இப்படி அன்றாடம் தான் தோன்றித்தனமாய் சத்தியத்தை சிதைத்து திரித்து புரட்டி பகிருவோர் சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் பெருகிவிட்டார்கள். அவர்களை அடக்குவதோ அல்லது அவர்களோடு வழக்காடுவதோ நம்மால் கூடாது. ஆனால் ஒன்று, எதுவெல்லாம் தவறு எதனால் தவறு என்பதைச் சொல்லி வைக்கிறோம். கேட்போர் கேட்கட்டும், கேளாதவர்கள் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள் என்று வேதம் சொல்லுகிறது. அவர்களை கர்த்தரே பொய்யை விசுவாசிக்கும் வஞ்சகத்திற்கு ஒப்புக்கொடுப்பாரென்று சொல்லியிருக்கிறது.
முதலாவது அவருடைய ஆங்கில வாக்கியத்திலேயே பிழை உள்ளது. அடுத்தது கர்த்தரைப் பற்றியும் அவருடைய நாமத்தைப் பற்றியும் தவறாய் கையாளப்பட்டுள்ளது.The name of Jesus is not intended for you to live a life of tolerance. Fight back. இப்படி இருக்க வேண்டிய வாக்கியம் அது. இந்த கூற்று முழுமையானதா ? விசுவாச வாழ்க்கையானது நெடும்பயணமாகும். அதில் ஒருவர் எதிர்நோக்கும் சவால்களும் துன்பங்களும் வாழ்க்கையின் ஒரு பாகமாகும். அது அனைவருக்கும் பொதுவானதே. அதை மறுத்து நீ சகித்துக்கொண்டிருக்க அவசியமில்லை, இயேசு என்னும் நாமம் அதற்காகக் கொடுக்கப்படவில்லை, திருப்பி அடி எனும் கூற்றானது மேலோட்டமாகப் பார்க்கையில் துன்பத்திலிருக்கும் ஒருவரை உற்சாகப்படுத்துவதாயிருக்கலாம். ஆனால் அது யதார்த்த நிலைக்கு எதிராய் சென்றுவிட்டால் அவிசுவாசமே தலைதூக்கும். மேலும் நம் ஆண்டவரும் உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு ஆனாலும் திடன் கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன் என்றுதான் சொல்லியிருக்கிறார். நாம் சந்திக்கும் துன்பங்களில் நமக்கு உதவிசெய்யவே இயேசுவின் நாமம் கொடுக்கப்பட்டுள்ளது. அவரை நோக்கிக் கூப்பிட்டால் நமக்கு உதவிசெய்கிறார் என்பது தான் முழுமையான கூற்று ஆகும்.