ஒரு சிறப்பான ஸ்தோத்திர கூட்டம் ஒன்றிற்கு அழைக்கப்பட்டிருந்தேன். அழைத்தவர் நெருங்கிய நண்பரும், உண்மையான தேவ ஊழியருமாக இருந்தபடியால் செல்வது என்று தீர்மானித்திருந்தேன். கூட்டம் மாலை 6 மணி அளவில் நடைபெறுவதாக இருந்தது. நான் நண்பர் மேல் உள்ள மதிப்பில் சற்று சீக்கிரமே போய்விட்டேன். அங்கே அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வர ஆரம்பித்தார்கள்.சரியாக 6 மணிக்கு நல்ல பழைய கீர்த்தனை மற்றும் பாமாலைப் பாடல்களில் இருந்து துதிப்பாடல்கள் பாடப்பட்டது. பாடல் பாடும்போது, எனக்கு முன் வரிசையில் நான் முகநூலில் நன்கறிந்த ஒரு நண்பர் வந்து அமர்வதைக் கவனித்தேன். எத்தனையோ கருத்து மோதல்கள் அவருடன் இருப்பினும், தேவன் அவருக்கு கொடுத்த தாலந்துகள் மற்றும் கிருபைகள் கண்டு வியந்திருக்கிறேன். உடனே எழுந்து அவரிடம் சென்று ஹலோ சொல்ல நினைத்தேன். கூட்டம் முடிந்த பின் அல்லது ஏதாவது இடைவெளியில் அவருடன் பேசலாம் என்று நினைத்து அவர் என்னை அடையாளம் காண்கிறாரா என்று பார்க்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
அதன் பின் என் நண்பர் மேடையேறி, மைக் பிடித்து, :”ராஜா நீர் செய்த நன்மைகள் அவை சொல்லி முடியாதையா ஏறெடுப்பேன் நன்றி பலி என் ஜீவ நாளெல்லாம்” என்ற பாடலை உணர்ச்சிகரமாக பாடினார். அதன் பின் எப்படியெல்லாம் தேவன் தன்னை கடந்த நாட்களில் ஊழியத்திக் நடத்திவந்தார் என்பதை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். அதில் ஒரு வார்த்தை என் மனதில் சட்டென்று பதிந்தது. “எத்தனையோ பேர் கோடிக்கணக்கில் செலவழித்தும் ஊழியத்தில் ஆடம்பர பகட்டு இருக்கும் அளவுக்கு ஆத்துமாக்களை அறுவடை செய்ய முடியாமல் இருக்கின்றனர். ஆனால் தெருக்கோடியில் இருந்த என்னை பல கோடி ஆத்துமாக்களை ஆண்டவருக்காக ஆதாயம் செய்யவும் ஆறுதல் படுத்தவும் தேவன் கிருபையாய் இந்த ஏழைக்கு இரங்கினாரே!!” என்று கண்ணீர் மல்க அவர் சொன்னார். தேவன் ஒரு மனிதனை எடுத்து பயன்படுத்த வேண்டுமானால், கீழ்ப்படிதல் எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்குவதாக நண்பரின் சாட்சி இருந்தது.
இதற்கிடையே என் முகநூல் நண்பர் என்னை நன்றாக பார்க்கக் கூடிய வாய்ப்பிருந்தும் நான் பார்க்கும் போதெல்லாம் அவர் முகம் வேறு பக்கம் திரும்பி இருந்ததையும் கவனித்தேன். ஒருவேளை அவர் நடைபெறும் நிகழ்ச்சியில் மனம் ஒன்றி போயிருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டேன். கூட்டம் இனிதே முடிந்து. அனைவருக்கும் நல்ல உணவு உண்டு, தயவு செய்து உணவு உண்டு செல்லவும் என்று வேண்டுகோள் விடப்பட்டது. ஆஹா, முகநூல் நண்பருடன் பேச நல்ல வாய்ப்பு என்று நினைத்தேன். இறுதி ஜெபத்திற்காக அனைவரும் கண் மூடினோம். மிகவும் வயதான ஒரு தேவ மனிதர் என் நண்பரையும் வந்திருந்த அனைவரையும் ஆசீர்வதித்து ஜெபித்தார்.
கண் திறந்து பார்த்தால் என் முன்னே அதுவரை இருந்த முகநூல் நண்பர் இடத்தைக் காலி பண்ணி இருந்தார். மிகவும் வேதனையாக இருந்தது. ஏன் இந்நண்பர் என்னைப் பார்ப்பதையும், என்னுடன் பேசுவதையும் தவிர்த்துவிட்டார் என்று அங்கலாய்ப்பு. கருத்து மோதல்கள் இப்படியும் விளைவுகளை உண்டாக்க முடியுமா என்று மனதிற்குள் ஆச்சரியமாக இருந்தது. இதைப் பற்றி சிந்தித்தவாறே, நடந்து கொண்டிருக்கும்போது, எதிரே வந்த ஒருவர் மீது தெரியாமல் மோதி விட்டேன். சாரி சாரி என்று சொல்லிக் கொண்டே யார் மீது மோதினேன் என்று பார்க்க ஏறிட்டு பார்த்தால், நல்ல தூக்கத்தில் இருந்து விழிப்பு வந்தது. அடடா, இது கனவுதானா. நல்ல வேளை உண்மயிலேயே அப்படி நடக்கவில்லை நடக்கவும் கூடாது என்று வேண்டிக் கொண்டு மறுபடியும் என் நித்திரையைத் தொடர்ந்தேன்.