Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்..!
Permalink  
 


  • துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிற இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள். - (நீதிமொழிகள் 17:15).

ஒரு பெண் தன் பக்கத்து வீட்டு பெண்ணை பற்றி அக்கம் பக்கத்தில் ஒரு புரளியை கிளப்பி விட்டாள். அது காட்டுத்தீயை போல அந்த ஊரே பரவி விட்டது. அந்த பக்கத்து வீட்டு பெண் வெளியே தலைகாட்ட முடியாதபடி அந்த விஷயத்திற்கு கை கால் வைத்து பெரிய விஷயமாக மாற்றி விட்டனர் ஊர்க்காரர்கள். என்ன செய்வது என்று தெரியாமல் அந்த பெண் கண்ணீர் விட்டு அழுதாள். ஏன் என்னை பற்றி ஊரார் இப்படி பேசுகிறார்கள் என்று புரியாமல் தவித்தாள். கடைசியில் அந்த பெண் அந்த ஊரின் தலைமை மத போதகரிடம் சென்று காரியத்தை கூறிவிட்டு என்ன செய்வது என்று கேட்டாள். அதற்கு அவர் தான் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாக கூறி ஆறுதல்படுத்தி அனுப்பி விட்டார்.

பின்னர் அவர் விசாரித்த போது, அது எங்கெங்கோ போய் கடைசியில் பக்கத்து வீட்டு பெண்ணில் போய் நின்றது. அந்த பெண்ணை கூப்பிட்டு, அவர் கையில் ஒரு பை நிறைய அரிசியை கொடுத்து, தான் இருக்கும் இடத்திலிருந்து அவள் வீடு வரை வழியெல்லாம் அதை போட்டு கொண்டு வர சொன்னார். பின் அடுத்த நாள் தன்னை பார்க்க வரவும் சொன்னார். அதன்படி அடுத்த நாள் அந்த பெண் அவரை பார்க்க சென்ற போது, அவர் அவளிடம், 'போய் நான் கொடுத்த அரிசியை வழியிலிருந்து பொறுக்கி கொண்டு வா' என்று கூறினார். அப்போது அவள் 'ஐயா நான் எப்படி அதை போய் கொண்டு வருவது? இந்நேரம் அநேகர் மிதித்து, அது இருந்த இடம் கூட தெரியாதே, பறவைகள் கொத்தி கொண்டு போயிருக்குமே' என்று கூறினாள். அப்போது அவர் அவளிடம், 'ஆம், அப்படித்தான் நாம் சொல்கிற ஒவ்வொரு வார்த்தைகளும்! ஒரு முறை சொல்லி விட்டால், அதை பின் பொறுக்க முடியாது. மற்றவர்களை குறித்து அவதூறாக பேசாதே, புரளியை கிளப்பி விடாதே, நாளை உனக்கும் அதே நிலைதான் வரும், திரும்ப இந்த மாதிரி காரியத்தில் ஈடுபட்டால், உனக்கு தண்டனை கொடுக்கப்படும்' என்று எச்சரித்து அனுப்பினார்.

பிரியமானவர்களே, நம்மில் அநேகர் பிறரை குறித்து தேவையில்லாமல் மற்றவர்களிடம் கதை பேசுகிறோம். அது அவர்களுக்கு தெரிந்தால் எத்தனை வருத்தப்படுவார்கள் என்று நாம் அதை குறித்து நினைப்பதில்லை. எப்படியாவது மற்றவர்களிடம் அவர்களை குறித்து குறைவாக பேசினால் நமக்கு ஒரு மனசாந்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை. ஒரு வேளை நாம் பேசுகிறவர் தவறே செய்யாத பட்சத்தில் அவரை குறித்து அநியாயமாக குறை பேசுவது கர்த்தருக்கு அருவருப்பானது என்று வேதம் சொல்கிறது,

  • 'துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிற இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்'.

யோபு தேவனை குறித்து எத்தனையோ காரியங்களை குறையாக சொன்னார். ஆனால் அவருடைய நண்பர்களோ கர்த்தரை புகழ்ந்து, அவருடைய குணாதிசயங்களை குறித்து நன்மையானவற்றையே பேசினார்கள். ஆனாலும் தேவனுக்கு யோபுவின் நண்பர்கள் மேல் கோபம் வந்தது.

  • 'கர்த்தர் இந்த வார்த்தைகளை யோபோடே பேசினபின், கர்த்தர் தேமானியனான எலிப்பாசை நோக்கி: உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர்மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை' (யோபு 42:7)

 

என்று கூறினார். ஏன் அவர் அப்படி சொன்னார்? ஏனெனில் யோபு நன்மை செய்திருக்க அவருடைய நண்பர்கள் அவர் செய்த பாவத்தினால்தான் அவருக்கு அந்த வியாதி வந்தது என்று அவரை குறித்து குறைவாக பேசினதினால்தான். தேவன் தம் பிள்ளைகளுக்காக எத்தனை வைராக்கியம் பாராட்டுகிறார் பாருங்கள்!

  • 'ஆதலால் நீங்கள் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்து கொண்டு, என் தாசனாகிய யோபினிடத்தில் போய், உங்களுக்காகச் சர்வாங்க தகனபலிகளை இடுங்கள்; என் தாசனாகிய யோபும் உங்களுக்காக வேண்டுதல் செய்வான்; நான் அவன் முகத்தைப் பார்த்து, உங்களை உங்கள் புத்தியீனத்துக்குத் தக்கதாக நடத்தாதிருப்பேன்; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை என்றார்' (யோபு 42:8).

அவர் நீதிமான் என்று அழைத்தவர்களை குற்றவாளியாக தீர்ப்பது புத்தியீன செயல் என்று தேவன் சொல்கிறார். அவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள் என்று வேதம் சொல்கிறது. யோபு தேவனை குறித்து பேசினாலும், கர்த்தர் அவனிடம்,

  • 'சர்வவல்லவரோடே வழக்காடி அவருக்குப் புத்தி படிப்பிக்கிறவன் யார்? தேவன்பேரில் குற்றம் பிடிக்கிறவன் இவைகளுக்கு உத்தரவு சொல்லக்கடவன் என்றார். அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: இதோ, நான் நீசன்; நான் உமக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்; என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன். நான் இரண்டொருதரம் பேசினேன்; இனி நான் பிரதியுத்தரம் கொடாமலும் பேசாமலும் இருப்பேன் என்றான்' (யோபு 40:2-5)

என்று தேவனிடம் தன் குறையை சொல்லியபோது அவர் உடனே அவருக்கு அதை மன்னித்து விடுகிறார். அது அவருடைய ஞாபக புத்தகத்திலிருந்து உடனடியாக அழிக்கப்பட்டு போகிறது. நீதிமானாகிய தம் பிள்ளைகள் செய்த தவற்றை அவர்கள் அறிக்கையிட்டவுடன் அதை தேவன் மன்னித்து விடுகிறார். ஆனால் நீதிமானை குற்றவாளியாக பேசினவர்களின் தவறோ கர்த்தருக்கு கோபத்தை கொண்டு வருகிறது.

பிரியமானவர்களே, நாம் மற்றவர்களை குறித்து தேவையற்ற காரியங்களை பேச வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தவறு செய்யாத பட்சத்தில் நாம் கூறிய காரியங்கள் தேவனிடத்திலிருந்து கோபத்தை கொண்டு வரும். ஆகவே நாம் நம் வார்த்தைகளை குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருப்போம்.

  • 'மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்' (மத்தேயு 12:36)

என்று இயேசுகிறிஸ்து கூறினார். ஆகவே நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சுருக்கமாயும், மற்றவர்களை குறை சொல்லாததாயும், தேவையற்ற காரியங்களை குறித்து பேசாமலும் இருக்கட்டும். ஆமென் அல்லேலூயா!

சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே
விரும்பா அசுத்தம் யாவும் போக்குமே
பாவி நீசப்பாவி நானையா
தேவா இரக்கம் செய்ய மாட்டீரோ

பரிசுத்தர் கூட்டம் நடுவில்
ஜொலித்திடும் சுத்த ஜோதியே
அரூபியே இவ்வேளையில்
அடியார் நெஞ்சம் வாரீரோ

நன்றி:-அனுதின மன்னா

இந்த தியானத்தை வாசித்தபோது எனக்குத் தோன்றியதை சொல்லுகிறேன்.அந்த தலைமை மதகுருவின் ஸ்தானத்தில் நான் இருந்தால் வதந்தியைப் பரப்பின பெண்ணுக்கு பனிஷ்மெண்ட் கொடுக்காமல் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கே கொடுப்பேன். ஏனெனில் வதந்தியைப் பரப்புவோர் பொதுவாக யாருக்கும் அடங்குவதில்லை. ஆனால் ஆறுதல் தேடிவருவோர் எளிதில் சொல்லுவதைக் கேட்பார்கள்.கதையின் நோக்கமும் நிறைவேறும். எப்படியெனில் வழியெங்கும் தூவப்பட்ட அரிசி மிதிக்கப்பட்டும் பறவைகளால் கொறிக்கப்பட்டும் மறைந்துபோவது போல வதந்தியும் மறைந்துபோகும்.எனவே வதந்தியால் பாதிக்கப்பட்ட பெண் கலங்கவேண்டியதில்லை.இந்த காரியத்தைச் செய்யும் போதே அவளுக்கு ஆறுதலும் மனமாற்றமும் உண்டாகும். அவளுடைய செயலைப் பார்க்கும் வதந்தியைப் பரப்பிய பெண்ணும் ஒருவேளை இதனால் மனமாற்றம் அடையக்கூடும்.

ஆனாலும் நம்மில் அநேகர் பிறரைக் குறித்து தேவையில்லாமல் மற்றவர்களிடம் கதை பேசி தூஷணம் செய்வோருக்கு உற்ற நண்பர்களின் போன் நம்பர்களைக் கொடுத்து சிண்டு முடித்துவிடுகிறார்களே அதைத் தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

பாலுக்கும் காவலாம் பூனைக்கும் தோழனாம்...கதை..! >:(



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard