப்பாரற்ற ஏழை ஊழியர்கள் சார்பில் நம்மிடம் உதவிகேட்டு வந்த ஒரு அலைபேசி அழைப்பேயாகும். சுமார் 65 குடும்பங்கள் பெரும் சிரமத்தில் இருப்பதாகவும் அவர்களில் கிட்டதட்ட 25 தேவ ஊழியர்கள் மிகவும் மோசமான நிலையில் வாடுவதாகவும் எனக்கு சொல்லப்பட்டபோது எங்களால் அதை தாங்கமுடியவில்லை. ஊழியர்களுக்கென்ன அவர்களுக்கு எல்லா பக்கமும் வருமானம், உழைக்காமலே சாப்பிடுகிறார்கள், தசமபாகம் காணிக்கை எல்லாம் வாங்கி தாங்களே வைத்துக் கொண்டு சொத்துகளாக அவற்றை மாற்றிவைத்து சௌகரியமாக வாழுகிறார்கள் என்ற கருத்து ஊடகத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.
தனக்குத் தானே பிரிந்திருக்கும் எந்த வீடும் இராஜ்யமும் நிலைவரப்படவோ உருவேற்படவோ ஆகாது என்றனர், இயேசுவானவர். ஆனால் கிறிஸ்தவ ஊழியர்களின்மீது சேற்றை வாரியிறைத்து அவர்கள் மீதான நன்மதிப்பை குலைக்கும் வேலையை அயலார் அல்லாமல் நம்மவர்களே அதிலும் பிரபல மீடியா ஊழியர்களே செய்கிறார்கள் மற்றும் உள்ளூர் விசுவாசிகளின் புனிதப் பணங்களையெல்லாம் கவர்ந்துகொள்ளுகிறார்கள். இதனால் தங்கள் அருகே தங்கள் வாசலுக்கு அவ்வப்போது வந்து விசாரிக்கும் எளிய ஊழியரை யாசகம் பெறுபவர் போலவும் ஊடக முதலைகளே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் போலவும் கருதும் மனப்பான்மை பெருகிவிட்டது.
செல்வந்தர்கள் தொழிலதிபர்கள் சமுதாயத்தில் வசதியானவர்கள் பிரபலமானவர்களுக்கு தங்கள் பணத்தை நன்கொடைகளை அனுப்பவே விரும்புகிறார்களே தவிர தங்கள் அருகிலுள்ளவரை அற்பமாக எண்ணுகிறார்கள் அல்லது அவர்களுக்கு செய்வதை தானதருமம் போலவும் தூரத்திலுள்ளவருக்கு அனுப்புவதை ஆசீர்வாத பாகமாகவும் கருதும் போக்கு திட்டமிட்டு மீடியா ஊழியர்களால் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. அதை முன்னிட்டே #வியாபாரிகள்_சிறப்பு_ஆசீர்வாத_ஜெபம் / #சினிமாத்_துறையினருக்கு_விசேஷித்த_ஜெபம் / #குடும்ப_ஆசீர்வாத_ஜெபம் / #திறப்பின்_வாசல்_ஜெபம் / #கட்டு_உடைக்கும்_ஜெபம் என வணிகரீதியாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி பெரும்பான்மை மக்களை ஈர்க்கின்றனர்.
இது கிறிஸ்தவத்தின் இலட்சணமே அல்ல. அவர்களை எதிர்த்தால் நமக்கு விரோதமாக கட்டுப்பாடு பண்ணி நம்மை தனிமைப்படுத்திவிடுவார்களே என்று ஆயிரக்கணக்கான இளம் ஊழியர்கள் மனதினுள் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய நியாயங்களை கேட்பாரில்லை. அவர்களில் சிலர் ஊடகப் பிரபலங்களைப் போலவே அதே பாணியில் தங்களை மாற்றிக் கொண்டு தங்களோடிருக்கும் மக்களை தக்கவைத்துக் கொள்ளப் போராடுகின்றனர். தற்போதைய சூழலில் #லாக்டவுன் #பொதுமுடக்கம் முடிவுக்கு வந்து சகஜநிலை திரும்பினாலும் முன்போல் சபையார் கூடிவருவார்களோ என்ற ஐயமே எழுகிறது. அந்த அளவுக்கு கிறிஸ்தவ சமுதாயமானது இந்த கொரோனா கால #ஆன்லைன் மாயையில் சிக்கி வழிவிலகிப் போயிருக்கிறது.
ஆக மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிக்கும் இக்கட்டான நிலையில் தான் பெரும்பாலான ஊழியர்கள் இருக்கின்றனர். அவர்களுக்காக அரசாங்கத்திடம் பேசி உரிமைகளையும் உதவிகளையும் பெற்றுத் தருவதற்கு எந்த தலைவரும் முன்வரவில்லை மற்றும் குறிப்பிட்ட அமைப்பில் அங்கமாயிருந்தால் மட்டுமே சிற்சில உதவிகள் கிடைக்கும் என்ற நிலை காணப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் #அடுத்தது_என்ன எனும் இக்கட்டான நிலையில் தவிக்கும் ஊழியர்கள் சார்பாக அவர்களுடைய உணர்வுகளை பொதுதளத்தில் பதிவுசெய்திடவே இந்த அமர்வை அமைத்திருக்கிறோம்.
**இதில் இணைவோர் தத்தமது கருத்துகளை மனந்திறந்து பகிரவும் தங்கள் அருகில் தேவையுள்ளோரைக் குறித்த தகவல்களைக் கூறவும் மற்றும் உதவிசெய்யக்கூடியவர்கள் தேவனால் ஏவப்பட்டவர்கள் தயங்காமல் எங்களைத் தொடர்புகொள்ளவும் அன்போடு வேண்டுகிறோம். 🙏