இன்று எனக்கு ஜெப உதவிக்காக வந்த இரு முக்கிய mobileஅழைப்புகளைக் குறித்த விவரங்களை இங்கே பதிக்க விரும்புகிறேன்;இதன்மூலம் வாசக நண்பர்களின் ஜெப ஒத்துழைப்பை நாடுகிறேன்;
மதுரையிலிருந்து ஒரு சகோதரி பேசினார்;அவர் கணவருடன் மலேசியாவில் வசிக்கிறார்;அண்மையில் மலேசியாவில் வீட்டில் தனியாக இருந்த அவருடைய மாமியார் நகை மற்றும் பணத்துக்காக மர்ம நபர்களால் குத்தி கொல்லப்பட்டார்;
அது சம்பந்தமான காரியங்களுக்காக மதுரைக்கு வந்த இடத்தில் அவருடைய மாமனாருடன் சொத்து சம்பந்தமான பிணக்குகள் ஏற்பட்டு நியாயம் கேட்ட நம்முடைய சகோதரியை அவரது கணவரும் வெறுத்து அவரது தாய் வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டார்;மீண்டும் மலேசியாவுக்கு அழைத்து செல்லமாட்டேன்,என்றும் மிரட்டுகிறார்;
மாமனார் தனது மூத்தமகள் சார்பிலிருந்து அனைத்து சொத்துக்களும் அவளுக்கே சேரும் என்று கூறிக் கொண்டிருக்கிறார்;மகனோ தனக்கு சேரவேண்டிய நியாயமான பங்குக்காக போராடாததுடன் நியாயம் கேட்கும் மனைவியையும் எதிர்க்கிறார்;இவர்களுக்கு குழந்தை பாக்கியமில்லை;
மலேசியாவில் கடந்த பத்து வருடமாக அங்கீகாரமில்லாமல் பணியிலிருக்கும் அனேகம் மருத்துவர்களில் இவரும் ஒருவர்;கடந்த பத்துவருட திருமண வாழ்வில் எங்கேயும் வெளியே சென்றதில்லை;ஒரு கைதியைப் போல (மலேசியாவில்) அறையிலேயே அடைந்து கிடந்திருக்கிறார்;
இந்நிலையில் வங்கியிலுள்ள மாமியாரின் நகைகளை மருமகளின் அனுமதியின்றி திறக்க அனுமதிக்கக்கூடாது என்று கடிதம் கொடுக்க நம்முடைய சகோதரியின் தகப்பனார் ஆலோசனை கூறுகிறார்;
அனைத்தையும் கேட்டுக்கொண்டு நான் சொன்னது: நீங்கள் இதுபோன்று நியாயம் கேட்கும் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவேண்டாம்;இதனால் விரோதம் அதிகமாகும்;பாரம்பரிய நகைகளால் பெரிய ஆசீர்வாதம் வராது;உங்கள் பொறுமையினாலேயே அவை உங்களைத் தேடிவரும்;
மற்றபடி நீங்கள் ஆண்டவருடைய பிள்ளைக்குரிய குணாதிசயத்தின் மூலமே மற்றவரை ஆதாயப்படுத்த முடியும்; நிச்சயம் விடுதலை கிடைக்கும்;அதிசயம் நடக்கும்;தைரியமாக இருங்கள் ' என்று கூறினேன்;
இம்மாத வாக்குத்தத்தமான சங்கீதம் 46 ஐயும் இன்னும் சில வேத வசனங்களையும் ( எரேமியா.20:11,12 /-சங்கீதம்.31:18,19 /-ஏசாயா.45:2-4 /-சகரியா.4:6 /-2.கொரிந்தியர்.2:14 ) கூறி ஜெபித்தேன்;
ஜெபக் குறிப்புகள் சுருக்கமாக...
1. கொலைசெய்யப்பட்ட மாமியாரைக் கொலைசெய்தோர் பிடிபடவேண்டும்; இதனால் இவர்கள் மீது வரும் தூஷண வார்த்தைகளுக்கு முடிவு ஏற்படும்.
2. கணவனுடன் ஏற்பட்ட பிணக்குகள் சரியாகி சொத்துவிவகாரங்களில் நியாயம் கிடைக்கவேண்டும்.
3. கடந்த பத்து வருடங்களாக மலேசியாவில் அங்கீகாரமில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கும் அவரது கணவரைப் போன்ற மருத்துவர்களுக்கு தொழில் அங்கீகாரம் கிடைக்கவேண்டும்.
அடுத்த அழைப்பில்... ஒரு சகோதரர் தொடர்பு கொண்டார்;வயது 25 ஆகிறது;காலமான தனது தகப்பனாருடைய வாரிசு வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்; வேலை கிடைக்கும் நிலையில் அந்த வேலையை ஏற்க மறுத்து அதனைத் தனது மூத்த சகோதரிக்கு மாற்றக் கேட்டு அரசு அலுவலகத்துக்கு வந்திருக்கிறார்;
அங்கே அவருக்கு அலுவல உதவியிலிருந்த ஒரு சகோதரி அவரது பிரச்சினையைக் கேட்டு பரிதாபப்பட்டு என்னைத் தொடர்பு கொண்டு அவருக்காக ஜெபிக்கச் சொன்னார்;
அவரது பிரச்சினை: அவர் வேலையை மறுக்கக் காரணம்,கடந்த மூன்று வருடமாக அவருடைய இடது கை செயலிழந்து கொண்டே வருகிறது; இதற்குக் காரணமான மூளையில் ஏற்பட்ட குறைபாடு குணமாக 40% மட்டுமே வாய்ப்புண்டு என்று மருத்துவர் சொல்லிவிட்டனர்;தனக்கு ஏதாவது நேரிட்டால் வயதான தனது தாய்க்குத் துணையாக யாருமில்லையே என்று தனக்குக் கிடைக்கக் கூடிய அரசாங்க வேலையை திருமணமான தனது சகோதரிக்கு மாற்றி கேட்கிறார்;
உங்கள் ஆயுசு காலத்தை நிர்ணயிக்கும் உரிமை உங்களுக்குக் கிடையாது;ஆண்டவர் அற்புத சுகம் தருவார்;நம்பிக்கை இழக்கவேண்டாம் என்று கூறி இரவு என்னை மீண்டும் அழைத்தால் ஜெபிக்கிறேன் என்று கூறிமுடித்தேன்;அவர் இந்து சகோதரர் என்பதாலும் அந்த சகோதரியின் வற்புறுத்தலின் காரணமாகவே பேசுகிறார் என்று தோன்றியதாலும் அதிகம் பேசி சலிப்பூட்ட விரும்பவில்லை;நாம் ஜெபிப்போம்,ஆண்டவர் அற்புதம் செய்வார்;
இனி ஜெபக் குறிப்புகள் சுருக்கமாக... 1. அவருக்கு அரசாங்க வேலை கிடைக்க. 2. அவரது மூளையில் ஏற்பட்ட குறைபாடு குணமாக. 3. பெலவீனமாகிக் கொண்டே வரும் அவரது இடது பக்க உறுப்புகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)