இவர் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் பொறுப்பாளராம்; இவருடைய முக்கிய பணியே ஊழியக்காரர்களுக்கு தொல்லை தருவோரை ”உள்ளே” தள்ளுவதாம். இதுகுறித்து நம்முடைய அலுவலகத்துக்கு போன்செய்து மிரட்டிய இந்த நபர் தான் இனிக்கோ இருதயராஜ் அவர்களின் இயக்கமான, “கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின்” பொறுப்பாளர் எனவும், இனி எங்கள் உறவினரான வியாசர் லாரன்ஸ் குறித்து ஏதேனும் செய்தி வெளியிட்டால் அடுத்தது போலீஸ் ஸ்டேஷனில் நாங்கள் நிற்க வைக்கப்படுவோம் என்று மிரட்டியிருக்கிறார். இது முழுவதும் சட்டவிரோதமான செயல் என்று அறிந்தும் அதனை இவர் கிறிஸ்துவின் பெயரால் துணிகரமாக செய்திருப்பதுடன் இதுவே தங்கள் முழுநேர பணி என்றும் குறிப்பிடுகிறார். மேலும் யார் எப்படி போனால் உனக்கென்ன, ஆண்டவர் ஆசீர்வதிக்கட்டும், சபிக்கட்டும், ஆண்டவர் உன்னை அடிச்சா அது பயங்கரமா இருக்கும் என்று நமக்கே சவால் விடுக்கிறார். நம்முடைய ஆண்டவரும் ”தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்..” என்றே சொல்லியிருக்கிறார். நாமோ இவரை அத்தனை தீமையானவராக நினைக்காமல் விஷயம் தெரியாத சிறுபிள்ளை என்றே நினைக்கிறோம். இதற்கிடையே என்னுடைய தள நண்பர்கள் யாவருக்கும் இதன்மூலம் அடியேன் தெரிவித்துக்கொள்ளுவது என்னவென்றால் எங்களுக்கோ எங்கள் உடைமைகளுக்கோ ஏதேனும் அச்சுறுத்தலோ ஆபத்தோ இழப்போ ஏற்பட்டால் அது இவர்களைப் போன்றவர்கள் மூலமாகவே இருக்கும். இவர்களே முழுபொறுப்பையும் ஏற்கவேண்டும்.
ஹலோ மிஸ்டர்,
இது நீங்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் உங்கள் கணக்கை தேடியெடுத்த பக்கமாகும். இந்த படத்தில் இருப்பது நீங்கள் அல்ல என்று மறுப்பு தெரிவித்தால் உடனே இதனை நீக்கிவிட ஆயத்தமாக இருக்கிறோம். உங்கள் அங்கிள் முதலாவது மற்ற ஊழியர்களை இழிவுபடுத்தி பரியாசம் செய்திருப்பவற்றை உங்கள் கவனத்தில் கொள்ளவும். முக்கியமாக ஒவ்வொரு மேடையிலும் ஆவியானவரையும் அவருடைய அன்பின் வரங்களையும் இழிவுபடுத்தி பேசிவருகிறார். இதை சுட்டிக்காட்டி அவர் எந்த உபதேச பின்னணியின் பாதிப்பினால் இப்படியெல்லாம் பேசுகிறார் என்பதை கிறிஸ்தவ தளத்தில் அறிவிப்பதனால் எண்ணற்ற அப்பாவிகள் விழிப்படைய வாய்ப்பாக இருக்கும் என்று நம்புகிறோம். அவருடைய பக்கங்களிலும் மற்றும் அவருடைய கருத்து அமைந்துள்ள பக்கங்களிலும் நாம் வெளியிட்டிருப்பவை அனைத்தும் உபதேசம் சம்பந்தமான காரியங்களே. மேலும் அவர் ஒவ்வொரு கூட்டத்துக்கும் குறிப்பிட்ட பணத்தை கூலியாக பேசிக்கொண்டே வருவதை ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்திக்கொண்டதால் அவர் தன்னை ”தியாகமான” கிராம ஊழியர் என்று சொல்லிக்கொள்ளுவதையும் எங்களால் ஒப்புக்கொள்ளமுடியாது. அண்மையில் கூட ஒரு கிராம ஊழியத்தில் ஒரே நாள் மாலை கூட்டத்துக்கு அவர் ரூபாய் 12,000/- பெற்றதாக சொல்லப்படுகிறது. இதை அவர் ஆதாரத்துடன் மறுத்தால் அதற்கும் வருத்தம் தெரிவிக்கிறோம்.
இனி உங்கள் கவனத்துக்காக....
# முதலாவது அவருடைய உபதேசம்.
அவர் இயேசுவை ”சிருஷ்டிகர்” என்று சொல்லாமல் ”சிருஷ்டிக்கப்பட்டவர்” என்று சொல்லும் - திரித்துவத்தை மறுக்கும் கூட்டத்துடன் அறியாமையினால் அல்ல, அறிந்தே ஐக்கியம் வைத்திருப்பதை ஆதாரத்துடன் நிரூபித்திருக்கிறோம். அதை சொல்ல நீ யார் என்று நீங்கள் கேட்பீர்களானால் ஆரோக்கிய உபதேசத்தை எல்லோருக்கும் சொல்லுவதற்காகவே நாங்கள் இன்னும் உயிரோடிருக்கிறோம் என்பதை நீங்கள் அறியவேண்டும். நாங்கள் பணத்துக்காகவோ பேர் புகழுக்காகவோ எதையும் செய்கிறதில்லை என்பதை நாங்கள் மனதார சேவிக்கும் கர்த்தர் அறிவார்.
# இரண்டாவது அவருடைய இரட்டை வேடம்.
மேடைகளில் பல்வேறு சபைகளைக் குறித்தும் ஊழியர்களைக் குறித்தும் கேலி,கிண்டல் பரியாசம் செய்தாலும் புறவழியில் அதே சபையாரோடு உறவு வைத்துள்ளார். உதாரணத்துக்கு தமிழகத்திலேயே கார்டினல் பட்டத்தைப் பெற்ற அண்ணாச்சியை மறைமுகமாக தாக்கும் அவர் தனது வெப்சைட்டில் அவரோடு எடுத்துக்கொண்ட படத்தினை பதித்திருக்கிறார். அதற்கான லிங்குடன் செய்தியை வெளியிட்டிருக்கிறோம். எம் ஜனங்கள் எதற்கெடுத்தாலும் ஆதாரம் கேட்பதாலேயே இதுபோன்று ஆதாரங்களைக் கொடுக்கவேண்டியிருக்கிறது என்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.
# மூன்றாவது அவர் எம்மை இனரீதியாக பாகுபடுத்தி இழிவுபடுத்தியது.
இவரைப் போன்ற முதிர்ந்த அனுபவமுடையவர்கள் ஏதோ ஆரிய சூழ்ச்சியினால் நாம் இதையெல்லாம் எழுதுவதாக சொல்லுவது நகைப்புக்குரியதாகும். இப்படி அவர்கள் எம்மீது வெறுப்பை உமிழ முக்கியமான காரணம் வேறொன்றுமில்லை, நாங்கள் கடந்த ஐந்து வருடங்களாக இவரோடு தொடர்பிலிருப்போரின் துருபதேசங்களை பகிரங்கப்படுத்தி வருகிறோம் என்பதே. உங்களுக்கெல்லாம் நியாயத்தைப் புரிந்துகொண்டு திருந்துவதைவிட ஏதோவொரு இயக்கத்தின் பெயரை சொல்லி அப்பாவிகளை மிரட்டுவது எளிதாக இருப்பதைப் பார்க்கும்போது இன்றைய கிறிஸ்தவத்தின் நிலைமை வெளிப்படையாகத் தெரிகிறது. தூக்குமேடையில் ஏறி தூக்குக்கயிறை முத்தமிட்டு வீரத்துடன் ஏற்றுக்கொண்டு நமக்கெல்லாம் சுதந்தரம் பெற்றுத் தந்தவர்கள் வாழ்ந்து மறைந்த இந்த மண்ணில் உங்களைப் போன்றவர்கள் எழும்பி எமது பேச்சுரிமையையும் எழுத்துரிமையையும் நசுக்கும் முயற்சிகள் உள்ளபடியே அதிர்ச்சியாக இருக்கிறது.
இறுதியாக எங்கள் ஒரே கோரிக்கை என்னவென்றால் இவருடன் தொடர்பிலிருக்கும் மற்றவர்களைப் போலவே இவரும் தான் வேதமாணாக்கர் இயக்கத்தை சேர்ந்தவன் என்று அறிவிக்கட்டும் அல்லது பிதா,குமாரன்,பரிசுத்தாவி எனும் திரித்துவ உபதேசத்தை மறுக்கும் அந்த இயக்கத்தைக் கண்டிக்கட்டும். அந்நிய பாஷை போன்ற சிக்கலான ஆவியின் வரங்களை இழிவுபடுத்தி பேசிய பேச்சுகளுக்காக வருத்தம் தெரிவிக்கட்டும். அல்லது அவருக்கு எப்படி எழுத்துரிமையும் பேச்சுரிமையும் இருக்கிறதோ அதேபோல மற்றவர்களுக்கும் இருக்கும் என்பதை உணரட்டும். இதுகுறித்து நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எங்களை தனிமடல் மூலம் தொடர்புகொள்ளலாம் என்று நட்புடன் கூறி விடைபெறுகிறோம். நன்றி.