#திரித்துவம் என்பது ஒரு மறைவான மர்மமான இரகசியமாகும். அதனுள் செல்லாதே, அந்த டாபிக்கே நமக்கு வேண்டாம் என்று பெரும்பாலான #பெரியவர்கள் சொல்லுகிறார்கள். உள்ளது உள்ளபடியே கேட்டு கலந்துபழகி நம் கடமைகளைச் செய்வோம், மற்றதை #கடவுள் பார்த்துக் கொள்வார், நமக்குத் தெரியாதவற்றினுள் நுழைந்து வாதங்கள் செய்வதால் பயனேதும் இல்லை என்கிறார்கள்.
யாரைத் தான் நம்புவது, யார் பின்னே செல்லுவது ? யார் சொல்வது சரியானது என்பதில் தான் சாமானியர் குழம்பிப் போகிறார். வாழ்க்கையின் அன்றாடத் தேவைகள் போராட்டங்களே அவருக்கு தாளாத பாரமாயிருக்க அவர் இதுபோன்ற சர்ச்சைகளுக்குள் செல்லாமல் மென்மையான மிதவாதப் போக்கிலேயே தொடர நினைக்கிறார்.
மேலும் தன்னை எப்போதும் அறியாதவனாகவும் குறைவுள்ளவனாகவும் இன்னும் சொல்லப்போனால் பாவியாகவும் வைத்துக்கொள்வதே சிலருக்கு சௌகரியமாய் இருக்கிறது. அப்படிப்பட்டவர்களை யாரும் நெருங்கமாட்டார்கள், புத்திசொல்லமாட்டார்கள், இஷ்டம்போல் வாழலாம் என்பதே.
ஆனால் நற்செய்தி பகிரப்பட்ட நோக்கம் அதுவல்லவே, ஒவ்வொரு மனுஷனையும் கிறிஸ்துவுக்குள் தேறினவனாக நிறுத்துவதே பிதாவின் சித்தமாயிருக்கிறது. ஆம், கிறிஸ்து எனும் பூரணமானவருக்குள் நாம் பொருந்திவிட்டால் பிதாவின் சித்தம் அங்கே நிறைவேறிவிடும். அதுவே பரலோக ராஜ்யத்தினுள் செல்லும் தகுதியாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது.
இப்படியிருக்க கிறிஸ்துவே பிதாவின் குமாரனாக அவருடைய தற்சொரூபமாகக் கொடுக்கப்பட்டிருக்க அவரையே பிதா என்று சொன்னால் அது எத்தனை பெரிய குழப்பமான உபதேசம் என்பதை ஒருவர் சிந்திக்கவேண்டும். எனவே நாம் கேட்டறியவேண்டிய செய்தி இயேசுவின் ஊழியத்திலிருந்தே துவங்குகிறது.
அவரையே பின்தொடர்ந்தால் நிச்சயம் நாம் தடுமாறுவதில்லை. அவரேதான் உலகின் முதல் திரித்துவ உபதேசியார் என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. கிறிஸ்தவ விசுவாசமானது திரித்துவ சத்தியத்திலிருந்தே துவங்குகிறது. அதன் ஆதார வசனம் இதுதான்,
யோவான் 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.