மதத்தை விட மேலானது மானிடம். ஒரு சில செய்திகளை காணும்பொழுது சகிக்கமுடியவில்லை.பெரும் துயரத்தில் ஆழ்ந்திருக்கின்றது நேபாளம், தோண்ட தோண்ட உடல்கள். சாலைவசதிகள் இல்லா கிராமங்களுக்குள் இன்னும் மீட்புபணி தொடங்கவில்லை. இன்னும் எவ்வளவு ஆயிரம் எண்ணிக்கை கூடுமோ தெரியவில்லை.காயம்பட்டோர் ஒருபுறம், குடும்பம் இழந்தோர் மற்புறம், தனது ஆஸ்தியை, வருமானத்தை எல்லாம் இழந்து கொட்டும் மழையில் ஒதுங்குவதற்கு இடமில்லாமல் நிற்கிறது அந்த மாபெரும் மக்கள் கூட்டம். உலகநாடுகள் எல்லாம் மத, இனம் பாராமல் உதவிகளை அள்ளிகொட்டும் நேரமிது. இந்தியாவும், இஸ்ரேலும் மற்ற அரபுநாடுகளும், பாகிஸ்தானும், இந்தியாவும், கம்யூனிச சீனாவும் அள்ளி கொடுக்கின்றன. அவர்கள் எம்மதமோ, இனமோ இருந்தால் என்ன, மனிதர்கள். ஆறறிவு படைத்த மனிதர்கள், அதற்காகவாது நாம் இரங்கவேண்டும் அல்லவா? அள்ளி கொடுக்கத்தான் இல்லை, பிரார்த்திக்க கூட வேண்டாம். கொஞ்சம் சீண்டாமலாவது இருக்கலாம் அல்லவா?
மாட்டுகறி தின்றதால்தான் இந்த நிலை என ஒரு பெரும் அமைப்பின் தலைவர் சீண்டுகிறார். உலகில் மாட்டுகறி உண்ணாத நாடுகள் இல்லையா? ஏன் தாவரபட்சிகள் நிறைந்த குஜராத்தில் 12 வருடம் முன் பூகம்பம் வரவில்லையா? அவ்வளவு ஏன் பகவான் கிருஷ்ணனின் துவாரகை கடலில் இல்லையா? அவர்கள் எல்லாம் மாட்டுகறி உண்டவர்களா?
இன்னொரு கிறிஸ்தவ கூட்டம், மிஷினரிகளை துன்புறுத்தியதால் நேபாள துயரம் வந்தது என எக்காளமிடுகின்றது. உங்கள் மதத்தினை படியுங்கள் இயேசுவின் பின் முதல் 300 வருடங்கள் ரோமானியர் எப்படி எல்லாம் கிறிஸ்தவ துறவிகளை சித்திரவதை செய்தனர், அதில் பாதியை கூட ஹிட்லர் செய்திருக்கமுடியாது. உடனே பூகம்பம் வந்து ரோமை விழுங்கிற்றா?
தனி யூதநாடான இஸ்ரேலில் இன்றும் கிறிஸ்தவ ஆலயங்களுக்கு அதுவும் புனிதமான கிறிஸ்தவ ஆலயங்களுக்கு ஒரு தனி புனிதத்துவம் தருகிறார்களா? அந்த யூதநாடு அழிந்துவிட்டதா? உங்களை திட்டுபவருக்காய் ஜெபியுங்கள், உங்களை சபிப்பவருக்கு ஆசி கூறுங்கள் என்ற இயேசுவின் பொன்மொழி மறந்துவிட்டதா? அல்லது படிக்கவில்லையா?
தனது சிலுவை சாவிலும், கொலையாளிகளை மன்னிக்க பிரார்த்தித்து, கடைசி சொட்டு ரத்தத்திலும் தன்னை குத்தியவனின் கண்ணை திறந்த கிறிஸ்துவின் வழியில் நீங்கள் இல்லையா? படைப்பிற்கெல்லாம் சென்று நற்செய்தி சொல்லுங்கள் எனும் கிறிஸ்துவின் வார்த்தையை , துயரத்தில் இருக்கும் மக்களிடம் இப்படித்தான் பரிகசித்து பரப்புவீர்களா?
இது கிறிஸ்தவம் அல்ல, உங்களுக்கு யூதாசும் இயேசுவினை அவமானபடுத்திய ரோமை வீரர்களும் எவ்வளவோ பரவாயில்லை. மதங்களை தாண்டி சிந்திப்போம், நேபாளியரும் மனிதரே. ஆபத்திலும் பயத்திலும் இருக்கும் அவர்களுக்கு ஆதரவாய் இல்லாவிட்டாலும் பராவியில்லை, வீழ்ந்து கிடப்போரை வார்த்தையால் கொல்லவேண்டாம். இயற்கை எல்லோருக்கும் பொதுவானது, உலகை படைத்த இறைவன் சித்தபடி அது ஆடும் அல்லது இயங்கும். அவர்களின் துயரம் மற்றவர்களுக்கு வர நொடிபொழுது ஆகுமா?
பாதிக்கபட்டவனையும், உதவும் ஸ்தானத்தில் உள்ளவனையும் இறைவன் உலகில் வைத்திருப்பதே தர்மம் எங்காவது வாழாதா? மானிடம் எங்காவது பூக்காதா என சோதிப்பதற்குத்தான். அவர்களை மதத்தின் பெயரால் சீண்டவேண்டாம். இயேசுவின் மொழியில் சொல்வதென்றால்
"இக்கற்களிலிருந்தும் தன் மக்களை எழுப்ப ஆண்டவர் வல்லவர்".
இது நேபாளத்தை சீண்டுவோருக்கும் நிச்சயமாய் பொருந்தும்.