திண்டுக்கல் : திண்டுக்கல்லில், இறந்த நண்பரின் உடலை பார்க்க வந்த, சேலம், எஸ்.ஐ., பச்சமுத்து, 55, அவரது உடல் மீது மயங்கி விழுந்து இறந்தார்.
சேலம், உத்தம சோழபுரத்தை சேர்ந்தவர் பச்சமுத்து, மல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு, எஸ்.ஐ.,யாக பணியாற்றினார். சில ஆண்டுகளுக்கு முன், திண்டுக்கல் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றினார். அப்போது, ஒத்தக்கல் பாலத்தை சேர்ந்த விவசாயி, திருமூர்த்தி, 50, பழக்கமானார். ஒரு வழக்கில், திருமூர்த்தி உதவியதால், இருவரும் நண்பர்கள் ஆகினர். பச்சமுத்துவிற்கு உடல்நலக்குறைவு ஏற்படும் போது, திருமூர்த்தி உடனிருந்து கவனித்தார். பச்சமுத்து, சேலத்திற்கு மாறிச் சென்ற பிறகும் நட்பு நீடித்தது.
மரணம் : திண்டுக்கல்லில் இருந்த திருமூர்த்திக்கு, சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு, நேற்று முன்தினம் இறந்தார். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக வந்த பச்சமுத்து, திருமூர்த்தியின் உடலை பார்த்து கதறினார். இறுதி ஊர்வலத்தில் அழுதவாறு சென்ற பச்சமுத்து, மயானத்தில், திருமூர்த்தி உடல் மீது, மயங்கி விழுந்தார். மயக்கம் என நினைத்து, அருகில் இருந்தவர்கள், அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தனர். மயக்கம் தெளியாததால், மருத்துவமனை கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், பச்சமுத்து மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக தெரிவித்தனர். நண்பரின் பிரிவு தாங்காமல், பச்சமுத்து இறந்ததாக, அவர் நண்பர்கள் தெரிவித்தனர்.