"பாஸ்டர். டேவ்" சாட்சி தேவனுக்கென்று உருவாக்கி இருக்கும் சில அலைகளை பற்றி கீழே..
ஞாயிறு ஆராதனையின் நடுவில் ஒரு அறிவிப்பு, "இன்று 2 மணிக்கு ஒரு குறிப்பிட்ட சகோதரர் வீட்டில் மிஷனரி கூடுகை நடக்கும்". இதை கேட்டதுமே மிஷனரி கூடுகையா? யாரோ பெரிய மிஷனரி வரப்போகிறார் போல, இந்த சந்தர்பத்தை விட்டு விடக் கூடாதென மதிய உணவை முடித்து விட்டு நடையை கட்டினேன்.
முதல் ஆளாக சென்று சோபாவில் சொகுசாக அமர்ந்துகொண்டேன். சிறிது நேரத்தில் பலரும் வந்து கூடினர். எல்லாரும் ஏற்கனவே சபையில் அறிமுகமான முகங்கள்.
நேரம் ஆகிக் கொண்டே இருந்தது, ஆனால் மிஷனரி வரவில்லை. ஒரு சகோதரர் ஜெபித்து பாடல் பகுதியை ஆரம்பித்தார். அந்த மதிப்பிற்குரிய மிஷனரி எப்போ வருவார் என்று வாசலையே ஆவலாய் பார்த்துக் கொண்டிருந்தேன். பாடல் வேளை முடிந்தது, ஆனாலும் என் எதிர்பார்ப்பில் ஏமாற்றம் தான், ஒருவரும் வரவில்லை..
பின்னர் அங்கிருந்த சகோதரர், "இனி நமது மிஷனரிகள் இந்த ஆண்டில் தங்கள் மிஷன் அனுபவங்களை விவரிப்பார்கள்" என்றார். ஒன்றும் புரியாமல் குழப்பத்தோடு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, எனக்கு நன்றாக அறிமுகமாயிருந்த ஹோர்ஹே(George in Spanish) எழுந்து தனது மெக்ஸிகோ மற்றும் இலங்கை மிஷன் அனுபங்கள், அங்கு சபை நிறுவப்பட்டது என விவரித்தார்.
அடுத்து இன்னொரு நண்பர், "நாங்கள் ரஷ்யாவில் சபை நிறுவ தேவன் கிருபை செய்தார்" என்றார்..
அவர் முடித்ததும் அடுத்து ஒருவர் "நாங்கள் இராக், ஆப்கானிஸ்தானின் போரில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து தேவ அன்பை பகிர்ந்து கொண்டோம்" என்றார்கள்.
அடுத்த சகோதரர் " நாங்கள் தெற்கு-சூடானில் போர் வீரர்கள் நடுவில் ஊழியம் செய்தோம். அங்கு ஆயுத கிடங்கு தான் எங்கள் ஆலயம்" என பிரமிக்க வைக்கும் சாட்சியை எந்த சிலிர்ப்பும் இல்லாமல் எல்லாம் தேவ கிருபையே என்று சொல்லி முடித்து அமர்ந்தார்.
உள்ளூரில் ஊழியம் செய்யும் சிலர் அவர்கள் பணி குறித்து விவரித்தார்கள்..
இவர்கள் நடுவில் அமர்ந்திருந்த என்னை இந்த சாட்சிகள் ஒவ்வொன்றும் பிரமிப்பின் உச்சிக்கே அழைத்துச் செல்ல, இங்கு நிலவும் குளிரில் வியர்வை சொட்ட உட்கார்ந்திருந்தேன்.
இவர்கள் அனைவரும் "HI-Profile" உத்தியோகத்தில் இருப்பவர்கள். ஒருவர் ஜப்பான் தூதரகத்தில் அலுவலர், ஒரு சகோதரி நான் இருக்கும் பட்டணத்தின் மேயர். நீங்கள் எல்லாரும் நல்ல வேலையில் இருக்கிறீர்கள் , ஏன் இவ்வளோ கஷ்ட்டப்பட்டு இப்படி உலகெங்கும் சென்று பணி செய்கிறீர்கள் என்ற போது, "தேவனுடைய வியத்தகு கிருபை" எங்களை நடத்தியது போல இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரையும் அடைய வேண்டும் என்ற வாஞ்சையை அவரே எங்கள் உள்ளத்தில் விதைத்து இருக்கிறார்" என்றார்கள்.
இவர்கள் செயும் வேலையில் கிடைக்கும் பணம் விமான போக்குவரத்து, தங்கும் வசதி, போன்ற செலவுகளுக்கு போதாது. ஆகவே, இவர்களே (மேயர் உட்பட) ஒவ்வொரு வாரமும் Car Wash, Fund Rising Dinner போன்ற வேலைகளை செய்து பணம் திரட்டுகிறார்கள்.
இதை கேட்க கேட்க தேவனுக்காக நானும் இன்னும் அதிகமாய் செய்ய வேண்டும் என்ற புது உற்சாகம் பிறந்திருக்கிறது.
“பாஸ்டர். டேவ்” இவரை குறித்து நான் அவசியம் பகிர வேண்டும். நியூயார்க்கிலிருந்து புதுடில்லிக்கு பயணித்த 17 மணி நேரமும் எனது எண்ண அலைவரிசைக்குள் புயல் வீசியவர். இந்த செய்தியை எனது கணினியில் மீதமிருக்கும் சொற்ப Power -இல், புதுடில்லி விமான நிலையத்திலிருந்து எழுதுகிறேன்.
இவர் கடந்த ஒரு மாதமாக நான் சென்ற சபையின் போதகர், அங்குவரும் அனைவரின் நன்மதிப்பிற்குரியவர். இப்போது எனக்கும் கூட இவர் ஹீரோவாக தான் தெரிகிறார். கடந்த முப்பது நாட்களும் ஏனோ இவரை குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என எனக்கு தோன்றவே இல்லை. ஆகவே எவரிடமும் இவரை குறித்து நான் கேட்டது இல்லை. ஆறடி உயரம், அமெரிக்கர்களுக்கே உரித்தான பருமனான உடல் அமைப்பு, ஓரடி எடுத்து வைக்க ஓராயிரம் சிரமங்கள் கொண்ட 80 வயதின் தொடக்கம். ஆராதனை வேளையில் வாசலருகில் அமர்ந்திருப்பார், பின்னர் எந்த ஆரவாரமும் இல்லாமல் மேடையில் தோன்றுவார், வேதத்தை போதிப்பார், மேடையில் இருந்து மறைந்து விசுவாசிகளுக்குள் புகுந்து கொள்வார். மிகவும் சாதரணமாக இருந்துவிட்டதால் எனக்கும் கூட இவர் மேல் எந்த ஈர்ப்பும் இல்லை, அதனால் தான் இவரை குறித்து அறிந்து கொள்ளும் ஆவல் பிறக்கவில்லை என்று நினைக்கிறேன். இருப்பினும் அத்தருணம் இறுதி நிமிடங்களில் இயல்பாக சம்பவித்தது.
நான் ஊரிலிருந்து கிளம்பும் முன் என்னை சந்திக்க சகோ.ராஜீவ் வந்தார். இவர்தான் அந்த சபையின் Mission Pastor. அவரோடு சில நேரம் ஊழியங்கள் குறித்து பேசிக் கொண்டிருக்கும் போது, “எத்தனையோ சபைகள் இருந்தாலும், உங்கள் சபையில் அனைவருமே மிஷனரி பாரத்தோடு பல நாடுகளில் ஊழியம் செய்கிறீர்களே. உங்கள் எல்லாருக்குள்ளும் இந்த வாஞ்சை வர காரணம் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர் தந்த பதில் எனக்குள் விவரிக்க முடியாத பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. அவரது பதிலில் தான் இந்த செய்தி பிரசவிக்கிறது, இது பலரது இருதயத்தில் தேவபணிக்கான வாஞ்சையை பிரசவிக்கும் என்று விசுவாசித்து பகிர்கிறேன்.
உற்சாகம் கலந்த தேவ வைராக்கியம் முகத்தில் பிரகாசிக்க பேச தொடங்கினார், “எங்களுக்கு மிஷனரி தாகம் வர முக்கிய காரணமாய் அமைந்தது பாஸ்டர்.டேவ் தான். ஆண்டவரது அன்பை உணர்ந்து அவருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டே பல காரணங்களால் செயல்படுத்த முடியாமல் இருந்த என்னை போன்றோர் பாஸ்டர்.டேவின் வாழ்வில் நடந்த சம்பவங்களை கண்டு உணர்ந்த பின்னர் தான் எதை பற்றியும் யோசிக்காமல் களத்தில் இறங்கினோம்.
பாஸ்டர்.டேவ் இறையியல் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே இந்தியாவுக்கு மிஷனரியாக வர வேண்டும் என்று தன்னை அர்பணித்துக் கொண்டவர். இறையியல் படிப்பினை முடித்து பட்டமளிப்பு விழா நடந்து கொண்டிருக்கும் போது கல்லூரி வளாகத்தில் “மிஷனரி ஸ்டால்” ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அங்கு இந்தியா என்ற பேனருக்கு அடியில் ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான். அவசரமாக அந்த இளைஞனனிடம் சென்ற அவர், “ நான் இந்தியாவுக்கு மிஷனரியாக வர விரும்புகிறேன். என்னை அழைத்து செல்லுங்கள். அங்கு வந்து ஊழியம் செய்ய நான் என்ன செய்ய வேண்டும்? எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?” என ஆவலோடு கேட்டார். அதற்கு அந்த இளைஞன் “இந்தியாவில் ஏற்பட்ட எழுப்புதலால் அதன் தென்-இந்தியாவிலிருந்து பலரும் வட-இந்தியாவுக்கு மிஷனரிகளாக வருகிறார்கள். இவர்களுக்கு சொற்ப பணம் தந்தால் போதுமானது. அதைவிட இவர்களால் அம்மக்களின் மொழியை பேச முடியும். ஆகவே, உங்களை அழைத்து செல்வது அதிக செலவுகளை ஏற்படுத்தும். இங்கிருந்து ஜெபதொடும் சிறிய பணதொகையோடும் உதவி செய்தாலே போதுமானது. ஏனென்றால் அறுவடை பணியாளர்கள் அங்கு அதிகமானோர் எழும்பி விட்டனர்” என மென்மையாக அந்த இளைஞன் மறுத்துவிட்டான். அந்த இளைஞன் வேறு யாரும் அல்ல, பிரசித்திபெற்ற “Gospel For Asia” வை உருவாக்கிய மதிப்பிற்குரிய K.P.Yohannan ஆவார்.
இந்த பதிலால் சோர்ந்து போன பாஸ்டர். டேவ் எல்லாரையும் போல சொந்த ஊரிலேயே சுவிசேஷ ஊழியம் செய்து ஒரு சபையை நிறுவினார். ஆனாலும் இந்தியாவில் மேல் இருந்த நாட்டத்தால் “Gospel For Asia”வுக்கு காணிக்கை கொடுத்து இந்திய மிஷனரிகளை தாங்கி வந்தார். சில வருடங்களுக்குள்ளாகவே பல சபைகள் நிறுவப்பட்டது. ஆனாலும் இவரது மனதில் இருந்த மிஷனரி தாகம் குறையவில்லை. “Third World” என்று அழைக்கப்படும் பின்தங்கிய நாடுகளுக்கு சேவை செய்யவே தேவன் தன்னை அழைத்திருக்கிறார் என்பதில் உறுதியாய் இருந்தார். அதன்படி சூடான், சோமாலியா, இரான், இலங்கை போன்ற நாடுகளுக்கு பகுதி நேரமாக சென்று தேவப் பணி ஆற்றினார். அமெரிக்காவிலும் ஊழியங்கள் செழித்து வளர்ந்தன.
தனது 70 ஆவது வயதில் செரிடோஸ் எனும் இடத்தில் புதிதாக மேலுமொரு சபை நிறுவப்பட்டது. அச்சபையை நிறுவிய போது, “ஆண்டவரே! இந்த சபை மிஷனரி சபையாக உருமாற வேண்டும்” என்ற மன்றாட்டோடு நிறுவினார். இது பணக்காரர்கள் நிறைந்த பகுதி என்பதால் இங்கு வரும் விசுவாசிகளும் பெரும் பதவியில் இருப்போரே. ஆகவே, யாரும் தங்கள் சுகங்களை விடுத்து மிஷரியாக நாடின்றி ஊரின்றி செல்ல தயாராக இல்லை. பாஸ்டர்.டேவ் போதித்து பார்த்தார், தனியாக அழைத்து பேசினார், மிஷனரி எழுப்புதல் கூட்டங்கள் நடத்தினார் ஏமாற்றமே மிஞ்சியது. அவரது எல்லா முயற்சிகளும் சூனிய பலனை தான் தந்தது.
இடைப்பட்ட காலத்தில் சர்க்கரை நோயால் மிகவும் பாதிக்கப்பட்டார். ஆகவே அவரது உடல் நிலை சில காலத்தில் பரிதாமானது. ஆனாலும் மிஷனரி தாகம் நிறைந்த சபையாரை உருவாக்க வேண்டும் என்ற மன்றாட்டு ஓயவில்லை. தனது உடல் உபாதையின் மத்தியிலும் அதிரவைக்கும் ஒரு முடிவெடுத்து அதை ஒரு ஞாயிறு ஆராதனையில் அறிவித்தார். “நம் சகோதரர்களை 9/11 இல் கொன்ற ஈராக் நாட்டின் மேல் வெறுப்போடு தான் வாழ்ந்து வந்தேன். ஆனால் அதே ஈராக் நாட்டிற்கு மிஷனரியாக சென்று தேவ அன்பை பரிமாற அவர் என்னை திடப்படுதியுள்ளார். போர் நடக்கும் இடத்தில் கைவிடப்பட்டு தவிக்கும் மக்களுக்கு நற்செய்தி அறிவிக்க என்னை தத்தம் செய்து விட்டேன். அடுத்த மாதம் அங்கு செல்ல எல்லா ஏற்பாடுகளும் தயார்” என்று உறுதியாக அறிவித்தார். அவர் மீது அதிக அன்பு வைத்திருந்த அந்த சபையே ஆடிப் போனது. அந்த சபையிலேயே விசுவாசிகளாக இருந்த மருத்துவர்கள், “உங்களுக்கிருக்கும் உடல் நிலையில் நீங்கள் விமானத்தில் பயணித்தாலே கோமா நிலைக்கு சென்று விடுவீர்கள். ஆகவே உங்கள் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள். இங்கு நீங்கள் எத்தனையோ சபைகளையும் ஊழியர்களையும் உருவாக்கிவிட்டீர்கள். உங்கள் ஊழியம் மகத்தானது. இதுவே போதுமானது” என்று அவரோடு போராடி பார்த்தார்கள். அவர் முடிவை மாற்றுவதாக இல்லை.
அறிவித்தபடி அடுத்த மாதமே ஈராக்கை நோக்கி விமானத்தில் பறந்தார். வடக்கு ஈராக்கில் ராணுவ முகாமை அடைந்து தஞ்சம் புகுந்து கொண்டார். கழிப்பறை வசதி கிடையாது. கடும் குளிரில் வாழ்ந்து பழகியர் இப்போது கடும் வெயிலில் அவதிப்பட்டார். ஆனாலும் இது அவருக்கு இன்ப அவஸ்தைகளாகவே இருந்தது. காடுகளில் நடந்தே சென்று தேவ வார்த்தையை சைகை மூலம் பகிர்ந்து கொண்டார். கொஞ்ச நாட்கள் சென்றது மருத்துவர்கள் சொன்னது போல கோமா தாக்கியது. அவரது உடல் செயல்படவில்லை. சில நிமிடங்கள் சிந்தனை மட்டும் வேலை செய்யும். அவருக்கு நிலைமை புரிந்துவிட, சிந்தனை மண்டலம் உயிர் பெறும் போதெல்லாம் “ஆண்டவரே நான் பாசமாய் வளர்த்த ஒரே மகனை ஒரு முறை என் கண்ணில் காட்டிவிடும் என்று ஜெபித்துக் கொள்வார்.” இவர் ஓய்வு எடுக்கிறார் என்று நினைத்த ராணுவ வீரர்கள் இவரை கண்டுகொள்ளவில்லை. இவரது உண்மை நிலையை இரண்டு நாட்களுக்கு பின் புரிந்து கொண்ட ராணுவ வீரர்கள் பாஸ்டர்.டேவை பார்சல் போல அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார்கள். 70 வயது மிஷனரி வீரர் இப்போது சபையில் காட்சி பொருளாக வைக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் சபையாரில் பலருக்கு விசுவாச பாடத்தை தேவன் தொடங்கி இருந்தார். சபையார் அனைவரும் ஊக்கமாக ஜெபித்ததில் நினைவு வந்து எழுந்தார். கால்கள் மட்டும் பாதிக்கப்பட்டு உயிர் தப்பினார். இறையியல் படித்துக் கொண்டிருந்த அன்பு மகன் தந்தையை காண ஓடி வந்தார். தந்தையின் தியாக செயலும், தீர்மானத்தின் மேல் இருந்த உறுதியும், கிறிஸ்துவின் மேலிருந்த அதீத பாசமும் மகனை அசைத்தது. தந்தை நிறுவிய சபைகளுக்கு தலைவாராய் சொகுசாய் வாழ்ந்த்விடலாம் என்று கனவுகளோடு இருந்த மகன், எல்லா கனவுகளையும் தூக்கி எறிந்துவிட்டு இப்படியாக சொன்னான் “அப்பா ஈராக்கில் நீங்கள் விட்டு வந்த பணியை நான் தொடர்கிறேன். இப்போது இறையையில் படிப்பை நிறுத்திவிட்டு உடனே ஈராக்கை நோக்கி பயணிக்கிறேன்” என்றான். மகனின் முடிவு பாஸ்டர்.டேவ்விற்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தாலும் ஆசையாய் பாசமாய் வளர்த்த ஒரே செல்ல மகனை ஆபத்துகள் நிறைந்த ஈராக்கிற்கு அனுப்ப தயக்கமும் இருந்தது. இருப்பினும் ஆண்டவருக்காக ஜெபித்து அனுப்பி வைத்தார். அவரது மகன் ஈராக்கில் தனியாக சென்று சுவிசேஷம் அறிவித்து பல சபைகளை நிறுவ தேவன் கிருபை செய்துள்ளார். சமீபத்தில் அவருக்கு திருமணமாகி ஒரு ஆண் பிள்ளையும் பிறந்துள்ளது. கடைசியாக திருமணத்திற்கு அமெரிக்கா வந்துள்ளார். திருமணம் முடிந்து ஈராக் கிளம்பும் முன் பாஸ்டர் மகன் சபையார் முன் இப்படி சொன்னாராம் “என் தந்தை விட்டு சென்ற பணியை நான் நிறைவேற்றுகிறேன். என் தந்தை ‘இயேசு-கிறிஸ்து’. உங்கள் தந்தை விட்டு சென்ற பணியை நீங்கள் நிறைவேற்றுகிறீர்களா?
இந்த சம்பவங்கள் ஒவ்வொன்றை கொண்டும் தேவன் எங்களோடு பேசினார். தேவ அன்பை உலகின் முடிவு பரியந்தம் கொண்டு செல்ல வேண்டும் என்ற தாகம் எங்களுக்குள்ளும் பிறந்தது. நாங்களும் எங்கள் சுகங்களை ஓரங்கட்டி விட்டு நம் தந்தை விட்டு சென்ற பணியை செய்ய ஆரம்பித்து விட்டோம்” என்று சொல்லி கண்ணீர் சுரந்திருந்த கண்களை துடைத்துக் கொண்டார் ராஜீவ்..
இந்த செய்தியை வாசிக்கும் உங்களுக்கும் எழுதிய எனக்கும் பாஸ்டர்.டேவ், அவரது மகன் மற்றும் சபையாரின் சாட்சி ஒரு சவால்..