அம்மா இல்லாவிட்டால்..? குழந்தை தொழிலாளர் ஆகியிருப்பேன் : இளம் தொழிலதிபர் உருக்கம்
இறைவன், எல்லா வீடுகளிலும் இருக்க முடியாது என்பதற்காகவே இயற்கை, அம்மாக்களை படைத்திருக்கிறது. கடவுள் கண்ணயரச் செல்லும்போது, அம்மா விழித்துக்கொள்கிறார். தன்னை உருக்கி ஒளி தரும் மெழுகிற்கு கீழே, வட்ட வடிவமான இருள் இருப்பதைப் போல, எல்லா அம்மாக்களும், தனக்கான இருட்டை மறைத்து விட்டு, பிள்ளைகளுக்கு ஒளி தருகின்றனர். அப்படி ஒருவர் தான், உலகத்தின் தலைசிறந்த இளம் தொழிலதிபரை உருவாக்கிய ஏழை தாய்.
சாதனை இளைஞர்:உலக அளவிலான இளம் தொழிலதிபர் விருதுக்கு, உலக வங்கி சமீபத்தில் மூன்று இளைஞர்களைத் தேர்ந்தெடுத்தது. அதில் தேர்வான ஒருவர் சரத்பாபு, 30. மடிப்பாக்கத்தில், சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதியில் பிறந்த இவர், வாஷிங்டனில் விருது பெற்று வந்திருக்கிறார்.சிறு வயதில் இவருடைய அம்மா தீபா ரமணி, இட்லி சுடும்போது, வீடு வீடாகச் சென்று விற்ற சரத்பாபுவுக்கு இன்று, இந்தியாவின் ஏழு மாநிலங்களில் உணவு விடுதிகள் உள்ளன.தேசிய அளவில், தொழிலதிபர்களுக்கு வழங்கப்படும் அனைத்து விருதுகளும் இவருக்கு கிடைத்துள்ளன. "தேசத்தின் அடையாளம்' விருது தோனி, சச்சின் போன்றவர்களுக்கு அடுத்தபடியாக, இவருக்கு கிடைத்திருக்கிறது. "அத்தனை விருதுகளும், என் அம்மாவின் கால் விரல்களுக்கே சமர்ப்பணம்' என்கிறார், சரத்பாபு.
சின்ன தொழிற்சாலை:ஆண் துணை இல்லாமல், 40 ஆண்டுகளுக்கு முன், அம்மா எங்களை வளர்த்து ஆளாக்கியது, மிகப்பெரும் கதை. காலை 4 மணியிலிருந்து 10 மணி வரை இட்லி சுட்டு விற்பார். 10 மணியிலிருந்து மதியம் வரை, சத்துணவு ஒப்பந்த பணியாளராக வேலை செய்தார்.மாலை, முதியோர் கல்விச் சாலைக்கு சென்று கல்வி கற்பிப்பார். சனி, ஞாயிறுகளில் பிற வேலைகள் செய்தார். ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கி, எங்களை படிக்க வைத்தார். இயந்திரம் போல உழைத்து எங்களை கரை சேர்த்தார்.
பசியாற்றிய தண்ணீர்:நாங்கள் எல்லாரும் தூங்கப் போன பிறகு, யாருக்கும் தெரியாமல் அம்மா, தனியாகச் சென்று நான்கு டம்ளர் தண்ணீர் குடிப்பார். அப்போதெல்லாம், "அம்மாவுக்கு தண்ணீர் ரொம்ப பிடிக்கும்' என, நினைத்துக்கொள்வேன். விவரம் தெரிந்த பிறகு தான், எல்லாருக்கும் சாப்பாட்டைக் கொடுத்துவிட்டு, பசி தாங்க முடியாமல் தண்ணீர் குடிக்கிறாள் என்ற உண்மை புரிந்தது.எங்களுக்காக, அம்மா பட்டினியோடு கிடந்த நாட்கள் யாருக்கும் வரக் கூடாது என்பதற்காகவே, "பட்டினி இல்லாத இந்தியா' அமைப்பை உருவாக்கி உள்ளேன் என்கிறார் சரத்பாபு.
சிகரம் ஏற்றிய சிறுவாடு:தினமும் கடுமையாக உழைத்து எங்கள் தினசரி சாப்பாடு போக, எஞ்சிய சில்லறைகளை சிறுவாட்டில் சேகரித்து, என்னை படிக்க வைத்தார். கல்வி மட்டுமே எங்களை உயர்த்தும் என்பதில் அசராத நம்பிக்கை வைத்திருந்தார். வீட்டில் அளவுக்கதிகமான பிரச்னை வந்தபோதும், எங்களை பள்ளி இடைநிறுத்த விடாமல் காப்பாற்றினார்.அம்மா இல்லை என்றால் கல்வி கிடைத்திருக்காது; கல்வி இல்லை என்றால் பொருளாதார விடுதலை கிடைத்திருக்காது. எங்கேயாவது குழந்தைத் தொழிலாளியாகத் தான் போயிருப்பேன். இன்று எனக்கு கிடைத்த அங்கீகாரம் அனைத்திற்கும், அம்மாவே காரணம். சொல்லும்போதே கண்கள் ஈரமாகின்றன, சரத்துக்கு!-இன்று (13 ம் தேதி) அன்னையர் தினம்