மாமிசம் புசிப்பது குறித்து... சைவ மார்க்கத்திலிருந்து இயேசுவைக் குறித்த விசுவாசத்துக்கு மாறியவர்களின் சங்கடம் என்னவென்றால் ஒரு பொது நிகழ்ச்சியின் விருந்தில் கலந்துகொள்ளும்போது பெரும்பாலான மக்களை கவனத்தில் கொண்டு அருமையான சுவைகறி விருந்து ஆயத்தமாக்கப்பட்டிருக்கும்; ஆனால் இதுவரை ஆட்டுக்கறியோ கோழிக்கறியோ அல்லது வேறெந்த மிருகத்தின் மாமிசத்தையோ சாப்பிடாதவர்கள் அவ்வளவு ஏன் இதுவரை "கேக்" கூட சாப்பிட்டிராதவர்கள் (அதில் சிறிதளவு முட்டை வெள்ளைக் கரு சேர்க்கப்பட்டிருக்கும்..) விருந்தில் பங்கேற்கும் ஏனையோர் மத்தியில் ஒரு காட்சிப் பொருளைப் போல பார்க்கப்படுகின்றனர். கிறித்தவ வட்டாரத்தில் இது பலரும் அறிந்ததே; உடல் ஆரோக்கியம் சம்பந்தமான காரணங்களால் மாமிசத்தைத் தவிர்ப்பவரைக் குறித்து எந்த விமர்சனமும் எழுகிறதில்லை;ஆனால் வைதீக பிராமணர் போன்ற கட்டுப்பாடான கலாச்சாரத்திலிருந்து ஆண்டவரை மட்டும் நோக்கிப் பார்த்து வந்தோரைப் பார்த்து கேள்வி எழுப்பப்படுகிறது;இது அண்மையில் நடந்த ஒரு உண்மை நிகழ்ச்சியாகும். சென்னைக்கு அருகே ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடந்த ஒரு குடும்ப ஐக்கிய கூடுகைக்கு நானும் என் மனைவியும் சென்றிருந்தோம்; அங்கே கலந்துகொள்ள வந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதார்த்தத்தை சமைத்துக் கொண்டு வந்திருந்தனர்; ஆரம்ப ஜெபம் மற்றும் சிறு ஆலோசனைக் கூட்டம் மிகச் சுருக்கமாக முடியவும் சாப்பாட்டு நேரம் வரவும் சரியாக இருந்தது; எனவே அடுத்த நிகழ்ச்சியாக யார் யார் என்ன கொண்டு வந்தோம் என்பதைக் குறித்து சொல்லவும் கலகலப்பாகப் பேசிக்கொண்டே உணவு மேசைக்கு நேராக அனைவரும் சென்றனர். அப்போது என் மனைவி தன் வழக்கம் போல சைவ உணவுகளை மாத்திரமே சிறிதளவு எடுத்துக்கொண்டு அமர்ந்தார்;அதைப் பார்த்த மற்றொரு சகோதரர் கேட்ட கேள்வியே இந்த கேள்வி பதிலுக்கும் காரணமாக அமைந்தது;அவர் கேட்டார், சகோதரி சரியாக மனந்திரும்பவில்லையா என்பதே;ஆனாலும் எனது மனைவி வழக்கம் போல சிரித்துக்கொண்டே நாங்களும் சாப்பிட்டால் உங்களுக்குப் போதாமல் போய்விடும் என்று சொல்லி சமாளித்தார்கள். அதற்கு நான் சொன்ன பதில், "அவர்கள் மாமிசத்தில் மட்டும் இன்னும் மனந்திரும்பவில்லை;அவர்கள் மாமிச உணவைத் தவிர்க்க தீட்டு, தோஷம் போன்றவை காரணங்கள் அல்ல, அவர்களுடைய இரைப்பை மற்றும் ஜீரண உறுப்புகளின்இயல்பான அமைப்பின் காரணமாக ஏற்படும் ஒவ்வாமையே காரணம்" என்றேன். அவர் இதனைக் குற்றமாகக் கேட்காவிட்டாலும் நாங்கள் இதுபோன்ற விருந்துகளுக்குச் செல்லும்போது பொதுவாகவே சந்திக்கிற விமர்சனமாதலால் அதற்குரிய ஒரு பதிலை எனது சிந்தனையாகப் பதிக்க விரும்பினேன்; ஆச்சாரமான சைவப் பின்னணியிலிருந்து வந்தோர் அசைவ உணவை ஏற்பதன் மூலமே தங்கள் விசுவாசத்தை நிரூபிக்க வேண்டும் என்று வேதம் சொல்லுகிறதா,என்ன? இது சம்பந்தமாகப் பெரும்பாலும் குறிப்பிடப்படும் வேத வசனமானது, "தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே " என்பதுதான்; இந்த வசனம் அமைந்துள்ள வேதப் பகுதியை கவனிப்போமானால் அதன் சூழமைவே வேறாக இருப்பதை அறியமுடியும். "மறுநாளிலே அவர்கள் பிரயாணப்பட்டு, அந்தப் பட்டணத்துக்குச் சமீபித்து வருகையில், பேதுரு ஆறாம்மணி நேரத்திலே ஜெபம்பண்ணும்படி மேல் வீட்டில் ஏறினான். அவன் மிகுந்த பசியடைந்து சாப்பிட மனதாயிருந்தான்; அதற்கு அவர்கள் ஆயத்தம்பண்ணுகையில், அவன் ஞானதிருஷ்டியடைந்து, வானம் திறந்திருக்கிறதாகவும், நாலுமுனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒருவிதமான கூடு தன்னிடத்தில் இறங்கித் தரையில் விடப்பட்டிருக்கிறதாகவும், அதிலே பூமியிலுள்ள சகலவிதமான நாலுகால் ஜீவன்களும், காட்டுமிருகங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருக்கிறதாகவும் கண்டான். அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் உண்டாயிற்று. அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை என்றான். அப்பொழுது: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே என்று இரண்டாந்தரமும் சத்தம் அவனுக்கு உண்டாயிற்று. மூன்றாந்தரமும் அப்படியே உண்டாயிற்று. பின்பு அந்தக் கூடு திரும்ப வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. " (அப்போஸ்தலர்.10:9 - 16) இங்கே பேதுரு கண்ட தரிசனத்தின் அடிநாதமானது அவரை தேவன் மாமிசம் புசிக்க வற்புறுத்தவில்லை; மாறாக புறவின மக்களில் தேவ பக்தியுள்ளவனாகிய கொர்னேலியுவின் வீட்டுக்கு இரட்சிப்பின் சுவிசேஷத்தைக் கொண்டு செல்ல பேதுருவை மனதளவில் ஆண்டவர் ஆயத்தப்படுத்துவதை தொடர்ந்து வாசித்தறியலாம்; மேலும் மாமிசம் புசிப்பதைக் குறித்து பவுலடிகள் கூறும்போது,"இப்படிச் சகோதரருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, பலவீனமுள்ள அவர்களுடைய மனச்சாட்சியைப் புண்படுத்துகிறதினாலே, நீங்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறீர்கள்.ஆதலால் போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் புசியாதிருப்பேன். " (1கொரிந்தியர்.8:12,13) என்றே கூறுகிறார். இதனால் நாம் அறியவேண்டியது என்னவென்றால் மாமிசம் புசிப்பவரே அதை விடவேண்டுமே தவிர புசிக்காதவர் புசிக்க வற்புறுத்தப்படவில்லை என்பதே; இதன் மூலம் யாரும் யாரையும் புண்படுத்தாதிருப்பதே தேவனுடைய சித்தமாகும்;ஆனாலும் தற்கால விருந்துகளில் ஏறக்குறைய அசைவத்துக்கு இணையாக சைவ உணவு மேசைகள் நிரம்புவது ஆறுதலாக விஷயமாகும். இறுதியாக ஒரு சுவையான காரியத்தைச் சொல்லவேண்டும்;ஆம் அங்கே ஒரு சகோதரி தான் சமைத்த கட்லெட் உணவை வைத்திருந்தார்கள்;அதை என்னுடைய மனைவி எடுக்காமல் தவிர்த்து விட்டார்;அதுதான் அவருக்கு ஆண்டவர் கொடுத்துள்ள விசேஷித்த ஞானம்;ஆனால் அதனை உண்ட வேறொரு சகோதரி அதைக் கொண்டு வந்தவரைப் பார்த்து எப்படி சமைத்தீர்கள் என்று கேட்கவும் அதற்கு அவர்கள் சொன்ன பதிலைக் கேட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்த சகோதரியின் முகம் போன போக்கைப் பார்க்கணுமே, ரொம்ப சுவாரசியமாக இருந்தது;சமைத்த சகோதரி தொடர்ந்து விவரிக்கும்போது, "இங்கே வந்திருக்கும் வெளிநாட்டு விருந்தினருக்காகவே இதனை முக்கியமாக சமைத்தோம்;அங்கெல்லாம் இதைத் தானே அதிகமாக உண்கிறார்கள்? " என்றார்;இந்த சகோதரி தனது ஸ்பெஷல் ஐட்டத்தைக் குறித்து ஆரம்பத்தில் சொன்னபோது ஸ்டைலாக, "வீல் கட்லெட்" என்று சொன்னதே எல்லா குழப்பத்துக்கும் காரணம்;"வீல் கட்லெட்" என்றால் கன்றுக்குட்டியின் மாமிசத்தில் தயாரித்தது என்பது உபதகவல்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)