தேவனுக்காகப் பற்றியெரிதல் (Ablaze For God)- வெஸ்லி எல். டூவெல்
ஆசிரியர் அறிமுகம் :
இந்நூலை எழுதிய ஆசிரியரான வெஸ்லி எல். டூவெல் அவர்கள் இந்திய தேசத்தில் 25 ஆண்டுகள் மிஷனறியாக ஊழியம் செய்தவர் தேவனுக்காக தியாக உணர்வுடனும் அர்ப்பணத்துடனும் ஊழியம் செய்யும் ஒர் ஊழியனால் மாத்திரமே, இப்படிப்பட்ட வேட்கை நிறைந்த படைப்பை கொடுக்க முடியும் என்பது மிகையாகாது. இவரைக் குறித்து டாக்டர்.ரால்ஃப் வின்டர் என்பவர் கூறும்போது தலைவர்கள் அல்லாதவர்களால் தலைமைத்துவத்தைப் பற்றி எழுதப்பட்ட திரளான புத்தகங்களுக்குப் பிறகு, தனிப்பட்ட விதத்தில் பெரிதும் மதிக்கப்படுகின்ற ஒருவரால் எழுதப்பட்ட புத்தகத்தை காண்பது புத்துணர்வு தருகின்றது. உண்மையான பொறுப்பு உள்ள எந்தக் கிறிஸ்தவ விசுவாசிக்கும் அவசரமாக அவசியமான உற்சாகமூட்டும் ஒரு கையேடு என்று இப்புத்தகத்தை குறிப்பிடுகின்றார். வெஸ்லி எல் டூவேல D.Ed.,சின்சினாட்டி பல்கலைக் கழகம் இன்டர்நேஷனலின் முன்னாள் தலைவரும்இ இவாஞ்சலிக்கல் மிஷனெரிப் பணி சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பல்வேறு பதவிகள் வகித்தவரும், அநுபவம் மிக்கவரும் ஒரு தலைசிறந்த மிஷனறி வல்லுனரும் ஆவார்.இந் நூலைக் குறித்து இவர் கூறும்போது, நீங்கள் எப்படி இன்னும் அதிகமாக ஒரு தேவனுடைய மனிதனாக இருக்க முடியும்? உனது தலைமைத்துவத்தின் மீது தேவனின் முத்திரையையும் வல்லமையையும் இன்னும் அதிக அளவில் நீங்கள் எப்படி பெறமுடியும்?உனது தலைமைத்துவத்தின் மீது தேவனுடைய அபிஷேகம்இ கிறிஸ்துவின் மீதுஇ திருச்சபையின் மீது, இரட்சிக்கப்படாதோர் மீது தகிக்கும் அன்பு, ஆவிக்குரிய தலைவனாக உனது பயங்கரமான கணக்கொப்புவித்தல், தலைவனாக உங்களது ஜெபவாழ்க்கை, இவையெல்லாம் உங்கள் வாழ்க்கைக்கு மிக மிக அவசியமானது என்று குறிப்பிடுகின்றார்.
நான் இதை எழுத எழுத இது என்னை முழங்காலிட ஏவியது போல, நீங்கள் படிக்கப் படிக்கப் இந்நூல் உங்களுக்கு அறை கூவல் விடுத்து உன் முழங்கால்களுக்கு உன்னை விரட்டட்டும். தேவன் உங்களுக்காகவும் எனக்காகவும், என்னவெல்லாம் செய்ய விரும்புகின்றார் என்பதைக் குறித்த ஒரு தரிசனத்தைக் கண்டு விட்டேன். நான் உன்னோடு பகிர்ந்து கொள்ள விரும்பும் அனைத்திலும் கரை கண்டு விட்ட நிபுணனாக அல்ல, தேவனுடைய உன்னதமானதும், மிகச் சிறந்ததுமானதைத் தேடிச் செல்கின்ற உடன் யாத்திரிகனாகவே இதை எழுதுகிறேன்.
தேவனுடைய மக்களை வழி நடத்தவும் அவர்களுக்குப் போதிக்கவும் நீயோ நானோ பாத்திரவான்கள் அல்லர். எனினும் நம்மைத் தமது பிரதிநிதிகளாக தேவன் தெரிந்து கொண்டிருக்கின்றார். நம்மை வெறும் தீச்சுடர்களாக அல்லஇ தேவனுக்காகத் தீப்பிழம்புகளாக கொழுந்து விட்டெரியும் ஜீவாலைகளாக ஆக்குமளவிற்கு தமது ஆவியானவரால் நிரப்ப ஏங்கி நிற்கிறார். இதுவெ தேவனிடத்தில் வாஞ்சையாயிருக்கின்ற நம் ஒவ்வொருவருக்குமான அழைப்பு என தாம் எழுதிய நூலின் நோக்கத்தை மையப்படுத்துவதை காணலாம்.
தேவனுக்காய் பற்றியெரிதல் என்பதன் மையப்பொருள்:.
இந்த உலகில் நடைமுறை அனுபவம் மாத்திரமே நமக்கு மிகச் சிறந்த ஆசானாய் இருக்க முடியும். தேவன் கூட தமது அன்பை விளங்கப்பண்னும்படியாக தம்முடைய ஸ்தானத்திலிருந்து இறங்கி வர வேண்டிய அவசியம் இருந்தது தம்மால் நடைமுறைப்படுத்த முடியாததை மனிதர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்கின்ற நிர்ப்பந்த நிலையினை மனிதர்களுக்கு அவர் கொடுக்கவேயில்லை தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டு பரலோகத்திலிருந்து இறங்கி வந்ததே தம்மைக் குறித்த உயர்வான எண்ணத்தை அவர் கொண்டிருக்கவில்லை என்பதையே காட்டுகின்றது அவர் மிக மிக உன்னதமானவராயிருந்தும் ஆவிக்குரியதில் மிகவும் குறைவுள்ளவர்களாய் இருந்த நம்மை தம்மை விட மிகவும் முக்கியமானவர்களாக கருதினார்.
அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் தேவனுக்குச் சமமாயிருப்பதை கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் தம்மைத்தாமே வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார். ஆகவேதான் அப்.பவுல் கூறுகின்றபோது அவனவன் தனக்கானவைகளையல்ல பிறருக்கானவைகளையும் நோக்குவானாக கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது. (பிலி2:4-5) அப்படியாகவே சகோதரர் அவர்களால் படைக்கப்பட்ட இந்த படைப்பும் கிறிஸ்துவின் சாயலுக்கு மாறும்படியான அறைகூவல் அழைப்பையே நமக்கு விடுக்கின்றது. இது ஒரு எப்படி நூல் அல்ல ஆவிக்குரிய இயக்கவியலில் கிறிஸ்துவின் சிந்தைக்கு நாம் மறுரூபம் அடையவும் நம்மை நாமே நியாயந்தீர்த்துக் கொள்ளவும் தனிப்பட்டதாக நம் ஒவ்வொருவரையும் வலியுறுத்துகின்றது.
பொதுவாக நாம் ஒன்றை எப்படி செய்வது என்பதிலேயே அதிக அக்கறை காட்டுவோம் ஆனால் இந்த புத்தகமோ நாம் எப்படி இருப்பது என்பதை குறித்து நமக்கு அறைகூவல் விடுக்கின்றது. ஒர் கிறிஸ்தவ தலைவனாக தேவனுக்காய் எவ்வாறு பற்றி எரிய முடியும் என்பதே இந்நூலின் முக்கிய நோக்கமாகும. கிறிஸ்து யோவான்ஸ்நாபகனை குறித்து கூறுகின்றபோது அவன் எரிந்து பிரகாசிக்கின்ற விளக்காய் இருந்தான்(யோவா5:35) என்று அவனைக் குறித்து உன்னதமான ஒர் சாட்சியினைக் கொடுத்தார்.
அப்படிப்பட்ட அழைப்பே நம் ஒவ்வொருவரையும் சவாலிடுகின்றது ஏனெனில் பரலோக இராஜ்ஜியத்தில் நாம் யோவான் ஸ்நாபகனைப் பார்க்கிலும் பெரியவர்களாய் இருக்கின்றோம் என்பதற்கு இவ்வழைப்பு பொருத்தமானதாய் இருக்கின்றது. இந் நேரத்தில் சாது சுந்தர்சிங் அவர்கள் சொன்ன கருத்து ஒன்று ஞாபகம் வருகின்றது மெதுவாக எரிந்து ஒன்றையும் உருகச் செய்யாமல் இருப்பதைப் பார்க்கிலும் வேகமாக எரிந்து அநேக ஆத்துமாக்களை உருகச் செய்து விடுவது மேலானதாகும். ஆகவே ஆசிரியர் வெஸ்லி எல். டூவெல் அவர்கள் எழுதிய இன் நூலானது அநேக ஆத்துமாக்களை பற்றியெரியச் செய்து உருகச் செய்யும் என்பது அதிக நிச்சயமாகும்.
தேவனுக்காகப் பற்றியெரிதல் பற்றிய நூல் விமர்சனம்:.
இந்நூலானது ஒட்டுமொத்த சபைக்கோ அல்லது ஒர் குழுவுக்கோ எழுதப்பட்டதாயிராமல் அங்கேயிருக்கின்ற ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களையும் சந்திப்பதாயிருக்கின்றது. ஏனனில் இதை எழுதிய ஆசிரியருடைய நோக்கம் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களையும் கிறிஸ்துவுக்காக பற்றியெரியச் செய்யவேண்டும் என்பதேயாகும். தமது முதல் அதிகாரத்திலேயே ஆசிரியர் எழுதியுள்ள அதிரடியான தலைப்பு நீ பற்றியெரிய முடியும்.தேவனையே பற்றிக் கொள்ள மனதாயிருக்கிறவர்களுக்கு இது அக்கினிமயமான அறைகூவலாக இருக்கின்றது சபைப் போதகராயினும் ஊழியத்தலைவராயினும் தனிபபட்ட நபராக இருந்தாலும் சரி தாகமுள்ள யாவர் மேலும் தமது அக்கினியினை ஊற்றி நாம் எரிந்து பிரகாசிக்கவே தேவன் விரும்புகின்றார் என்கின்ற முத்திரை ஆணித்தரமாய் நம் யாவருடைய இருதயங்களிலும் பதிகின்றது.
தேவதொடுதலும் பரிசுத்த ஆவியின் அபிஷேகமுமே ஆவிக்குரிய விதத்தில் கிறிஸ்தவ தலைவர்களாய் நிலைத்திருப்பதற்கு மேலானதொன்றாக கோரப்படும் ஆவிக்குரிய வழிமுறைகளாய் இருக்கின்றது என்பதை இங்கு உணரக்கூடியதாய் உள்ளது. ஸபர்ஜன் என்பவர் இதனைக் குறித்து கூறுகின்றபோது நமக்கு வேண்டியது அபூர்வமான ஆவிக்குரிய அபிஷேகமேயன்றி அபூர்வமான புத்திக் கூர்மை அல்ல என்று வலியுறுத்துகின்றார்.மிகப்பெரிய வேலைத்திட்டங்கள் அறிக்கைளுக்கு மத்தியில் தேவன் நம்மிடத்தில் தனிப்பட்ட விதமாக விரும்புவது என்ன என்பதை நாம் அறிய விரும்புகின்றோமா? ஏதொ சுறுசுறப்பாக அதையும் இதையும் செய்ய வேண்டும் என்பது நமது நாட்டமல்ல தேவன் நம்மை பயன்படுத்துகின்றார் என்பதற்கான அத்தாட்சியே நமது நாட்டமாக இருக்க வேண்டும். தேவ சித்தம் அறிந்து அவரிடத்தில் தங்கித் தாபரிப்பதை விட்டு தம் சுயத்தம் செய்ய முற்படுகின்ற தலைவர்கள் தனிப்பட்ட நபர்கள் உள்ள இந்த கடைசி நாட்களில் தேவ சித்தத்தை தேடும்படியாக இந்த புத்தகம் வந்திருப்பது தனிப்பட்ட நம் ஆத்துமத்திற்கும் ஆன்மீக உலகிற்கும் மிகப்பெரிய ஆறதலாய் உள்ளது.
நூலில் காணப்படும் பாரமான ஒர் எச்சரிக்கை:
நாம் அக்கறையற்று ஏனொதானோவென்று இருக்கக் கூடாது என்றும் வழிப்புள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்றும் குவெய்ல் என்பவர் மன்றாடிக் கேட்கின்றார் நாம் ஊழியத்தால் பாரம் கொண்டிருக்கின்றோம் அதை சொல்லாவிட்டால் மரித்துப்போவோம் அதை விடப் பயங்கரம் என்னவென்றால் நாம் அதைச் சொல்லாவிட்டால் இந்த பரந்த விரிந்த உலகமே மரித்துப்போகும் அவர் மேலும் கூறும் வார்த்தைகளால் உங்கள் உள்ளங்கள் தூண்டியெழுப்பப்படட்டும் போதகர் அல்லது தலைவனின் உள்ளம் அவனுக்கே புரியாத விதமாக அனல் மூட்டப்பட்டருக்கிறது கிறிஸ்து அவனைக் கைதட்டிப் பாராட்டுகிறார். நித்தியமே அவனுக்கு ஆசானாக விளங்குகிறது. பரலோகம் அவனைத் தனது தூதுவன் எனச் சொந்தம் பாராட்டுகிறது அவனில் தேவன் பிரியமாயிருக்கிறார்.அவனது அன்பான எண்ணம் மற்றும் செயல் என்னும் தொடுவானம் முழுவதும் ஆயிரமாயிரமாண நெருப்பு முனைகள் தாவி எழுகின்றன.
ஆ... இவைகள் எல்லாவற்றாலும் என் இருதயம் பீடிக்கப்பட்டிருக்கின்றதா? ஏன்பதை இந்த புத்தகத்தை வாசிக்கும்போது மெய்யாகவே நான் பாரமடைகின்றேன் தாகம் கொள்கிறேன் நீங்களும் இதனை வாசிக்கின்றபோது உங்களையறியாமலேயே இந்த அனல் கொள்ளுதலில் ஈர்க்கப்பட்டுப் போவதை உணர்வீர்கள். பெஞ்சமின் ஃபிராங்க்லின் என்பவர் கூறும்போது ஜார்ஜ் ஒய்ட்ஃபில்ட் என்கின்ற பிரசங்கியார் பிரசங்கத்திலே பற்றியெரிவதை காண்பதற்காகவே அவரது பிரசங்கங்களைக் கேட்கத் தாம் அடிக்கடி செல்வதாக கூறினார். மார்டின் லாயிட் ஜோன்ஸ் என்பவரின் இன்னொரு கூற்று பிரசங்கித்தல் என்பது அக்கினியாய்ப் பற்றியெரிகின்ற ஒரு மனிதன் மூலம் வருகின்ற இறையியல் ஆகும். இந்தக் காரியங்களைப் பற்றியெல்லாம் அனல்கொள்ளாது அமைதலாக பேசக்கூடிய ஒரு மனிதனுக்கு பிரசங்கப் பீடத்தில் நிற்கவே உரிமை கிடையாது அவனைப் பிரசங்கய பீடத்தினுள் நுழையவே விடக்கூடாது. பிரசங்கித்தலின் முற்றும் முடிவான நோக்கம் என்ன?நான் நினைக்கிறேன். இதுதான் அதாவது தேவனையும் அவரது பிரசன்னத்தையும் பற்றிய உணர்வை கொடுப்பது.
பரிசுத்த ஆவியின் வல்லமை வலியுறுத்தப்படுதல்
தேவனைப் பற்றியும் அவருடைய ஆழங்களையும் நாம் அறியமுடியாததாக இருக்கின்றது ஒரு சிறு பையன் கரையில் நின்று கொண்டு பெரிய சமுத்திரத்தின் நீரை தன் கையில் உள்ள சிறிய குவளையினால் இறைக்க எண்னுவதற்கு சமமாய் இருக்கின்றது ஆனால் நம்முடைய கர்த்தராகிய இயேசு பிதாவினுடைய குணாதிசயங்களைக் குறித்து நமக்கு அநேக இடங்களில் வெளிப்படுத்தியிருக்கின்றார். ஆம் நம்மில் யாரும் பிரவேசிக்க கூடாதிருந்த பிதாவினுடைய சமூகத்தை நாம் யாவரும் காணும்படியாக அந்த திரை கிறிஸ்துவால் விலக்கப்பட்டது. அவருடைய சீஷர்கள் பிதாவின் சமூகத்தை கிறிஸ்துவின் மூலமாய் அநுபவித்தார்கள். பின்பு கிறிஸ்து பரத்திற்கு கடந்து போகும் போது பரிசுத்த ஆவியானவரை வரப்போகும் நாட்களுக்காய் கட்டளையிட்டார் பரிசுத்த ஆவியானவர் நம்மிடத்தில் இருக்கின்றார் என்பதற்கான அடையாளம் என்னவெனில் கிறிஸ்துவின் நாமம் நம் மூலமாய் மகிமைப்படுகின்றது என்பதினால் மாத்திரம் ஆகும். வல்லமையென்பது பரிசுத்த ஆவியானவர் மூலமாக கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படுதாக வெளிப்படுகின்றது. ஆம் இப்படிப்பட்ட வல்லமையினாலேயே ஒவ்வொரு ஊழியத் தலைவர்களும் விசுவாசிகளும் நிரப்பப்பட வேண்டும் என்று ஆசிரியர் ஆணித்தரமாய் வலியுறுத்துகின்றார்.
பரிசுத்த ஆவியானவர் இல்லாத ஊழியம் நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாததாகவே இருக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவருடைய நிறைவும் வல்லமையும் நம்மிடத்தில் இல்லையெனில் நாம் எருசலேமில் காத்திருப்பதே நமக்கு நலமாயிருக்கும். ஆவியானவருடைய இந்த கடைசி நாட்களில் பரிசுத்த ஆவியானவரோடு நமது ஊழியத்தையே ஆசிரியர் நூலில் அதிக இடங்களில் அநேக தரம் வலிறுத்துகின்றார்.
தேவனுக்காய் வேட்கை கொண்ட ஒர் தேவ மனிதனின் அநுபவ பொக்கிஷம்:
நம்முடைய வாழ்வில் அநுபவம் மாத்திரமே நமக்கு மிகச் சிறந்த ஆசானாய் இருக்க முடியும். வாழ்வின் எல்லாப் பகுதிகளையும் திறந்து கொடுக்கின்ற சாவியாக காலமே உள்ளது. இதுவே வாழ்வின் எல்லாப் பகுதிகளுக்கள்ளும் நம்மை நடத்திச் செல்கின்றது. ஒரு பகுதியில் மாத்திரம் அல்ல எல்லா சூழ்நிலைகளிலும் வியாபித்திருத்தலே ஒர் முழமையான அநுபவமாய் இருக்க முடியும். இந்த இடங்களில் தேவனை அறிந்து கொள்ளுதல் உண்டு. விசுவாசம் கொள்ளுதலும் விசுவாசம் புடமிடப்படுதலும் நெருக்கத்தையும் கைவிடப்படுதலையும் தேற்றுதலையும் தேவ அன்பையும் அவருடைய தகப்பனுக்குரிய இருதயத்தையும் நாம் அதிகமதிகமாய் அறிந்து கொள்ளகின்றோம் இப்படிப்பட்ட சூழ்நிலைகளிலிருந்தும் அநுபவத்திலிருந்தும் புறப்பட்ட ஒர் மனிதனால் மாத்திரமே மற்றைய சக மனிதனுடைய எல்லா சூழ்நிலைகளையும் புரிந்து கொண்டு அவனையும் தேவனுக்காய் மெய்யாகவே பற்றியெரியச் செய்ய முடியும் என்றால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட தலைமைத்துவமே தனிப்பட்ட ஒர் மனிதனையும் சபையையும் மிகப் பெரிய ஒர் கூட்டத்தையும் வழி நடத்த முடியும். இப்படியான ஒர் தேவ மனிதராலேயே இந்நூலானது எழுதப்பட்டிருக்கின்றது. பக்கத்திற்கு பக்கம் அந்த உயிருள்ள சாட்சியே நம்மை அனல் மூட்டுகின்றது.
நிறைவு:
இந்நூலைப் படித்து முடித்த பின்னர் ஒர் அக்கினிக்குள்ளே பிரவேசித்து விட்டு வந்த அனுபவத்தை இருதயத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் உணருவீர்கள் உணவு சமைக்கப்பட வேண்டுமாயின் அது அக்கினியிலே போடப்படவேண்டும். அப்படியே இந்தப் படைபும் அக்கினியினாலே சமைக்கப்பட்டு ஒவ்வொரு வகையாக ஒவ்வொரு பகுதிகளும் பரிமாறப்பட்டுள்ளது. வேட்கை கொண்ட ஒர் பறவை ஆகாயத்தை அளக்க நினைக்கின்றபோது அதனுடைய ஜீவனும் சேர்ந்தே உயர உயர எழும்புகின்றது. இந்த சிறிய பறவை கொண்ட தாகத்தை போலவே அந்த வானம் கொள்ளாதவரை எங்கள் ஆத்தும நேசரை சேர நம் ஆவி தீவிரிக்கின்றது. எங்கள் ஜீவனும் இந்த ப+மியில் நிலை கொள்ளாது உயர உயர எழும்புகின்றது. ஆம் இதுவே மெய்யான ஆவிக்குரிய மனிதனின் உன்னத அநுபவமாகும்.
பின்பு உயிரோடிருக்கம் நாமும் கர்த்தருக்கு எதிர் கொண்டு போக மேகங்கள் மேல் அவர்களோடே ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம்.(1தெச4:17)