கத்தோலிக்க பின்னணியில் உள்ள குறிப்பிட்ட குடும்பத்தின் கணவனும் மனைவியும் இன்று காலையில் என்னை அழைத்து ஜெபித்துக் கொண்டார்கள். #கொரோனா’வைக் குறித்த அச்சத்திலிருந்து விடுபட தேவ ஊழியர்களின் ஆறுதலான பேச்சும் பிரார்த்தனையும் ஆண்டவருடைய பிள்ளைகளை அதிகமாய் உற்சாகப்படுத்துவது இயல்பேயாகும்.
கடந்த சில வாரங்களில் இப்படி அநேகர் அழைத்து பேசி ஆறுதல் அடைகிறார்கள். மாறாக டிவிக்கு முன்பாகவே அமர்ந்திருந்து கொஞ்சம் சினிமா பார்ப்பது கொஞ்சம் நியூஸ் பார்ப்பது சீரியல் பார்ப்பது கார்ட்டூன் பார்ப்பது போகிறபோக்கில் #அண்ணன் நடத்தும் #ஜெபிக்கலாம்_வாங்க உள்ளிட்ட ஆன்மீக நிகழ்ச்சிகளையும்பார்ப்பது என்பது அலைபாயும் மனமே யாகும்.
இப்படிப்பட்ட ஆன்லைன் அபலைகளை மிரட்டியோ உருட்டியோ உருக்கியோ கதைபேசி அவர்களிடமிருக்கும் கொஞ்ச நஞ்ச பணத்தையும் கவர்ந்துகொள்வது மீடியா ஊழியர்களின் கேவலமான பிழைப்பாக இருக்கிறது. ஊடகத்தின் மூலம் சொல்லும் எதுவானாலும் அது கண்ணியமான தோற்றமுடையவர் சொல்லுவதாய் இருந்தால் பொதுமக்கள் கண்களை மூடிக்கொண்டு நம்புகிறார்கள்.
ஆகவே ஊடகத்தில் பேசுவோர்க்கு கூடுதல் பொறுப்பும் காரியத்தில் தெளிவும் அவசியமாகும். அந்த வகையில் பிரபல ஊழியர்கள் ஊடகத்தில் உளறிவைக்கும் பல விஷயங்களைப் பற்றிய ஐயங்களை சபை சார்பற்ற நிலையில் என்னைப் போன்ற எளிதில் அணுகக் கூடியவர்களிடம் பொதுமக்கள் கேட்டு தெளிவைப் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.
உதாரணத்திற்கு இன்று காலையில் என்னை அழைத்த தம்பதியர் எழுப்பிய கேள்வியானது 21 நாட்கள் உபவாசித்து ஜெபிப்பதைப் பற்றியதாய் இருந்தது. நான் இடதுவலம் சாராமல் நடுநிலையான ஒரு பதிலை சொல்ல விரும்பினேன். அதையே இங்கு எழுதுகிறேன்.
உபவாசம் என்பது கடவுளால் மனுஷனுக்கு நியமிக்கப்பட்ட கட்டளையோ கட்டாயமோ அல்ல. அதன்மூலமே நாம் கடவுளை சம்மதிக்கப் பண்ணமுடியுமென்பதும் தவறான அபிப்ராயமாகும். முக்கியமாக 21 நாட்கள் உபவாசம் என்ற விஷயமானது தானியேல் தொடர்பில் மட்டுமே அறியப்பட்டிருக்கிறது.
தானியேலின் உபவாசம் எப்படிப்பட்ட சூழலில் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்று கவனிப்போமானால் அந்த 21 நாட்களும் தானியேல் கொலை பட்டினியாய் இருக்கவில்லை என்பது தெளிவு. அந்நாட்களில் தானியேல் ருசிகரமானதை புசிக்காமலும் நறுமணத் தைலம் பூசிக் கொள்ளாமலும் இருந்தான் என்று சொல்லியிருக்கிறது.
தற்காலத்தில் பேசப்படும் 21 நாட்கள் உபவாசத்தின் நியமங்கள் என்னென்னெ, அதன் நோக்கங்களும் பலாபலன்கள் என்னவோ நாம் அறியோம். ஆனால் ஒன்று அதுபோன்ற ப்ளான்கள் வெறும் ஊடகத் தந்திரமாகவும் தன்னை யோக்கியனாகக் காட்டிக் கொள்ளும் முயற்சியும் மட்டுமே என்பதை நாம் அறிவோம்.
வேதத்தைப் பொறுத்தவரையில் உபவாசமோ ஜெபமோ எதுவானாலாலும் அது தனிப்பட்ட ஒருவரின் அந்தரங்க முயற்சியாகவும் சுயநன்மைக்காகவும் மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. மாறாக எல்லா உயிருக்கும் உணவளித்து காப்பாற்றும் எல்லாம்வல்ல கடவுள் தம் உயிர்கள் பட்டினியாய் கிடந்து மன்றாடி கேட்டால்தான் வேண்டுதலை நிறைவேற்றுவேன் என்று சொல்லவில்லை.
அப்படியானால் உபவாசம் தேவையே இல்லையா என்று சிலர் கேட்கலாம். உபவாசமும் ஜெபமும் இரு கண்களைப் போன்றதே என்பதில் ஐயமேதும் இல்லை. ஆனால் அதை மீடியாவுக்காக விளம்பரத்துக்காக செய்வது வேதத்தின் அடிப்படைகளுக்கு விரோதமானதாகும். அதே நேரத்தில் ஓரிரு நாட்கள் உபவாசித்து ஜெபிக்க விசுவாசிகளை ஊக்கப்படுத்தலாம்.
முக்கியமாக உபவாசம் என்பது அவரவர் உடலை ஒடுக்கவும் புலன்களை அடக்கவும் இறையுணர்வை பெருக்கவும் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது என்பதை நினைவில் கொண்டு ஒருவர் ஆறு மணி நேரம் புசியாமலும் குடியாமலும் இருந்தால் அதுவும் கூட ஏற்கத்தக்கதேயாகும்.
சரிசரி, பகல் முழுவதும் உபவாசித்துவிட்டு இரவில் மட்டும் சாப்பிடலாமா என்று அந்த சகோதரன் கேட்டார். நான் சொன்னேன், பகலில் சாப்பிடுங்கள், உங்கள் கடமைகளை செய்யுங்கள், இரவில் ஏதேனும் சூடாக ஒரு பானம் பருகிவிட்டு படுத்துக்கொள்ளுங்கள், இதனால் இரவு முதல் விடியும்வரை 12 மணி நேரம் சாப்பிடாதிருந்த பலன் உங்களுக்குக் கிடைக்கும் என்றேன்.
**நான் சொன்ன ஆலோசனையில் ஏதும் தவறு அல்லது ஐயம் இருந்தால் நண்பர்கள் என்னை அழைத்து கேட்கவும், நன்றி. (அலைபேசி / வாட்சாப் எண்: 9710305363)