பால்ய சிநேகிதனை சந்தித்ததுபோன்ற மகிழ்ச்சி என் மனதில். 80-களிலேயே புரட்சிகரமான எழுத்துகளால் அறியப்பட்டவர் திருமிகு இறையடிமை WS வேதா அவர்கள். தற்செயலாக குறிப்பிட்ட வாட்சாப் குழுவின்மூலம் அண்ணன் அவர்களது அலைபேசி எண் கிடைத்தது. அழைத்து மனம்விட்டு பேசினேன். தமிழ்க் கிறிஸ்தவம் மற்றும் #பெந்தெகொஸ்தே இயக்கம் கடந்துவந்த பாதைகள் அக்காலத்தில் ஊழியத்துக்கு ஒப்புக்கொடுத்தவர்கள் சந்தித்த பல்வேறு இன்னல்கள் உபதேசக் கோளாறுகள் தற்காலத்தில் வாரிசு ஊழியர்களின் அலங்கோலங்கள் என்று பலவற்றைப் பேசினோம்.
சில வருடங்கட்கு முன்பாக நான் ஊழியஞ் செய்யும் பகுதியில் குறிப்பிட்ட சபையின் கன்வென்ஷன் கூட்டத்திற்கு அண்ணன் வந்துசென்றார். பேனரில் அவருடைய பெயரைப் பார்த்து சந்தோஷப்பட்டாலும் அவர் தற்போது மாறுபாடான உபதேசத்திற்கு சென்றுவிட்டாரே என்ற மன வருத்தத்திலிருந்தேன். ஆனாலும் கர்த்தர் நல்லவர், இன்று பேசியபோதுதான் தெரிந்தது, அது அவருடைய நீண்டகால நண்பரின் அழைப்பின்பேரில் வந்திருந்த நிகழ்ச்சி எனவும் தான் தற்போது முற்றிலும் பூரண சத்தியத்தில்தான் இருப்பதாகவும் சொன்னபோது உள்ளபடியே நிம்மதி பெருமூச்சுவிட்டேன்.
ஒருமுறை தலைமுறை கடந்துபோனாலும் இருவேறு தலைமுறைகளுக்கு இடைபட்ட தலைமுறையினால் தேக்கிவைக்கப்பட்டு கடத்தப்படும் செய்தியானது எதிர்வரும் சந்ததியார்க்கு எத்தகைய ஊக்கமாகவும் உற்சாகமாகவும் இருக்கும் என்பதனை யூத இனத்தாரின் வலிமையிலிருந்து அறிகிறோம். அந்த வகையில் சிறுவனான நான் நினைவில் வைத்திருந்து சொன்ன பல சேதிகள் அண்ணனுக்கே புதிய தகவலாயிருந்தது, வியந்தேபோனார். அவரோடு உரையாடிய அனுபவமானது தகப்பனற்ற வளர்ந்த என்னைப் போன்றோர்க்கு வீட்டின் தலைமகனால் அடையும் ஆறுதல் போன்றது என்றால் அது மிகையல்ல. இந்த விசுவாசத்தை முன்னெடுத்துச் செல்ல ஏதுவாயிருக்கும் மதிப்புமிக்க சாட்சிகளே இவர்கள், வாழ்த்துகள் அண்ணன், சுகமாய் வாழ்ந்திருங்களே.
**அன்னாரின் அருமையான சிந்தனையில் வடித்தெடுக்கப்பட்ட மாதாந்திரப் பத்திரிகையும் அதன் வடிவமைப்பும் எழுத்துருவும் என்னை மிகவும் கவர்ந்தது. ஆர்வமுள்ளோர்க்கு அவருடைய வாட்சாப் எண்ணை அனுப்ப ஆயத்தமாயிருக்கிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)