பல வசதி வாய்ப்புக்களும் சாதாரணமாய்விட்ட காரணத்தினால் இன்று வாகன வசதிகள், தொலைக்காட்சி, செல்போன் ஆகியவை அத்தியாவசியமாகிவிட்டன. இவை இல்லாத நிலை ஏழ்மை என்றால் இவற்றை பயன், வசதி கருதி உபயோகிப்பதுவே எளிமை. எளிமையான வாகன வசதி செய்துகொள்ளுங்கள். விலை உயர்ந்த செல்ஃபோனுக்கு பதில் ஒரு சாதாரண மாடலைத் தேந்தெடுங்கள். ஏழ்மையின் அடையாளங்கள் காலத்துக்குக் காலம் மாறுகின்றன. ஆனால் எளிமையின் அடையாளங்கள் எல்லா காலத்திலும் ஒன்றாகவே இருக்கின்றன. மக்கள் உங்களை அழைத்துச் செல்ல எளிய போக்குவரத்து முறைகளை அளித்தாலும் மனமுவந்து ஏற்றுக்கொள்ளுங்கள்.
‘எளிய மனத்தோர் பேறுபெற்றோர் ஏனெனில் விண்ணரசு அவர்களதே’ – இயேசு (மத்தேயு 5:3)
2. பிறருக்கு மதிப்பளியுங்கள்
உங்களை சந்திக்க வருபவர் யாராக இருந்தாலும் சரி மதிப்புடன் நடத்துங்கள். ஊரில் பெரியவர்கள், பதவி வகிப்பவர்களுடன் வறியவர் ஏழை யார் வந்தாலும் எல்லோரையும் ஒரே மதிப்புடன் நடத்துங்கள். இயேசு அவர் காலத்தில் பாவிகள் என கருதப்பட்டோருடனேயே அதிக நேரத்தை செலவிட்டார் ‘நோயுற்றவனுக்கே மருத்துவன்’ என்றார். தன் சீடர்களையும் அவ்வாறே தாழ்நிலை மனிதர்களிலிருந்து தெரிந்துகொண்டார். மனிதரை மனிதராக நடத்துவது ஒரு அடிப்படை மானுடப் பண்பாக உங்களிடமிருந்து உணரப்படவேண்டும்.
3. பூசை தவிர்த்த மற்ற நேரங்களிலும் தனியே கோவிலுக்குச் சென்று செபம் செய்யுங்கள்.
மக்களுக்கு நற்கருணையில் இறை பிரசன்னத்தை போதிக்கும் நீங்கள் ஏன் அப்பிரசன்னத்தை அதிகம் நாடுவதில்லை? மக்களுக்கான சடங்குகளிலன்றி தனிப்பட்ட முறையில் கடவுளுடனான உங்கள் உறவு வலுத்திருந்தால்தான் உங்கள் எல்லா செயல்களிலும் அதை மக்கள் உணர முடியும். அப்படி தனிப்பட்ட உறவை வலுப்படுத்த பூசை, கொண்டாட்டங்களை தவிர்த்து கோவிலில் நேரம் ஒதுக்குவதை பழக்கமாகக் கொள்ளுங்கள்.
‘ இயேசு (அவரோ) ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்குச் சென்று தனித்திருந்து செபித்தார்’ (லூக்கா 5:16)
4. சமூகப் பிரிவினைகளை முன்வைத்த பேச்சுக்களைக் கூட அனுமதிக்காதீர்கள், தீவிரமாகக் கண்டியுங்கள்.
சமூகப் பாகுபாடுகளை முன்வைத்த அரசியல் எழுச்சி தற்போது பரவிவருகிறது. இதன் தாக்கம் சமூகத்தின் எல்லா முகங்களிலும் தெரிகிறது. குறிப்பாக சாதிப்பாகுபாட்டை முன்வைத்த முயற்சிகள் பலவும் இன்று நம்மை மனிதன் சிறு குழுக்களாக வாழ்ந்த பழைய காலத்துக்கே கொண்டு சென்றுவிடும்படிக்கு இருக்கின்றன. சாதிப் பிரிவினைகள், ஏழை பணக்கார வித்தியாசங்கள் குறித்த பேச்சுக்களைக் கூட கோவில் பிரச்சனைகளில் அனுமதித்தல் ஆகாது. அப்படி பேசுபவர்களை தீவிரமாகக் கண்டித்துவிடுங்கள்.
நீங்கள் வெறும் போதகரின் வழி வந்தவர்கள் மட்டுமல்ல ஒரு புரட்சிக்காரரின் வழியிலும் வந்தவர்கள் என்பதை நினைவு கொள்ளவும். சமூகத்தில் உங்கள் பொறுப்பும் அத்தகையதே. சமூக அவலங்களை சரிசெய்வதில் ஆன்மிகவாதிகள் தைரியமாகச் செயல்படுவது அவசியம்.
‘இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் எறும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறீஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்’. – புனித சின்னப்பர் (கலாத்தியர் 3:28)
5. உங்களுக்குச் சேரவேண்டிய காசை மட்டுமே உங்களுக்குச் சொந்தமாக்குங்கள்.
முன்பு சொன்னதைப்போல உங்கள் வாழ்கை முறை எளிதாக்கிக் கொண்டால் பணத்தின் தேவை குறைந்துவிடுவதை உணர்வீர்கள். மக்களுக்குச் சேரவேண்டிய பணத்தை அவர்களுக்கே கடைசி காசு வரைக்கும் சென்று சேர்க்கப் பாடுபடுங்கள். பிறர் இந்தக் காசை கைகொள்ளுவதையும் அனுமதிக்காதீர்கள்.
“எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளை கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது.” இயேசு (லூக்கா 12:15)
6. பதவிகள் கிடைத்தால் அது அதிகம் சேவை செய்ய ஊக்கம் எனக் கொள்ளுங்கள். பதவிகளை எதிர்பார்த்து எதையும் செய்யாதீர்கள்.
பதவி மோகம் பிடித்த பல பாதிரியார்களும் உண்டு. பதவி என்பது அதிகம் சேவை செய்வதற்கான வாய்ப்பு. உங்கள் சேவைகளை தீவிரமாக்க வழங்கப்படும் அனுமதி, அங்கீகாரம். அதை ஒரு அதிகாரப் பொருளாகக் கொள்வதுவும், பதவிக்காக சண்டையிடுவதும் எந்த வகையிலும் இயேசுவின் படிப்பினைகளுக்கு அப்பாற்பட்டது.
‘உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்.’ – இயேசு (மத்தேயு 20:27)
7. குழு மனப்பாங்கை பொதுமக்களிடமும் உங்களுக்குள்ளேயும் உருவாக்காக்கிக் கொள்ளாதீர்கள்.
உங்களுக்குள்ளேயே பிரிவினைகள் இருக்குமாயின் அவை பொதுமக்களை எப்படி பாதிக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவும். மிகவும் அவலமான ஒரு செயல் இது. எதையெல்லாமோ தியாகம் செய்து சாமியாராகிறேன் எனச் சொல்பவர்கள் தன் சுய முனைப்பின்றி கிடைக்கும் சாதி எனும் எவரோ தந்த பட்டத்தை, அங்கீகாரத்தை துறக்க இயலவில்லை என்பது கவலைக்குரியது. சாதியமாகட்டும் வேறெந்த குழு மனப்பாங்காகட்டும் அவை பிரிவினையின் விதைகள். அவற்றை முளையிலேயே கிள்ளிவிடுங்கள்.
‘தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த நகரமும் வீடும் நிலைத்து நிற்காது.’ இயேசு (மத்தேயு 12:25)
8. பெண்களிடம் கண்ணியமாகப் பழகுங்கள்.
இன்றைய கத்தோலிக்க பாதிரியார்களுக்கெதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் மிகவும் முக்கியமானதாகவும் முதன்மையானதாகவும் இது அமைந்துள்ளது. காமத்தை துறப்பது அத்தனை எளிதான காரியமல்ல இருப்பினும் நீங்கள் தேர்ந்தெடுத்த பாதையின் அதி முக்கிய அடையாளமாகவும், தியாகமாகவும், சவாலாகவும் இது அமைந்துள்ளது. எனவே இது தொடர்ந்து கவனிக்கப்படவேண்டிய ஒன்று என்பதை உணருங்கள். சீரிய உடற்பயிற்சியும், கள விளையாட்டுக்களும் எளிய மாற்றுக்களாக அமைகின்றன. தியானம் இன்னொரு மாற்று. உங்கள் பணியின் முக்கியத்துவத்தை நீங்களே உணர்ந்திருந்தால் காமம் மட்டுமல்ல வேறெதையும் தூக்கி எறியலாம்.
இந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கும் பிற குறிப்புக்கள் ஒரு தனி ஆளையோ அல்லது ஒரு குழுவையோதான் பாதிக்கும் ஆனால் பெண்களுடன் கண்ணியமற்றுப் பழகுவது குடும்பங்களையே குலைக்கும் ஒரு கொடுமை. அப்படி பாதிக்கப்படும் குடும்பங்களில் ஏற்படும் வடுக்கள் சில தலைமுறைகளுக்கும் அழியாமலிருக்க வாய்ப்புள்ளது.
“ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று.” – இயேசு (மத்தேயு 5:28)
9. எந்தச் சூழலிலும் சட்டத்தை மீறும் செயல்களில் ஈடுபடாதீர்கள். லஞ்சம் வழங்குவது, பரிந்துரைகளைக் கேட்பது, அரசியல் பலத்துடன் காரியங்களைச் செய்வது போன்றவற்றை தவிர்க்கவும்.
இது பரவலாக செய்யப்படுகிற ஒரு அநீதி. சட்டம் நீதிக்குப் புறம்பாக எதையும் செய்வதை தவிர்த்துவிடுங்கள். அப்படிச் செய்வதில் அதீத தீமை விளைந்தாலும் பரவாயில்லை என்றே சொல்லுவேன். ஒரு நாட்டின் பிரஜை அடிப்படையில் சட்டம் நம்மைக் காக்கும் என்னும் நம்பிக்கையுரியவன். ஒவ்வொருமுறை நீங்கள் சட்டத்தை மீறும்போதும் மிகவும் அடிப்படையான இந்த நம்பிக்கையை சிறுமைப்படுத்துகிறீர்கள். ஒரு நாட்டின் இறையாண்மையை, ஒரு அடிப்படை நம்பிக்கையின் புனிதத்தை கேலிசெய்யும் விஷயங்கள் இவை.
10. இவை அனைத்திலும் திருச்சபையை அன்றி இயேசுவை பின்பற்றுங்கள்.
கத்தோலிக்க திருச்சபையின் வரலாறு அதி உன்னதமான ஒன்றாக இல்லை. பல கட்டங்களில் அது மனித ஈடுபாட்டால் கொலைகள் உட்பட்ட பல கொடுஞ்செயல்களில் ஈடுபட்டுள்ளதை அறிவீர்கள். அந்தக் காலகட்டங்களில் இயேசுவை முன்வைத்து திருச்சபையை எதிர்க்க அதன் உறுப்பினர்கள் துணிந்திருப்பார்களானால் திருச்சபையின் முழுமை நோக்கிய பயணம் இத்தனை கடினமாயிருந்திருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இவை அனைத்தும் கீழ்கண்ட இரு கட்டளைகளுக்குள்ளும் அடங்கும்…
“உன் முழு இதயத்தோடும் ஆன்மாவோடும் ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக” “உன்மீது அன்பு செலுத்துவது போல அயலான் மீதும் அன்பு செலுத்துவாயாக.” – இயேசு (மாற்கு 12:30-31)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)