(47 வது நிமிடத்தில்... ) பணப் பிரச்சினை மற்றும் பொருளாதார நெருக்கடிகளின்போது துதிக்க சொல்லுவது தவறா ? துதித்து மனதை லேசாக்கிக்கொண்டு பிறகு போதிக்கலாமே ? உடைந்து போயிருப்பவர்களை இன்னும் துன்புறுத்துவது போல நீட்டி முழக்கி பிரசங்கம் பண்ணாமல் அவர்களை தைரியப்படுத்திய பிறகு அவர்களுடைய விடுதலைக்குத் தேவையான ஆலோசனைகளைத் தருவதே ஆரோக்கியமான அணுகுமுறையாக இருக்கும். உதாரணமாக ஒரு குடிகாரன் வியாதிப்படுக்கையிலிருக்கையில் அவனுக்குத் தேவையானது வைத்தியமே தவிர நீதி போதனையல்ல. அவன் குணமானபிறகு தேவையான எச்சரிப்புகளைக் கொடுப்போம். எனவே விசுவாசிகளை வஞ்சித்து திசைதிருப்பும் அரைவேக்காட்டுத்தனமான உளறல்களைக் குறித்து நாம் எச்சரிப்படையவேண்டும்.
நமது கரத்தில் தவழும் வேதப் புத்தகத்தைப் போற்றும் தோரணையில் இங்கே ஒருவர் மொத்த சமுதாயத்தையும் குழப்புகிறார். உதாரணமாக தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ளுவது எப்படி என்று எழுதப்படும் புத்தகத்தை வாங்குவோர் அனாதைகளாம். ஆக, எதுவானாலும் பைபிள் படித்தாலே போதும் என்கிறார். ஆனால் வேதம் கொடுக்கப்படுவதற்கு முற்பட்ட காலத்தை அதிகமாகப் புகழும் அவர் இன்னொன்றையும் அறிந்திருக்கவேண்டும், அன்று ஒருவருக்கொருவர் புத்திசொல்லுவதற்காகவே கூடிவந்தனர். திருச்சபை அமைக்கப்பட்டதும் அங்கே கொடுக்கப்பட்ட ஐவகை ஊழியங்களின் நோக்கமும் அதுவே. மாத்திரமல்லாது பரிசுத்த வேதாகமமானது கிபி 200-ம் ஆண்டுக்குப் பிறகே கொடுக்கப்பட்டது என்கிறார். இதுபோன்ற அடிப்படையற்ற உபதேசத்தை எங்கிருந்து பெற்றாரோ நாம் அறியோம். இப்படிப்பட்டவர்களிடம் விசுவாசிகள் எச்சரிக்கையாக இருக்கவும் இப்படிப்பட்டவர்களை மேடைகளில் ஏற்றிவிட்டு இருக்கும் சொற்ப ஜனங்களையும் அடங்காதவர்களாகவும் கீழ்ப்படியாதவர்களாகவும் நாம் மாற்றிவிடாதிருக்கவேண்டும். ஒரு குறிப்பிட்ட உபதேசத்தினால் ஆறுதலும் பக்திவிருத்தியும் உண்டாகாவிட்டால் அது சாத்தானின் போதகமே என்போம்.