Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எகிப்துக்குப் போகாதே..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
RE: எகிப்துக்குப் போகாதே..!
Permalink  
 


செழிப்பிலும், நிறைவிலும் அல்ல... சோதனை வேளைகளிலேயே ஆண்டவரின் அன்பையும் அவர் நடத்தும் அற்புத வழிகளையும் நாம் உணரமுடியும்...

சூழ்நிலைகளை பாராமல், ஆண்டவரை மாத்திரம் பார்த்து, அவர்மீது மாத்திரமே கண்பதித்து வாழ்பவர்களை எந்த சூழ்நிலையும் மேற்கொள்ள முடியும்...



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

இந்தியா முழுவதற்கும் மத்திய அமைச்சராக இருப்பதற்கும் ஒரு மாநிலத்துக்கு மாத்திரம் முதலமைச்சராக இருப்பதற்கும் என்ன வித்தியாசம் ? முதலமைச்சரைவிட மத்திய அமைச்சருக்கு தானே அதிகாரத்தின் எல்லைகள் அதிகம் ? அப்படியிருந்தும் ஏன் மத்திய அமைச்சராக இருப்பதைக் காட்டிலும் ஒரு மாநிலத்துக்கு மாத்திரமே முதலமைச்சராக அரசியல்வாதிகள் விரும்புகிறார்கள் ? இதைக் குறித்து சுருக்கமாக ஒரு நண்பரிடம் பகிர்ந்தபோது இவ்வாறு சொன்னேன், ஊருக்கெல்லாம் கூஜாவாக இருப்பதைக் காட்டிலும் உள்ளூரில் ராஜாவாக இருப்பதையே பொதுவாக மனிதன் விரும்புகிறான். இந்த கருத்து இந்த மாதத்தில் நாங்கள் தியானித்துக்கொண்டிருக்கும் வேதபகுதிக்கு ((ஆதியாகமம்.26:1 - 5)) ஒப்பீடாக சொல்லப்பட்டது.  

  • ஆதியாகமம் 26:1 ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல், பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போனான்.

images?q=tbn:ANd9GcRr8Q5nfBxwPvVtZKuSUOiM6SX9XurSU0DDDuVwHnDy_Ql_hAQFeQ

முதலாம் வசனமே சொல்லுகிறது, அது பஞ்சகாலம். ஈசாக்கு குடியிருந்த தேசத்திலும் கடுமையான வறட்சியும் பஞ்சமும் ஏற்பட்டிருக்கிறது. பொதுவான மனித இயல்பு என்ன, பாதகமான சூழலிலிருந்து சாதகமான சூழலுக்கு நகர்ந்து செல்லுவது தானே ? ஆபிரகாமைப் போல தனி மனுஷனாக அல்ல,ஏசா,யாக்கோபு ஆகிய இரண்டு பிள்ளைகளுடனும் வேலைக்காரர்களுடனும் ஆடு,மாடுகளுடனும் ஒரு குடியானவனாக மாத்திரமல்லாது ஒரு மிராசுதாரர் போலும் பண்ணையார் போலும் ஈசாக்கு வாழ்ந்த காலத்தில் இந்த பஞ்சம் ஏற்பட்டிருக்க தன் தகப்பனைப் போல அவனும் பஞ்சம் பிழைக்க எகிப்துக்கு செல்ல எண்ணியிருக்கலாம். ஆனால் அது தேவனுடைய திட்டத்தின்படி பின்னோக்கி செல்லும் முயற்சியாகக் காணப்பட்டது.எனவே ஆண்டவர் அவசரமாகக் குறுக்கிட்டு அவனை எச்சரித்து வாக்குத்தத்தமும் கொடுக்கிறார். நாம் நூல் பிடித்தாற் போல அவருடைய வழியில் நடக்கும்போது தேவன் குறுக்கிடுகிறதில்லை. ஏதேனும் ஒரு சிறு சலசலப்பு, சஞ்சலம், தடுமாற்றம் உண்டாகும் சூழ்நிலையில் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டு அவரில் அன்புகூறும் பிள்ளைகளின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறார்.அவர் சர்வ வல்லவரானதால் யாரும் அவருக்கு ஒன்றையும் அறிவிக்க வேண்டியதுமில்லை, அவர் குறுக்கிடும்போது யாரும் தடுக்கவும் முடியாது என்று அறிந்திருக்கிறோம். அதுபோலவே ஈசாக்கை தேவன் முதன்முதலாக சந்தித்தார். இது ஏதோவொரு சாதாரண சம்பவம் போல ஓரிரு வசனங்களில் கூறப்பட்டிருந்தாலும் இதனை ஆழ்ந்து தியானித்தால் தேவனுடைய அன்பும் நம்மீது கவனம் வைத்து நம்மை ஆட்கொள்ளும் அக்கறையுணர்வும் பரிசுத்தவான்களின் கீழ்ப்படிதலால் விளைந்த வெற்றியின் இரகசியமும் வெளிப்படுகிறது.

  • "கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு." (ஆதியாகமம்.26:2)

கர்த்தர் தாமே அவனுக்கு தரிசனமாகி எனும் வார்த்தையில் ஆண்டவருடைய இயல்பான அன்பையும் ஈசாக்குக்கு அவரோடு இருந்த நேர்த்தியான உறவையும் நாம் உணரமுடிகிறது. ஈசாக்கைக் குறித்து வேதம் இப்படியாக சொல்லுகிறது,அவன் தியானிக்கிறவனாக இருந்தான்.

  • ஆதியாகமம் 24:63 ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்து, தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, ஒட்டகங்கள் வரக்கண்டான்.

மேலும் ஈசாக்கு வாக்குத்தத்தங்களின் புத்திரனான இருந்தபடியினால் அவன் வழிதப்பிவிடாது பாதுகாக்க கர்த்தரும் அக்கறை கொண்டார். நாம் தேவனுடைய சித்தத்துக்கு நம்முடைய வாழ்க்கையை ஒப்புகொடுத்துவிட்டவர்களானால் சுயமாக எந்த முடிவையும் எடுக்கமுடியாதபடி அநேக தடைகள் வரக்கூடும். அந்த நேரங்களில் இந்த தடைகளை பிசாசு கொண்டு வருகிறான் என்று நாம் தவறாக கணித்து துணிகரமாக முன்னேறிச்செல்லுவோமானால் நாம் தோற்றுப்போவதுடன் ஆண்டவருடைய நாமமும் நம்மூலமாக தூஷிக்கப்படும் ஆபத்து உண்டு. அதுமாத்திரமல்ல தவறான தீர்மானங்களால் விளைந்த சேதாரங்களை சரிசெய்து மீண்டும் தேவனுடைய உறவில் நிற்க அதிக பிரயாசப்படவேண்டியிருக்கும். இதைக் குறித்து ஏராளமான உதாரணங்களை வேதத்திலிருந்து நாம் அறிந்திருக்கிறோம். வாக்குத்தத்தங்களின் புத்திரனான ஈசாக்கின் சேஷ்டபுத்திரன் யார், அது ஏசா அல்லவா ? அதன்படி நாம் இப்போது அறிந்திருக்கிறபடி முன்னோர்களின் நாமகரணம் என்னவாக இருந்திருக்கும் ? ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமான சர்வ வல்ல தேவன் என்பதற்கு பதிலாக யாக்கோபின் இடத்தில் ஏசாவின் பெயரே விளங்கியிருக்கும் அல்லவா ? இது எத்தனை பெரிய இழப்பு,பெருந்துன்பம் அல்லவா ? இதுகுறித்து எபிரெய ஆக்கியோன் எழுதி நம்மை எச்சரிக்கிறான்,

  • ”ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.  

    ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்.” (எபிரெயர் 12:16,17 ) 

உணவுக்கும் உடைக்குமான தேடலே மனிதனை திசைமாறி பயணிக்கவைக்கிறது என்பதை தன் சொந்த அனுபவத்தினால் அறிந்ததாலோ என்னவோ ஏசாவின் தம்பியான யாக்கோபு ஒரு புதிய சூழலுக்குள் செல்லுவதற்கு முன்னரே தன் தேவனுடைய பொருத்தனை செய்துவிடுகிறான். அதன் பலனை யாக்கோபின் வாழ்க்கையில் காண்கிறோம்.

  • ”அப்பொழுது யாக்கோபு: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து, என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திரும்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்; நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான்.” (ஆதியாகமம் 28:20 - 22)

ஈசாக்கு தன்னோடு இடைபட்ட தேவனின் சத்தத்துக்குக் கீழ்ப்படிந்ததன் விளைவை அதே வேதபகுதியில் வாசிக்கிறோம். அதுவும் நிரந்தரமான விடுதலை அல்ல. அதிலும் எதிர்ப்புகளும் சோதனைகளும் சோர்வுகளும் வருகிறது.ஆனாலும் நம்மைக் குறித்த தேவனின் தீர்மானமும் நடத்துதலும் என்ன,நாம் இந்த உலகிலுள்ள சௌகரியங்கள் ஒன்றிலும் சார்ந்துவிடாதபடிக்கு எல்லாவற்றிலும் அவரையே சார்ந்திருக்கவேண்டும் என்பதே. அதன்காரணமாகவே ஒன்றுக்கொன்று எதிரிடயான பல்வேறு சம்பவங்கள் ஒரு விசுவாசியின் வாழ்க்கைப் பயணத்தில் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டேயிருக்கிறது.

  • ஆதியாகமம் 26:12 ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்; 

இதுதான் வேதத்தின் மகத்துவம் என்பது, இதே அதிகாரத்தின் முதலாம் வசனத்தை வாசித்தால் அது பஞ்சத்தை அறிவிக்கிறது,ஆனால் கீழ்ப்படிதலுள்ள ஒரு தேவமனுஷனுக்கு அதே தேசம் நூறு மடங்கு விளைச்சலைக் கொடுத்ததை 12 -ம் வசனம் பறைசாற்றுகிறது. ஆம் எனக்கு அருமையான நண்பர்களே, நம்முடைய சூழ்நிலை நமக்கு எதிராக இருப்பினும் கர்த்தர் நமக்கு ஆதரவாக இருக்கிறார் என்பதே வேதத்தின் சாராம்சம் அல்லவா ? ஆம் நம்முடைய தேசமும் கடுமையான வற்ட்சிக்கும் பஞ்சத்துக்கும் நேராக சென்றுகொண்டிருக்கிறது. விலைவாசியினால் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியினால் ஏழை எளிய மக்கள் துன்பப்படுகிறார்கள். அவர்களுடைய துயரத்தைப் போக்கும் எந்த திட்டமும் அரசிடமோ அதிகாரிகளிடமோ இல்லை. இதன் எதிரொலியை கடந்த சுதந்தர தினத்தன்று செங்கோட்டையில் கொடியேற்றி வைத்து உரையாற்றிய பாரதப் பிரதமரின் உரையில் கவனித்திருப்போம். அப்படியானால் யார் இந்த தேசத்தின் பஞ்சத்தைப் போக்கமுடியும் ? இந்த தேசத்துக்கு என்னவாகும் ? பஞ்சமும் கொள்ளை நோயும் எதிரிகளும் காட்டுமிருகங்களும் ஒரு தேசத்துக்கு எதிராகப் போர் தொடுத்தால் அதன் குடிகள் என்னவாகும் ? இதனால் பலியாகப்போகும் அப்பாவிகளின் இரத்தப்ப்பழிக்கு யார் பொறுப்பாக முடியும் ? அவ்வாறு கொல்லப்படுபவர்களில் தேவனுடைய பிள்ளைகளும் இருந்தால் அது எப்படி சரியாகும் ?

images?q=tbn:ANd9GcRKgPwt2STDF8JZ7-C3iAUhwHjgOT0eWfHufe6YwKrljg6Dy--2kw

http://www.thehindu.com/news/national/article3774546.ece

 

  • நீதிமொழிகள் 10:3 கர்த்தர் நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடார்; துன்மார்க்கருடைய பொருளையோ அகற்றிவிடுகிறார்.
  • சங்கீதம் 37:25 நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை.

- என்று அல்லவா வேதம் சொல்லுகிறது, அப்படியானால் நாமெல்லாரும் உடனே இங்கிருந்து தப்பி பச்சை பசேலென்ற பட்டணங்களை நோக்கி ஓடிப்போகலாமா ? ஆம், அதையே ஆண்டவர் தடுக்கிறார். எகிப்துக்குப் போகாதே என்று ஈசாக்கு தடுக்கப்பட காரணம், அவன் அங்கே தேவனை மறந்துவிடுவான் என்பதே. எகிப்து என்பது உலகம், அது அழகானது, வாய்ப்புகளை அள்ளித்தரும்,விரைந்து சுகம் தரும்,தேவனை மறக்கச்செய்யும் முடிவில் அடிமைப்படுத்தும்.அப்படியே தற்கால இளைஞர்கள் கொள்ளை கொள்ளையாக சம்பளம் கிடைக்கிறது என்பதற்காக இலட்சம் லட்சமாக செலவுசெய்து படித்த படிப்பை அடகு வைத்து போட்ட காசை எடுக்கும் ஒரே நோக்கத்துடன் தங்களை அடிமைகளாக ஐடி கம்பெனிகளுக்கு எழுதிகொடுத்தனர். இப்போது பார்த்தால் நிலைமை அதிர்ச்சியாக இருக்கிறது. அங்கே பணிபுரியும் இளைஞர்களுக்கு பல்வேறு மனநல கோளாறுகள்,தம்பதியரிடையே பரஸ்பர நம்பிக்கையும் ஒழுக்கமும் புரிதலும் அன்பும் ஆதரவும் விசாரிப்பும் இல்லை என்பதுடன் சமுதாயத்தில் பெரும் கலாச்சார மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இதனை கலாச்சார மாற்றம் என்பதைவிட கலாச்சார சீரழிவு எனலாம். அனைத்து ஐடி கம்பெனிகளும் நகர்புறத்திலுள்ள கிராமங்களையொட்டி அமைக்கப்பட்டிருப்பதால் அங்கே மக்களின் வாழ்வு மற்றும் பொருளாதாரத்தில் ஒருவித மந்தநிலையும் தேக்கநிலையும் நிலவுகிறது. இதனால் செயற்கையான விலையேற்றங்களை ஏழை எளிய மக்கள் ச்ந்திக்கிறார்கள். அத்தியாவசியப் பொருட்களும் உணவுபொருட்களும் விலையேறுவதுடன் வீட்டு வாடகை முதலானவையும் பெருமதியைவிட இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.போதாக்குறைக்கு பருவ மழையும் பொய்த்து விளைச்சல் பாதிக்கப்படுமானால் வருங்காலத்தில் இன்னும் விலைகள் தாறுமாறாக உயரும். இப்படி அரசாஙத்தின் கொள்கைகள் மற்றும் கொள்ளைகளால் மாத்திரமல்ல, தனிமனிதனின் சுயநலம் காரணமாகவும் வாழ்வியல் சூழல் பாதிக்கப்படுகிறது.

இதுபோன்ற சூழ்நிலையிலேயே தேவமனுஷனான ஈசாக்கின் வாழ்க்கையிலிருந்து நாம் பாடம் கற்கவேண்டும். ஈசாக்கு தன்னுடைய சூழ்நிலையைப் பாராது தேவனுடைய (தொலைநோக்கு) திட்டத்தை உணர்ந்து கீழ்ப்படிந்தபடியினால் பஞ்சத்துக்கு தப்பியதுடன் சுற்றிலுமுள்ள மக்களுக்கும் அச்சுறுத்தலாகவும் சாட்சியாகவும் விளங்கியதை இந்த அதிகாரத்தில் பார்க்கிறோம்.நாமும் கூட நம்முடைய எதிர்மாறான சூழல்களில் தேவனிடமே திரும்பவேண்டும்.உலகப் பிரகாரமான கடன் திட்டங்களிலோ உலக மனிதர்களின் ஆலோசனைகளிலோ சிக்கிக்கொள்ளாமலும் சோர்ந்துபோகாமலும் இருந்து நம்மை அழைத்த தேவன் உண்மையுள்ளவர் என்ற விசுவாசத்தில் நிற்போமாக.

  • “கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு. இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன்.” (ஆதியாகமம்.26;2,3)

நாம் இந்த கட்டுரையின் முன்னுரையில் வாசித்தது போல ஈசாக்கை எகிப்தின் செல்வந்தர்களில் ஒருவனாக மாற்றுவது தேவனுடைய திட்டமல்ல, மாறாக ஒரு சிறிய பகுதியில் அதிக அதிகாரம் உள்ளவனாகவும் சுயாட்சியுடையவனாகவும் நிறுத்துவதே தேவனுடைய திட்டமாக இருந்தது. இதே காரணத்துக்காகவே இஸ்ரவேல் ஜனங்களையும் மோசேயின் தலைமையில் எகிப்திலிருந்து வெளியேற வைத்தார் என்றும் கூறலாம்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard