சங்கீதம் 38:19 என் சத்துருக்கள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்; முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள்.
முகாந்தரமின்றி - காரணமே இல்லாமல் நம்மை பகைத்து தூஷிக்கும் எதிரிகள் பெருகிக்கொண்டே போகிறார்களே என்று நாம் மிகவும் நிதானமாகவும் அதே நேரத்தில் நியாயமாகவும் ஒரு கருத்தை ஒரு புதிய நண்பர் தொடர்பாக எழுதினால் அதையும் விவகாரமாக்கி எடுத்த எடுப்பிலேயே ஒருமையில் பேசி பகையை உருவாக்கி அதை வளர்க்கும் சிலருடைய முயற்சிகளால் மிகவும் சோர்ந்துபோயிருக்கிறோம். இது நியாயம் தானா, என்பதை வாசக நண்பர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம். மிகவும் பண்பட்டவர் பண்பாளர் என எல்லோராலும் புகழப்படும் “ப்ளாக் ஷீப்” விஜய் இப்படி எல்லோரையும் வஞ்சித்து ஒரு மனுஷனுக்கு எதிராக பலரைத் தூண்டிவிடும் இரகசியம் இன்னதென்று ஒரு மனிதனுக்கு தெரியாவிட்டாலும் சர்வ வல்லவரான தேவ ஆவியானவர் அதனை அறிந்திருக்கிறார். விரைவில் இப்படிப்பட்டவர்கள் விசாரிக்கப்படுவார்கள் என்பது நிச்சயம்.
தமிழில் பெயர் சூட்டவேண்டுமென்று நாம் வேண்டுகோள் விடுப்பது, மொழி வெறியால் அல்ல, தமிழ்ச்சமூகத்திலிருந்து நாம் அந்நிய பட்டுவிடக்கூடாது எனும் உயரிய நோக்கத்திற்காகவே! மற்ற மொழி பேசுபவர்கள் நமது எதிரிகள் அல்ல.சிலர் அறியாமையால் விமர்சனம் செய்வது ஏற்புடையது அல்ல.
நண்பரைவிட நாம் அதிகமாகவே தமிழ் மொழியை நேசிக்கிறோம். அதற்காக வேதத்திலுள்ள புனிதமானதும் பவித்ரமானதுமான பெயர்களை விமர்சிக்கக்கூடாது என்பதே நம்முடைய வேண்டுகோளாகும். கர்த்தருக்குள் நித்திரையடைந்த அண்ணன் ஜீவானந்தம் அவர்கள் தனது ஊழியத்தை மகிழ்ச்சி என்ற பெயரிலேயே நிறைவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவர் தனது தாய்மொழியைவிட்டு அந்நியப்பட்டிருக்காவிட்டால் நற்செய்தியானது உலக முழுவதும் பரவியிருக்காது எனும் சரித்திர உண்மையை நண்பருக்கு எல்லா பணிவோடும் நினைப்பூட்ட விரும்புகிறேன்.
வதனநூல் தளத்தில் நண்பர் ஒருவர் பின்வரும் கருத்தை வெளியிட்டிருக்கிறார்.அவருக்கு நாம் அளித்துள்ள பதிலை இங்கே சேமிக்கிறோம். காலம் கெட்டு கிடப்பதால் யார் எப்போது நம்மை ப்ளாக் பண்ணுவார்கள் என்றே தெரியவில்லையே, பிறகு நாம் சிந்தித்து எழுதிய நல்ல கருத்துக்கள் காணாமற் போகும் என்பதால் இந்த முயற்சி.
/// நமது ஆலயங்ளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும். மக்களுக்கு புரியாத பெயர்களை சூட்டுவதில் பெரும் குழப்பம் உள்ளது. ஷெக்கினா, ஷம்மா, யெகோவா நிசி, பூரண சுவிசேஷ, என்பதற்கு பதிலாக மக்களுக்கு புரியும்படி நிம்மதி மையம், புதுவாழ்வு, மகிழ்ச்சி என புதிய பெயர்களே தேவை. ///
கிறிஸ்தவன் என்பவன், விண்ணுக்குரியவன். அவனை எந்தவொரு மொழியோ கலாச்சாரமோ சமுதாயமோ காலங்களோ அல்லது பழக்கவழக்கங்களோ கட்டுப்படுத்தமுடியாது. அவன் முழுமையும் விடுதலையாக்கப்பட்டவன், சுதந்திரமானவன்.
இந்நிலையில் ஆலயங்களுக்கு சூட்டப்பட வேண்டிய பெயர்கள் எப்படியிருக்கவேண்டும் என்று ஒரு நண்பர் தனது சொந்த கருத்தை வெளியிட்டிருக்கிறார். இது அவருடைய சொந்த கருத்து என்பதால் நாம் அதனைப் பொருட்படுத்தவேண்டாம். இந்த சமுதாயத்தில் எல்லோரும் அவரவர் கருத்தை வெளியிடும் சுதந்தரம் உண்டு.
உன் சுதந்திரத்தின் எல்லை என்பது எனது மூக்கின் நுனியில் முடிகிறது என்றாராம், இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில். அதேபோல ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஆண்டவருடைய நேரடி அழைப்பைப் பெற்று சொந்தமாக பாடுபட்டு ஒரு ஊழியத்தை ஸ்தாபித்தவர் தன்னுடைய மற்றும் சமுதாயத்தின் அடையாளத்துக்காக ஒரு குறிப்பிட்ட பெயரை சூட்டினால் அதை இன்னொருவர் எப்படி குறைகூறமுடியும் ?
அனைத்து பெயர்களும் மனிதனால் மனிதனுக்காக சூட்டப்பட்டவையே. அவை பொருள் மற்றும் தரிசனம் சார்ந்ததாக இருப்பதே முக்கியமானதாகும். நண்பர் ஆபிரகாம் லயன் அவர்கள் நாங்கள் நேசிக்கும் FMPB ஊழியத்தைக் குறித்து அறிந்தவராக இருக்கிறார். அவர்களுடைய பல பாடல் ஆல்பங்களில் பணித்தள பழங்குடி மக்களின் பிரபலமான வேற்று மொழி சொற்கள் அமைந்த பாடல்கள் வெளிவந்திருக்கிறது. இதன் நோக்கம் அந்த சொல்லைக் குறித்த கேள்வியை நம் உள்ளத்தில் எழுப்பி அவர்கள் மீது பாரங் கொள்ளத் தூண்டுவதே.
அதுபோலவே நம்முடைய பரிசுத்த வேதாகமத்தின் பின்னணியிலிருக்கும் அர்த்தமுள்ள எபிரெய மற்றும் கிரேக்க மொழி சொற்களின் பிரயோகமானது நம்மை மூலபாஷையின் சிறப்பான பொருளை நோக்கி நடத்தும். இன்றைய நவீன காலத்தில் எகிப்திய மற்றும் யூத பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டுவதில் பெற்றோர் பெருமை கொள்ளுகின்றனர். அந்த பெயரைக் கேட்டு அதன் பொருளை இன்னொருவர் கேட்கவேண்டும். அதை சந்தோஷத்தோடு அந்த நண்பருக்கு சொல்லவேண்டும் என்பதே பெயரை சூட்டியவரின் நோக்கமாக இருக்கும்.
நண்பர் எழுதிய நாலு வரிக்கு நாம் இத்தனை நீண்ட விளக்கம் கொடுத்தபிறகும் அந்த நண்பர் நம்மை அவருடைய இதயத்துக்குள் நுழையவிடமாட்டார். காரணம் சேருமிடம் எப்படியோ அப்படியே மனிதரும் இருக்கிறார்கள்.