யோபுவின் துன்பத்திற்க்கு காரணம் என்ன என்ற பகுதியில் தேவனே என எழுதியிருந்தேன். இன்னொரு பகுதியில் மக்களுடைய துன்பத்துக்கு காரணம் தேவனுடைய விதியே என்றும் எழுதியிருந்தேன். நான் யோபுவின் துன்பத்திற்க்கு காரணம் தேவனே என தீர்மானமாக சொல்ல காரணம் என்ன?
இந்து மதத்தில் கடவுள் ஐந்து தொழில்களை செய்வதாக கூறி உள்ளனர். அவையாவன:படைத்தல், காத்தல், அழித்தல், அருளல் மற்றும் மறைத்தல். கடவுள் என்பவர் இந்த ஐந்து தொழில்களையும் செய்தாக வேண்டும். இதில் அருளல் என்ற வரத்தை சில மனிதர்கள் மாத்திரமே பெற்றுக் கொள்கின்றனர். அனேக மக்கள் அதற்கான வழி தெரியாதபடி மறைக்கப்படுகின்றனர். சில சமயம் தேவன் பொறுமையாக காத்திருந்தும் அவருக்கு செவி கொடுக்காதவர்களுக்கு தேவனே அந்த வழியை மறைத்துப் போடுகிறார். இதற்கான வசனங்கள் வேதத்தில் நிறைய உண்டு.
ஆனால் இந்த மறைத்தல் இல்லாமல் இன்னொரு மறைத்தலையும் சில மனிதர்கள் வாழ்வில் தேவன் செய்கிறார். இதை பற்றியே இந்த கட்டுரையில் காணப் போகிறோம்.
தேவனுடைய அருளைப் பெற்ற சிலர் வாழ்க்கையிலேயே தேவன் இந்த மறைத்தலை செய்கிறார். மிகவும் துர்பாக்கிய நிலையையும், சொல்லொண்ணா துயரத்தையும் இதன் மூலம் அனுபவிக்கும் மக்கள் மிக மிக குறைந்த அளவிலேயே உள்ளனர். ஒரு சிலர் மாத்திரமே மிகுந்த வேதனையுடன் கடக்கும் இந்த அனுபவத்தை எனக்கென்ன வந்தது என விட்டு விடாமல் அவர்களுக்கு ஏதாவது செய்ய / சொல்ல எழுதப்பட்டதே இந்த கட்டுரை.
யோபுவின் வாழ்க்கையில் தேவ அனுமதியுடன் சாத்தான் பல துன்பங்களை கொண்டு வருகிறான். யோபுவும் தேவனை மறுதலிக்காமல் அந்த துன்பங்களை ஏற்றுக் கொள்கிறான். அதன் பிறகு தன் துயரமான நிலையை சொல்லி பலவாறு புலம்புகிறான். யோபு தனக்கு வந்த துன்பத்தால் துயரப்படுவதாக பலர் நினைக்கின்றனர். ஆனால் அது தவறு. யோபு துயரப்படுவது தனக்கு வந்த துன்பத்தினால் அல்ல. தேவன் தன்னை மறைத்துக் கொண்டததினாலேயே.
2.10. அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய், தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை
இந்த வார்த்தையை சொன்ன உடனேயே யோபு சாத்தானை வென்று விட்டான். கர்த்தர் உடனேயே யோபுவின் சிறையிருப்பை திருப்பியிருக்கலாம். ஆனால் அவர் துன்பம் நீடிக்கும்படி விட்டு விட்டு அவனை விட்டு மறைந்திருக்கிறார்.
யோபு தான் துன்பபடுவதற்க்கு காரணமாக சொல்லுவது என்னவெனில் :
2. இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரண்டுத்தனமாக எண்ணப்படுகிறது; என் தவிப்பைப்பார்க்கிலும் என் வாதை கடினமானது. 3. நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் அவர் ஆசனத்துக்கு முன்பாக வந்துசேர்ந்து, 4. என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாய் வைத்து காரியத்தை ரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன். 5. அவருடைய மறுமொழிகளை நான் அறிந்து, அவர் எனக்குச் சொல்வதை உணர்ந்துகொள்ளுவேன்.
6. அவர் தம்முடைய மகா வல்லமையின்படியே என்னோடே வழக்காடுவாரோ? அவர் அப்படிச் செய்யாமல் என்மேல் தயை வைப்பார். 7. அங்கே சன்மார்க்கன் அவரோடே வழக்காடலாம்; அப்பொழுது என்னை நியாயந்தீர்க்கிறவரின் கைக்கு என்றைக்கும் நீங்கலாய்த் தப்புவித்துக்கொள்வேன். 8. இதோ, நான் முன்னாகப்போனாலும் அவர் இல்லை; பின்னாகப்போனாலும் அவரைக் காணேன். 9. இடதுபுறத்தில் அவர் கிரியைசெய்தும் அவரைக் காணேன்; வலதுபுறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார். 10. ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.
தேவ மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் வரும் துன்பத்தையும், இன்பத்தையும் சமமாக பார்க்கும் தன்மையுடையவர்கள். யோபுவும் அவ்வாறே கருதுகிறான். ஆனால் தேவ்ன் மறைத்துக் கொண்டதை அவனால் தாங்க முடியவில்லை. அதாவது இந்த துன்பத்திற்கு காரணம் நானே என தேவன் சொன்னாலும் அதை தாங்கியிருப்பான். தேவன் தன்னை மறைத்துக் கொள்ளும் போது தேவ மனிதர்களின் அஸ்திவாரமே ஆட்டம் காண்கிறது. மற்ற துன்பங்கள் எனில் தேவனை சார்ந்து கொள்ளலாம். ஆனால் அவரே தன்னை மறைத்து கொள்ளும் போது யாரிடம் சென்று என்ன கேட்க முடியும்.
யோபுவை போலவே இயேசுவுக்கும் சிலுவையில் தேவன் தன்னை மறைத்து கொள்ளுகிறார். இடைவிடாது என்னேரமும் பிதாவோடு இருந்த இயேசு இமைப் பொழுது மறைத்து கொண்ட தேவனின் பிரிவை தாங்க முடியாமல் கதறுகிறார். இயேசுவிக்கு இந்த உலகில் குடும்பமோ, பற்றோ ஒன்றுமில்லை அதனால் துன்பத்தை ஏற்று கொள்வது ஒரு பிரச்சனை இல்லை இருந்தாலும் பிதாவின் பிரிவை தாங்க முடியாமல் அவர் கதறுகிறார்.
இயேசுவின் நிலையை விட யோபுவின் நிலை பரிதாபகரமானது. ஏனெனில் தேவன் தன்னை இமை பொழுது கைவிடுவார் என்பது இயேசுவுக்கு முன்பே தெரியும். அப்படி இருந்தும் அவர் கலங்கி போகிறார். யோபுவுக்கோ தன்னை சுற்றி என்ன நடக்கிறது? எவ்வளவு காலம் இது நீடிக்கும் என்ற வெளிப்பாடு எதுவும் இல்லை. ஆதலால் அவன் கதறுகிறான். துடிக்கிறான்.
தேவன் தன்னை மறைத்து கொள்ளும் காரியம் இவர்கள் இருவர் வாழ்க்கையில் மட்டுமல்ல இன்றைக்கும் சில விசுவாசிகள் வாழ்வில் நடக்கிறது. இத்தகையவர்கள் மிகவும் சிலரே. இவர்கள் யோபுவை போல நீதிமான்கள் அதனால் இவர்களுக்கு இந்த துன்பம் வந்தது என்றும் இவர்களை பற்றி சொல்ல முடியாது. மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு தங்களுக்கு ஏற்படும் வித்தியாசமான அனுபவத்தால் இவர்கள் திகைத்து போகின்றனர். தங்கள் வாழ்க்கையின் ஒரு காலகட்டத்தில் தேவனின் வழினடத்துதலை இவர்களும் அனுபவித்துள்ளனர். பிறகோ தேவனின் மறைவால் துன்பபடுகின்றனர்.
சிலர் வாழ்க்கையில் இந்த நிலை பல வருடக்கணக்கில் கூட நீடிக்கிறது. சிலருக்கு நடைபெறும் இந்த காரியத்தை புரிந்து கொள்ளாமல் சிலர் இவர்களை பாவம் செய்தவர் என்றோ, ஜெபிக்க தெரியாதவர் என்றும் குற்றம் சாட்டுகின்றனர். தேவனோடு பேசுவது எப்படி/ தேவனை காண்பது எப்படி? எனறு எழுதப்படும் புத்தகங்களை படித்து அதன்படி செய்தாலும் இவர்களுக்கு பலன் இல்லாமல் போகிறது. இத்தகைய நிலையை அனுபவிக்கும் சிலர் தங்கள் பாவத்துக்கு திரும்பவும், சிலர் தற்கொலைக்கும் கூட கடந்து செல்கின்றனர். கர்த்தர் நல்லவர் என்று சொல்வதே இவர்களுக்கு பெரிய காரியமாகிறது. இவர்களுடைய தேவனுக்குரிய வாழ்க்கை உள்ளங்காலை வைக்க இடம் இல்லாமல் திரும்பிய நோவாவின் பேழையிலிருந்து புறப்பட்ட புறாவை போல இருக்கிறது. இவர்கள் மனதில் பல போராட்டங்கள், கேள்விகள் எழுகின்றன.
தேவன் உண்மையிலேயே இருக்கிறாரா? இல்லையா? அவர் வல்லமை படைத்தவரா இல்லையா? அவர் ஒரு சில மனிதர்களுக்கு மட்டுமே நல்லது செய்யும் பட்சபாதம் உள்ளவரா? போன்ற தங்கள் வாழ்க்கையின் அஸ்திவாரத்தையே உலுக்கி எடுக்கும் கேள்விகளை சந்திக்க நேரிடுகிறது. ஊழியர்கள் சொல்லும் வார்த்தைகளும் இவர்களுக்கு போதுமானதாக இருப்பதில்லை. (ஊழியர்கள் தேவனுடைய ஆசிர்வாதத்தை பற்றியே எப்போதும் பேசுவதும் ஒரு காரணம்). வேதத்தில் இது போன்ற தேவ மனிதர்களின் கதறல் ஒரு குறிப்பிட்ட சதவீதம் என்று சொல்லும்படி மிகவும் அதிகமான பகுதியை பிடித்து கொள்ளுகிறது.
ஒரு தேவ மனிதரின் கதறல்.
எரேமியா 8. இஸ்ரவேலின் நம்பிக்கையே, ஆபத்துக்காலத்தில் அதின் இரட்சகரே, நீர் தேசத்தில் பரதேசியைப்போலவும் இராத்தங்க இறங்குகிற வழிப்போக்கனைப்போலவும் இருப்பானேன்? 9. நீர் விடாய்த்துப்போன புருஷனைப்போலவும், இரட்சிக்கமாட்டாத பராக்கிரமசாலியைப்போலவும் இருப்பானேன்? கர்த்தாவே நீர் எங்கள் நடுவிலிருக்கிறவராமே; உம்முடைய நாமம் எங்களுக்குத் தரிக்கப்பட்டுமிருக்கிறதே; எங்களை விட்டுப் போகாதிரும்.
புலம்பல் என்னும் அதிகாரம் முழுவதுமே இதற்காக உள்ளது. பல சங்கீதங்களிலும், யோபுவிலும், மேலும் வேதத்தின் பல பகுதிகளிலும் கதறல்கள் தொகுக்கப்பட்டுள்ளது. தேவனுடைய ஆசிர்வாததில் கடந்து செல்வோர் இது போன்ற பகுதிகளை படிப்பதை விரும்புவதில்லை. அனேகர் இது போன்ற பகுதிகளை படிப்பதனால் தங்கள் வாழ்க்கையிலும் அது போல நடக்குமோ என அச்சமடைந்து இது போன்ற பகுதிகளை படிப்பதில்லை. (யார் யார்க்கு என்ன என்ன நடக்க வேண்டும் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படியே நடக்கும் ஆதலால் இது போன்ற பகுதிகளை படிக்க பயப்பட தேவையில்லை)
ஜெபித்து தங்களுக்கு வேண்டியதை பெற்று கொண்ட சிலர் சரியான முறையில் ஜெபிப்பதன் மூலம் மனிதன் தனக்கு வேண்டியதை பெற்று கொள்ள முடியும் என நம்புகின்றனர். இப்படிபட்டவர்கள் துன்பத்தின் வழியாக கடந்து செல்லும் மக்களை சரியாக ஜெபிக்கவில்லை, சரியாக அழவில்லை அதனால்தான் பெற்று கொள்ள முடியவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். இவர்களில் ஒரு சிலர் ஜெபம் என்பது ஒரு கலை அல்லது டெக்னிக் என்றும் நினைக்கின்றனர். வேதத்தில் கதறின எரேமியா, யோபு, தாவீது, ஆசாப், இயேசு மற்றும் பலர் ஜெபம் செய்யத் தெரியாதவர்கள் அல்ல. அதிலும் ஒரு தேவ மனிதன் அழுது, அழுது கண்ணீர் வற்றிப் போய், அழுவதற்கு கண்ணீர் இல்லாமல்.
எரேமியா 9.1. ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன்.
என சொல்கிறார்.
இது போன்ற மக்கள் சபைக்கு சென்றால் அங்கு நடைபெறும் பரவச ஆராதனையும், அதில் கலந்து கொள்ளும் மக்களின் மகிழ்ச்சியும் இவர்களை கேலிக்குரியவர்களாக்குகிறது. சரி செய்தியாவது கேட்போம் என்றால் ஆசிர்வாதம், ஆசிர்வாதம் என்று வாழ்க்கையில் காணாத ஒன்றை பற்றி ஊழியர்களும் சொல்கின்றனர். தங்களை போல வேறு யாராவது உண்டா என்று பார்த்தால் யாரும் இருப்பதாகவும் தெரியவில்லை. (ஆனால் மிக மிக குறைந்த அளவில் இருந்தாலும் இது போன்று அனேகர் அங்கங்கே இருக்கத்தான் செய்கின்றனர். இது போன்று சொற்ப அளவில் இருக்கும் ஒரு சிலரை மட்டும் மனதில் கொண்டு தேவ ஊழியரும் தனிப்பட்ட செய்தி தர முடியாது. ஆனால் தேவ ஊழியர் சரியானபடி தேவ வல்லமை பெற்றவராய் இருப்பாரானால் அவரின் செய்தி இவர்களையும் தாங்க கூடும்.)
ஒரு தேவ ஊழியருக்கு என்ன என்ன தகுதி வேண்டும் என கேட்டால் பரிசுத்தமான வாழ்க்கையும், தேவ பக்தியும் வேண்டும் எனலாம். ஆனால் விட்னஸ் லீ என்ற தேவ ஊழியர் இன்னொன்றையும் தகுதியாக சொல்கிறார். அது என்னவெனில் அந்த ஊழியரின் நொறுக்கப்பட்ட வாழ்க்கை. இவ்வாறு நொறுக்கப்பட்ட வாழ்க்கையின் வழியாக கடந்து சென்ற ஊழியர்தான் அது போன்ற துன்பத்தின் வழியாக கடந்து செல்லும் விசுவாசிகளுக்கு ஆறுதலை தர முடியும். எனவே தேவன் தன் மக்களை வழி நடத்தி செல்ல, தான் தேர்ந்தெடுத்த மனிதனை நொறுக்கப்பட்ட அனுபவத்தின் வழியே நடக்க செய்து பிறகே தன் மக்களை வழி நடத்தி செல்ல வைப்பார் என்பது இவரின் கருத்து.
ஒரு சிலர் துன்பத்துக்கு காரணம் சாத்தானே அவனே உங்களை தாக்குகிறான் தேவன் நல்லவர் அவர் இது போல செய்ய மாட்டார் என்று சொல்கின்றனர். இவர்களின் கருத்து என்னவெனில் தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக சாத்தான் அவர்களை தண்டித்து விட்டான் என்பதே. அதாவது நடந்தது தேவ சித்தத்தின்படி அல்ல என்பதே இவர்கள் கருத்து. அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பது இவர்களுக்கு தெரியாது.
சாத்தான் தேவனை விட பெரியவன் என்பதும் அவன் தாக்குவது தேவனுக்கே தெரிவதில்லை என்பதுவும் இவர்கள் சுற்றி வளைத்து கூறும் செய்தி.
தாக்குவது யாராக இருந்தாலும் கைவிட்டவர் கர்த்தரல்லவா? சாத்தானை தாக்கும்படி விட்டு பாராதிருப்பவர் கர்த்தரல்லவா? தேவ மனிதர்கள் அனேகர் கர்த்தரே ஏன் எங்களை கைவிட்டீர் என அவரையே நோக்கி கண்ணீரோடு வேண்டினர். ஒரு தேவ மனிதன் சொன்னது
சங்கீதம் 39.9. நீரே இதைச் செய்தீர் என்று நான் வாயைத் திறவாமல் மவுனமாயிருந்தேன். 10. என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும்; உமதுகரத்தின் அடிகளால் நான் சோர்ந்துபோனேன். 11. அக்கிரமத்தினிமித்தம் நீர் மனுஷனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது, அவன் வடிவைப் பொட்டரிப்பைப்போல் அழியப்பண்ணுகிறீர்; நிச்சயமாக எந்த மனுஷனும் மாயையே.(சேலா.)
இது போன்று தேவனுடைய மறைவை அனுபவிக்கும் மக்களுக்கு என்னதான் தீர்வு? என்னதான் ஆறுதல்?
முதலில் இவர்கள் சில காரியங்களை அறிய வேண்டும். அவைகளை பற்றி அறிவது இவர்களுக்கு தெளிவை கொடுக்கும்.
1. இதுபோன்ற தேவனின் மறைக்கும் செயல் ஒரு சிலரின் வாழ்க்கையில் நடைபெறுகிறது. இது போன்ற நிலையை அனுபவிக்கும் / அனுபவித்த மக்கள் எல்லா காலகட்டங்களிலும் உள்ளனர். இவர்களை நாம் அறிய முடியா விட்டாலும் ஆங்காங்கே ஒரு சிலர் உள்ளனர். அதனால் இந்த அனுபவம் ஒரு புதிரான அனுபவமோ அல்லது யாருக்கும் வராத நம் ஒருவருக்கு மட்டுமே வந்த அனுபவமோ அல்ல. இதைப் பற்றி கிருத்துவ ஞானிகள் சிலரும் சொல்லியுள்ளனர். துன்பத்தை அனுபவிக்கும் நீங்கள் தனியாளாய் இல்லை. இது போன்று துன்பம் அனுபவிக்கும் பலர் உள்ளனர் / இருந்திருக்கின்றனர். .
2. ஏன் எனக்கு (மட்டும்) இந்த நிலைமை என்ற கேள்வி எப்போதும் மனத்தை வாட்டி வதைக்கும். ஆனால் தேவை இந்த கேள்விக்கு விடை அல்ல. நம் துன்பத்திலிருந்து விடுதலையே. பாவம் ஏதாவது செய்திருந்து அந்த பாவத்திற்க்கு மன்னிப்பும் கேட்டு விட்டோம் எனில் இந்த கேள்வி அர்த்தமற்றது. பதிலும் தேவையில்லாதது. (தேவ விதியினால் ஒருவருக்கு வரும் இந்த நிலைமை எதனால் என்று சொல்லும் அளவுக்கு மிகவும் சுலபமானதன்று. பல காரணங்களை உள்ளடக்கியதாக இருக்கலாம். அக்பர் என்ன செய்தார் என்று தெரியும் நமக்கு நம் தாத்தா என்ன செய்தார் என்பது தெரியாது. தாத்தாவின் தாத்தா பெயர் கூட தெரியாது.) அதனால் இருக்கிற துன்பம் போதாதென்று மனக் குழப்பத்தை உண்டாக்கும் ஏன் என்ற கேள்வி தேவையில்லாதது.
(தொடரும்)
-- Edited by SANDOSH on Monday 6th of September 2010 09:01:47 PM