என்னோடு கூட பணியில் இருக்கும் ஒரு மூத்த, வேற்று மதத்தை சார்ந்த பேராசிரியர் என்னிடம் இவ்விதமாக கேட்டார்- வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை கேட்பது மட்டும் இல்லாமல், மற்ற அநேக பெயர்களில் கிறிஸ்தவர்கள் காணிக்கை தர வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறீர்களே இது நியாயமா என்று. கட்டாயப்படுத்ததுதல் சரியல்ல என்றும், அதே நேரம் தேவனுக்கு நன்றி உணர்வோடு தருவது சரி என்றும் சொல்லி கடந்து போனேன்.
1960 களில் நடந்த சம்பவங்களை என் அப்பா என்னிடம் சொன்னது எனக்கு ஞாபகம் வந்தது. என் தாத்தா ஒரு வைராக்கியமான இந்து கோவில் தர்மகர்த்தா. என் அப்பா கிறிஸ்துவை அறிந்த ஆரம்ப நாட்களில், காணிக்கை போட 25 பைசா கூட இல்லாததால், யார் என்ன நினைப்பார்களோ என வெட்கப்பட்டு, ஒரு ஞாயிற்று கிழமை காலையில் சபைக்கு செல்லாமல் ஒரு பாலத்தின் சுவரில் அமர்ந்து மௌனமாய் ஜெபித்து வீட்டுக்கு வந்தார்களாம். அன்று மாலை சபையின் இரு மூத்த சகோதரர்கள் அப்பா ஏன் வரவில்லை என விசாரிக்க வந்தார்களாம். என் பாட்டி வந்த சகோதரர்களிடம், தன் மகன் காலை சபைக்கு போகிறேன் என்று சொல்லி தானே சென்று வந்தான் என் கூறினார்களாம். விசாரித்த போது என் அப்பா, மிகவும் கவலையோடு, தன்னிடம் காணிக்கை செலுத்த காசு இல்லை என்பதால் வர கஷ்டமாக இருந்தது என்று சொன்னார்களாம். "ஆண்டவர் உங்களை தான் கேட்கிறார். உங்கள் இருதயத்தில் வாசம் செய்யவே விரும்புகிறார். பணம் ஒரு பொருட்டே அல்ல" என்று சொல்லி கொஞ்சம் பணத்தை கொடுத்து விட்டு, எந்த சூழ்நிலையிலும் காணிக்கை காரணமாக சபைக்கு வராமல் இருக்க கூடாது என்று அன்பு கட்டளை இட்டு சென்றார்களாம். அப்படிப்பட்ட அன்பு மிக்க உண்மை கிறிஸ்தவர்கள் கொடுத்த ஊக்கத்தாலேயும், சரியான போதனைகளாலேயும் என் அப்பா கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்பட்டு, ஒரு சில ஆத்துமாக்களை கர்த்தருக்கு ஆதாயப்படுத்த பயன்பட்டார்.
ஆனால் இன்று பணம் இல்லாததால் சபைக்கு வர முடியாத ஒரு ஏழை தம்பி/தங்கச்சி/ விதவையான தாயை குறித்த கரிசனை நமக்கு உண்டா?
பணம், சுவிசேஷம் என்னும் படகை செலுத்த உதவும் துடுப்பு தான். மறுப்பதற்கில்லை. ஆனால் கிறிஸ்துவின் பெயரால் ஏழை எளிய மக்களை கட்டாயப்படுத்தி, கர்த்தர் அப்போது தான் ஆசீர்வதிப்பார் என்று மறைமுகமாக மிரட்டி வசூல் செய்யும் போதகர்களும் சபைகளும் எத்தனை வேதனைக்குரியது. தேவையை கர்த்தரிடத்தில் மாத்திரமே தெரிவித்து, மனிதர்களின் மனதை அசைத்து மனமுவந்து கொடுக்க வைக்கும் பணியை கர்த்தர் கரத்தில் கொடுத்து, அவருடைய வேளைக்காக காத்திருக்கும் ஜார்ஜ் முல்லர் போன்ற ஆவிக்குரிய மனிதர்கள் இன்று எங்கே??
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)