புகழ்பெற்ற கிறிஸ்தவ ஆன்மிகத் தலைவர், கல்வியாளர், லட்சக்கணக்கான மக்களின் துயரத்தை ஜபத்தினால் மட்டுமே நீக்குபவர் டாக்டர் பால் தினகரன். நம்மை வரவேற்ற அவர்... “தேவனே! கல்கி இதழ் வாசகர்களுக்கும், நிறுவனத்தாருக்கும் இந்த கிறிஸ்துமஸ் நிமித்தமாய் அநேக நன்மை உண்டாகும்படி ஆசீர்வதிப்பீர். இந்தச் செய்தியைப் படிக்கிறவர் அனைவருக்கும் அத்தனை பாக்கியத்தையும் தமது அருளால் கிடைக்க உம்மை பிரார்த்திக்கிறேன் ஆண்டவனே! ஆமென்...” என்று ஜபம் செய்து, பிறகே நமது கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தொடங்கினார்.
அதிலிருந்து...
அனைத்து மக்களுக்கும் சொல்லும் கிறிஸ்துமஸ் செய்தி என்ன?
“நாம் ஒவ்வொருவரும் கடவுளோடு இருக்கும் உறவை பலப்படுத்தி, நாம் செய்த குற்றங்களை, குறைகளை அவரிடம் ஒப்படைத்து மனம் திருந்தி, கடவுளோடும் நமது குடும்பத்தோடும் சமூகத்தோடும் சமாதானம் அனுபவியுங்கள். அன்பின் மூலம் அனைத்தையும் அடையும் சாத்தியம் உண்டு என்பதை நம்புங்கள் என்பதுதான் எனது கிறிஸ்துமஸ் செய்தியாய் இருக்கும்.”
கிறிஸ்தவத்தில் ஒரே கடவுள் இயேசுதான். ஆனால், R.C., C.S.I., பெந்தகோஸ்தே, இன்னு மின்னும் பல்வேறு குழுக்கள். ஏன், அவைகளை இயேசுவின் பெயரால் ஒன்றிணைக்க முடியாதா?
“பல்வேறு மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஸ்தாபனங்கள், மனிதர்களைப்போல பல பிரிவுகளை, வேறுபாடுகளைக் கொண்டிருக்கும். ஆனால், தேவன் ஒருவனே! எல்லோருக்கும் பிரச்னைகள் உண்டு. எனவே பிரார்த்தனை மூலம் அவர்களைச் சேர்த்து அவற்றைத் தீர்க்க முயல்கிறோம். எங்கள் பிரார்த்த னைக்கு எல்லாப் பிரிவு மக்களும் வருகின்றனர். நாங்கள் சபை நடத்தவில்லை. பிரார்த்தனை மூலம் அவர்களை ஒன்றிணைக்க முயல்கிறோம்.”
ஆட்சி மாற்ற சக்தியாக கிறிஸ்தவர்கள் உருவாகாதது ஏன்? கிறிஸ்தவ அரசியல் தலைவர்கள் யாரும் இல்லாததுக்குக் காரணம் என்ன? அடுத்த முதல்வருக்கான உங்கள் விருப்பம் எது?
“சட்டசபையில் அடித்துக்கொள்கிற இருவேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் எங்கள் ஜபக்கூட்டத்தில் பக்கத்துப் பக்கத்து சீட்டில் உட்காருகிறார்கள். சட்டம் சாதிக்காததை ஜபம் சாதிக்கிறது. இயேசுவை ராஜாவாக்க பலர் விரும்பினபோது என் ராஜ்யம் இந்த உலகத்துக்காக அல்ல. நான் எல்லோருக்குமான பரலோக ராஜா என்று சொன்னார். எனவே எங்களுக்கு இந்தத் தமிழக ராஜ்யத்தில் விருப்பம் இல்லை. நம்மை யார் ஆண்டாலும் அவர் கடவுளின் பிரதிநிதி. நாங்கள் கடவுளிடம் பிரார்த்திப்போம்... வரும் தேர்தலில் மக்களுக்கு நன்மை உண்டாக்கும் முதல்வரை தாவென்று. அவருக்குத் தெரியும், யாரைத் தேர்ந்தெடுப்பது என்று. தமிழக முதல்வரை இயேசுதான் தீர்மானிக்கிறார். இயேசுவின் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவது நம் கடமை.”
ஒரு தலித் கிறிஸ்தவராக மாறினாலும் அங்கும் சாதிப் பாகுபாடு அப்படியே உள்ளது. அவர்களுக்குத் தனி சுடுகாடு, தனி சபை. சமூக மனமாற்றம் இல்லாத மதமாற்றம் அர்த்தமற்றது தானே?
“நிச்சயம் இது மாறித்தான் ஆகவேண்டும். இயேசுவை நம்பும் ஒருவர் மனிதர்களுக்குள் பாகுபாடு காட்டுவது அபத்தம்தான். ஆயினும் இந்தச் சாதிய உணர்வு இப்போது குறைந்துவிட்டது என்பதாக நம்புகிறேன்.”
அப்பா டி.ஜி.எஸ். தினகரனிடம் என்ன கற்றுக் கொண்டீர்கள்?
“இறைவன் மீதான வைராக்கியமான பயபக்தி. நமது பிரார்த்தனையில் நேர்மையும் உண்மையும் இருந்தால் இறைவன் செவிகொடுப்பார். மகிமை நிகழும். அப்போது அதை நீ சாதித்ததாகச் சொல்லும் அகம்பாவம் தவிர். உன் மூலமாக தேவன் இதைச் சாதித்தார் என்று உணர். இறை பயபக்தி இருந்தால் எந்த ஒரு மனிதனும் நம்மைத் தள்ளிவிட முடியாது என்பார். இதைத் தான் அப்பாவிடம் கற்றேன்.”
யதார்த்த வாழ்வில் பிரார்த்தனையின் பங்கு என்ன? தனி மனித ஆறுதலுக்கு வேண்டுமானால் பயன்படலாம் - நாட்டு வளர்ச்சிக்கு இது என்ன செய்யக்கூடும்? எல்லாவற்றுக்குமா பிரார்த்தனை?
“நான் உலக நாடுகள் முழுக்கப் பயணப்பட்டுவிட்டேன். ஐரோப்பிய, கனடா நாடுகளில் பிரார்த்தனை என்றால் சிரிப்பார்கள். பல நாடுகளில் கடவுள் நமக்குத் தேவையில்லை என்ற கருத்து பரவி வருகிறது. காலை எழுந்தது முதல் படுக்கப்போகும் வரை ரேடியோ, டி.வி.யில் ஆபாசம்... ஆபாசம்தான். இந்தியாவில்தான் ஊடகங்களில் பக்திப் பாடல்கள் காலையும் இரவும் ஒலிக்கிறது. பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியாவைக் காப்பாற்றியதுகூட இந்திய மக்களின் இறைபக்திதான் - அது கிறிஸ்துவாக இருக்கட்டும். கிருஷ்ணனாக இருக்கட்டும். இந்த இறை பக்தி, பயபக்திதான் நம்மை உலக நாடுகளுக்கான கருணை தரும் நாடாக மாற்றும். அனைத்துக்குமான அரிய மருந்து பிரார்த்தனைதான்.”
பிரார்த்தித்தால் உடனே கொடுத்துவிடுவாரா கடவுள்?
“அனைத்தும் நன்மைக்கு ஏதுவாக நடக்கும்” என்கிறது வேதம். ஆனால் அது நீ கேட்ட மாதிரியே நடக்காது. இயேசு தீர்மானித்துள்ளபடி வேறொரு சூழலில், வேறுவிதமாக இறைவன் நடத்துவார். நீ காத்திருக்க வேண்டும் - அதுவரை. இயேசுவைப் பிரார்த்தித்து IAS எழுதி, முழுமூச்சோடு படிக்கும் ஒருவன் 3 முறை தோல்வியைத் தழுவுகிறான். திடீரென வேறொரு சந்தர்ப்பத்தில் வேறு ஒரு தேர்வு எழுதியவன் இப்போது உயர் அதிகாரியாக 8 ஏக்கர் நிலத்தோடு அமெரிக்காவில் அதிகாரத்தில் இருக்கிறான். நீ கேட்ட அதிகாரம், வசதி, புகழை எங்கு எப்படித் தருவது என்று அவர்தான் தீர்மானிப்பார்.”
உங்களை வருத்தமடையச் செய்யும் விஷயம் எது? அதற்கான தீர்வாக எதைச் சொல்வீர்கள்?
“ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் விவாகரத்துக்கோரி பிரார்த்தனை செய்யச் சொல்லி கடிதங்கள் வருகின்றன. இதுதான் சங்கடத்தையும் வருத்தத்தையும் தருகிறது. அதீதமாய் தனிமனித சுதந்திரத்தை விரும்புவதும், தானே யார் தயவின்றியும் வாழ முடியும் என்கிற அசட்டு வைராக்கியமும்தான் இதற்குக் காரணம். அகந்தை அழித்து அன்பைக் கூட்டி, விட்டுக் கொடுக்கும் பண்பை வளர்த்து கொள்ள வேண்டும். இது நம் நாட்டின் கலாசாரத்துக்கும் பண்பாட்டுக்கும் நல்லது.”