மேற்காணும் காணொளியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு பறையர் சங்கம் என்பதாக போகிற போக்கில் தாக்குதல் தொடுத்திருக்கும் திரு அகத்தியன் இப்படி சமுதாயத்தில் ஒவ்வொரு சமூகத்தையும் ஏதோவொரு வகையில் பழித்து அவதூறு செய்து தன்னை பெரிய சீர்திருத்தவாதியைப் போல் காண்பித்து வருகிறார். அவர் ஒரு பொதுவான நபராக சமூக அரசியல் தளத்திலிருந்து இவ்வாறு செய்திட்டால் அவர் பலத்த எதிர்ப்புகளையும் தாக்குதல்களையும் சந்திக்க நேரிடும் என்பதால் மிக தந்திரமாக லாவகமாக கிறிஸ்தவ வட்டாரத்தில் மட்டும் இந்த வெறுப்புப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
பொதுவாகவே கிறிஸ்தவ மார்க்கத்தை விமர்சித்தால் தற்போது சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பும் பார்வையாளர் எண்ணிக்கையும் கனமான வருமானமும் கிடைப்பதால் பரபரப்பான டாபிக் ஏதும் இல்லாத காலங்களில் இந்த மனிதரை அழைத்து யூட்யூப் சானல்கள் பயன்படுத்தி வருகின்றன. இவரும் வாங்கும் காசுக்கு ஏற்ப சுடசுட செய்திகளைக் கிண்டி பரிமாறி தனது முதலாளிகளுக்கு சேவகம் செய்து வருகிறார். இதனிடையே இடஒதுக்கீடு எனும் சிக்கலான சமாச்சாரத்தில் பட்டியலினத்தவரைக் குறிவைத்து அவர் தொடுத்திருக்கும் தாக்குதல் உள்ளபடியே சென்று சேரவேண்டிய தளத்திற்கு செல்லுமானால் பெரும்பதட்டத்தையே ஏற்படுத்தும்.
ஏனெனில் தேசத்து அரசியலில் இடஒதுக்கீடு என்பது எப்போதும் வலுவான பேசுபொருளாய் இருந்துவருகிறது. அதில் பட்டியலினத்தவர்களான தாழ்த்தப்பட்டோர் தங்களைத் தாழ்த்தப்பட்டவர்கள் என ஏன் ஒப்புக்கொண்டு சலுகை கேட்கவேண்டும் என்கிறார். அதை முன்னிட்டு இவருக்கென்று ஒரு புதிய கொள்கையை வடிவமைத்து அதில் சாதியை மறுப்போருக்கான / சாதியற்றவர்களுக்கான இடஒதுக்கீடு எனும் புதிய பூதத்தைக் கிளப்பியிருக்கிறார். ஏற்கனவே பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கான இடஒதுக்கீடு சர்ச்சை ஓடிக் கொண்டிருப்பது தெரிந்ததே.
நிச்சயமாகவே நம்முடைய முன்னோர் இப்படிப்பட்ட நுட்பமான சமூகப் பிரச்சினைகளிலிருந்து விலகியிருந்து அவற்றுக்கான தீர்வுகளை மட்டுமே மனதிற் கொண்டு முன்னேறினார்கள், அயராது பணிசெய்தனர், ஏழை எளியோரின் வாழ்வை உயர்த்துவதிலேயே அவர்களுடைய முழுநோக்கமும் இருந்தது. ஆனால் இந்த சாதியப் பிரிவினைகளைப் பேசி பிழைப்போர் பாகுபாடின்றி பழகும் இரு சகோதரர் இடையே வாதங்களைக் கிளப்பி சபைகளை உடைத்து வருகின்றனர். தலைவர்களை சாதியரீதியாய் மனமடிவாக்கி பேசுகின்றனர். சாதிவிட்டு சாதி பெண் எடுப்பதே சாதியை ஒழிப்பதற்கு ஏற்ற தீர்வாகப் பேசுகிறார்கள். அதன்மூலமும் சமூகப் பதட்டங்களை உருவாக்குகிறார்கள். ஏனென்றால் ஒருவர் கிறிஸ்தவ மார்க்கத்துக்குள் வந்தாலே சொந்த பந்தங்கள் எதை முன்னிட்டு அந்த புதியவர்களை மிரட்டுவார்களோ அதையே தான் அகத்தியன் போன்றவர்களும் சவாலாக முன்வைக்கிறார்கள். இதனால் மார்க்கத்தைப் பற்றிய நம்பிக்கை தளர்ந்துபோய் அவரவர் மதத்தில் இருந்தே இயேசுவை நினைப்போம் என்று மக்கள் விக்கிரகக் கட்டிலிருந்து வெளியேறாமல் முடங்கிப் போகிறார்கள்.
**இதையெல்லாம் நாம் நிச்சயம் பேசி உரையாடி ஒத்த கருத்தை எட்டுவதற்காகவே இந்த திரியைத் துவங்கியிருக்கிறோம்.**
[video=]
-- Edited by Yauwana Janam on Tuesday 25th of June 2024 12:32:24 AM