சமீபத்தில் "விஜய் " டிவியில் "நடந்தது என்ன?" எனும் நிகழ்ச்சியில் ஒரு பெரியவரைக் குறித்த சுவாரசியமான தகவலை கவனிக்க நேர்ந்தது...
அவருடைய பெயரே "வாயிலே கல்லு " கோவிந்தசாமி ;அவர் கடந்த 52 வருடமாக ஒரு கூழாங்கல்லை வாயில் வைத்திருக்கிறாராம் ;குறிப்பிட்ட ஒரே கல்லைத் தான் வைத்திருக்கிறார்;தூங்கும் போது கூட அதை வெளியே எடுப்பதில்லை ;
பள்ளிப் பருவத்தில் வாயில் போட்ட கல்லை திருமணமான போதும்- முதலிரவில் கூட வெளியே எடுக்கவில்லை;இதை வைத்து தாத்தா நிறைய மோசடிகளும் செய்திருக்கிறார்;"அல்வா கடையில்" -"ஐஸ் க்ரீம் கடையில்"-" கல்யாண வீட்டு பாயசத்தில்" கல் இருப்பதாகச் சொல்லி அவர்களை அலற வைத்திருக்கிறார்;
இன்றைக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்தாலும் அந்த குறிப்பிட்ட கல்லைத் தருவதற்கு அவர் ஆயத்தமாக இல்லை;ஒரு முறை "அல்வா'' சாப்பிடும் போது விழுங்கப்போன கல்லை தொண்டைக் குழியிலிருந்து வெளியே கொண்டு வந்து காப்பாற்றியிருக்கிறார்;
திக்குவாய் குறைபாட்டுக்கு தீர்வாக யாரோ இதைச் சொன்னார்களாம்; பள்ளிச் சிறுவர்களான நண்பர்கள் ஆற்றங்கரைக்குச் சென்று நல்லதொரு சுபயோக தினத்தில் ஆளுக்கொரு கூழாங்கல்லை வாயில் எடுத்துப் போட்டுக் கொண்டார்கள்;யார் இதை அதிக நாள் வைத்திருக்கிறார்கள் என்று நண்பர்களுக்குள் இது சம்பந்தமாக போட்டி வேறு;எல்லோரும் தோற்றுப்போனார்கள் இவரோ கடந்த 52 வருடமாக அந்த கூழாங்கல்லை வாயில் வைத்திருந்து "வாயிலே கல்லு " கோவிந்தசாமி எனப் பெயர் வாங்கிவிட்டார்;
மேட்டரு என்னன்னா நம்ம இயேசப்பா அவரை பின்பற்ற விரும்புபவன் தன் சிலுவையினை எடுத்துக் கொண்டு அனுதினமும் அவரை பின்பற்றச் சொன்னார்;
"சரி" என்று சம்மதித்து வந்தவர்களோ அடிக்கடி அந்த சிலுவையினைக் கீழே வைத்துவிடுகிறார்கள்;சரி சற்று ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் அந்த சிலுவையை எடுப்பார்களா என்றால் அந்த பக்கமே வருகிறதில்லை;
இதில் தானே வந்து செல்லும் வியாதி, வருத்த, துன்பங்களை சிலுவை என்று தூஷிப்பது வேறு;
சிலுவையைப் பற்றிய புதிய வெளிப்பாடு ஒன்றை சமீபத்தில் சாதாரணமான ஒரு சிறு கூட்டத்தில் ஒரு ஐயா (செய்தி)மூலம் பெற்றுக் கொண்டேன்; "சிலுவை என்பது எளிதில் தவிர்க்கக் கூடியது;விரும்பி ஏற்கக் கூடியது;அது நம்மீது திணிக்கப்படுவது அல்ல;தானே வந்து செல்லும் எதுவுமே (கொடூரமான கான்ஸர் வியாதி உட்பட) சிலுவை அல்ல.." என்கிறார்,அவர்.