இல்லாத ஒன்றை இருப்பதாக உருவகித்து அதனோடு பேசுவதற்காக உபயோகிக்கப்படும் உருவகம் “புனையருவணி (Apostrophe) என்று அழைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, தான் எழுதுவதற்கு எவராவது மறுப்பு தெரிவித்தால் அதற்கும் பதிலளிப்பதற்காக அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வுருவகத்தை 1 கொரிந்தியர் 15:36-37 உபயோகித்துள்ளதை நாம் அவதானிக்கலாம். பவுல் இவ்வசனங்களில் கற்பனையில் ஒரு எதிரியை உருவாக்கி அவனோடு பேசுகிறார் (15)
சங்கீதங்களில் உயிரற்ற சடப்பொருளோடு பேசுவதற்கும் இவ்வுருவகம் உபயோகிக்கப்பட்டுள்ளது. இச்சந்தரப்பங்களில் உயிரற்ற் பொருட்கள் ஒரு நபராக உவமிக்கப்பட்டு, சங்கீதக்காரர்கள் ஒரு நபரோடு பேசுவது போல் பொருட்களுடன் பேசுகிறார்கள் (16) உதாரணத்திற்கு சங்கீதம் 68.16 இல் “உயர்ந்த சிகரமுள்ள பர்வதங்களே ஏன் துள்ளுகிறீர்கள்? என்று சங்கீதக்காரன் கேட்கிறான். சங்கீதம் 114.5-7 சங்கீதக்காரன் கடலுடனும் நதியுடனும் பூமியுடனும் பேசுகிறான். (17) இதேவிதமாக எரேமியா பட்டயத்தடனும் (எரே. 47:6) (18) பேசியுள்ளார். எனவே, இத்தகைய உருவக விபரணங்களை சொல்லர்த்தமாக எடுத்து ஆசிரியர்கள் பைத்தியக்காரத்தனமாக கற்பனைக் கதாபாத்திரங்களடனும் உயிரற்ற பொருட்களுடனும் பேசியுள்ளார்கள் என்று நாம் கருதலாகாது. இது அக்கால இலக்கியங்களில் உபயோகிக்கப்படும் உருவக விவரணத்தின்படியான பேச்சாகவே உள்ளது என்பதை நாம் கருத்திற் கொண்டு இத்தகைய வேதவசனங்களை புரிந்து கொள்ள வேண்டும்.
(ஊ) வஞ்சிப்புகழ்ச்சி (Irony)
உருவக விபரணங்களில் ஒருவனைப் புகழும் வார்த்தைகளில் அவனை இகழ்வதற்கு உபயோகிக்கப்படும் உருவகம் “வஞ்சிப் புகழ்ச்சியணி (Irony) என்று அழைக்கப்படுகின்றது. இதனைப் பேச்சுவழக்கில் வார்த்தைகள் உசசரிக்கப்படும் முறையைக் கொண்டு இலகுவில் இனங்கண்டு கொள்ளலாம். உதாரணத்திற்கு பொய் பேசும் ஒருவனைப் பார்த்து, “இவன் அரிச்சந்திரனுடைய பரம்பரையில் வந்தவன்“ எனறு கூறும்போது இவ்வார்த்தைகள் அவனைப் புகழ்வதாக இருந்தாலும், இவை அவனைப் பரிகசிக்கும் வார்த்தைகளாகவே உள்ளன. இதேவிதமாக வேதாகமத்திலும் புகழும் வார்த்தைகளில் இகழும் கூற்றுகள் உள்ளன. உதாரணத்திற்கு தாவீது நடனமாடியதைப் பரிகசிக்கும் அவனுடைய மனைவி, “இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்துபோட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார்“ (2 சாமு 6:20) என்று கூறியது வஞ்சிப்புகழ்ச்சியணி யாகவே உள்ளது(19) இதேவிதமாக 1 ராஜாக்கள் 18:27 இல் எலியா பாகால் தெய்வத்தை எள்ளிநகையாடினான். (20) மேலும், தங்களை ஞானிகளாகக் கருதி யோபுவுக்கு ஆறுதல் அளிப்பதற்காக வந்தவர்களின் வார்த்தைகள் எவ்வித ஆறுதலையும் தராதமையால் யோபு அவர்களிடம் “ஆம், நீங்களே ஞானமுள்ள ஜனங்கள்; உங்களுடனே ஞானம் சாகும்.“ (யோபு 12:2) என்று கூறியது வஞ்சிப்புகழ்ச்சியணியாகவே உள்ளது. உண்மையில், உருவகவிவரணத்தை இனங்காணாவிட்டால் இகழப்படுபவர் புகழ்பாடுவதாகத் தவறான எண்ணமுடையவர்களாகவே நாம் இருப்போம்.
(எ) மனுவுருவகவணி(Anthroponmorphism)
வேதாகமத்தில் தேவனையும் அவருடைய தன்மை மற்றும் செயல்களையும் மனிதர்கள் புரிந்து கொள்வதற்காக அவருக்கு மானிட அவயவங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருப்பதை நாம் அவதானிக்கலாம். எபிரேய மொழிவழக்கில் உள்ள இத்தகைய உருவக விபரணம் மனுவுருவகவணி (Anthroponmorphism) என்று அழைக்கப்படுகிறது. கண்களால் காணமுடியாத ஆவியான தேவனை மனிதர்கள் புரிந்து கொள்வதற்காக அவரை இவ்வாறு வர்ணிப்பது எபிரேய மொழிமரபாகும். வேதாகமத்தில் தேவன் மனுவுருவக மொழியில் வர்ணிக்கப்பட்டிருக்கும் பகுதிகள் தேவனை அறிந்து கொள்வதற்கு நமக்கு உதவுகின்றன. உதாரணத்திற்கு “அவருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கின்றன. (2 நாளா. 16:9) என்னும் விபரணம் தேவனுக்குப் பல கண்கள் இருப்பதாகவும், அவை மட்டும் தனியாக பூமியெங்கும் செல்வதாகவும் கூறவில்லை. மாறாக அவர் பூமியில் நடக்கும் காரியங்கள் அனைத்தையும் அவதானிப்பவராக இருக்கிறார் என்பதையே அறியத் தருகின்றன. இதேவிதமாக தேவனையும் அவருடைய செயல்களையும் நாம் இலகுவாகப் புரிந்து கொள்வதற்காக அவருக்கு முகம் (சங். 10:11, எரே 16:17, 2 நாளா 7:16), காதுகள் (சங். 10:17, தானி. 9:18) நாசி (சங். 18:15, யாத். 15:8) வாய் (ஏசா 34:16, மீகா 4:4) கரங்கள் (உபா 11:2, யாத் 33:23, ஏசா. 50:2), முதுகு (ஏசா. 38:17, எரே 18:17), இதயம் ஆத்துமாவும் (ஆதி. 6:6, 2 நாளா. 7:16) பாதங்கள் (யாத் 24:10, ஏசா 60:13) இருப்பதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய விவரணங்களை வியாக்கியானம் செய்து தேவனுக்கு மானிட உருவமும் சரீரமும் நாம் கருதலாகாது.
(ஏ) மிருகவுருவகவணி (Zoomorphism)
வேதாகமத்தில் தேவனை வர்ணிக்கும் இன்னுமொரு உருவகமும் உள்ளது. இது “மிருகவுருவகவணி“ (Zoomorphism) என்று அழைக்க்ப்படுகிறது. தேவனுடைய தன்மையை அல்லது அவர் மனிதர்களோடு நடந்துகொள்கின்ற முறையை விளக்குவதற்காக மிருகங்கள் அல்லது பறவைகளின் தன்மை அல்லது அவயவம் அவருக்கு இருப்பதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நாம் சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்து தேவன் சிறகுகளுடனும் செட்டைகளுடனும் இருப்பதாக கருதலாகாது. இவ்வசனத்தில் தேவன் தம்முடைய மக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பளிக்கிறார். என்பதை விளக்குவதற்காக தாய்ப்பறவை தன்னுடைய குஞ்சுகளைத் தன்னுடைய செட்டைகளில் மறைத்து வைத்து அவற்றைப் பாதுகாக்கும் முறை உதாரணமாக வர்ணிக்கப்பட்டுள்ளது.
சங்கீதங்களை சரியான விதத்தில் விளங்கிக் கொள்வதற்கு அவற்றில் உபயோகிக்கப்பட்டுள்ள உருவக விபரணங்களை சரியான விதத்தில் இனங்கண்டு, அவற்றின் அர்த்தங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். உருவக விபரணங்களைச் சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்து, அவை இடம்பெறும் வேத வசனங்களின் அர்த்தத்தைப் பிழையான விதத்தில் வியாக்கியானம் செய்வதை நாம் தவிர்த்துக் கொள்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
FootNote and References
(14) T.N. Sterrett, How to Understand Your Bible, p 90
(15) 1 கொரிந்தியர் 15:35-36 இல் “ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில், 36 புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே“ என்று தர்க்கத்தை பவுல் ஆரம்பித்துள்ளார்
(16) R.B. Zuck, Basic Bible Interpretation p. 152
(17) சங்கீதம் 114:5-7 இல் கடலே, நீ விலகியோடுகிறதற்கும்; யோர்தானே, நீ பின்னிட்டுத் திரும்புகிறதற்கும்;6 மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப் போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறத ற்கும், உங்களுக்கு என்ன வந்தது? 7 பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு.
(18) எரேமியா 47:6 இல் “ஆ கர்த்தரின் பட்டயமே, எந்தமட்டும் அமராதிருப்பாய்? உன் உறைக்குள் திரும்பிவந்து, ஓய்ந்து அமர்ந்திரு“ என்று எரேமியா பட்டயத்துடன் பேசுகிறார்.
(19) வேதாகமகாலத்து மக்களின் ஆடைகளைப் பற்றிய அறிவற்ற நிலையில், சில கிறிஸ்தவர்கள் தாவீது நிர்வாணமாக நடனமாடியதாகக் கருதுகின்றனர். ஆனால் இங்கு உள்ளாடைகளை அல்ல, மேல் வஸ்திரத்தைப் பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளது.
1 ராஜாக்கள் 18:27 இல் “மத்தியானவேளையிலே எலியா அவாகளைப் பரியாசம்பண்ணி: உரத்த சத்தமாய் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம்போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும்” என்றான்.
உற்சாகப்படுத்தலான வார்த்தைக்கு மிக்க நன்றி சகோதரரே. இரு காரணங்களினாலேயே தாமதிக்கிறேன்
1) Google இன் நடவடிக்கைகள். எனது தளத்தில் முதலில் பதியாமல் வேறுதளங்களில் பதிவு செய்ப்பட்டால் அதனை Google திருடப்பட்ட பதிவாகவே கருதும் என சமீபத்தில் அறிந்தேன். எனவே ஒரு நாளாவது தாமதிக்க திட்டமிட்டுள்ளேன
2) 3 தளங்களிலும் பதிய எடுக்கும் நேரம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக தமிழ் கிறிஸ்தவர்கள் தளத்தில் அதிக நேரம் எடுக்கிறது. எனக்கு வேலைப்பளு மிக அதிகமாக இருப்பதால் உடனடியாக செய்ய இயலவில்லை. வரும் காலத்தில் ஒரு நாள் இடைவெளியில் துரிதமாக செய்வேன்
நம்முடைய தளத்தில் இந்த கட்டுரையின் மற்ற பகுதிகள் பதிக்கப்படுமா அல்லது நானே உங்கள் தளத்திலிருந்து எடுத்து மறுபதிப்பு செய்யவேண்டுமா..? நீங்களே பதிப்பீர்களானால் அது கௌரமாக இருக்கும்.
உங்கள் கட்டுரைகள் விலைமதியாதவை என்பதை அறிந்திருக்கிறேன்; இவற்றை இன்னும் முழுவதுமாக வாசிக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்; ஆனாலும் இவை எனக்கு பொக்கிஷங்களாக நினைத்து பாதுகாத்துக்கொள்ளுவேன்; இதிலிருந்து தனிப்பட்ட முறையில் கற்றுக்கொள்ள ஏராளமுண்டு; இதுபோன்ற தகவல்களுக்காக எனது விசுவாச வாழ்க்கையின் ஆரம்பத்தில் மிகவும் ஆர்வத்துடன் ஓடிஓடி தேடியிருக்கிறேன்; ஆனால் இன்று இணையத்தின் பிணையம் காரணமாக அனைத்தும் வசமாகியிருக்கிறது.
கட்டுரைகளைப் படைக்கும் உங்கள் திறனும் (Talent) உங்கள் நேர்மையும் (Footnote and References.) என்னை அதிகம் கவர்ந்தது; சிலர் (நண்பர் சந்தோஷ் போன்றவர்கள்...) நல்ல உபயோகமான கட்டுரைகளைத் தருகிறார்கள்; ஆனால் அது எந்த ஆதாரத்திலிருந்து படைக்கப்பட்டது எனும் விவரத்தை அறிவிக்கிறதில்லை; ஆனால் நீங்கள் தன்னார்வத்துடன் செய்துவரும் இந்த பணியானது பலருக்கும் பிரயோஜனமுள்ளதாக விளங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை; இயன்றமட்டும் உங்கள் கட்டுரைகளுக்கு குறிச்சொல் (Tag..) இட்டு வந்தீர்களானால் நாம் பிறகு தேவைப்படும் சமயங்களில் அதனை பாவிக்க எளிதாக இருக்கும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
கவிதைகளில் சில சந்தர்ப்பங்களில் சாதாரண விபரணங்களிலும்) உயிரற்ற பொருட்களையும் பண்புப் பெயரால் குறிப்பிடப்படுகின்றவைகளையும் உயிருள்ள ஜீவிகளாகவும் நபர்களாகவும் வர்ணித்து எழுதும்போது உபயோகிக்கப்படும் உருவகங்கள் உயிருருவகவணி (Personification) என்று அழைக்கப்படுகின்றது. உதாரணத்திற்கு “மலர்கள் சிரித்தன“ “நிலவு பேசியது“ “தென்றல் தொட்டது“ என்று கூறும்போது உயிரற்ற பொருட்கள் உயிருள்ள நபர்களாக வர்ணிக்கப்படுகி்னறன. சங்கீதங்களில் “ஆறுகள் கைகொட்டுவதாகவும்“ பர்வதங்கள் பாடுவதாகவும் (சங். 98: மலைகள் துள்ளுவதாகவும் (சங். 114:4) ஏசாயா 42:12 இல் மலைகள் கம்பீரமாக முழங்குவதாகவும்“ “மரங்கள் கைகொட்டுவதாகவும்“ ஏசாயா 35:1 இல் “வானந்திரமும் வறண்ட நிலமும் மகிழ்வதாகவும்“ எரேமியா 46:10 இல் பட்டயம் வெறித்திருப்பதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளன. இத்தகைய விபரணங்களைச் சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்தால், வேதாகம ஆசிரியர்கள் உண்மைக்கு மாறான விதத்தில் எழுதியுள்ளதாகவே எண்ணத் தோன்றும். ஆனால் அவர்கள் உயிருவருவத்தின் மூலம் தங்களைச் சுற்றியுள்ள சூழல அவ்வாறு வர்ணித்துள்ளனர்.
வேதாமத்தில் உள்ள உயிருருவகங்களைச் சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்வது பிழையான உபதேசங்கள் உருவாகுவதற்கு வழிவகுக்கும். இதற்கு சிறந்த உதாரணம் நீதிமொழிகள் 8ம் அதிகாரத்தில் “ஞானம்“ உயிருருவகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை ஆதிச்சபைப் பிதாக்கள் சொல்லர்த்தமாகக் வியாக்கியானம் செய்ததன் விளைவாக இயேசுக்கிறிஸ்துவின் தேவத்துவத்தை மறுதலிக்கும் வேதப்புரட்டு உபதேசம் உருவானது.. நீதிமொழிகள் 8ம் அதிகாரத்தில் ஞானம் கூப்பிடுவதாகவும், சத்தமிடுவதாகவும் (8:5-11) பேசுவதாகவும் (8:5-11) மனிதர்களை நேசிப்பதாகவும் (8:17-20) குறிப்பிடப்பட்டுள்ளது. சில ஆதிச்சபை பிதாக்கள் இவ்வசனத்தில் உயிருருவகத்தில் ஞானம் வர்ணிக்கப்பட்டுள்ளது என்பதைக் கருத்திற் கொள்ளாமல், இவ்வசனங்களை உண்மையான ஒரு மனிதனைப் பற்றிய விபரணமாக எடுத்து, இவை இயேசுக்கிறிஸ்துவைப் பற்றிய விவரணம் என்று கூறியமையால், பிற்காலத்தில் வேதப்புரட்டர்கள் இவ்வசனங்களை ஆதாரமாகக் கொண்டு இயேசுக்கிறிஸ்துவைப் பற்றிய சில வேதப்புரட்டு உபதேசங்களை உருவாக்கியுள்ளனர். பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பில் நீதிமொழிகள் 8:22 இல் “ஞானம் சிருஷ்டிக்கப்பட்டுள்ளதாகக்“ குறிபபிடப்பட்டிருப்பதை அடிப்படையாகக் கொண்டு (6) கி.பி. 4ம் “ஏரியஸ்“ என்பவர் இயேசுக்கிறிஸ்து சிருஷ்டிக்கப்பட்டவர் என போதித்தார். இப்பிழையான போதகத்தின் செல்வாக்கு தற்காலத்தில் “யெகோவா சாட்சிகளுடைய“ உபதேசத்தில் உள்ளது(7). இதனால், வேதாகமத்தில் உயிருருவகத்தில் சித்திரிக்கப்பட்டுள்ள பகுதிகளை சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்து வேதப்புரட்டு உபதேசங்கள் உருவாகுவதற்கு நாம் காரணமாக இருக்கக் கூடாது.
(ஆ) ஆகுப்பெயரணி (Metonymy)
ஒரு வார்த்தைகக்குப் பதிலாக ஏதோ ஒரு வகையில் தொடர்புடைய இன்னுமொரு வார்த்தையை உபயோகிக்கும் போது அது ஆகுப்பெயரணியாக (Metonymy) உள்ளது. உதாரணத்திற்கு கீரை விற்பவரை “கீரை“ என்று கூபபிடும்போது கீரை எனும் பதம் கீரையை அல்ல கீரை விற்பனை அழைக்கும் பதமாகவே உள்ளது. இதேவிதமாக லூக்கா 16:29 இல் அவர்களுக்கு “மோசேயும் தீர்க்கதரிசளும் உண்டு“ எனும் கூற்று, புதிய ஏற்பாட்டுக் காலத்திலும் மோசேயும் தீர்க்கதரிசிகளும் மக்களோடு இருக்கிறார்கள் எனும் அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. அவ்வாக்கியம் ஆகுபெயரணியாக, மோசேயும் ஏனைய தீர்க்கததரிசிகளும் எழுதிய வேதவாக்கியங்களை குறிப்பிடும் விபரணமாகவே உபயோகிக்கப்பட்டுள்ளது. சங்கீதப்புத்தகத்தில் “கை“ என்னும் பதம் செயலைக் குறிப்பிடுவதற்கும் (சங். 7:3) (8 ) “நாமம்“ என்னும் பதம் தேவனைக் குறிப்பிடுவதற்கும் (சங். 9:10) “வாய்“ என்னும் பதம் பேச்சைக் குறிப்பிடுவதற்கும் (சங். 5:9) ஆகுப்பெயரணியாக உபயோகிக்கப்பட்டுள்ளது. (9) நாம் இத்தகைய உருவக விபரணங்களைச் சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்தால், ஒன்றுக்குப் பதிலாக உபயோகிக்கப்பட்டுள்ள பதத்தை அது எதைக் குறிப்பிடுகிறது என்பதைக் கருத்திற் கொள்ளாமல், குறிப்பிடட வசனத்தில் சங்கீதக்காரன் சொ்ல்லும் விடயத்தைத் தவறாகவே புரிந்து கொள்வோம்.
(இ) பிரதியீட்டணி (Synecdoche)
பொருளின் ஒரு பகுதிக்குப் பதிலாக அதை முழுமையாக அல்லது அதன் முழுமைக்குப் பதிலாக அதன்ஒ ர பகுதியைக் கறிப்பிடுவதற்கு உபயோகிக்கப்பட்டுள்ள உருவகம் பிரதியீட்டணி (Synecdoche) என்று அழைக்கப்படுகின்றது. (10) அதாவது தனின். ஒரு பகுதியைக் குறிப்பிட முழு மனிதனைக் குறிப்பிட மனிதனின் ஒரு பகுதியை மட்டும் குறிப்பிடும் முறை இதுவாகும். உதாரணத்திற்கு ஆதியாகமம் 42:38 இல், “நரைமயிர் பாதாளத்தில் இறங்குவதாக“ குறிப்பிடப்பட்டிருப்பது, நரை மயிர் மட்டும் பதாளதாதிற்கு செல்வதைப் பற்றி அல்ல, மாறாக, முழு மனிதனும் பாதாளத்திற்குச் செல்வதைக் குறிப்பிட அம்மனிதனின் ஒரு பகுதியை “நரைமயிர்“ மட்டும் இவ்வசனத்தில் பிரதியீட்டணியாக உபயோகிக்கப்பட்டுள்ளது(11) இதேபோல் நீதிமொழிகள் 1:15-16 இல் “கால்கள்“ ரோமர் 16:4 இல் “கழுத்து(12)“ சங்கீதம் 35:10 இல்“எலும்புகள்“ என்னும் பதங்கள் முழு மனிதனையும் குறிப்பிடும் பிரதியீட்டணியாகவே உள்ளது. மேலும், சங்கீதங்களில் “ஆத்துமா” என்னும் பதம் பல இடங்களில் முழு மனிதனையும் குறிப்பிட்டும் பிரதியீட்டணியாகவே இருப்பதனால் மனிதனை இரண்டு அல்லது மூன்று பகுதிகளாகப் பிரிக்கும் உபதேசங்களுக்கு இவ்வசனங்களை உபயோகிக்கும்போது, சங்கீதக்காரன் சொல்லும் விடயத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியாமல் போய்விடுகிறது. (13)பிரதியீட்டணியில் ஒரு பகுதியைப் பற்றி கூறுவதற்கு பிரதியீட்டணியில் ஒரு பகுதியைப் பற்றி கூறுவதற்கு அதை முழுமையாக்க குறிப்பிடுவது உண்டு. உதாரணத்திற்கு லூக்கா 2:1 இல் “உலகமெங்கும்“ என்பது முழு உலகத்தையும் அல்ல, அக்கால “ரோம சாம்ராட்சியம் எங்கும்“ என்பதைக் குறிக்கும் பிரதியீடடணியாகவே உபயோகிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டிக்கும் ரோம சக்கரவர்த்தி அக்காலத்தில் ரோம இராட்சியத்திலேயே குடித்தொகை கணிப்பீட்டைச் செய்தான். இதனால் புதிய ஆங்கில வேதாகமங்களில் இவவ்சனத்திலுளள பிரதியீட்டணி “ரோம சாம்ராட்சியம் எங்கும்“ என்று விளக்கி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதேவிதமாக யோசுவா 7:11 இல் “இஸ்ரவேலர் பாவம் செய்தார்கள்“ என்பது, இஸ்ரவேல் மக்களில் பாவம் செய்த ஆகான் என்னும் ஒருவனைக் குறிப்பிட (யோசு. 7:1) ஒரு பகுதியைக் குறிப்பிட அதன முழுமையை உபயோகிக்கும் பிரதியீட்டணியாக உள்ளது. இதேவிதமாக சங்கீதங்களிலும் ஒரு பகுதியைக் குறிப்பிட அதன் முழுமையையும் முழுமையைக் குறிப்பிட அதன் ஒரு பகுதியையும் பிரதியீட்டணியாக உபயோகிக்கப்பட்டிருப்பதனால், நாம் இவற்றைக் கருத்திற் கொள்ளாது சங்கீதத்தின் வசனங்களை வியாக்கியானம் செய்யும்போது சங்கீதக்காரர்கள் சொல்லும் விடயங்களைச் சரியான விதத்தில் அறிந்து கொள்ள முடியாமல் போய்விடும்.
(ஈ) உயர்வுநவிற்சியணி (Hyperbole)
ஒரு விடயத்தை முக்கியப்படுத்திக் கூறுவதற்கு மிகைப்படுத்திக் சொல்வதற்கு உபயோகிக்கப்படும் உருவகம் “உயர்வுநவிற்சசியணி“ (Hyperbole) என்று அழைக்கப்படுகின்றது. இத்தகைய உருவகங்களை உருவக விவரணமாக விளக்காமல் சொல்லர்தமாக எடுத்தால், குறிப்பிடப்பட்டுள்ள விடயம் பொய்யாகவே இருக்கும். ஆனால், இது மக்களை வஞ்சிப்பதற்காகச் சொல்லப்படும் பொய் அல்ல. ஆனால், சொல்லப்படும் விடயத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காகவும் அதை முக்கியப்படுத்துவதற்காகவும் மிகைப்படுத்திச் சொல்லும் ஒரு முறை சாதாரண மொழிவழக்கில் உள்ளது. உதாரணத்திற்கு விபத்தில் அகப்பட்ட வாகனம் பாரிய அளவில் உடைந்துபோனதைப் பற்றி குறிப்பிட வாகனம் “சுக்குநூறாக உடைந்துவிட்டதாக“ கூறுவதும் மக்கள் படுகாயமடைந்து கிடப்பதைச் சுட்டிக் காட்ட அவர்கள் “இரத்த வெள்ளத்தில் மிதப்பதாகவும்“ கூறும்போது இவற்றைச் சொல்லர்த்தமாக அல்ல உயர்வுநவிற்சியாகவே சொல்லுகிறோம். வேதாகம ஆசிரியர்களும் இத்தகைய உருவகத்தை உபயோகித்துள்ளனர். உதாரணத்திற்கு பெருந்திரளான மக்கள் இயேசுக்கிறிஸ்துவைப் பின்பற்றிச் சென்றதை குறிப்பிட்ட பரிசேயர்கள் “இதோ உலகமே அவனுக்குப் பின்சென்று போயிற்றே“ என்று கூறினார்கள்.(யோவான் 12:19) உண்மையில் உலகத்திலுள்ள மனிதர்கள் அனைவரும் இயேசுக்கிறிஸ்துவின் பின்னால் போய்விட்டார்கள் என்று சொல்லர்த்தமாக இக்கூற்றை வியாக்கியானம் செய்தால் அது பொய்யாகவே இருக்கும். இவ்வாறு கூறிய பரிசேயர்கள் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றவில்லை. மேலும், அச்சமயம் எருசலேமைத் தவிர வேறுபிரதேசங்களில் இருந்தவர்களில் எவரும் இயேசுக்கிறிஸ்துவின் பின்னால் செல்லவில்லை. அப்படியிருந்தும் பரிசேயர்கள் “உலகமே அவர் பின்சென்றது“ என்று கூறுவதற்குக் காரணம், பெருந்திரளான மக்கள் அவர் பின்னால் சென்றதேயாகும். இதேவிதமாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதை விட மிகவும் அதிகமான காரியங்களை இயேசுக்கிறிஸ்து செய்தார் என்பதை அறியத் தரும்போது “அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புத்தகங்களை உலகம் கொள்ளாது (யோவான் 21:25) என்று உயர்வுநவிற்சியணியில் தெரிவித்துள்ளார்.
சங்கீதங்களை எழுதியவர்களும் தாங்கள் சொல்வதை வலியுறுத்துவதற்கும் முக்கியப்படுத்துவதறகும் உயர்வுநவிற்சியணி என்னும் உருவகத்தை உபயோகித்துள்ளனர். உதாரணத்திற்கு, சங்கீதக்காரன் அதிகமாக அழுததைக் குறிப்பிட “என் கண்களிலிருந்து நீர்த்தரைகள் ஓடுகின்றன” (சங். 119:136) என்றும் “இராமுழுவதும் என் கண்ணீரால் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன் (சங். 6:6) என்றும் எழுதியுள்ளான். இதைப்போன்ற உயர்நவிற்சியணிகள் பல சங்கீதங்களில் உள்ளன. இவற்றை சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்தால், சங்கீதக்காரன் சொல்வதை தவறாகவே புரிந்து கொள்வோம். சிலநேரங்களில் அவன் பொய் சொல்வதாக கூட நாம் நினைக்கலாம். ஆனால் உயர்வுநவிற்சியணி உபயோகிக்கப்படும்போது சொல்லப்படுவதை உருவகமாகவே நாம் எடுக்க வேண்டும். எனவே, உயர்வுநவிறசியணி என்னும் உருவகத்தை சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்து வேதவசனங்களுக்கு பிழையான அர்த்தம் கற்பிக்க்க கூடாது.
(அடுத்த பதிப்பில் நிறைவுபெறும்)
Footnote and References.
(6) மூலமொழியின்படி இவ்வசனத்தின் இறுதிப்பகுதி நாம் உபயோகிக்கும் தமிழ் வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டிரு்ப்பது போல, “ஆதியாய் கொண்டிருந்தார்” என்றே மொழிபெயர்க்கப்பட வேண்டும்.
(7) மேலதிக விளக்கத்திற்கு ஆசிரியரின் யெகோவா சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள் என்னும் நூலினை பார்க்கவும் (பக். 100-103)
(8 ) 1 சாமுவேல் 22:17 2சாமுவேல் 3:12, 14:19 என்னும் வசனங்களிலும், “கை“ என்னும் பதம் ஆகுப்பெயரணியாக உபயோகிக்கப்பட்டுள்ளது.
(9) உதாரணத்தி்ற்கு “யுத்தம்“ என்பதற்குப் பதிலாக பல இடங்களில் “பட்டயம்“ என்னும் பதத்தை வேதாகமம் ஆகுப்பெயரணியாக உபயோகித்துள்ளது. (யாத். 5:3, ஏசா 1:20, எரே. 14:12-13, 14:15-16)
(10) R.B. Zuck, Basic Bible Interpretation p.151)
(11) பழைய ஏற்பாட்டில் பாதாளம் என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள “ஷியொல்“ என்னும் எபிரேயப் பதம் “புதைகுழி“ அல்லது கல்லறை“ என்னும் அர்த்தமுடையது
(12) ரோமர் 16:4 இல் பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் தன் பிராணனுக்காகத் “தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள்“ என்று பவுல் குறிப்பிட்டுள்ளார். இவ்வசனத்தில் பிராணன் என்று மொழிபெயர்க்க்பபட்டுள்ள பதம் “ஆத்துமா“ எனும் அர்த்தமுடையது. எனவே, இவ்வசனத்தில் “ஆத்துமா“ என்னும் பதமும் முழுமனிதனைக் குறிக்கும் பிரதியீட்டணியாக உள்ளது.
(13) கிறிஸ்தவ உலகில் ஆரம்பத்திலிருந்தே, மனிதன் இரண்டு பகுதிகளாகவா அல்லது மூன்று பகுதிகளாகவா இருக்கின்றான் எனனும் சர்ச்சை இருந்து வந்துள்ளது. சில கிறிஸ்தவர்கள் மனிதனை ஆவி, ஆத்துமா, சரீரம் என்று மூன்று பகுதிளாக வேதாகமம் பிரித்துள்ளதாகக் கூறுகின்றனர். ஏனையவர்கள் இதை மறுதலித்து, மனிதனை இரண்டு பகுதிகளாகவே பிரிக்க முடியும் என்று கருதுகி்ன்றனர். ஆனால் வேதாகமத்தில் மனிதனுடைய பல பகுதிகளைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் சில பதங்கள் முழு மனிதனையும் குறிப்பிடும் விதத்தில் பிரதியீட்டணியாகவே உபயோகிக்கப்பட்டுள்ளன. எனவே, இத்தகைய வசனங்களை ஆதாரமாகக் கொ்ண்டு மனிதனை இரண்டு அல்லது மூன்று பகுதிகளாகப் பிரிப்பது தவறாகும். வேதகமம் மனிதனைப் பிரிக்கப்பட்டுள்ள பகுதிகளாக அல்ல. முழுமையானவனாகவே பார்க்கிறது.
வேதாகமத்திலுள்ள உருவக விபரணங்கள் வித்தியாசமான அர்த்தங்களுடன் உபயோகிக்கப்பட்டிருப்பதனால் ஒரு வசனத்தில் உள்ள அர்த்தத்தை இன்னுமொரு வசனத்திற்குக் கொடுப்பது தவறாகும். ஓசியா 6:4 இல் “உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப் போலவும் விடியற்காலையில் தோன்றும் பனியைப் போலவும் ஒழிந்துபோகிறது” என்று மக்களிடம் கூறப்பட்டுள்ளது. இவ்வசனத்தில், “காலை நேர மேகம்”“ “விடியற்காலைப் பனி“” என்பன மக்களுடைய பக்தியை வர்ணிக்கும் உருவக விபரணங்களாக உள்ளன. காலைநேர மேகமும் விடியற்காலைப் பனியும் சிறிதுநேரம் மட்டுமே இருப்பதனால், மக்களுடைய பக்தியும் சிறிது நேரம் மட்டுமே அவர்களிடம் இருக்கிறது என்பதை விளக்கும் விவரணங்களாக உள்ளன. இதனால் ஓசியா 14:5 இலும் பனி என்னும் உருவகம் இதே அர்த்தத்துடனேயே உபயோகிக்கப்பட்டுள்ளது என்று கருதுவது தவறாகும். இவ்வசனத்தில் தேவன் மக்களிடம் “நான் இஸ்ரவேலுக்குப் “பனியைப் போலிருப்பேன்”“ என்று தெரிவித்துள்ளார். ஓசியா 6:4 இல் “பனி“ என்பது “இஸ்ரவேல் மக்களுடைய பக்தியை“ உருவகிக்கும் விபரணமாக இருந்தாலும் ஓசியா 14:5 இல் இது தேவனுடைய செயலொன்றை” வர்ணிக்கும் உருவகமாக உள்ளது. மேலும் ஓசியா 6:4 இல் பனியின் “சிறிது நேரம் மட்டும் இருக்கும் தன்மையே“ உருவக விவரணத்தின் அர்த்தமாக உள்ளது. ஆனால் ஓசியா 14:5 இல் “பசுமை“ அல்லது “ஈரலிப்புத்தன்மையே“ உருவக விபரணமாக உபயோகிக்கப்பட்டு்ளளது. அதாவது “மண்ணை ஈரமாக்கும் பனி, தாவரங்களுக்குச் செழிப்பைக் கொடுப்பது போல, தேவன் இஸ்ரவேலுக்கு ஆசிர்வாதமாக இருப்பார்” என்பதே இவ்வசனத்தில் “பனி“” என்னும் உருவகத்தின் அர்த்தமாக உள்ளது. இதனால் ஓசியா 14:5 இல் நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன்; அவன் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவான்; லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான்.” என்று தெரிவித்துள்ளார். எனவே, ஒரேவிதமான உருவக விபரணங்கள், பல வசனங்களில் உபயோகிக்கப்பட்டிருந்தாலும் அவற்றின் அர்த்தம் வித்தியாசமானதாக இருப்பதனால், நாம் உருவக விபரணம் இடம்பெறும் வசனங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஆராய்ந்து பார்த்து, அவ்வசனங்களுக்கு ஏற்ற அர்த்தத்தின்படி உருவகங்களை வியாக்கியானம் செய்யவேண்டும். இல்லையென்றால் வேத வசனங்களின் அர்த்தத்தை நாம் பிழையான விதத்தில் புரிந்து கொள்வோம். உதாரணத்திற்கு வேதாகமத்தில் “புளித்தமா“ என்பது பாவத்திறகும் தீமைக்குமான உருவகமாக (1 கொரி. 5:6-8) அல்லது பிழையான போதனைக்கான விவரணமாக (கலா. 5:8-9, மத். 16:6, 16:11-12, மாற். 8:15) இருந்தாலும் மத்தேயு 13:33லும் லூக்கா 13:21லும் இவ்விபரணம் தேவனுடைய இராட்சியத்தையே குறிக்கின்றது. எனவே, வேதாகமத்திலுள்ள குறிப்பிட்ட ஒரு உருவகத்திற்கு ஒரு அர்த்தம் மட்டுமே உள்ளது எனக் கருதி, அவ்வுருவகம் இடம்பெறும் சகல வசனங்களையும் ஒரே அர்த்தத்தில் வியாக்கியானம் செய்யக் கூடாது. ஒவ்வொரு உருவகத்தையும் அது இடம்பெறும் வசனத்தையும் வேதப்பகுதியையும் கருத்தாய் ஆராய்ந்து பார்த்து அது எதற்கான உருவகம்? என்பதையும் எவ்வர்த்தத்துடனான உருவகம் என்பதையும் நாம் அறிந்த கொள்ள வேண்டும்”
வேதாகமத்திலுள்ள உருவக விவரணங்களுக்கான அர்த்தங்களை அறிந்து கொள்வதற்கு, குறிப்பிட்ட உருவகம் இடம்பெறும் வசனத்தையும் அவ்வசனம் இடம்பெறும் வேதப்பகுதியையும் ஆராய்ந்து பார்ப்பது ஒரேயொரு வழியாக உள்ளது. இதைத் தவிர வேறு வழிகளில் வேதாகமத்திலுள்ள உருக விபரணங்களுக்கான அர்த்தங்களை அறிந்துகொள்ள முடியாதிருப்பதனால் வேறு முறைகளைக் கையாளுவது தவறானதாகும். சிலர் வேதாகம உருவகங்களுக்குத் தங்களுடைய கற்கனையினால் அர்த்தம் கற்பித்து , வேத வசனங்களின் அர்த்தங்களை குழப்பி, பிழையான விளககங்களைக் கொடுத்து வருகின்றனர். வேதாகமத்தில் உபயோகி்கப்பட்டுள்ள உருவக விபரணங்கள் வேதாகமம் எழுதப்பட்ட பிரதேசத்திலிருந்த பொருட்கள், காட்சிகள், சம்பவங்கள் என்பவற்றிலிருந்தே பெறப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு “கர்த்தர் என் மேய்பராய் இருக்கிறார்“(சங். 23:1) என்று ஆரம்பமாகும் பாடலை, சங்கீதக்காரன் தன்னுடைய பிரதேச்த்திலுள்ள மேய்ப்பர்களின் தன்மையையும் பணிகளையும் கருத்திற்கொண்டே எழுதியுள்ளான். இதனால் பாலஸ்தீனப் பிரதேசத்து மேய்ப்பர்களின் தன்மையையும், பணிகளையும் பற்றி அறியாத நிலையில் 23ம் சங்கீதத்தைச் சரியான விதத்தில் விளங்கிக் கொள்ள முடியாது. பாலஸ்தீன மேய்ப்பர்களைப் பற்றி அறியாத நிலையில் நாம் நம்நாட்டு மேய்ப்பர்களை அடிப்படையாகக் கொண்டு 23ம் சங்கீதத்தை முழுமையாகவும் சரியான விதத்திலும் புரிந்து கொள்ள முடியாதவர்களாகவே இருப்போம். எனவே வேதாகமக் காலத்தின் சூழலை அறியாதவர்களாக நாம் நம்முடைய கற்பனைகளையும் நாம் வாழும் சூழலையும் அடிப்படையாகக் கொண்டு வேதாகமத்திலுள்ள உருவகம் விபரணங்களுக்குத் தவறான அர்த்தம் கற்பிக்கக் கூடாது.
வேதவசனங்களில் சாதாரண உருவவிபரணங்கள் மட்டுமல்ல, சில சிறப்பான உருவகங்களும் உபயோகிக்ப்பட்டுள்ளன. இவற்றைக் கருத்திற் கொள்ளாமல் வேதவசனங்களை வியாக்கியானம் செய்யும்போதும், வேதவசனங்களையும் பிழையான விதத்திலேயே நாம் விளங்கிக் கொள்வோம். எனவே, வேதாகமத்தில் உபயோகிக்கப்பட்டுள்ள வித்தியாசமான உருவக விபரணங்கள் எவை என்று இப்போது பார்ப்போம். சங்கீதங்களிலும் இத்தகைய உருவகங்கள் உபயோகிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரவேல் மக்களுடைய பாடல் புத்தகத்திலுள்ள சங்கீதங்கள் மூலமொழியில் கவிதை நடையிலேயே எழுதப்பட்டுள்ளமையால் இவற்றில் பலதரப்பட்ட உருவக விபரணங்கள் உள்ளன. இதனால் சங்கீதங்களை வாசிக்கும்போது அவற்றில் உபயோகிக்கப்ட்டுள்ள உருக விபரணங்களைக் கருத்திற்கொள்ளாவிட்டால் அவற்றை நாம் பிழையான வித்ததிலேயே விளங்கிக் கொள்வோம். உண்மையில் சங்கீதங்களில் மட்டுமல்ல, வேதாகமத்தின் ஏனைய பகுதிகளிலும் பலதரப்பட்ட உருவகங்கள் உள்ளன. சிலர் உருவக விபரணங்களுக்கும் சொல்லர்த்தமான விளக்கம் கொடுப்பதனால், வேதாகமத்தை முரண்படுத்தும் குழப்பமான பல உபதேசங்கள் உருவாகியுள்ளன. உதாரணத்திற்கு “மோர்மன் (Mormon) என்று அழைக்கப்படும். வேதப்புரட்டுக் குழுவினர் தேவனுக்கு மானிட அவயவங்கள் இருப்பதாக உருவகிக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்து, தேவன் ஆவியாய் இருக்கின்றார். (யோவா. 4:24) என்னும வேதாகம சத்தியத்தை முரண்படுத்துகிறவர்களாக பரலோகத்தில் தேவன் மாம்ச சரீரத்துடன் உருவத்துடனும் இருக்கிறார் என்று போதித்து வருகின்றனர். (1) இதுபோல் கடைசி இராப்போசனத்தின் போது இயேசுக்கிறிஸ்து அப்பத்தையும் திராட்சை இரசத்தையும் உவமிக்கும் அடையாளங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளதை ரோமன் கத்தோலிக்க சபையினர் சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்து, திருவிருந்தின்போது ஆசீர்வதிக்கப்படும் அப்பமும் இரசமும் இயேசுக்கிறிஸ்துவின் மாம்சமாகவும் இரத்தமாகவும் மாற்றமடைகின்றது என்று போதிக்கின்றனர். (2) மறுபுறத்தில் சில கிறிஸ்தவ இறையியலாளர்கள் வேதாகமத்தில் சொல்லர்த்தமாக சொல்லப்பட்டவைகளை உருவக விபரணங்களாக வியாக்கியானம் செய்து வேதாகமத்தின் சில உபதேசங்களை மறுதலித்து வருகின்றனர். உதாரணத்திற்கு இயேசுக்கிறிஸ்துவின் கன்னிப்பிறப்பு, உயிர்தெழுதல் என்பவற்றை மறுதலிப்பவர்கள் வேதாகமத்தில் இவற்றைப் பற்றி சொல்லப்பட்டவைகள் உருவக விபரணங்களாக இருப்பதாக கூறி இவை வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ள விதமாக சொ்ல்லர்தமாக நடைபெற்ற சம்பவங்கள் அல்ல என்று கூறி வருகின்றனர்(3). இதைப்போலவே வேதவசனங்களில் மறைபொருள் அர்த்தங்கள் இருப்பதாக கருதுபவர்களும் சரித்திர சம்பவங்களை ஆவிக்குரிய அர்த்தங்கள் கொண்ட கதைகளாக மாற்றி அவை நிஜமாக நடைபெற்ற சம்பவங்களாக இருக்கும் உண்மையை மறுதலி்த்து வருகின்றனர். இதனால் வேதாகமத்தில் உருவக விவரணங்களைச் சரியான விதத்தில் இனங்கண்டு வேதாகம வசனங்களை வியாக்கியானம் செய்யும்போது மட்டுமே அவற்றைச் சரியான விதத்தில் விளங்கிக் கொள்ள முடியும்.
சஙகீதங்களை மட்டுமல்ல வேதாகமத்தின் ஏனைய பகுதிகளை வியாக்கியானம செய்யும்போதும். வார்த்தைகள் அல்லது வாக்கியங்கள் எவ்விதமாக உபயோகிக்கப்பட்டுள்ளன என்பதை முதலில் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஏனெனில் வேதாகமத்தில் உள்ள வார்த்தைகள் இரண்டு விதமான முறைகளில் உபயோகிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான வார்த்தைகள், மொழியில் அவ்வார்த்தைகளுக்கு இருக்கும் இயற்கையான அர்த்ததிலும், ஏனையவை உருவகமாகவும் உபயோகிக்கப்பட்டுள்ளன. வேதாகமத்திலுள்ள சில உருவகங்களை இலகுவாக இனங்கண்டு கொள்ளக கூடிய விதத்தில் அவற்றோடு “போல“ என்னும் பதம் சேர்க்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு முதலாம் சங்கீதத்தில நீதிமான் எப்படிப்பட்டவன் என்பதைக் விளக்குவதற்காக அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான் (சங்கீதம் 1:3) என்று குறி்ப்பிடப்பட்டுள்ளது. “போல“ என்னும் பதம் சேர்க்கப்பட்டுள்ள உருவங்கள் “ஒப்புவமை“ அல்லது “உவமையணி“ (Simile) என்று அழைக்கப்படுகின்றது. எனவே, “போல“ என்னும் பதம் சேர்க்கப்பட்டுள்ள வார்த்தைகளும் வாக்கியங்களும் உருவக விபரணங்கள் என்பதைக் கருத்திற் கொண்டவர்களாக நாம் அவற்றை சொல்லர்த்தமாக அல்ல உருவக விபரணமாகவே வியாக்கியானம் செய்ய வேண்டும்.
வேதாகம உருவகங்களுக்கு “போல“ என்னும் பதம் சேர்க்கப்ப்ட்டுள்ள போதிலும், சில உருவகங்கள் மட்டுமே இத்தகைய முறையில் உள்ளன. இதனால் ஏனைய உருவகவிபரணங்களை இனங்கண்டுகொள்வதற்கு நாம் வேதவசனங்களை மிகவு்ம் கருத்தோடு ஆராயந்து பார்க்க வேண்டும். முதலில் நாம் வேதப்பகுதியின் சகல வார்த்தைகளும் அவற்றிற்கு சாதாரண மொழியில் உள்ள அர்த்தத்தின்படியே விளக்க வேண்டும். அப்பொழுது குறிப்பிட்ட ஒரு வார்த்தை அல்லது வாக்கியம் அது இடம்பெறும் வசனத்திற்குப் பொருத்தமற்றதாக இருந்தால், அது உருவகமாக உபயோகிக்ப்பட்டுள்ளது என்பதை அறிந்திடலாம். உதாரணத்திற்கு வெளிப்படுத்தல் 7:13-14 இல் அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான். அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விரு வசனங்களையும் புரிந்து கொள்வதற்கு முதலில் நாம் இவற்றில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் சாதாரணமாக மொழியில் அவற்றிற்குள்ள அர்த்தத்தின்படியே எடுக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது “அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்“ முரண்பாடுடையதாக தென்படும். ஏனெனில் இரத்தத்தில் தோய்க்கும் செயல் ஆடைகளை வெண்மையாக அல்ல சிவப்பாகவே மாற்றும். எனவே, அங்கிகளை இரத்தத்தில் தோய்த்து “வெளுக்க“ முடியாது என்பதனால் இவ்வாக்கியம் உருவக விபரணமாக இருப்பதை அறிந்து கொள்கிறோம். இவ்விதமாக வேத வசனங்களில், மொழியில் உள்ள அர்த்தத்தின்படி உள்ள வார்த்தைகள் அல்லது வாக்கியங்கள் எவை என்பதையும், உருவகமாக உபயோகிக்கப்பட்டுள்ளவை எவை என்பதையும் நாம் இனங் கண்டு கொள்ள வேண்டும்.
நாம் வாசிக்கும் வேதப் பகுதியில் உள்ள உருவகங்கள் எவை என்பதைக் கண்டு கொண்ட பின்னர் “ அவை எதற்கான உருவகம்?“ என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது அவை எவற்றை உருவகிக்கின்றன என்று நாம் கண்டுகொள்ள வேண்டும். இதற்கு அவ்வுருவகம் இடம்பெறும் வசனத்தை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு சங்கீதம் 92:12 இல் ”நீதிமான் பனையைப் போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்” என்பதில் “பனை“, ”“கேதுரு“” என்பன நீதிமானை வர்ணிக்கும் உருவகங்களாக இருப்பதை நாம் அவதானிக்கலாம். இதேவிதமாக, உருவகமாக உள்ள ஒவ்வொரு வார்த்தையு்ம் (அல்லது வாக்கியம்) இடம்பெறும் வசனத்தை ஆராய்ந்து பார்த்து, ஒவ்வொன்றும் எதற்கான உருவகம் என்பதை நாம் கண்டறிய வேண்டும். எனினும் சில சந்தர்ப்பங்களில் உருவகம் இடம்பெறும் வசனத்தின் மூலம் அது எதற்கான உருவகம் என்பதை அறிந்துகொள்ள முடியாதிருக்கலாம். இத்தகைய சந்தரப்பத்தில் குறிப்பிட்ட உருவகம் உள்ள வசனத்திற்கு முன்பும் பின்பும் உள்ள வசனங்களை ஆராயந்து பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு யோவான் 7:38 இல் இல் “ஜீவத்தண்ணீருள்ள நதிகள்“பரிசுத்த ஆவியானவருக்கான உருவகம் என்பதை அதற்கு அடுத்த வசனத்தின் மூலமே அறியக்கூடியதாக உள்ளது. இதைப்போல் யோவான் 4:32 இல் இயேசுக்கிறிஸ்து “போஜனம்“ என்னும் உருவகத்தை எதனை விளக்க உபயோகித்துள்ளார் என்பதை 34ம் வசனமே அறியத் தருகிறது. இவ்வசனத்தில் இயேசுக்கிறிஸ்து “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின் படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது“ என்று தெரிவித்துள்ளார். இதனால் சில சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட ஒரு உருவகம் எதற்கானது (அதாவது எதனை உருவகிக்கின்றது?) என்பதை அறிந்து கொள்வதற்காக இவ்வுருவகம் இடம்பெறும் வசனத்தை மட்டுமல்ல. அவ்வசனம் இடம்பெறும் முழுப்பகுதியையும் ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியமாக உள்ளது..
உருவகத்தை இனங்கண்டு அது எத்தனை உருவகம் என்பதை அறிந்து கொண்ட பின்னர் நாம் அது எத்தகைய அர்த்தத்துடனான உருவகம் என்பதைக் கண்டறிய வேண்டும். இதற்கு குறிப்பிட்ட உருவக விபரணத்தை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு ஏசாயா 1.30 இல்“நீஙகள் தண்ணீரில்லாத தோப்பைப் போலவும் இருப்பீர்கள்” என்னும் வாக்கியத்தில் “தண்ணீர் இல்லாத தோப்பு” என்பது உருவக விவரணமாக உள்ளது. எனவே தண்ணீரில்லாத தோப்பு எப்படி இருக்கும் என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும். உண்மையில் தண்ணீரில்லாத தோப்பு செழிப்பற்றதாகி, காய்ந்து வறண்டு போகும் எனவே, “நீங்கள் தண்ணீரில்லாத தோப்பை போலிருப்பீர்கள்” என்று தீர்க்கதரிசி கூறும்போது உங்களுடைய வாழ்வு வறண்டு செழிப்பற்றதாகப் போகிறது என்பதை தெரிவித்துள்ளார். இதேபோல, ஒவ்வொரு உருவக விவரணத்தையும் ஆராய்ந்து பார்த்து அதனுடைய அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும். எனினும் இவ்விடத்தில் நாம் கருத்திற்கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு விடயம் உள்ளது. அதாவது ஒரு உருவக விவரணத்திற்கு குறிப்பிட்ட ஒரு வசனத்தில் இருக்கும் அர்த்தமே அவ்வுருக விவரணம் உபயோகிக்கப்பட்டிருக்கும் சகல வசனங்களிலும் இருப்பதாக கருதுவது தவறாகும். ஏனெனில் ஒரு வசனத்தில் குறிப்பிட்ட ஒரு அர்த்தத்துடன் உள்ள உருவக விவரணம், இன்னுமொரு வசனத்தில் வேறு ஒரு அர்த்தத்துடன் உபயோகி்க்கப்பட்டிருக்கலாம். உதாரணத்திற்கு மாற்கு 1:10 இல் “புறா” பரிசுத்த ஆவியானவருக்கான அடையாளமாக இருப்பதனால் வேதாகமத்தில் “புறா“ என்னும் பதம் இடம்பெறும் இடங்களில் எல்லாம் இப்பதம் பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது என்று கருதுவது தவறாகும். ஏனெனில் ஓசியா 7:11 இல் புறா “மதியீனத்திற்கான” உருவகமாகவும் உன்னதப்பாட்டு 2:14 இல் மேவாப் தேசத்தில் குடியிருப்பவர்களைக் குறிக்கும் விபரணமாகவும் ஏசாயா 38:14 இல் அழுதுபுலம்புவதற்கான உருவகமாகவும் வித்தியாசமான அர்ததங்களுடன் உபயோகிக்கப்பட்டுள்ளது.
Footnote and Reference
1.இது பற்றிய மேலதிக விளக்கத்திற்கு ஆசிரியரின் மோர்மன் குழுவினருக்கு கிறிஸ்தவனின் பதில்கள் எனும் நூலினை பார்க்கவும்
2.இது பற்றிய மேலதிக விளக்கத்திற்கு ஆசிரியரின் கத்தோலிக்க சபையினருக்கு குழுவினருக்கு கிறிஸ்தவனின் பதில்கள் எனும் நூலினை பார்க்கவும்
3.இது பற்றிய மேலதிக விளக்கத்திற்கு சத்தியவசனம் சஞ்சிகையில் ஆசிரியர் எழுதிய “இயேசுக்கிறிஸ்துவின் கன்னிப்பிறப்பு கற்பனையா? (நவம்பர் –டிசம்பர் 1988, ஜனவரி-பெப்ரவரி 1989) “இயேசுக்கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் உண்மையா? இயேசுக்கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தாரா? இல்லையென்றால் மயக்கத்திலிருந்து உணர்வடைந்தாரா (ஜூலை-ஓகஸ்ட் 1991) என்னும் கட்டுரைகளைப் பார்க்கவும்.