#கருத்து: இதை செழிப்பு உபதேசக்காரர்கள் எப்படி பார்ப்பார்களோ???? இதை போல ஆண்டவர் உன்னை உயர்த்துவார் என சொல்வார்களோ?
#மறுத்து: அண்மையில் இதுகுறித்து (எனது பெர்சனல் ஐடியில்..) ஒரு போஸ்ட் போட்டிருந்தேன், #செழிப்பு உபதேசமல்ல, உபதேசத்தினால் செழிப்பு என்பதாக. உளப் பூர்வமாகச் சொல்லப் போனால் கிறிஸ்துவின் நற்செய்தியில் பாடுகள் மட்டுமே எனில் அது நற்செய்தியாய் இருக்காது. #இந்தியா போன்ற நாட்டின் வறுமை நிலைபோக்குவதற்கு கிறிஸ்துவின் #சுவிசேஷம் அவசியமே. அதில் மனந்திரும்புதலின் அவசியத்தை உணர்த்தாமல் வெறுமனே செல்வப் பெருக்கையும் அந்த செல்வத்தின் செருக்கையும் பற்றி பேசுவதுதான் முரண்பாடாக இருக்கிறது.
இந்நிலையில் உலகப் பிரகாரமான செல்வந்தர்களுக்கும் கிறிஸ்தவ செல்வந்தர்களுக்கும் வித்தியாசம் என்னவென்றால் உலகத்தார் தானதருமம் செய்தாலும் ஒரு காரணத்தோடுதான் செய்வார்கள், கிறிஸ்துவின் அன்பை ருசித்தவர்களோ சுபாவத்தினால் உதவும் மனப்பான்மை உடையோராய் இருப்பார்கள். அவ்வாறே சைவ மார்க்கத்தவரும் ஜைன மார்க்கத்தவரும் சமண சமயத்தவரும் கூட தரும காரியங்களில் விஞ்சியிருக்கிறார்கள். ஒப்பீட்டளவில் அவர்களே சிறப்பாய் செய்கிறார்கள் என்றும் சொல்லலாம்.
ஆக தான தருமம் செய்வது என்பது மதரீதியான உணர்வினால் அல்லாமல் அது ஒரு இயல்பான தெய்வீக சுபாவமாகவே உள்ளது. உழைப்பினால் உயர்வுண்டு என்பதை உலகத்தாரும் ஒப்புக்கொள்ளுகிறார்கள். ஆயினும் கிறிஸ்தவ செல்வந்தர்கள் வறுபடும் அளவுக்கு ஏனையோர் அவதூறு செய்யப்படுகிறதில்லை. அதற்குக் காரணம் இந்த உலகம் கிறிஸ்தவன் என்றாலே தரித்திரத்தில் குறைவில் இருக்கவேண்டும், அவன் தனக்கென்று எதுவுமே வைத்துக் கொள்ளக் கூடாது என்று கற்பிக்கப்பட்டிருக்கிறான். அது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதே கசப்பான உண்மையாகும்.
ஏனெனில் செல்வத்தை சேர்ப்பது பாவமல்ல, ஆனால் அந்த செல்வத்தினால் ஒருவருக்குள் ஏற்படும் மனோபாவம் என்ன என்பதே ஆய்வுக்குரியது. செல்வமானது ஒருவருடைய மனோபாவத்தையே மாற்றிவிடுமானால் அதில் இறைவனின் ஆசீர்வாதம் இல்லை என்பதே பொருளாகும். மனிதன் தன் முயற்சியினால் ஈட்டிய செல்வத்திற்குரிய புகழ்ச்சியை இறைவனுக்கு செலுத்த தவறினால் அதில் இறைவனின் பாதுகாப்பு இருக்காது. மாறாக வேதனை மட்டுமே இருக்குமென்று பைபிள் சொல்லுகிறது.
மற்றபடி அம்பானி அதானி போன்றவர்கள் எவ்வளவு செல்வத்தைக் குவித்தாலும் அதினால் அவர்கள் தன் ஜீவனை ஆதாயப்படுத்தமுடியாது என்றே இயேசுவானவர் சொல்லுகிறார். தன் ஜீவனை இழந்தநிலையில் ஒருவர் வைத்திருக்கும் செல்வமானது மரணத்துக்கு முன்பாக ஒருவர் விடும் சுவாசம் போலவே இருக்கும் என்றும் பைபிள் எச்சரிக்கிறது. நீதிமொழிகளின் புஸ்தகமோ ஞானத்தையே செல்வம் என்று உயர்த்தி பேசுகிறது.
நீதிமொழிகள் 8:18 ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு.