இந்து மக்களின் பக்தியுணர்வையும் தான தருமங்களையும் பார்க்கும்போது ஒரு நிமிடம் நமக்கே மெய்சிலிர்க்கும். ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் கதைகளோ தலையை சுற்றும். இதோ ஒரு அபூர்வமான கதை... இதைப் படித்துவிட்டு லாஜிக் கேள்விகளைக் கேட்போருக்கு இதெல்லாம் ஐதீகம் எனும் ட்ரேட்மார்க் பதிலே கிடைக்கும். இந்த கதையில் அப்பன் தெய்வம் பூமியை பேலன்ஸ் பண்ண தவிப்பதையும் பிள்ளை தெய்வம் சைவ-வைணவ மோதலுக்குக் காரணமாக இருப்பதையும் கவனிக்கவும். சாமிங்களே இப்படி நடந்துகிட்டா மனிதர்களாகிய நாம் என்ன செய்யமுடியும் ?
திருக்கயிலையில் சிவபெருமான், பார்வதி தேவி திருமணத்தைக் காண மூவுலகத்தவரும் கூடியிருந்தனர். அப்போது பாரம் தாங்காமல் வடக்கு திசை தாழ்ந்தும், தென் திசை உயர்ந்தும் காணப்பட்டது. இதைக் கண்ட ஈசன், குறு முனிவர் அகத்தியரை அழைத்து பூமியை சமமாக்க தென்திசை செல்லும்படி பணித்தார். ஒப்புக்கொண்ட அகத்தியர், சிவபெருமானிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார்.
தென்திசையில் அகத்தியர்
‘ஐயனே! நான் இப்போதே தென்திசை நோக்கி புறப்படுகிறேன். ஆனால் உங்கள் திருமணக் காட்சியை தென்திசையில் எனக்கு காட்டியருள வேண்டும்’ என்றார்.
தன்னை வணங்கி வேண்டிய அகத்தியரிடம், ‘நீ! தென்திசையில் உள்ள பொதிகை மலைக்கு செல். அங்குள்ள திரிகூட மலையில், எங்களின் திருமணக் கோலத்தை உனக்கு காட்டியருள்வோம்’ என்று ஈசன் வாக்களித்தார்.
அகத்தியர் தென்திசையை வந்தடைந்தார். பூமி சமநிலை அடைந்தது. ஈசன் கூறியபடி திரிகூட மலைக்கு புறப்பட்டு வந்தார் அகத்தியர். திரிகூட மலை என்பது திருக்குற்றாலம் ஆகும். இந்தப் பகுதியில் சிவபெருமானை வழிபடுவதற்காக சிவதலம் ஏதாவது இருக்கிறதா? என்று தேடினார். ஆனால் அருகில் எந்த சிவதலமும் இல்லை. எனவே சிவ வழிபாடு எப்படிச் செய்வது என்று வருத்தம் கொண்டார் அகத்தியர்.
அனுமதியில்லை
இந்த நிலையில் திரிகூட மலையில் பெருமாள் கோவில் ஒன்று இருந்தது. பெருமாளை தரிசிக்க எண்ணிய அகத்தியர் கோவிலை நெருங்கினார். ஆனால் உடம்பெல்லாம் திருநீறு தரித்து, கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் இருந்த அகத்தியரை வைணவர்கள் ஆலயத்திற்குள் அனுமதிக்கவில்லை. சைவ மத அடையாளம் தரித்தவர்களை உள்ளே விடமுடியாது என்று தடுத்து விட்டனர்.
அகத்தியர் செய்வதறியாது திகைத்துப்போனார். தன் மனக்குமுறலை கொட்டுவதற்காக அருகில் இலஞ்சி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமானை தேடி வந்தார். திரிகூட மலையில் தனக்கு நடந்தவற்றை கூறி முருகப்பெருமானிடம் தன் வேதனையை வெளிப்படுத்தினார்.
அகத்தியர் முன்பாக தோன்றிய முருகப்பெருமான், ‘வைணவ அடியவர் போல் சமயச் சின்னம் தரித்து கோவிலுக்குள் சென்று பஞ்சாட்சரம் ஓதி விஷ்ணுவை, சிவலிங்கமாக்கி வழிபடுங்கள்’ என்று கூறி அங்கிருந்து மறைந்தார்.
பெருமாள் சிவனாக...
முருகப்பெருமான் கூறியபடி, தன் நெற்றியில் திருநாமம் இட்டு, மார்பில் துளசி மாலை அணிந்து வைணவ அடியவர் போல் திருக்குற்றாலத்தில் இருந்த பெருமாள் கோவிலுக்குள் சென்றார், அகத்தியர். பின்னர் அங்கிருந்த அர்ச்சகரிடம், ‘பெருமாளுக்கு மானசீக பூஜை செய்ய வேண்டும் சிறிது நேரம் வெளியில் இருங்கள்’ என்று கூறி, கருவறைக் கதவை மூடினார்.
கருவறையில் நின்ற கோலத்தில் இருந்த பெருமாளின் தலையில் கை வைத்து அமுக்கி, ‘குறுகுக... குறுகுக...’ எனக் கூறி சிவபெருமானை நினைத்து தியானித்தார். என்ன ஆச்சரியம்! பெருமாளின் திருமேனி குறுகிப்போய் சிவலிங்கமாய் மாறிப்போனது. சிவனை துதித்து வழிபட்டார் அகத்தியர். வழிபாடு முடிந்ததும் கருவறைக் கதவைத் திறந்து வெளியேறினார்.
நன்னகரப் பெருமாள்
அப்போது கருவறையில் பெருமாளைக் காணவில்லை. சிவலிங்கம் இருப்பதைக் கண்டு வைணவர்கள் கோபம் கொண்டனர். அகத்தியரை வசை பாடினர்; தாக்கவும் முயன்றனர். அதற்குள் அகத்தியர் ஒரு தர்ப்பைப் புல்லை மந்திரித்து விட்டார். அது வைணவர்களைத் தாக்கியது. இதனால் அவர்கள் அகத்தியரிடம் தங்களை மன்னிக்குமாறு வேண்டினர்.
அவர்களிடம், ‘மகாவிஷ்ணுவை சங்க வீதியின் தென்மேற்குப் பக்கத்தில் வைத்து வழிபடுங்கள்’ என்று அகத்தியர் கூறினார். அந்த விஷ்ணுவே இன்று, ‘நன்னகரப் பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். இதையடுத்து அங்கிருந்தே ஈசனின் திருமணக் கோலத்தை கண்டு களித்தார் அகத்தியர். பெருமாளாக மாறிய சிவபெருமான் அகத்திய முனிவரால் குற்றாலநாதர் என்று அழைக்கப்பட்டார். பெருமாளைச் சிவனாக மாற்ற, தன் கைகளால் தொட்டதால், குற்றாலநாதரின் தலையில் அகத்தியரின் ஐந்து விரல்களும் பதிந்துள்ளதை இன்றும் காணமுடியும்.