(சொ-ள்.) படுக்கை இலர் ஆய கண்ணும் - படுத்தற்கு ஒரு சிறிய இடம் இலராயவிடத்தும், உடுத்தாரை உண்டி வினவுவார் இல் - சிறப்புற ஆடை உடுத்தாரை வறியராகக் கருதி உண்டிவேண்டுமோ என்று கேட்பார் ஒருவருமிலர். (ஆதலால்), அகத்தால் அழிவு பெரிது ஆய கண்ணும் -மனையின்கண் வறுமை மிக்க இடத்தும், எனைத்தும் புறத்தால் பொலிவ உறல் வேண்டும் - எப்படியாயினும் புறத்தோற்றத்தால் பொலிவுற்று விளங்குதல் வேண்டும்.
(வி-ம்.) 'பெரிதாயக் கண்ணும்' என்றமையால், செல்வம் உள்ள காலத்தே அணிபெற இருத்தல் சொல்லாமே பெறப்பட்டது. வறுமையை 'அழிவு' என்றார், ஆக்கவேலை யின்றி அழிவினையே மேற்கொண்டு அது செய்தலின். 'குடிப்பிறப்பழிக்கும் விழுப்பங் கொல்லும்' என்று அதன் தொழிலைப் பிறரும் கூறினார். படுக்கை அதற்குரிய இடத்தின்மேல் நின்றது. சிறப்புற ஆடை அணிவாரை யாரும் இரப்போராகக் கருதார் என்பார், 'உடுத்தாரை உண்டி வினவுவார் இல்' என்றார்.
பின்குறிப்பு: என்னைப் போன்றோர் பள்ளி காலத்தில் இதையெல்லாம் இரசித்து படிக்காததால் தற்காலத்தில் கஷ்டப்படுகிறோம்; கவலையற்று இன்புற்று திரிந்த காலங்களை வீணாக்கிவிட்டோமே என்ற ஏக்கம் இப்போதும் உண்டு; எனவே தற்கால மாணவக் கண்மணிகள் தங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காமல் பயன்படுத்திடவும் வேண்டுகிறேன்.
மேலும் பழமொழி உரைகளை ரசித்து மகிழ தொடுப்பைத் தொடரவும்;தாங்கள் ரசித்து மகிழ்ந்த அனுபவங்களையும் அதில் வெளிப்படும் வேதாகமக் கருத்துக்களையும் இங்கே பகிரவும்.