// கடவுள்களுக்கு ஏது பிறப்பும் இறப்பும்? வருடாவருடம் தன் பிறந்தநாளின் மூலம், தான் ‘மனிதன்’ தான் என்பதை உலகத்திற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கும் இயேசுவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அடிமைச்சங்கிலியை உடைக்க முற்பட்ட ஒரு போராளியாக, மக்களைத் திரட்டிய ஒரு பொதுவுடைமை மனிதனாக இயேசுவை நான் மிகவும் மதிக்கிறேன். இன்று கிறித்துமஸ் கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், இயேசு உடைக்க நினைத்த அடிமைச்சங்கிலி இன்னும் உடையவில்லை என்ற நினைவுபடுத்தலுடன். அடிமைவிலங்கின் இன்னொரு கோர முகவரி இன்று. அதிகாரவர்க்கத்தை தகர்க்க முற்பட்ட 44 உயிர்களை எரித்த நெருப்பின் சாம்பல் இன்னும் நமது சமூகக்காடுகளில் புழங்கிக்கொண்டுதான் இருக்கிறது. இன்று நிகழ்ந்த இரண்டு சம்பவங்களும் அதிகாரவர்க்கத்திற்கு எதிரான அடிமைவர்க்கத்தின் கூக்குரல்களே. என்றேனும் ஒருநாள், கசிந்துகொண்டிருக்கும் இந்த சாம்பல், அன்பால் உந்தப்பட்ட மனங்களின் கண்ணீர் நனைத்து அணைந்துவிடும் என்ற பெருநம்பிக்கையுடன் வாழ்கிறேன். நான் இறப்பதற்குள் அது நடந்துவிட்டால், சிரித்துக்கொண்டே போகிறேன் !!! //
மேற்காணும் செய்தியை ஃபேஸ்புக் தளத்தில் காண நேரிட்டது. இதனை எழுதிய நண்பர்களுக்கு நாம் இதன்மூலம் தெரிவித்துக்கொள்ள விரும்புவது என்னவென்றால் ஒரு காரியத்தைக் குறித்து முழுவதும் தெரியாமல் மேலோட்டமாக கருத்து வெளியிடாதீர்கள். இன்று நாங்கள் இயேசுவின் பிறந்தநாளைக் கொண்டாடவில்லை. இயேசு பிறந்ததை இன்று கொண்டாடுகிறோம்,அவ்வளவு தான். இது ஒரு சமுதாய விழா. இன்று கிறிஸ்து பிறந்ததை உலக முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் நினைவுகூறுகிறார்கள். இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் எல்லாம் தெரிந்தவர்கள் போல நீங்கள் கருத்து வெளியிட்டிருப்பது சரியில்லை. மற்றபடி இயேசு தெய்வமா மனிதனா என்பதைக் குறித்து உங்களுக்கு சந்தேகம் இருக்குமானால் அதை சம்பந்தப்பட்டவர்களிடமோ அல்லது பரிசுத்த வேதாகமத்தின் மூலமோ அறிந்துகொள்ள முயற்சிக்கவும். இதுபோன்ற அரைகுறையான விமர்சனங்களால் உங்கள் சித்தாந்தத்தை உங்களால் நிரூபிக்கமுடியாது என்பதை மனதில் வைக்கவும். மற்றவர்களுடைய உணர்வுகளுக்கே மதிப்பு அளிக்கத் தெரியாத உங்களால் மனுக்குலத்துக்கு என்ன நன்மை வந்துவிடும் என்று நினைக்கிறீர்கள் ? உங்களுடைய மாய்மாலமும் ரெட்டை வேடமும் உங்கள் எழுத்துகளிலேயே வெளிப்படுகிறது. நீங்கள் இயேசுவை நல்ல மனிதர் என்று நினைத்தால் அவரைப் பற்றிய வரலாற்றை முழுவதுமாக வாசித்திருக்கவேண்டும். அவர் நல்லவர் என்றும் மாற்றம் ஏற்படுத்த பாடுபட்ட புரட்சியாளர் என்றும் தீர்மானித்துவிட்டால் அவரையே பின்பற்றவும் வேண்டும். நல்லாக யோசிங்கள்.