ஒரு கிராமத்தில் ஊழியம் செய்பவர் கடந்த மாதம் எனக்கு அறிமுகமாகி நண்பரானார். உண்மையான ஊழிய பாரம் கொண்ட அச்சகோதரன் தன் சூழ்நிலையையும் வீட்டு நிலையையும் கூறி ஜெபிக்கும்படி கேட்டிருந்தார்.இன்று அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, இடைப்பட்ட நாட்களில் நடந்தவற்றை வேதனையுடன் சொன்னார்.அவருடைய மனைவிக்கு குறைப் பிரசவம் உண்டாகி, குழந்தை இறந்தே பிறந்தது.பிரச்சனை அத்துடன் நின்றுவிடவில்லை. ஏஜி சபை விசுவாசியாக இருந்த அவர் மனைவி, தற்போது பணக் கஷ்டம் இருப்பதால் திருமண வாழ்க்கையில் தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக சொல்லி தாய் வீட்டிற்குச் சென்று விட்டார். ”நீங்கள் எனக்கு ஒழுங்காக சாப்பாடு தந்திருந்தால் நானும் நன்றாக இருந்திருப்பேன், குழந்தை இறந்திருக்காது” என்று அச்சகோதரி சொன்ன அவரிடம் சொன்ன வார்த்தைகள் என் மனதை அரித்துக் கொண்டிருக்கிறது. முகப்பக்க நண்பர்களே, தயவு செய்து அச்சகோதரனுக்காகவும், அவர் மனைவிக்காகவும் ஜெபிப்பீர்களா?
ஜெபிப்பதற்கு முன்னர் எதற்கும் நண்பர் விஜய் அவர்களிடம் ஒரு ஆலோசனை கேட்டுவிடுவோமா..?அவர் தான் சபை தேவையா,இல்லையா ? முழுநேர ஊழியம் தேவையா, இல்லையா? காணிக்கை வாங்கலாமா கூடாதா ? வாங்கினாலும் எவ்வளவு பணத்தை சொந்த செலவுக்கு எடுத்துக்கொள்ளலாம் என்றெல்லாம் விளக்கமாக பல கட்டுரைகள் எழுதியிருக்கிறாரே... அதையெல்லாம் முதலில் அந்த ஊழியருக்கு (?) படிக்கச் சொல்லிக்கொடுக்கலாம்...பிறகு அவர் தன்னைக் குறித்து யோசித்துப்பார்க்கட்டும்,தான் ஊழியர் தானா என்று... அதன்பிறகு எல்லாம் புரியும்..! இன்றைக்கு தமிழ் கிறிஸ்தவ உலகின் வரப்பிரசாதமே விஜய் அவர்களின் கட்டுரைகள் தானே,அவர்தானே நமக்கெல்லாம் ஸ்போக்ஸ்மேன் போல இருக்கிறார், எனவே அவரிடம் கேட்கச் சொல்லுகிறேன்.
கிண்டல், கேலி , பரியாசமெல்லாம் இல்லீங்க.... கண்ணீருடன் எழுதுகிறேன்,என் கண்ணீரே அந்த ஊழியரின் துன்பத்தை ஆற்றுமானால் அதையே அவருக்கு காணிக்கையாகத் தருகிறேன். யாரோ மூளைச்சலவை செய்து கெடுத்துப்போட்ட அப்பாவி இளைஞர்கள் நாங்கள், அதனால் எங்கள் இளைமையைத் தொலைத்தோம்,உழைக்கும் பெலனை இழந்தோம், விசுவாச வாழ்க்கை என்று இங்கே வந்து கேலிப்பொருளாகி நிற்கிறோம்..! எங்களால் முன்னாலும் செல்லமுடியாது.... பின்னோக்கியும் ஓடமுடியாது...இருதலைக் கொள்ளி எறும்புகள்..!
இப்படியே கத்தோலிக்க மார்க்கத்திலிருந்து மனந்திரும்பிய ஒரு சகோதரன் என்னிடம் பரிதாபமாக வந்து நின்றார்;அவர் உலோக சிற்பங்களைச் செய்வதில் வல்லுநர்;அந்த தொழிலில் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கும் திறன்படைத்தவர்;ஆனாலும் கர்த்தரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு இனி அதுபோன்ற பாவத் தொழிலில் (?) ஈடுபடமாட்டேன் என்ற பொருத்தனையுடன் தனது மனைவியின் அக்கா வீட்டுக்காரரின் சபையில் வந்து சேர்ந்தார்;அவரோ அவரை அடிமையைப் போல நடத்த ஆரம்பித்தார்;ஒரு ஊழியமும் தரவில்லை;சம்பளமும் தரவில்லை;சபையில் பாய் போடுவது போன்ற எடுபிடி வேலைகளையே கொடுத்தார்,இதனால் அவருடைய தன்மானம் பாதிக்கப்பட மனைவியிடம் புலம்பினார்;அவளோ தன் சகோதரியின் கணவனான பாஸ்டரையே நியாயப்படுத்தி பேசவும் நண்பர் தனிமைப்பட்டுப் போனார்,அவருக்கோ சரீரமெல்லாம் ஏதோ அலர்ஜியாகி முகம் கோரமாக இருக்கும்;இந்நிலையில் பிரசவத்துக்காகச் சென்ற மனைவி மீண்டும் குடித்தனம் பண்ணவரவில்லை;அடிமையைப் போல இருக்கும் ஊரைவிட்டு செல்லவும் நண்பருக்கு பயம்;அந்த அளவுக்கு அந்த பாஸ்டர் அந்த ஊரில் ஒரு ரௌடி போல இருக்கிறார்;இவரோ எளிமையான மனிதர்.
இறுதியாக என்னுடைய ஆலோசனையின்படி இரவோடிரவாக வீட்டை காலிசெய்து தன்னுடைய சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார்; பிறகு எப்படியோ அவருடைய மனைவியும் வந்துசேர்ந்தார்; இப்போது அங்குமிங்கும் பெயிண்டிங் போன்ற கிடைத்த வேலைகளைச் செய்து கஷ்ட ஜீவனம் செய்கிறார்; குழந்தைகள் இரண்டு ஆகிவிட்டது;குழந்தைக்கு ஃபீஸ் முதலான தேவைகளுக்காக ஏக்கத்துடன் எனக்கு போன்செய்வார்; நானும் என்னாலியன்றதை அவருக்கு கொடுத்து உதவுவேன்; அவரிடம் எந்த கெட்டபழக்கமும் இல்லை, உழைப்பாளி, தன்மானமிக்கவர், ரோஷக்காரர், ஆனாலும் கிறிஸ்துவினிமித்தம் அவர் பாடனுபவிக்கிறார், அந்நியரிடம் அல்ல, சொந்த ஜனத்திடமே.. அவருடைய தாயார் உட்பட உடன்பிறந்தோர்,உறவினர் எல்லோரும் இன்னும் கத்தோலிக்கர்களாகவே இருப்பதால் அவருக்கு ஆதரவற்ற நிலை..!