நண்பர் நீண்ட நாட்களுக்குப் பிறகு நம்முடைய தளத்துக்கு வந்து தனது குறிப்பிட்ட அனுபவத்தைப் பதித்திருக்கிறார். அதன் முக்கியத்துவம் கருதி நாம் ஏற்கனவே அதனை இங்கு பதித்துள்ளோம். அவர் பதித்துள்ளதன் தொடுப்பு பின்வருமாறு... http://yauwanajanam.activeboard.com/t48708376/topic-48708376/
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நேற்று மாலை சுமார் 3 மணியளவில் புகைபடத்தில் காணப்படும் இருவரும் என் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் வந்து நின்ற தோரணையை கண்டவுடனே எனக்குப் புரிந்தது... இவர்கள் இருவரும் எதற்காக வந்திருக்கின்றனர் என்பது.
அன்புடன் வரவேற்று வீட்டில் அமரச்செய்தேன். என் மனைவி, இவர்கள் யாரென்றே புரியாமல் அவளது வழக்கம்போல் காபி கொடுத்தாள்.
வந்தவர்கள், தாங்கள் எந்த இடத்திலிருந்து வருகிறோம் என்று மட்டும் அறிமுகம் செய்துகொண்டனர். இவர்கள் யாரென்று எனக்குப் புரிந்ததால் நான் எதுவும் இவர்களிடம் வினவவில்லை.
வந்தவர்கள் வேத வசனங்கள் பற்றி பேச ஆரம்பித்தனர். தற்காலத்தில் எண்ணப்படாமல் போய்விட்ட தேவனுடைய நாமமாகிய யெகோவா என்ற நாமத்தின் முக்கியத்தைக்குறித்தும், மனிதனை நல்லவர்களாக்க பிறந்த இயேசுக்கிறிஸ்துவைக் குறித்தும் பேச ஆரம்பித்தனர். நானும் வசனங்களில் அதிக பழக்கமில்லாத கிறிஸ்தவனைபோல இவர்கள் சொல்வதை ஆமோதிப்பதும், logic க்கு பொருந்தாத வார்த்தைகளை சுட்டிக்காட்டி கேள்வி கேட்பதுமாக இருந்தேன்.
நன்றாக பேசினார்கள். பின்பு ஆண்டவர் எந்த ஜாதி என்றும் எந்த மதம் என்றும் பார்ப்பதில்லையென்றும், எல்லோரும் அவருக்கு ஒன்றுபோல் தான் என்றெல்லாம் பேசினார்கள். ஆண்டவருடைய இராஜ்யம் இந்த பூமியில்தான் நிலைநிறுத்தப்படும் என்று கூறினார்கள்.
உலகில் இதுவரை தோன்றிய அனைவரும், உயிரோடு வந்தால் இந்த பூமி தாங்குமா என்ற கேள்விக்கு பதிலாக ஆண்டவரின் வல்லமை மிகப்பெரியது என்றார்கள். அப்படிப்பட்ட வல்லமை படைத்த ஆண்டவர், நான் போய் உங்களுக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தப் போகிறேன், நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன் என்று கூறியிருகிறாரே என்ற கேள்விக்கு பதிலாக, ஒரு குறிப்பிட்ட சிறு கூட்டத்துக்கே அந்த பாக்கியம் உண்டு எனவும், மற்றவர்கள் அனைவரும் இந்த உலகிலேயே வாழ்வார்கள் எனவும் கூறினர்.
நீதிமான்கள் பூமியை சுதந்தரிப்பார்கள் என்ற சங்கீத வசனத்தையும் எடுத்துக்காட்டினர். புதிய ஏற்பாட்டிலிருந்து வசனம் கொடுங்களேன் என்று கேட்டேன். மேலும் ரோமர் 3ம் அதிகாரத்தின்படி இயேசுக்கிறிஸ்துவின் இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தில் மாத்திரமே மனிதன் நீதிமானாகிறான் என்றும் வேதம் சொல்கிறதே என்று கூறியவுடன் மெதுவாக எழுந்துகொண்டார்கள்.
அவர்களை அமரக்கூறினேன். உங்களிடம் இன்னும் பேசவேண்டும் என்று கூறியவுடன், நாங்கள் இன்னும் அதிகமான வீடுகளுக்குச் செல்லவேண்டியுள்ளதால் இனியொருமுறை வருகிறோம் என்றனர். இல்லை... என் வீடு தேடிவந்து, என் ஆர்வத்தைத் தூண்டிவிட்டீர்கள், என் கேள்விக்கு பதில் தராமல் கழண்டுகொள்ளப் பார்க்கிறீர்களே என்று கூறி அவர்களை நிறுத்த முயன்றேன். ஆனால் ஓடிவிடுவதிலேயே குறியாக இருந்தார்கள்.
என் வீட்டிலிருந்து வெளியேறி என் தம்பியின் வீட்டில் பிரவேசிக்க எத்தனித்தனர். என் கேள்விக்கு பதில்தராமல் அங்கு செல்ல இயலது என கூறினேன். உடனே, உங்கள் வீட்டை மட்டும் பாருங்கள் என்று என்மீது சீறினர். ஆனால் நான் அனுமதிக்கவில்லை. என் வீட்டைச் சுற்றிலும், என் சகோதரர்கள், ஒன்றுவிட்ட, இரண்டுவிட்ட சகோதரர் வீடுகளே உள்ளன, எனவே இந்த பகுதியில் எங்கும் நீங்கள் எனக்கு பதிலளிக்காமல் பிரவேசிக்க இயலாது என்று கூறினேன். உடனே வேகமாக எங்கள் பகுதியிலிருந்து வெளியேறி main road க்கு வந்தனர். நானும் பைக் எடுத்துக்கொண்டு அவர்களை பின்தொடர்ந்தேன். சுமார் 1 கிமீ தூரத்துக்கு (பைக்கை வைத்துவிட்டு) நடந்து வந்திருக்கிறார்கள். அவ்வளவு தூரமும் அவர்களோடு சென்று அவர்கள் சந்தித்துவந்த ஒவ்வொரு வீடுகளிலும் இவர்களைப்பற்றி எடுத்துக்கூறினேன் (ஏறத்தாழ அனைவரும் உறவினரே).
இவர்கள் என் செயலைப்பார்த்து.... பார்த்தீர்களா... உங்களிடம் அமைதல் இல்லை.... என்று என்னை குற்றம் சாட்ட ஆரம்பித்தனர். நான் அவர்களுக்கு பதிலாக பவுல் கூட கடிந்துகொண்டு கண்டனம் பண்ணி புத்தி சொல்லவே கூறியிருக்கிறார் என்று கூறினே.
அப்புறமாக அவர்களை, நீங்கள் எங்கு சென்றாலும் உங்கள் உபதேசம் குறித்து எடுத்துச்சொல்ல உங்கள் பின்னால் வருவேன் என்று கூறி அனுப்பினேன்.
யெகோவாவின் சாட்சிகளாகிய இவர்கள் மிக அதிகமாக உழைக்கிறார்கள். எவ்வளவு பாடுபட்டு அவர்களது வஞ்சக உபதேசத்தை பரப்புகிறார்கள். கிறிஸ்தவர்களாகிய நாம் மிகக் கவனமாக இருக்கவேண்டும். எல்லோரும் மீட்கப்படுவார்கள் என்று கூறும் இவர்கள் எதற்காக இவ்வளவு உழைக்கவேண்டும் என்று நாம் சிந்தித்தாலே இவர்களது வஞ்சகத்தை இனம்கண்டு கொள்ளலாம்.
இவர்கள் பேசிய அனைத்தையும் record செய்து வைத்துள்ளேன். நீண்ட பகுதியாக இருப்பதால் தேவையற்றவற்றை edit செய்யவேண்டும் எனவே இங்கு பதிக்க இயலவில்லை.
சார்லஸ் டாஸ் ரசல் (Charles Taze Russell 1852-1916) வாச்டவர் பைபிள் அணுட் ட்ராக்ட் சொசைட்டி என்ற நிறுவனத்தை ஆரம்பித்து தம் சொந்த கொள்கைகளைப் பரப்பினார். ஜோசப் பிராங்ளின் ரத்தப்போர்ட் (Joseph Franklin Rutherford 1869 - 1942) ரசலுக்குப் பின் 1917ல் இவர் இந்த இயக்கத்தின் தலைவரானார். இவர் ஒரு வழக்கறிஞர். பின் நீதிபதியானார். 1931ல் இந்த இயக்கத்தின் பெயர் யெகோவா சாட்சிகள் என்று மாற்றப்பட்டது. நேர்த்தன் நோர் (Nathan Knorr) என்பவர். ருத்தர்போர்டுக்குப் பின் இதன் தலைவரானார். வீடு வீடாக சென்று சாட்சி பகர வேண்டுமென்பதை வலியுறுத்தியவர் இவர்தான். இவருடைய நாட்களில் தான் இந்த இயக்கம் அதிவேகமாக வளர்ந்துள்ளது.
இவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என்பதை முதலாவது விளங்கிக் கொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன் என்பதை விசுவாசித்து அவரை ஏற்றுக்கொண்டவர்களே கிறிஸ்தவர்கள். இவர்கள் இதை ஏற்றுக் கொள்வதில்லை. இவர்களுடைய உபதேசங்கள் மிகவும் விகற்பமானவை:
இவர்கள் எந்த ஒரு வேத வசனத்தையும் நேரடியாக அர்த்தம் எடுத்துக்கொள்ள சம்மதிக்க மாட்டார்கள். வேத வசனம் என்பது மூடி முத்திரையிடப்பட்ட புத்தகம் என்பதும், இவர்களிடம் கற்றால் மட்டுமே வேத வசனங்கள் புரியும் என்பதும் இவர்கள் கூற்று. வேத வசனத்தில் இவர்கள் கொள்கைக்கு சாதகமாக வராத எந்த சம்பவங்களையும், சொல்லர்த்தமாக அப்படியே எடுத்துக்கொள்ள இவர்கள் சம்மதிப்பதில்லை. அப்படிப்பட்ட வசனங்களின் ஒவ்வொரு வார்த்தைகளையும் தனித்தனியாக பிரித்து, வேதத்தில் அந்த வார்த்தை எந்த இடத்தில் இவர்களுக்கு சாதகமான கருத்து வரும்படி வருகிறதோ, அந்த பகுதியை காண்பித்து, அந்த சம்பவத்தின் மொத்த கருத்தையும் திசைதிருப்பி விடுவதில் இவர்கள் கை தேர்ந்தவர்கள். இவர்கள் வேதத்தை வியாக்கியானம் செய்ய வைத்திருக்கும் ஒவ்வொரு குறிப்புகளும் சாத்தானின் வஞ்சிக்கிற ஆவியால் நிரம்பியவர்களால் எழுதப்பட்டவை என்பதை நாம் முதலாவது புரிந்துகொள்ள வேண்டும். இவர்கள் குறிப்புகளை பரிசுத்தாவியின் நிறைவின்றி வாசித்தால் வேதத்தை தினம்தோறும் வாசிப்பவர்கள் கூட குழம்பிவிடும் ஆபத்துண்டு. இவர்கள் நடத்தும் வேத பாட வகுப்புகளில் பரிசுத்த ஆவியானவரின் துணையில்லாமல் கலந்துகொள்பவர்கள், மூளைச்சலவை செய்யப்படும் ஆபத்தும் உண்டு. காரணம், வேத வசனத்திலிருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக வசனங்களை பொறுக்கியெடுத்து, அந்த வேதவசனங்களை எப்படியெல்லாம் புரட்டக்கூடுமோ, அப்படியெல்லாம் புரட்டி, விசேஷமாய் தயாரிக்கப்பட்ட சாத்தானின் வேதத்தைக்கொண்டே இவர்கள் இப்படிப்பட்ட வகுப்புகளை நடத்துகிறார்கள்.
உதாரணமாக மோட்சம் நரகம் இல்லை என்னும் இவர்கள் கொள்கையை நிலைநாட்ட, வேதத்திலுள்ள ஐஸ்வர்யவான், லாசரு உவமையை இவர்கள் புரட்டி, ஐஸ்வர்யவான் என்பது (யூதரும், பென்யமீனரும் இணைந்த) யூதர் எனவும், லாசரு என்பது புறஜாதிகள் எனவும், பெரும்பிளப்பு என்பது யூதருக்கும் புறஜாதிகளுக்கும் நடுவில் உள்ள பிரிவினை எனவும், ஐந்து சகோதரர் என்பது இஸ்ரவேலின் மற்ற பத்து (ஐஸ்வர்யவான் என்பது இரண்டு கோத்திரம் என்றால் மற்ற ஐந்து என்பது பத்து என கணக்கிட்டு) கோத்திரத்தார் எனவும் கூறி, இயேசு கூறிய அந்த உவமையின் நேரடியான சொல்லர்த்தத்தை, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல மறைத்துவிடுவார்கள்.
காணாமல்போன ஆடு (லூக்.15:4-7) உவமையில் காணாமல் போன ஆடு என்பது, தனி மனிதன் அல்ல எனவும், மொத்த மனுக்குலமும் என்பார்கள். அப்படியானால் மனந்திரும்ப அவசியமில்லாத மற்ற தொண்ணூற்றொன்பது நீதிமான்கள் என்பவர் யார் என்றால், அது, மிருகங்கள், பறவைகள், மீன்கள், பூச்சிகள், தாவரங்கள், தூதர்கள், கேரூபீன்கள் போன்ற தேவனுடைய மொத்த சிருஷ்டிகளைக் குறிக்கும் என்பார்கள். இங்கு நாம் கவனித்தால், மனிதனைத்தவிர மற்ற எல்லா சிருஷ்டிகளும், மனம்திரும்ப அவசியமில்லாத நீதிமான்கள் எனவும், மனிதன் மட்டுமே பாவம் செய்த ஆத்துமா எனவும் கூறி, இவர்கள் எவ்வளவு தந்திரமாக வேதத்தை சாத்தானுக்கு சாதகமாக புரட்டுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளலாம்.
மனிதன் தேவ சாயலில் உருவாக்கப்பட்டவன். மனிதன் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அதிகாரம் பெற்றவன். அப்படிப்பட்ட மனிதனை, பூச்சிகள், மீன்கள் பறவைகள் இவற்றுக்கு ஒப்பாக்குவதன் மூலம், ஒட்டுமொத்த மனுக்குலத்தையும் இழிவுபடுத்தும் சாத்தானின் உள்மனம் இங்கு வெளிப்படுகிறது.
இவர்கள், இயேசு கிறிஸ்து யெகோவாவால் சிருஷ்டிக்கப்பட்டவர், முன்பு மிகாவேல் தூதனாய் இருந்தவர் என்றெல்லாம் கூறி இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தை மறுதலிக்கிறார்கள். இவர்கள் இதற்கு ஆதாரமாக கூறும் வேத வசனங்கள் பின்வருமாறு:
i. யோவான் 14:28 என் பிதா எங்கிருந்தாலும் பெரியவராயிருக்கிறார்.
ii. லூக்கா 18:18,19 நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவர் ஒருவனும் இல்லையே.
iii. 1கொரி 11:3 கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறார்.
iv. 1கொரி 15:18 குமாரன் தேவனுக்குக் கீழ்ப்படிந்திருப்பார்.
v. வெளி 3:14 தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியானவர் இயேசு.
vi. கொலோ 1:15 சர்வ சிருஷ்டிக்கும் முந்தினவர் இயேசு.
இயேசு கிறிஸ்து யார் என்று வேதம் நமக்கு போதிக்கிறது?
i. ஏசாயா 7:14 கன்னிகையின் மைந்தன் இம்மானுவேல் என்றழைக்கப்படுவார்.
ii. ஏசாயா 9:6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். அவர் நாம் வல்லமையுள்ள தேவன் நித்திய பிதா. சமாதான பிரபு.
iii. மத்தேயு 1:23 இம்மானுவேல் என்றால் தேவன் நம்முடனிருக்கிறார்.
iv. யோவான் 1:1,2,14 அந்த வார்த்தை தேவனாயிருக்கிறது. அந்த வார்த்தை மாம்சமாகி. நமக்குள்ளே வாசம் பண்ணினார்.
v. யோவான் 5:17,18 இயேசு தன்னை தேவனுக்கு சமமாக்கினார் என்று மக்கள் கூறினர்.
vi. யோவான் 10:30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்.
vii. யோவான் 10:33 உன்னை தேவன் என்று சொல்லுகிறாயே என்று மக்கள் கூறினர். (இயேசு அதை மறுகவில்லை)
viii. யோவான் 14:9,11 என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்.
ix. யோவான் 20:28 தோமா இயேசுவை நோக்கி."என் ஆண்டவரே,என் தேவனே" என்றான்.
x. கொலோ 1:15 அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபம்.
xi. கொலோ 2:9 தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது.
xii. 1 தீமோ 3:16 தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்.
xiii. எபி 1:8 குமாரனை நோக்கி "தேவனே உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்கு முள்ளது"
xiv. 1 யோவான் 5:20 இயேசு கிறிஸ்து மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாயிருக்கிறார்.
புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து கர்த்தர் என்று 663 இடங்களில் வருகிறது. கர்த்தர் என்பதற்கு கிரேக்க மொழியில் குரியோஸ் (Kurios என்று வருகிறது. புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. பழைய ஏற்பாடு எபிரேய மொழியில் எழுதப்பட்டது. எபிரேய மொழியில் வரும் யெகோவா என்பதும் கிரேக்க மெழியில் வரும் குரியோஸ் என்பதும் ஒரே கருத்தில் தான் கர்த்தர் என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
தேவன் சர்வ வல்லவர், சகலத்தையும் அறிந்தவர், எங்கும் எப்போதும் இருக்கக்கூடியவர், மாறாதவர், பாவத்தை மன்னிக்கிறவர்,
சிருஷ்டிக்கிறவர், இத்தனை தெய்வீக தன்மைகளையும் இயேசு கிறிஸ்துவிடம் காண்கிறோம்.
இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தை விளக்கும் சில வசனங்கள்.
i. யோவான் 5:26 பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவர். குமாரனும் தம்மில் தாமே ஜீவனுடையவர். அதாவது இயேசுவை யாரும் சிருஷ்டிக்கவில்லை என்பது தான் பொருள்.
ii. யோவான் 14:6 நானே ஜீவன்.
iii. யோவான் 1:4 அவருக்குள் ஜீவன் இருந்தது அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
iv. யோவான் 10:18 என் ஜீவனைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு. அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு.
v. மத் 28:18 வானத்திலும் பூமியிலும் சர்வ அதிகாரம் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
vi. வெளி 1:18 இயேசு கிறிஸ்துவே சர்வ வல்லமையுள்ள தேவன்.
vii. யோவா 2:25 மனுஷருடைய எண்ணங்களையெல்லாம் அவர் அறிந்திருக்கிறார்.
viii. மத் 18:20 இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன். (சர்வ வியாபி)
ix. கொலோ 1:16 அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது.சகலமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.
x. (எபே 3:9. எபி 1:2,10)
xi. மத் 28:20 இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்.
xii. எபி 13:8 இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். (யெகோவா என்பதற்கு "I AM WHO I AM" அல்லது இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று அர்த்தம்)
xiii. மாற்கு 2:5-12 உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது. (மன்னிக்கும் அதிகாரம் படைத்தவர்)
xiv. யோவா 1:3,10 சகலமும் அவர் (இயேசு கிறிஸ்து) மூலமாய் உண்டாயிற்று. (அவரே சிருஷ்டி கர்த்தர்)
xvi. ஏசாயா 43:10-11 எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை. நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை. (இயேசு என்பதற்கு இரட்சகர் என்று பொருள்)
யோவா 1:18; பிதாவை ஒருவனும் ஒருகாலும் கண்டதில்லை. யாத் 33:20; ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடுயிருக்க கூடாது என்றார். (யோவா.5:37; கொலோ.1:18; 1தீமோ.6:16-17) ஆகிய வசனங்கள் மூலம் பிதா அதரிசனமானவர் என்று அறிகிறோம்.
ஏசாயா 6:1 உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது.
ஏசாயா 6:5 அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை (யெகோவா தேவனை) என் கண்கள் கண்டதே என்று கூறியபோது அவர் யாரைக்கண்டு அப்படி கூறினார் என்று புதியஏற்பாட்டில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. யோவான் 12:41 ஏசாயா அவருடைய மகிமையைக்கண்டு, அவரைக் குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான். என்ற வசனத்தின்படி அவர் இயேசுவாகிய யெகோவா தேவனைக் கண்டே அப்படி கூறியிருக்கிறார் என்பது தெளிவாகிறது.
உலக மனிதர் அனைவருக்கும், அவ்ர்கள் எப்படி இருந்தாலும், யாராயிருந்தாலும், யாரை பின்பற்றினாலும், என்னதான் துன்மார்க்கமாய் வாழ்ந்தாலும், அனைவருக்கும் ஒருசேர மீட்பு உண்டு என்கிறார்கள் இவர்கள். அதற்கு இவர்கள் காண்பிக்கும் உதாரணம்:-
இயேசு உலக இரட்சகர் என்பதால் உலக மக்கள் அனைவருடைய பாவத்தையும் ஒரேதரம் தம்முடைய பலியினால் பரிகரித்துவிட்டார்; மனிதனின் ஜென்ம பாவத்துக்கான தண்டனை என்பது மாம்ச மரணமே; நரகம் என்பதெல்லாம் கிடையாது; கல்லறைக்குழியே பாதாளம் எனப்படுகிறது; இறுதி நாளில் கிறித்துவைப் போலவே பரிசுத்தமாக வாழ்ந்தோருக்கான மீட்பில் முதல் கூட்டம் (ஈசாக்கின் ஒப்பீடான கிறித்தவர்) இடம்பெறும்; அவர்களே ஆட்சியாளர்கள்; அடுத்து கைவிடப்பட்டோருக்கு ( யூதர் அல்லது இஸ்ரவேலர்) ஒரு வாய்ப்பு; இறுதியில் ஆயிரம் வருட அரசாட்சியின்போது உலகத்தார் அனைவருமே ஒருசேர மீட்கப்பட இந்த உலகமே பரலோகமாக மாறும். இதுவே ஆபிரகாமின் மூன்று மனைவியரின் வாழ்க்கையிலிருந்து நாம் பெறும் பாடமாகும் என கூறுகிறார்கள். முதல் மனைவியான சாராளின் மகனான ஈசாக்கின் வாக்குதத்த சந்ததிக்கு கிறித்துவர்கள் ஒப்பீடாம்; இரண்டாம் மனைவி(?)யான ஆகாரின் சந்ததியார் கிறித்துவை ஏற்றுக்கொள்ளாத யூதர்களாம்; மூன்றாவது மனைவியான கேத்துராளின் சந்ததியார் ஒரு பாவமும் அறியாத உலகத்தாராம்; இந்த மூன்று கூட்டத்தையும் மூன்று வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு திட்டத்தின் மூலம் ஆண்டவர் மீட்டுக்கொண்டு இந்த உலகையே பரலோகமாக மாற்றிவிடுவாராம் என்பதுதான் இவர்கள் உபதேசம்.
இந்த கருத்திற்கு வேதத்தில் எந்த ஆதாரமும் இல்லை என்பதே உண்மை. காரணம் ஆபிரகாமின் வாழ்க்கை ஒரு சரித்திர சம்பவம். இதிலிருந்து வேதம் விவரிக்காத ஒரு கருத்தை, அல்லது வேறு எங்குமே இணைவசனம் இல்லாத ஒரு கருத்தை இவர்கள் திரிக்கிறார்கள்.
இவர்கள் நரகம் என்பதே இல்லை என்றும், அன்பு மிகுந்த தேவன் யாரையும் நரகத்தில் தள்ளுவதில்லை. அனைவருக்கும் மீட்பு என்பது இயேசுக்கிறிஸ்துவின் ஈடுபலியின் மூலம் உறுதியாகிவிட்டது என்று கூறுகிறார்கள்.
அனைவருக்கும் மீட்பு என்பதற்கு ஆதாரமாக இவர்கள் காண்பிக்கும் வேத வசனங்கள்:-
1 தீமோத்தேயு 2:4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
ஏசாயா 11:9. ..........................சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.
லூக்கா 3:5 மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக்காண்பார்கள் என்றும், வனாந்தரத்திலே
வெளி 21:4. அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது
இயேசுவை விசுவாசித்து தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்பவர்களுக்கு மட்டுமே மீட்பு அல்லது இரட்சிப்பு என்பதற்கு நாம் வேதத்திலிருந்து பல வசனங்களை ஆதாரமாக பெற முடியும்.
a). தேவன், தம்முடைய ஒரேபேறான ”குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு”, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16 (விசுவாசிக்கிறவனுக்கு மட்டுமே நித்தியஜீவன்)
b). என்னவென்றால், கர்த்தராகிய ”இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்”. நீதியுண்டாக இருதயத்திலே ”விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.” ரோமர் 10:9-10
c). "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்." யோவான் 1:12
d). "கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல." எபேசியர் 2:8-9 (விசுவாசித்தால் தான் இரட்சிப்பு)
e). "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் " (அப்போஸ்தலர்.16:31) (இரட்சிக்கப்பட நாங்கள் என்ன செய்யவேண்டும் என பயத்துடன் கேட்கப்பட்ட கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதில் இது)
f). “விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக் குறித்து தேவ எச்சரிப்புப் பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான். (எபி 11:7) (எச்சரிப்பை கேட்டு, அதை விசுவாசித்து, பயபத்தியுடன் இரட்சிப்புக்கேற்ற கிரியையை ஆரம்பிக்கவேண்டும்)
இரட்சிக்கப்படாதவர்களுக்கு தண்டனையாக நரக ஆக்கினை உறுதி என தெரிவிக்கும் வசனங்கள்:-
a). எபிரெயர் 2:4 அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.
b). சங்கீதம் 9:17 துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள்.
c). நீதிமொழிகள் 9:18 ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான்.
d). மத்தேயு 5:22 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளுகிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனை சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான்.
e). மத்தேயு 5:29 உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.
f). மத்தேயு 5:30 உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.
g). மத்தேயு 10:28 ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
h). மத்தேயு 18:9 உன் கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுள்ளவனாய், எரிநரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக்கண்ணனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
இந்த வசனங்களின்படி பாவத்தில் நிலைத்திருப்பவர்கள் நித்திய ஆக்கினையாகிய நித்திய அக்கினியிலே பங்கடைவார்கள் என்பதை இயேசு இங்கே தெளிவுபடுத்தியுள்ளார்.
இயேசுக்கிறிஸ்துவின் மாம்ச உயிர்தெழுதலை இவர்கள் மறுதலிப்பார்க்ள். அவர் சரீரத்தில் உயிர்த்தெழவில்லை என சாதிப்பர்கள். அப்படியானால் அவர் சரீரம் என்னவாயிற்று, அவர் சரீரத்தை தேடிச்சென்ற பெண்களும் சீஷர்களும், அவர் சரீரத்தை காணவில்லையே என கேட்டால், மோசேயின் சரீரத்திற்கு என்னவாயிற்றோ, அதுதான் இயேசுவின் சரீரத்திற்கும் நடந்தது என்பார்கள். அதற்கு ஆதாரமான வசனம் கேட்டால் அவர்களால் கொடுக்க இயலாது. இயேசுக்கிறிஸ்து மாம்சத்தில் உயித்தெழவில்லை என கூற அவர்கள் உபயோகிக்கும் வசனங்கள்:-
I பேதுரு 3:18 ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.
I கொரிந்தியர் 15:50 சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை.
அவர் மாம்சத்தில் கொலையுண்டபோது அவரது ஆவி உயிரோடிருந்தது. அந்த ஆவியில் அவர் போய் காவலிலுள்ள ஆவிகளுக்கு பிரசங்கித்தார் என 1 பேதுரு 3:19 கூறுகிறது. பின்பு மூன்றாம் நாளில் தான் அவர் மாம்சத்தில் உயிர்த்தெழுந்தார். அதுபோல தான், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய இராஜ்யத்தை சுதந்தரிக்க மாட்டாது என கூறுகிற பவுலடிகள் அடுத்த வசனத்தில் அதை தெளிவு படுத்துகிறார். 1 கொரி. 15:51,52 வசனங்களில், (இயேசு மறுரூபமலையில் மகிமையின் சரீரத்திற்குள்ளாக மறுரூபமானதுபோல) நாமும் மறுரூபமாவோம் என கூறுகிறாரே.
மாம்ச உயிர்த்தெழுதல் மற்றும் மறுரூபமாக்கப்படுதலுக்கு ஆதாரமான வசனங்கள்: -
யோவான் 20:14 to 21:25; மத்தேயு 28:9-17; மாற்கு 16:9-16; லூக்கா 24 ம் அதிகாரம்; யோவான் 20:14 - 21:25 அதிகாரங்கள் முழுக்க முழுக்க இயேசு மாம்சத்தில் உயிர்த்தெழுந்ததையே திட சாட்சியாக அறிவிக்கின்றன.
லூக்கா 24:39. நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,
லூக்கா 24:40. தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. மேலும் மத்தேயு 28:9. ”அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்” என்றும் வேதம் கூறுகிறது. ஆவியாயிருந்திருந்தால் பாதங்களை எப்படி தழுவமுடியும்!
மேலும் அப். 2: 31. இன் படி “அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்.” என்று பேதுரு கூறுகிறாரே!
இயேசு பூட்டிய அறைக்குள் எப்படி பிரவேசித்தார் என கேட்கிறார்கள். அவர் மறுரூபமாக்கப்பட்ட சரீரத்தோடுதான் உயிர்த்தெழுந்தார். உயிர்த்தெழுந்த சரீரத்திற்கு அறைக்குள் ஊடுருவிச்செல்லும் தன்மையும் இருந்தது, அதே நேரத்தில் புசிக்கிறதற்கு ஏதாகிலும் இருக்கிறதா எனக் கேட்டு புசிக்கும் தன்மையும் இருந்தது.
சபை கூடிவருதல் மற்றும் காணிக்கையை குறித்து:
இவர்கள் இன்று இருக்கும் ஒட்டுமொத்த சபை அமைப்பையுமே பாபிலோனிய வேசி சபை என்பார்கள். தசமபாகம், காணிக்கை என்பதெல்லாம் யூதர்களுக்கு மட்டுமே உரியது என்றும் யாரும் யாருக்கும் காணிக்கை செலுத்த தேவையில்லை என்பார்கள். ஒட்டுமொத்த சபைத்தலைவர்களையும், ஓநாய்கள் என்றும், கள்ளப்போதகர்கள் என்றும் மிஷனரிகளை விஷ நரிகள் என்றும் தூஷிப்பார்கள். ஆதி அப்போஸ்தலர் மட்டுமே சுவிசேஷம் சொல்ல பணிக்கப்பட்டிருந்தனர் எனவும், அவர்களுக்கு மட்டுமே அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருந்தது எனவும் வேறு யாரும் (பவுல் மட்டும் விதிவிலக்கு என்பார்கள்) சுவிசேஷம் சொல்லவோ, ஜனங்களை நடத்தவோ தேவையில்லை என்பார்கள்.
சபையில் ஐந்துவிதமான ஊழியங்களை ஆண்டவர் வைத்துள்ளார் என வேதம் தெளிவாக கூறுகிறது.
மேற்கண்ட வசன்ங்களில் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைய சபையையும் சபை ஊழியங்களையும் ஆண்டவரே ஏற்படுத்தியிருக்கிறார் என்று பார்க்கிறோம். ஆனால் மக்கள் சபை அமைப்பிலிருந்து சிதறடிக்கப்பட்டால் என்னவாகும்..? ஒருவருக்கொருவர் தாங்குதலோ, ஜெபித்தலோ இராது. மந்தையில் சேர்ந்திருந்த மாடுகளை பட்சிக்க இயலாத ஒரு சிங்கம், நரியின் சூழ்ச்சியுடன் மாடுகளை சிதறடித்து, பின் ஒவ்வொன்றாக பட்சித்த கதையை நாம் அறிவோம். இன்று பிசாசின் தந்திரமும் அதுதான். எனவேதான் சபைகளில் பிரிவினையின் ஆவியை எழுப்பி மக்களை சிதறடிக்க முயல்கிறான்.
எபிரேயர் 10: 24. ’மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; 25. சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்” என்று வேதம் தெளிவாக சொல்கிறதே.
காணிக்கையை குறித்து:
1 கொரி 9: 7. எவன் தன் சொந்தப்பணத்தைச் செலவழித்து, தண்டிலே சேவகம்பண்ணுவான்? எவன் திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதின் கனியில் புசியாதிருப்பான்? எவன் மந்தையை மேய்த்து அதின் பாலைச் சாப்பிடாதிருப்பான்? 8. இவைகளை மனுஷர் வழக்கத்தின்படி சொல்லுகிறேனோ? நியாயப்பிரமாணமும் இவைகளைச் சொல்லுகிறதில்லையா? 9. போரடிக்கிற மாட்டை வாய் கட்டாயாக என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. தேவன் மாடுகளுக்காகவே கவலையாயிருக்கிறாரோ? 10. நமக்காகத்தான் இதைச் சொல்லுகிறாரோ? உழுகிறவன் நம்பிக்கையோடே உழவும், போரடிக்கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்கிற நம்பிக்கையோடே போரடிக்கவும் வேண்டியதே, ஆகையால், அது நமக்காகவே எழுதியிருக்கிறது. 11. நாங்கள் உங்களுக்கு ஞானநன்மைகளை விதைத்திருக்க, உங்கள் சரீரநன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமா? 12. மற்றவர்கள் உங்களிடத்திலே இந்த அதிகாரத்தைச் செலுத்தினால், அவர்களிலும் நாங்கள் அதிகமாய்ச் செலுத்தலாமல்லவா? அப்படியிருந்தும், கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு யாதொரு தடையும் உண்டாகாதபடிக்கு, நாங்கள் இந்த அதிகாரத்தைச் செலுத்தாமல் எல்லாப் பாடும் படுகிறோம். 13. ஆசாரிய ஊழியஞ்செய்கிறவர்கள் தேவாலயத்திற்குரியவைகளில் புசிக்கிறார்களென்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்குப் பலிபீடத்திலுள்ளவைகளில் பங்கு உண்டென்றும் அறியீர்களா? 14. அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்” என்று வேதம் கூறும் வசனங்கள், தங்கள் பூமிக்குரிய வாழ்விற்கென்று செலவழிக்கவேண்டிய முழு நேரத்தையும், கர்த்தருடைய மந்தையை பராமரிக்கும் பணியிலும், ஆத்தும அறுவடையிலும் செலவிடுவதால், அவர்கள் போஷிக்கப்படவேண்டும் என்பது ஆண்டவருடைய கட்டளை.
உலக ஆசீர்வாதத்தை எப்படியாவது, எந்த வழியிலாவது பெற்றுக்கொள்ளவேண்டும் என எண்ணி, (ஏமாற்றுதல், வஞ்சித்தல், பில்லிசூனியம், குறி கேட்டல் போன்ற)
பல வழிகளில் முயற்சித்து திருப்தியடையாதவர்கள், காணிக்கை கொடுத்தால் பல மடங்காக திருப்பிக்கிடைக்கும் என்றெண்ணி கொடுக்கிறார்கள். பண ஆசை கொண்டு, எப்படியாவது யாரையாவது ஏய்த்து பிழைக்கவேண்டும் என்ற நோக்கோடு வரும் சிலர் சுவிசேஷத்தை ஆதாயத் தொழிலாக எண்ணி ஊழியர் என்ற ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்டு அவர்களுக்கு தவறான வாக்குறுதிகளை கொடுத்து அவர்களிடம் காணிக்கை என்ற பெயரில் கொள்ளையடிக்கின்றனர். தவறு செய்பவர்கள் இருக்கிறார்கள் என கூறி, அதை சாக்காக வைத்து, சரியான ஊழியர்களை குற்றம் சாட்டுவது பிசாசின் தந்திரமாகும். போலி மருந்துகள் இருப்பது உண்மைதான், அதற்காக யாராவது, இன்று அனைத்து மருந்து கடைகளும் ஒட்டுமொத்தமாக போலி மருந்தை மட்டுமே விற்கிறார்கள், எனவே யாரும் மருந்து வாங்க வேண்டம் என கூறுவதுபோல தான் இதுவும்.
கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும் என்ற வசனத்தின்படி, கொடுக்கிறவனுக்கு நிச்சயம் பிரதிபலன் உண்டு. இரண்டு காசு போட்ட விதவையைக்குறித்து இயேசு கூறியபோது, ஐயோ இவளை இந்த கோடீஸ்வர குருமார்கள் கொள்ளையடித்துவிட்டார்கள் என கூறவில்லை மாறாக அவளை அவர் பாராட்டினார். தவறான நோக்கோடு வாங்குவது பாவமே, ஆனால் ஆண்டவர் நாமத்தில், அவருக்கு கொடுக்கவேண்டுமே என்ற உயரிய நோக்கோடு கொடுப்பவர்களை ஆண்டவர் அங்கீகரிக்கிறார்.
பிரதிபலன் எதிர்பாராமல் கொடுக்கப்படும் காணிக்கை ஆண்டவரால் முற்றிலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஞான நன்மையை விதைப்பவர்களுக்கு, சரீர நன்மைகளை கொடுக்கவேண்டியது சபை கூடிவருகிறவர்களுடைய கடமையும்கூட. இது பிரதிபலன் எதிர்பார்த்து செய்யப்படும் காரியம் அல்ல. எப்படி ஒரு குடும்பத்தில் ஒரு தலைவன் தன் பெற்றோர், மனைவி மற்றும் மக்களுக்காக உழைக்கிறானோ அது போன்றதுதான் இதுவும். குடும்பத்தில் ஒவ்வொருவரும் அவரவர் கடமையை நிறைவேற்றுவதுபோல, சபையிலும் ஒவ்வொருவரும் தத்தமது பங்கை நிறவேற்றினாலேயே சபை அமைப்பு நிலைத்திருக்கும். சபைக்கு காணிக்கை கொடுக்க்க்கூடாது என சாத்தான் தடைசெய்வதால், சபை அமைப்பை சிதறடிக்க அவன் எடுக்கும் முயற்சி வெளியரங்கமாகிறது.
இப்படி வேத வசனங்களை புரட்டி, வளைத்து, தேவ ஜனங்களை ஏமாற்றும் இந்த கூட்டம், இன்று தமிழகத்தின் பல பாகங்களில் நுழைந்திருக்கிறார்கள். இவர்களிடம் அகப்பட்டு குழப்ப நிலையில் இருக்கிறவர்கள் யாராவது இருந்தால் தயவுசெய்து வேத வசன அடிப்படையில் விளக்கம் பெற விரும்பினால் கீழ்கண்ட email முகவரியில் தொடர்பு கொள்ளவும்.