சென்னையில் பெரம்பூர் அருகிலிருக்கும் கொளத்தூரில் சுந்தராஜ் சகுந்தலா என்பவர்களின் 3வது மகனாக பிறந்தான் "அவன்." 3வது படிக்கும்போது அவன் தந்தை ஒரு பஸ்ஸில் அடிபட்டு சென்னை சென்டரல் இரயில் நிலையம் எதிரிலிருக்கும். அரசு பொது மருத்துவமனையில் 6நாட்கள் சுயநினைவில்லாமலிருந்து மரித்துபோனார். அந்த 4 பிள்ளைகளை வளர்க்க இளம் வயதில் விதவையான தாயார் பட்ட பாடுகள் விட்ட கண்ணீர் அளக்களாகாது.இட்லி செய்து விற்றும் ஊறுகாய் செய்து விற்றும் அநேக இரவுகள் கண்ணுறங்காமல் மாவறைத்தும் கிடைத்த வருமானத்தில் தன் பிள்ளைகளின் வயிற்றைக் கழுவி தான் பசியோடு படுத்த நாட்கள் எத்தனை? இப்போது "அவன்" பத்தாவது படிக்கிறான். பள்ளியில் படிக்கும் அநேகர் காரிலும், பைக்கிலும், ஆட்டோவிலும் வீடு செல்கிறார்கள். அவன் நினைக்கிறான் "ஒரு பழைய ஓட்டையான சைக்கிள் கூட நம்மால் வாங்க முடியலையே, இனி படிப்பதை விட பணம் சம்பாதிப்பது தான் குறிகோள்." ஆகவே பத்தாவது முடித்து விட்டு வேலை கற்று சீக்கிரம் பணம் சம்பாதிக்க எண்ணி கிண்டி ஐடிஐ யில் சேர்ந்தான் "அவன்". கிறிஸ்தவனாயிருந்தாலும் கிறிஸ்துவின் அன்பை அறியாதவனாகவே தன் நண்பர்களோடு அரட்டையடித்து ஓடும் இரயிலில் ஏறுவதும் இறங்குவதும், தொங்கிக் கொண்டு பயணம் செய்வதுமாக இருந்தான். ஆனால் அவன் தாயோ மிகவும் கண்ணீரோடு ஜெபித்தே சாதிக்கும் விசுவாச வீராங்கனையாயிருந்தார். 28/10/1994 அன்று காலை தன் நண்பர்களோடு வழக்கம் போல் இரயிலில் ஏறி, இறங்கி, தொங்கிக் கொண்டு ஐடிஐ க்கு செல்லும்போது நுங்கம்பாக்கத்திற்கும் கோடம்பாக்கத்திற்கும் நடுவில் இரயில் வேகமாய் போகும்பொழுது அவன் அதிகமாய் தொங்கியதால் இடையிடையே வரும் மின் கம்பங்களின் ஒன்றில் அடிபட்டு கீழே விழுந்தான். அவன் நண்பர் யாரும் அவனை காப்பாற்றவோ இரயிலை நிறுத்தவோ (மனமில்லாமல்) இயலாமல் போய்விட்டனர். இன்றைய நெருங்கிய பல நண்பர்களின் நிலை இதுதான். ஆனால் தண்டவாளத்தில் நெட்டு போள்டுகளை டைட் செய்யும் சிலர் அவன் உடலை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அவன் இறந்து போனான் என்றும் உடலை எடுத்து செல்லும்படியும் அவன் வீட்டிற்கு தகவல் தரப்பட்டது. செய்தியறிந்து விரைந்த அவன் தாய் ஏழரை ஆண்டுகளுக்கு முன்பு அடிபட்டு சுயநினைவில்லாமல் மரித்த தன் கணவர் இருந்த அதே மருத்துவமனையில் இப்பொழுது தான் பெற்ற மகனும் மரித்து விட்டானே என கதறி அழுது ஆண்டவரே என் மகனை உயிர்ப்பியும் என்று ஜெபிக்க, மரித்துபோன அவன் கைகள் அசைய ஆரம்பித்தன. உடனே அவர்கள் டாக்டரிடம் ஓடி, "டாக்டர் டாக்டர் என் பையன் சாகல, இயேசு என் மகனுக்கு உயிர்கொடுத்தார் நீங்க வந்து பாருங்க காப்பாத்துங்க" என கெஞ்சினார். உடனே மருத்துவர்கள் அம்மா உங்க வேதனை எங்களுக்கு புரியுது ஆனா நாங்க எதுவுமே செய்யமுடியாது, உங்க பையன் ஏற்கனவே செத்துபோய்ட்டான். உங்க ஆறுதலுக்காக நாங்க மீண்டும் செக்பண்றோம்னு பரிசோதிக்க அவன் நாடி துடித்தது. ஆச்சரியமடைந்த டாக்டர்கள் உடனே ஸ்கேன் எடுத்து பார்த்து கையெழுத்து வாங்கி கொண்டு ஆப்ரேஷன் செய்தார்கள். பின்பு அந்த அம்மாவிடம் "உங்கள் மகன் மூளையிலெல்லாம் பலத்த காயங்கள் இருக்கிறது. அவன் பிழைத்துக்கொண்டாலும் தான் யாரென்றே எந்த ஞாபகமும் இருக்காது" என்றனர். ஆனால் ஆண்டவராகிய இயேசுவின் மகாபெரிய கிருபையால் அவன் பரிபூரண சுகமடைந்தான். இன்றும் உயிரோடு இருக்கும் உயிர்தந்த இயேசுவைப் பற்றி சொல்லிக்கொண்டிருக்கிறான். அவன் வேறு யாருமில்லை உங்களோடு பேசிக் கொண்டிருக்கும் நான் தான் "அவன்". நீங்களும்கூட ஐயோ என் வாழ்க்கையில் இத்தனை போராட்டத்திலே நான் இருக்கிறேனே இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வில்லையா? என்று கலங்கிக்கொண்டிருக்கிறீர்களா? இயேசுவிடம் வாருங்கள்.