இன்று ஒரு சகோதரியின் வீட்டுக்கு எனது மனைவியுடன் நலன் விசாரிக்கச் சென்றிருந்தேன்;அப்போது அவர்கள் பகிர்ந்துகொண்டதொரு செய்தியானது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது;அது ஏஞ்சல் டிவி-யிலிருந்து அவர் பெற்றுக்கொண்ட நூதன போதனையாகும்.
நம்முடைய சமுதாயத்தில் பெரும்பான்மையினரான இந்துக்கள் மார்க்க அறிஞர்களுக்கு மரியாதை செலுத்துவதுடன் ஒரு கட்டத்தில் அவர்கள் காலில் விழுந்து ஆசி பெறுவது வழக்கமான ஒன்று தான்; அதிலும் அவர்கள் காவி உடையில் சன்னியாசி போலத் தோற்றமளித்தால் அவர்தம் காலைக் கழுவி குடிக்கவும் அவர்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள்; இதில் பெண்களே முன்னணியில் இருக்கின்றனர்; அவர்கள் துறவியருக்கு இதுபோன்ற மரியாதையை செய்வதால் அவர்களது தாலி பாக்கியம் உறுதிபெறும் என்பது பாரம்பரியமான நம்பிக்கையாகும்.
அதுபோன்றதொரு அனுபவம் கிறித்தவ துறவி (வேடத்தில்) யாக இருக்கும் சாது சுந்தர் செல்வராஜ் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது;அவர் ஒரு முறை வடதேசத்தில் ஊழியத்தில் இருக்கும் போது அவருடைய காலில் பலரும் வந்து விழுகின்றனர்; உடனே இவர் மற்ற கிறித்தவ ஊழியர்களைப் போலவே "ஜீவனுள்ள தேவனையே நீங்களெல்லாம் வணங்கவேண்டும்,நான் உங்களைப் போல சாதாரணமான மனுஷன் தான்" பதற்றத்துடன் தடுக்கிறார்;ஆனால் அவருக்குள்ளிருந்து ஆவியானவர் ஆவேசத்துடன், "அவர்கள் உன் காலில் விழுந்ததாக நீ எப்படி நினைக்கலாம்,நான் உனக்குள் இருக்கிறேன் அல்லவா,அவர்கள் உன் காலில் விழவில்லை உனக்குள்ளிருக்கும் என் காலில்தான் விழுகிறார்கள்,எனவே நீ உன் காலில் ஆசிபெற விழுபவர்களைத் தடுக்கக் கூடாது " என்று தெளிவாக எச்சரித்தாராம்;அதன்பிறகு அவர் தன் காலில் விழுகிறவர்களைத் தடுக்கிறதில்லையாம்.
இதன் மூலம் சாதுஜி சொல்லவருவது என்ன..? அவரை நான் சாதுஜி என்று அழைப்பதாக யாரும் தயவுசெய்து எடுத்துக்கொள்ளக்கூடாது;ஏனெனில் அவர் ஒரே நேரத்தில் இந்து துறவியரைப் போல வேடமிட்டு இந்து மக்களையும், வேதம் சொல்லாத ஒரு தன்னிச்சையான ஒரு நிலையை எடுத்துக்கொண்டு கிறித்தவ சமுதாயத்தையும் ஏமாற்றுகிறார்.
விஷயத்துக்கு வருவோம்,இனி சாதுஜியை எங்கே பார்த்தாலும் அவர் காலில் விழுந்து வணங்கி ஆசிபெற வேண்டும் மறைமுகமாக அறிவிக்கிறார்;மேலும் தான் வணக்கத்துக்குரிய புனிதர் என்று தம்மைத் தாமே உயர்த்திக்கொள்கிறார்;இந்த காரியத்தில் வேதப் புருஷர்களைவிட சாதுஜி ஒருபடி மேன்மையானவராகக் காட்சியளிக்கிறார்.
'பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் ' என்பார்கள்;இன்னும் இதுபோல அடியேன் சேகரித்து வைத்திருக்கும் அத்தனையையும் இங்கே பதிக்க எனக்கு நேரமில்லை;ஆனாலும் இதுபோன்ற ஒரு சில காரியங்களைக் கொண்டே இவர்கள் யார் என்றும் இவர்களுடைய மற்ற போதனைகள் எப்படியிருக்கும் என்று தெரிந்துகொள்ளலாம்.
'இதிலென்ன தவறு இருக்கிறது ' என்போருக்காக நான் எதையும் எழுதுகிறதில்லை; 'சரியானது எது ' என்று தேடுவோருக்காக மட்டுமே பிரயாசப்படுகிறேன்; அல்லது சில அண்ணன்மார் அறிவுறுத்துவது போல முதலில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எழுதி கேட்டு சரியான விளக்கத்தைப் பதிக்கலாம்;ஆனால் அதுவே ஒருகட்டத்தில் நான் அவர்களை மிரட்டுவது போன்ற குற்றச்சாட்டுக்கு என்னை உள்ளாக்கும்;ஆனால் எனக்குத் தோன்றும் எந்த ஐயத்துக்கும் நான் சரியான விளக்கத்துக்கு பரிசுத்த வேதாகமத்தையே சார்ந்திருக்கிறேன்; நான் அணுகும் பிரச்சினைகள் பெரும்பாலும் போதனை சார்ந்ததாகவே இருப்பதால் அதற்கான விளக்கத்தைத் தவறாக போதிப்பவரிடமே கேட்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை;மேலும் அவர்களுக்கு விளக்கம் கொடுக்கும் வாய்ப்பை நான் தரவில்லை என்றும் யாரும் சொல்லமுடியாது;ஏனெனில் அவர்கள் அந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியை பல்லாயிரக்கணக்கான மக்கள் கவனிக்கும் ஒரு ஊடகத்தில் வெளியிட்டுவிட்டதுடன் அதனை மறுஒளிபரப்பும் செய்கிறார்களே.
இறுதியாக நான் அறிவிப்பது என்னவென்றால்,சாதாரண மனிதன் ஒருவன் எத்தனை வரங்கள் பெற்றவனாகத் தன்னை அறிவித்துக்கொண்டாலும் சரி,அல்லது தன்னை ஒரு புனிதனாகவோ சந்நியாசியாகவோ காட்டிக்கொண்டாலும் சரி அவன் சாகும் வரை மனுஷனே;அவன் காலில் விழுதல் என்பது பரிசுத்த வேதாகமத்தின் போதனைக்கு விரோதமானது.
குறிப்பிட்ட இந்த நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை;ஆனால் இதுபோன்ற பல துருபதேசங்களை நான் தரவிறக்கம் (download) செய்து ஆதாரத்துடனே வைத்திருக்கிறேன்;ஆனாலும் அவர்களுடைய பணபலத்தையும் வெகுஜன செல்வாக்கையும் கண்டு ஒரு வித அச்சத்துடன் யோசித்துக் கொண்டிருக்கிறேன்;நான் அமர்ந்திருந்தாலும் ஏதோ ஒரு கல்லை ஆண்டவர் எழுப்புவார்.
சாதுஜி(?!) தன் காலில் விழுபவர்களைத் தடுக்கக் கூடாது என்று ஆவியானவர் கட்டளையிட்டதாகக் கூறிய நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் எனக்கு நியாயம் சொல்லுங்கள்;இந்த தகவலை என்னிடம் கூறியவர்கள் மிகவும் பேதமையுள்ள ஒரு சகோதரி, தவறாமல் ஏஞ்சல் டிவிக்கு பணம் அனுப்புபவர்கள் என்பதால் இந்த தகவல் முழுவதும் உண்மையானது என்றே நம்புகிறேன்;எப்படியாகினும் காலில் விழுவது சம்பந்தமான காரியத்தில் வேதத்தின் போதனையை விசுவாசிகள் அறிய வேண்டுகிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)