தேவ குமாரர், மனுஷ குமாரத்திகள் யார் என்ற கேள்விகள் பல நூற்றாண்டுகாலங்களாக விவாதத்திற்கு உரிய பகுதி. வேதாகமத்தில் எந்த வசனமும்,எந்த வேத பகுதியும் நம்முடைய வாழ்வில் விசுவாசத்தை வளர்க்கவும், கர்த்தருக்குள் வளரவுமே எழுதப்பட்டுள்ளது.
வேதாகமத்திற்கு மிஞ்சிய வேத விளக்கங்கள் எப்போதும் நம்முடைய விசுவாச வாழ்வை சோர்வடையச் செய்து, விசுவாச வாழ்வையே கேள்வி குறியாக்கி விடும். இப்படிப்பட்ட வேத பகுதியை விளக்க முயற்சிக்கும் முன் இவைகளை கட்டாயம் மனதில் கொண்டே எழுத முற்படவேண்டும்.
“தேவ குமாரர், மனுஷ குமாரத்திகள்’’ யார் என்ற கேள்வி வேதத்தை வாசிக்க ஆரம்பித்ததும் எல்லோருடைய உள்ளத்திலும் எழுவது இயற்கையே. இதற்கு பலரும் பல விதங்களில் விளக்கங்கள் கொடுத்திருந்தாலும், அதை வேதத்தின் வெளிச்சத்தில் காண்பது மிகவும் நல்லது.
இங்கு தேவ குமாரர், மனுஷ குமாரத்திகள் என்று பிரிவினைச் சொற்கள் பயன்படுத்துவதற்கு காரணம்.
தேவனை அறிந்து, தேவனுடைய வழிகளில் நடப்பவர்களையும்,தேவனை அறியாது தேவனுடைய வழிகளில் நடக்காதவர்களையும் வேறுபடுத்தி, அடையாளப்படுத்தவே.
உதாரணமாக இன்றைக்கும் தேவனை அறிந்தவர்களை தேவ பிள்ளைகள் என்றும், தேவனை அறியாதவர்களை புறவினத்தார் என்றும் அடையாளப்படுத்துவது உண்டு.
மாறாக சிலர் சொல்லுவது போல் தேவ தூதர்களையோ, அல்லது ஆதாமுக்கு முன்பாக பூமியில் மனிதர்கள் இருந்தார்கள் என்பதையோ வேதம் குறிப்பிட வில்லை.
முதலாவது நாம் புரிந்து கொள்ள வேண்டியது, பிள்ளைகள் என்று அதாவது குமாரர் என்று மனிதர்களையே தேவன் குறிப்பிடுகிறார். மனிதர்களுக்கு மட்டுமே தேவ பிள்ளைகள் என்ற அதிகாரம் உண்டு. தேவ தூதர்களுக்கு ஒரு போதும் வேதம் தேவ பிள்ளைகள் என்ற அதிகாரத்தை கொடுக்க வில்லை.
தேவ தூதர்களுக்கு மனிதர்களைப்போல சரீரமும், உணர்ச்சிகளும் இல்லை. தேவ தூதர்கள் பாலின உறவு கொள்வது போல் ஆண் பால்,பெண் பால் உள்ளவர்கள் அல்ல.“மரித்தோர் உயிரோடே எழுந்திருக்கும்போது கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்தில் இருக்கிற தேவதூதரைப்போலிருப்பார்கள்;’’ (மாற்கு 12:25).
ஆண் இனம், பெண் இனம் எல்லாம் மனிதர்களில்தான் தேவ தூதர்களில் இல்லை.
“அவர்கள் இனி மரிக்கவுமாட்டார்கள்; அவர்கள் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய், தேவனுக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள்’’ (லூக்கா 20:36). இவைகள் எல்லாம் இயேசு கிறிஸ்துவினால் சொல்லப்பட்ட வார்த்தைகள்.
மனிதர்களில் மட்டுமே ஆண் என்றும் பெண் என்று உண்டு. தேவ தூதர்களில் அப்படி இல்லை என்பதை இயேசு கிறிஸ்து மிகவும் அழகாக விளக்கி காண்பிக்கிறதை கவனிக்க வேண்டும்.
“அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்’’ (ஆதியாகமம் 6:4).
இந்த வசனத்தில் குறிப்பிட்டுள்ள “இராட்சதர்’’என்ற வார்த்தை இரண்டு விதங்களில் பயன் படுத்தப்படும்.
1. சராசரி மனிதர்களை விட மிகவும் உயரமான, பருமனான மனிதர்களை குறிப்பிட பயன்படுத்தப் படும்.
2. பொல்லாத செய்கைகளை செய்கிறவர்களையும், எதற்கும் அடங்காதவர்களையும் குறிக்கவும் பயன்படுத்தப்படும்.
உடல் அமைப்பை வைத்துமட்டும் ஒருவரை “இராட்சதர்’’ அரக்கர் என்று சொல்லுவதில்லை. அவர்களின் குணாதிசயங்களை குறிக்கவும் இந்த வார்த்தை பயன்படும். தேவ பக்தி அற்ற முறையில் வாழ்ந்து வந்த அக்கிரமக் காரர்களையே “இராட்சதர்’’ என்று இந்த பகுதியில் வேதம் குறிப்பிடலாம்.
மேலும் ராட்சதர்கள் என்று தனி இனம் எதுவும் இருப்பதாக வேதம் கூறவில்லை. மற்ற புராணங்களிலும், கதைகளிலும்தான் ராட்சதர்கள்,பூதங்கள் இருந்ததாக கதைகள் கூறுகின்றன. மற்ற கதைகளை வைத்து வேதாகமத்தை விளக்கக்கூடாது.
ஆதியாகமம் 6 ம் அதிகாரத்தின் சம்பவங்கள் ஆதாமில் இருந்து 9 ம் தலைமுறைகளுக்கு பின்புதான் நடப்பதாக வேதம் கூறுகிறது. 4ம் அதிகாரத்தில் காயீனின் முக்கியமாக 6 தலைமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. 5ம் அதிகாரத்தில் சேத்தின் முக்கியமான 9தலைமுறைகள் காட்டப்படுகிறது. அதாவது, ஆதாம் ஏதேனை விட்டு வெளியேற்றப்பட்டதில் இருந்து, நோவாவின் காலத்தில் நடந்த வெள்ளப்பெருக்குவரை கிட்டத்தட்ட 2000 வருட இடைவெளி இருப்பதாக வேத வல்லுனர்கள் சொல்லுகிறார்கள்.
ஆதியாகம ம் 6ம் அதிகாரம் வரை சொல்லப்பட்டுள்ள சம்பவங்கள்வரை இந்த இரண்டு தலைமுறைகளும் அதுவரை பிரிந்தே வாழ்ந்து வருகிறது. காயீன் தேவ சமூகத்தை விட்டு பிரிந்து தேவன் அற்றவனாக வாழ்ந்ததினால் அவனுடைய சந்ததிகளும் தேவன் அற்றவர்களாக அக்கிரம செய்கைக் காரர்களாக வாழ்ந்து வருகின்றனர்.
சேத்தின் சந்ததியினர் தேவனோடு இணைந்து தேவனை அறிந்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த இரண்டு தலைமுறையினரும், எந்த விதத்திலும் சம்மந்தம் கலவாதவர்களாக இருந்தவர்கள். 6 ம் அதிகாரத்திற்குப் பின்பாக திருமண பந்தங்கள் மூலமும், தகாத உறவின் மூலமும் இணைவதினால், அது தேவனுக்கு பிரியமில்லாத செயலாக மாறுகிறது.
அது மட்டுமல்ல, அவர்களுக்கு பிறக்கிற பிள்ளைகள் இன்னும் அக்கிரம மிகுதி உள்ளவர்களாக வாழ ஆரம்பிக்கின்றனர்.
இதனால் தேவனுடைய திட்டங்களும் தேவனுடைய சித்தமும் பாழ்படுத்தப்படுகிறது.
“மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு,தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது ( ஆதியாகமம் 6:5,6).
இந்த 6ம் அதிகாரத்தின் வசனங்கள் நமக்கு தொடர்ச்சியாக எழுதப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு வசனமும் ஒவ்வொரு கால கட்டத்தின் சம்பவங்கள் என்பதை முதலாவது புரிந்து கொள்ள வேண்டும்.
தேவனை அறிந்த சேத்தின் சந்ததியும், தேவனை அறியாத காயீனின் சந்ததியும் ஒன்றாக கலக்கும் போதே அக்கிரமங்கள் பெருக ஆரம்பிக்கிறது.
தேவனை அறிந்த சேத்தின் சந்ததியும், தேவனை அறியாதபடி தங்கள் மனம் போல் வாழ்ந்த காயின் சந்ததியும் இணைந்ததால் மட்டும் தேவன் அந்த சந்ததியை அழிக்க வில்லை. படிப்படியாக முழுவதுமாக தேவனை விட்டு விலகி, மனிதர்களுக்குள் அக்கிரமம் பெருகியதால்,
தேவ திட்டத்திற்கு விரோதமாகவும், தேவ சித்தத்திற்கு எதிராகவும் அக்கிரமத்தின் மிகுதியினால், வன்முறைகளும், தகாத விதமாய் நடந்த பாலியல் உறவுகளும், பாவத்தின் அகோரமும், அவலட்சணமாக அநேக பாவ காரியங்களும் மனிதர்களுக்குள் பெருகிய போதே தேவன் பூமியில் உள்ள மனிதர்களை அழிக்க முடிவெடுக்கிறார். அழிவிற்கு அதுவே காரணமாக அமைந்து விட்டது.
மாறாக தேவ குமாரர்கள் எனப்படுகிறவர்கள் தேவ தூதர்கள் என்று வியாக்கியானம் செய்வதோ,ஆதாமுக்கு முன்பாகவே பூமியில் மனிதர்கள் இருந்தார்கள் என்று சொல்லுவதோ வேதத்தின் முறைமைகளுக்கு எதிராகவே இருக்கிறது.
தேவதூதர்கள் பாலியல் உறவில் ஈடுபடக்கூடிய வகையில் இருந்திருப்பார்களானால், அவர்கள் மூலம் சந்ததிகள் உருவாவதற்குண்டான வாய்ப்புக்கள் இருக்குமானால் அது தேவன் மனிதனை பூமியில் படைத்ததற்கே எதிரான செயலாகவே இருக்கும்.
அது மட்டுமல்ல தேவ தூதர்களில் ஆண் தன்மை உள்ளவர்கள் இருந்திருப்பார்கள் என்றால், பெண் தன்மை உள்ளவர்களும் இருந்திருக்க வேண்டும் அப்படிதானே, அப்படியானால் ஆண் பால் தேவ தூதனும்,பெண்பால் தேவ தூதனும் ஒன்றினைந்தால் அவர்களுக்கு சந்ததிகள் உண்டாக வேண்டும் அல்லவா? இப்படி கேள்விகள் பல விதங்களில் அதிகமாக எழும்ப வாய்ப்புகள் உண்டாகும்.
எனவே நன்றாக அறிந்து கொள்ள வேண்டும் தேவ தூதர்களுக்கு சந்ததியை விருத்தியடையச் செய்யும் வித்து அவர்களுக்குள் இல்லை.அவர்களுக்கு மனிதர்களைப்போல் இரத்தமும், சரீரமும் இல்லை. அவர்களுக்கு மனிதர்களைப்போல் பாலியல் உணர்வுகளோ, மற்ற உணர்வுகளோ இல்லை.
தேவ குமாரர்கள் என்ற வார்த்தை தேவனை அறிந்து தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்றும் தேவ மக்களையே குறிப்பிடுகிறது. மனுஷ குமாரத்திகள் என்ற வார்த்தை தேவனை அறியாத தேவனுடைய வழிகளில் நடக்காத மக்களையே குறிப்பிடுகிறது.
தேவனை அறிந்தவர்கள் தேவனை அறியாத பெண் பிள்ளைகளை தங்கள் திருமண பந்தத்தில் இணைத்துக்கொள்ளும் போது அவர்கள் இவர்களின் மனதை வழிவிலகி போக செய்கிறார்கள். இதனால் அடுத்த தலைமுறை பாதிக்கப்படுகிறது.
தேவனை அறியாத அல்லது தேவனுடைய வழிகளில் செல்லாதவர்களின் இருதயம் கடினப்படுவது மட்டுமல்ல, ஒழுக்கக் கேடான வாழ்க்கைக்கு நேராகவே திருப்பி விடும்.
ஒருவருடைய வாழ்க்கையில் தேவனுடைய சட்டதிட்டங்களுக்கு கீழ்ப்படிய மறுக்கும் போதே எல்லாவித தீங்கும் உள்ளே வந்து விடுகிறது. இது ஒரே நாளில் நடந்து விடுகிற சம்பவம் அல்ல, படிப்படியாக விஷம் போல் பரவி முழுமனித இனத்தையும் பாழ்ப்படுத்தி விடுகிறது.
அன்றைக்கு மட்டுமல்ல, இன்றைக்கும் தேவனை அறியாத பிள்ளைகளை தேவனை அறிந்து பின்பற்றும் பிள்ளைகள் திருமணம் செய்து கொள்ளும் போது தேவனை அறிந்த பிள்ளைகளின் ஆவிக்குரிய வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடுகிறதை இன்றைக்கும் நாம் கண் கூடாக பார்க்க முடிகிறது.
தேவ தூதர்கள் மனுஷ குமாரத்திகளோடு கூடினார்கள் அதினால்தான் இராட்சத பிறவிகள் பிறந்தார்கள் என்று ஆதியாகமம் 6ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது என்று வியாக்கியானம் செய்தால்,நோவா காலத்தில் தேவன் முழு உலகத்தையும் வெள்ளப்பெருக்கினால் அழித்து, நோவா வின் குடும்பம் தவிர எல்லா மனிதர்களையும் மாண்டு போக செய்தார், நோவாவின் குடும்பத்தின் மூலமாகவே மறுபடியும் புது மனித சந்ததியை உருவாக்குகிறார். அப்படி இருக்க,
எண்ணாகமம் 13:33, உபாகமம் 2:11 , உபாகமம் 2:20 , உபாகமம் 3:11,உபாகமம் 3:13 , யோசுவா 13:12, II சாமுவேல் 21:16, II சாமுவேல் 21:18, IIசாமுவேல் 21:20, II சாமுவேல் 21:22, இந்த வசனங்களில் இராட்சத பிறவிகள் இருந்தார்கள் என்று வேதம் சொல்லுகிறது. அப்படியானால் இந்த வசனங்களில் சொல்லப்பட்டுள்ள இராட்சதர்கள் யாருக்குப் பிறந்தவர்கள்?
இவர்களும் தேவ குமாரர்களுக்கும் மனுஷ குமாரத்திகளுக்கும் பிறந்தவர்களா? அப்படியானால் தொடர்ந்து தேவ தூதர்கள் மனிதர்களோடு பாலியல் உறவில் ஈடுபட்டார்களா? என்ற கேள்வி எழும்பும் எனவே,வேதாகமத்தை வாசிக்கும் போது எல்லாவற்றையும் நம்முன் கொண்டுவருவது நல்லது. மேலே உள்ள வசனங்களில் குறிப்பிட்டுள்ள இராட்சதர்கள் , உருவத்தில் சராசரி மனிதர்களை விட வித்தியாசமாக இருந்ததால் அவர்களை வேதம் ராட்சதர்கள் என்று கூறினாலும், அவர்கள் மனிதனுக்கும், மனுஷிக்கும் பிறந்தவர்களே, அவர்களும் மனிதர்களோடு மனிதர்களாகவே வாழ்ந்து வந்தார்கள். மேலும் ஆதியாகமம் 6.3 ல் அப்பொழுது கர்த்தர்:என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, என்று சொல்லுகிறார். பாவத்தை செய்தது தேவ தூதர்களானால் தேவன் மனிதனுக்குத் தண்டனை விதிப்பது ஏன்? தேவ புத்திரர் எனக்குறிப்பிடப்படுகிறவர்கள் மனிதர்களாக இருந்தால்தான் வசனம் 7 தேவன் மனிதரை தண்டிப்பது ஏன் என்று விளங்கி கொள்ள முடியும்.
நோவாவின் காலத்தில் மனிதர்களுடைய பாவங்கள் இரண்டு வகைகளில் துணிகரமாக செயல்பட்டன. ஒன்று, பாலியல் உறவுகள் மிகவும் மட்டமாக இருந்தன ,மற்றும் வன்முறைகள் முகவும் பெருகி மனிதனின் அன்பு முழுவதும் தனிந்து போன நிலையில் இருந்தது. அதைக்குறித்துதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லும் போது.
“நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்;அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்’’ (மத்தேயு 24: 37-39)என்று உலகத்தின் கடைசி நாட்களிலும் அவ்விதமாக நடக்கும் என்று சொன்னது போல இந்நாட்களிலும் அவ்விதமான அவலட்சனமான பாலியல் உறவுகளும், வன்முறைகளும் அதிகளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இன்னும் கடைசி நாட்களில் அதிகமாகும். அப்பொழுது இயேசு கிறிஸ்துவின் வருகை இருக்கும் என்று தெளிவாக இயேசு கிறிஸ்து சொல்லி இருக்கிறார்.
ஆதாமுக்கு முன்பாகவும் மனிதர்கள் இருந்தார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ளமுடியாது. ஏன் என்றால் வேதம் தெளிவாக சொல்லுகிறது. முதல் மனிதன் ஆதாம் என்று வேதமே நமக்கு தெளிவாக சொல்லி இருக்க ஆதாமுக்கு முன்பாக மனிதர்கள் இருந்தார்கள் என்பதை எந்த அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியும்.
தேவ குமாரர்கள், தேவ தூதர்களையே குறிக்கிறது என்று சொல்லுகிறவர்கள் “தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகா நாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்’’ (யூதா6) என்ற இந்த வசனத்தையே ஆதாரமாக வைக்கிறார்கள்.
ஆனால் இந்த வசனம் தேவனுக்கு விரோதமாக எழும்பி,பெருமையினால் விழுந்துபோன தேவ தூதர்களையே குறிப்பிடுகிறது. அதுதான் சாத்தானின் கூட்டம்.
மேலும் பழைய ஏற்பாட்டில் சில சமயங்களில் தேவ தூதர்கள் மனித ரூபத்தில் காணப்பட்டார்கள் என்று வேதம் கூறுகிறது. அதை வைத்து தேவ தூதர்கள் பாலின உறவில் ஈடுபட்டார்கள் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது காரணம். அவர்கள் குறிப்பட்ட அந்த வேலைகளுக்கு மட்டுமே மனித வடிவில் தெரிந்தார்கள், மற்றபடி மனிதர்களோடு மனிதர்களாக வாழவில்லை. அவர்களுக்கு மனிதர்களைப்போல உணர்வுகள் இல்லை.
மேலும் மனிதர், ராட்சதர், தேவ குமாரர் என்று தனி தனி இனங்கள் பூமியில் இருந்தது, என்று சொல்லுவது மற்ற புராணங்களை மனதில் வைத்து கற்பனை வடிவம் கொடுக்க முயற்சிப்பது. அதற்கு வேதாகமத்தில் எந்த ஆதாரமும் இல்லை.
ஆகவே தெளிவாக நாம் அறிந்து கொள்ள வேண்டிய பதில் தேவ குமாரர் என்பவர்கள் சேத்தின் சந்ததியினரே
எனவே வேதத்திற்கு மிஞ்சிய வியாக்கியானம் வேதத்திற்கு விரோதமானதும், வேதாகம விசுவாசத்தை கேள்விக்குறியாகவும் மாற்றிவிடும் என்பதில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
இந்த கட்டுரை எழுத துணை நின்ற நூல்கள்.
நிறைவாழ்வு ஆய்வு வேதாகமம் மற்றும்
ஆதியாகமம் விளக்கவுரை எய்ச். ஜே. ஆப்பிள்பீ இன்னும் சில நூல்கள்.
நன்றி :
-- Edited by Yauwana Janam on Wednesday 2nd of July 2014 08:57:07 AM