திண்டுக்கல் இளைஞர் திருநங்கையைத் திருமணம் செய்துகொள்ள அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை வைத்தார்.
தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த தாமரை (26). ஒரு திருநங்கை. இவர் 18 வயதில் வீட்டைவிட்டு வெளியேறி திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வருகிறார். திண்டுக்கல் வீரக்கல் வண்ணம்பட்டியைச் சேர்ந்தவர் முத்து (28). இவர், திண்டுக்கல் தனியார் பெட்ரோல் பங்க்கில் பணியாற்றி வருகிறார். முத்து, தாமரை இருவரும் திங்கள்கிழமை திண்டுக்கல் ஆட்சியர் ந.வெங்கடாசலத்தை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம். எங்கள் திருமணத்துக்கு பெற்றோர், உறவினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எங்களைப் பிரிக்கவும் முயற்சி செய்கின்றனர். எங்கள் திருமணத்தை சமூகம்தான் அங்கீகரிக்கவில்லை; அரசாவது எங்கள் திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். திருமண உதவித்தொகை, சேர்ந்து வாழ வீடு வழங்கி பாதுகாப்பும் கொடுக்க வேண்டும் என முறையிட்டனர்.
இருவரையும் விசாரிக்க சமூக நலத் துறை அதிகாரி நாகபிரபா விடம் அனுப்பி மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டார். இயற்கைக்கு முரணான இவர்களின் திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்க சட்டத்தில் இடமுள்ளதா, அவர்களுக்கு சட்டப் படி என்ன உதவி, பாதுகாப்பு வழங்கலாம் என சமூகநலத் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.