'லெட்ஸ் டாக் அபோவுட் ரேப்' என்ற தலைப்பில் பிரபல ஆங்கிலப் பத்திரிகை பாலியல் வன்கொடுமைகள் பற்றி விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறது. நாட்டின் பிரபலங்களிடம் இருந்து அவர்கள் சந்தித்த பாலியல் பிரச்னைகளை கடிதங்கள் வாயிலாக வெளியிட்டு வருகிறது. அதில், குத்துச்சண்டை வீராங்கணையும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான மேரிகோம் தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகள் பற்றி அவரது மகன்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மேரிகோமின் மூத்த மகனுக்கு இப்போது வயது ஒன்பது வயது.
'' இப்போது உனக்கு 9 வயதாகிறது. பெண்களுக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும் என்பதை கற்றுத் தரும் வயதாக இதனை நான் உணர்கிறேன். உங்கள் தாயாகிய நானும் கூட பாலியல் இன்னலுக்கு ஆளாகியிருக்கிறேன். மணிப்பூரில் ஒரு முறை பயிற்சி முடித்து விட்டு இரவு 8.30 மணியளவில் சைக்கிள் ரிக்ஷாவில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் சட்டென்று என் மீது பாய்ந்தார். எனது மார்புகளை கசக்கி விட்டு ஓடி விட்டார். நான் ரிக்ஷாவில் இருந்து இறங்கி அவனை விரட்டிக் கொண்டே ஓடினேன். ஒரு கையில் செருப்பையும் எடுத்துக் கொண்டேன். ஆனாலும் அவன் தப்பி விட்டான். எனக்கு அவனை பிடிக்க முடியவில்லையே என கோபம் கோபமாக வந்தது. அப்போதுதான் நான் கராத்தே படித்திருந்தேன். கிடைத்திருந்தால் பின்னி எடுத்திருப்பேன்.
இந்த சம்பவம் நடந்த போது எனக்கு வயது 17. இப்போது 33 வயதில் இருக்கிறேன். இப்போது நான் ஒலிம்பிக் மெடலிஸ்ட். இந்த நாட்டுக்கு புகழ் சேர்த்திருக்கிறேன். ஆனால் எனக்கு மனதில் ஒரு குறை இருக்கிறது. இந்த நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு பெண்ணும் என்னைப் போலவே மதிக்கப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. மகனே! உன்னை போல எங்களுக்கும் இரு கண்கள் , ஒரு மூக்கு தான். உடலின் சில பகுதிகள்தான் உன்னையும் என்னையும் வேறுபடுத்துகின்றன. உன்னைப் போல்தான் நானும் மூளையால் சிந்திக்கிறேன். மனதால் உணர்கிறேன். எனது மார்புகைளைத் தொடவோ அல்லது பிசைவதற்காகவே மட்டும் நாங்கள் படைக்கப்படவில்லை. எனக்கு பல இடங்களில் இது போன்ற அனுபவங்கள் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் ஒரு முறை, ஹரியானாவில் ஒரு முறை மொத்தம் மூன்று முறை இது போன்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுவதாக உணர்ந்திருக்கிறேன். நான் மட்டுமல்ல எனது தோழிகளுக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த மாதிரி உடுத்த வேண்டும். குறித்த நேரத்துக்குள் வீட்டுக்குள் வந்து விட வேண்டும் என்பன போன்ற விஷயங்கள் எல்லாம் இந்த உலகம் பெண்களுக்கு அளித்த பரிசுகள். ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக அவளைத் தொடுவதில் அந்த மனிதர்களுக்கு என்ன சுகம் கிடைத்துவிடப் போகிறது என்று எனக்குத் தெரியவில்லை. என் மகனே நீ வளர்ந்த பிறகு, உன் கண் எதிரே பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை நடந்தால் அதனைத் தட்டிக் கேட்பாய் என நம்புகிறேன். அடுத்தவர்கள் மீது அக்கறையில்லாத சமூகத்தில் வாழ்வதுதான் நமது மிகப் பெரிய பலவீனம் என்பதை நீ உணர்ந்து கொள். அண்மையில் டெல்லியில் ஒரு பெண் பலமுறை, கத்தியால் குத்தப்பட்டு இறந்து போனாள். அவளுக்காக யாரும் துணைக்கு செல்லவில்லை. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் உன் கண் முன் நடந்தால் தடுக்க முயற்சிக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை செய்பவர்கள், பாலியன் இன்னல்களுக்குள்ளாக்குபவர்களை நீ வளர்ந்த சமூகம் கடுமையானத் தண்டனை அளிக்கும் என்றே நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
நமது வீட்டில் இருந்தே சமத்துவம் பற்றி நீ புரிந்துகொண்டிருப்பாய். உனது தந்தை எனக்கு அளிக்கும் மரியாதையை அறிந்திருப்பாய். உனது நண்பர்களின் தந்தை போல உனது அப்பா காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவலகம் சென்று வேலை பார்க்கவில்லை. நாங்கள் யாராவது ஒருத்தர் உனக்காக வீட்டில் இருந்திருக்கிறோம். குத்துச்சண்டை பயிற்சிக்காக, வெளிநாட்டு பயணங்களுக்காக இப்போது எம்.பியாக நான் பல நாட்கள் வீட்டை விட்டு வெளியில் இருந்திருக்கிறேன். எனக்காக ,உனக்காக உனது தந்தை வீட்டிலேயே இருந்திருக்கிறார். விரைவில் அவருக்கு 'ஹவுஸ் ஹ்ஸ்பென்ட்' என்ற பெயரும் ஏற்படலாம். இதனால் அவரது மரியாதை குறைந்து விட்டதாக எண்ணி விட வேண்டாம். உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?. எனது சக்தியே அவர்தான். எனது வாழ்க்கையை பகிர்ந்த கொண்டவர். நான் முன்வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஆதாரமே அவர்தான்.
விரைவில் உன் தாயை பற்றி இன்னொரு வார்த்தை கேட்க நேரிடலாம். 'சின்க்கி' என்று என்னைப் பார்த்து கூறலாம். இதுதான் தவறு. இனவெறியுடன் புறப்படும் ஒரு வார்த்தை. இது போன்ற விஷயங்களை நீ அனுமதிக்கக் கூடாது. எதற்கெடுத்தாலும் கிளர்ந்தெழும் ஒரு மாநிலத்தில் நீ பிறந்திருக்கிறாய். வன்முறைச் சம்பவங்களில் இருந்து நான் பாதுகாத்திருக்கிறேன். உனது பயத்தை போக்கியிருக்கிறேன். இதுவெல்லாம் ஒரு தாயாக உனக்கு நான் செய்திருக்கிறேன். நீ வளர்ந்த பிறகு பெண்களுக்கு சமஉரிமை அளிப்பாய் என நம்புகிறேன். நமது மாநிலத்தைச் சேர்ந்த பல பெண்கள் அவர்கள் உடுத்தும் ஆடைகளுக்ககாகவும் அவர்களது தோற்றத்திற்காகவும் 'சிங்கிஸ்' என கிண்டல் செய்யப்படுகிறார்கள். அப்படி கிண்டல் செய்யப்படுவது கண்டிப்புக்குரியது.
எனது நாட்டுக்கு நான் புகழ் சேர்த்திருக்கிறேன். ஆனால், தோனி, விராட் கோலி போன்றவர்களுக்கு கிடைத்த மரியாதை எனக்கு கிடைக்கவில்லை. இப்போது ஒரு எம்.பியாகியிருக்கிறேன். பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் வன்கொடுமைகள் பற்றி பேச எனக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. நிச்சயம் அதனை செய்வேன். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பற்றி இந்த நாட்டின் மகன்களுக்கு ஒரு தாயாக நான் சொல்லித் தரவில்லை என்றால், நான் எனது கடமையில் இருந்து தவறியவள் ஆவேன். பெண்கள் தொடாதே என்றால் அவர்களைத் தொடாதீர்கள். அவர்கள் 'நோ' சொன்னால் கொன்று விடாதீர்கள். 'ரேப்' என்பது 'செக்ஸ்' அல்ல. மனித சிந்தனையின் கொடூரம். 'பாய்ஸ் எப்போதும் பாய்ஸ்தான்' என்ற வார்த்தையை அடிக்கடி கேட்டிருப்போம். அந்த 'பாய்ஸ்' பெண்களுக்கு பாதுகாப்பான உலகத்தை படைப்பார்கள் என நம்புகிறேன்.''
- எம்.குமரேசன்
நன்றி: விகடன்
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)