”வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்கிறார்.” -எரேமியா:6:16
மேற்காணும் வசனம் நான் விரும்பி தியானித்து அடிக்கடி பயன்படுத்தும் வசனமாகும். நான் சந்திக்கும் மாற்று மதத்தவர் தங்கள் நம்பிக்கையே பாரம்பரியமானது என்று நம்புகிறவர்கள். அவர்களுக்கு இந்த வசனமானது சரியான பதிலாக அமைகிறது.
# வழிகளே நல்ல வழி எது ? # பாதைகளிலே பூர்வ பாதை எது ? # அது ஆன்மாவுக்கு இளைப்பாறுதல் தரக்கூடியதா ? # இளைப்பாறுதல் என்பது என்ன ?
- ஆகிய உறுப்புகளை தியானிக்கையில் எந்தவொரு மனுஷனும் தொடப்படுவான் என்பது நிச்சயமாகும். ஆன்ம இளைப்பாறுதலுக்காக தவிக்கும் ஒருவர் தன் வழிகளையே முந்தி ஆராயவேண்டும் என்கிறது, இந்த வேதப் பகுதி. அந்த வழிகளில் தீயவழியும் இருக்கலாம், ஒருவர் தான் நல்ல வழி என்று நினைத்துக்கொண்டிருப்பதே கூட தீதான வழியாக இருக்கலாம். அவையே ஆன்மாவின் அலைச்சலுக்கும் அமைச்சலற்ற தன்மைக்கும் காரணமாக இருக்கிறது. சரியான வழி இன்னதென்று சொல்லக்கூடியவர்களும் நம்மோடு இருக்கிறார்கள். அவர்களை அடைந்துகொள்வதே ஆன்ம இளைப்பாறுதலுக்கான முதல் முயற்சியாக இருக்கும். சரியான நல்ல வழி என்பது பூர்வ பாதைகளோடு நம்மை இணைப்பதாக இருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.அப்படியானால் பூர்வ பாதை எதுவென்பதை அறிந்திருக்கவேண்டும்.
அடுத்து இளைப்பாறுதல் பற்றி என்ன ? இதனை நம் சமுதாயத்தில் மனநிம்மதி என்றும் ஆன்ம சாந்தி என்றும் சொல்லுகிறார்கள். ஒருவருடைய ஆன்மா எப்போது சாந்தியடையவேண்டும் ? மரித்தபிறகா ? உயிரோடிருக்கும் போதா ? உயிரோடிருக்கையில் சாந்தியடையாத ஆன்மா மரித்தபிறகு எங்ஙனம் சாந்தியடையும்? யார் அந்த ஆன்மாவை சாந்திபடுத்துவார் ? அது எப்படி நமக்கு தெரியும் ?அந்த ஆன்மா வாழ்ந்திருக்கையில் சாந்தியடையாத காரணம் என்ன ? இங்கே ஆன்மா சாந்தியடைதல் என்பது ஜீவன் அமர்ந்துவிடுதலே ஆகும். ஒருவேளை அந்த ஆன்மா சாந்தியடையாதே போனால் மீண்டும் வந்து பிறந்துவிடுமாம். அதுவே செத்தவருடைய உறவினரின் அச்சமாகும். ஆக ஒருவர் தான் வாழும் காலத்திலேயே சாந்தி பெறாவிட்டால் செத்தபிறகு அதை அடையமுடியாது என்று அறிகிறோம். மேலும் முக்தி என்றொரு விஷயமும் உண்டு. அதை பிறகு பார்ப்போம். அடுத்து மனநிம்மதி. இதைப் பெறுவதற்காக அல்லது அடைவதற்காக மாத்திரமே மனிதன் பல முயற்சிகளில் ஈடுபடுகிறான். தொழுகை மாத்திரமல்லாது தான தருமங்கள் செய்வது மற்றும் தன்னை வருத்திக்கொண்டு விரதம் இருப்பது புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்வது தீமிதிப்பது மொட்டையடிப்பது என இப்படி எண்ணற்ற பூஜா முறைகள் உண்டு. இவையனைத்துமே மனிதனால் மனிதனுக்காக நியமிக்கப்பட்டு மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக கோடிக்கணக்கான பணங்கள் வாரியிறைக்கப்படுகிறது. இன்னும் பல்வேறு பலிகள் மூலமும் ஒருவர் ஷாந்தியும் சமாதானமும் நிம்மதியும் பெற முயற்சிக்கிறார்.
ஆனால் இவையொன்றினாலும் மனிதன் தான் அடைய விரும்பும் புண்ணியங்களை அடையமுடியாது என்பதே துக்ககரமாக இருக்கிறது. இதனை மிக எளிமையாக நாம் உணரமுடியும். எப்படியெனில் ஒருவர் மீண்டும் மீண்டும் எதை செய்கிறாரோ அதை அவர் இன்னும் அடையவில்லை என்பதே பொருளாகும். உதாரணமாக ஒருவர் ஞானத்தை அடைவதற்காகப் பல்வேறு தவங்களை பல வருடங்களாக மேற்கொள்வாரானால் அதனை ஒரு கட்டத்தில் அவர் அடையவேண்டும். அவர் ஞானம் எனும் வரத்தை அடைந்தபிறகு அவர் செய்த தவங்களும் பூஜைகளும் புண்ணியம் வேண்டி செய்யப்பட்ட தான தருமங்களும் நிறுத்தப்படும். அவர் இன்னும் அதையே செய்வாரெனில் அவர் இன்னும் ஞானம் அடையவில்லை என்பதே பொருளாகும். அதேபோன்று செல்வம் / சுகம் / பல்வேறு சந்தோஷங்கள் / கல்வி / என்று சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி மனிதனை மீண்டும் செய்ததையே செய்ய வைத்திருப்பதே எதிர்வல்லமையின் அடிமைத்தனமாகும். பூர்வ பாதை அல்லது வழிமுறை என்பது இப்படிப்பட்டதல்ல. அது இயல்பானது. அது வாசலில் ஒரு பொருளை வேண்டி நிற்கும் அடிமையின் நிலையல்ல. வீட்டுக்குள் சென்று எடுத்துக்கொள்ளும் பிள்ளையின் உரிமையாகும். கடவுள் அடிமைகளையல்லாமல் பிள்ளைகளையே படைத்தார். அவர்களை நேசித்தார். அவர்கள் தேவையனைத்தும் அவரே சந்தித்தார். இதுவே இறைவன் வகுத்துக்கொடுத்த பூர்வ பாதையாகும். இதையடைவதே நமக்கு இளைப்பாறுதலாகும். அதையே நம் சமுதாயமும் தேடிக்கொண்டிருக்கிறது.
**அது இயேசு எனும் இறைமகனாரின் வடிவில் இலவசமாகவே நமக்கு அமைக்கப்பட்டிருக்கிறது. இதனை முன்னிட்டு அவர் தாமே சொன்னது என்ன ?
பிதாவினிடத்தில் சேருவது என்பதையே இந்திய சமுதாயம் ”முக்தியடைதல்” என்கிறது. முக்தியடைதல் என்பது மீண்டும் பிறவா வரமாகும்.ஏனெனில் பாரம்பரிய நம்பிக்கைகளின்படி ஒரு மனுஷன் மீண்டும் மீண்டும் பிறந்துகொண்டே இருக்கிறான். இப்படி 72,000 பிறவிகள் வரை ஒரு மனுஷன் எடுத்திருக்கிறானாம். ஒவ்வொரு பிறவியிலும் அவன் ஒவ்வொரு ஜீவராசியாகப் பிறக்கிறானாம். எனவே ஒரு சிறு எறும்புக்கும் தீங்கு நினையாதே என்று மார்க்கம் சொல்லுகிறது. ஏனெனில் அதுவும் ஒருவனுடைய பிறவியாக இருக்கலாம். யாரோ ஒருவன் தான் முக்தியடைவதற்காக எறும்பாக பிறந்திருக்கலாம். எனவே தீங்கு செய்கையில் அது பாவமாகி மீண்டும் பிறக்க செய்துவிடும் என்று அஞ்சுகிறான். பாவமே மறுபிறவிக்குக் காரணம் என அவனுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. மீண்டும் பிறவாதிருத்தலே முக்தியடைதல் என்று நம்பவைக்கப்பட்டிருக்கிறது. எனவே பூஜைகள் செய்து மகான்களுக்கு சேவகம் செய்து அவர்கள் காலைக் கழுவி குடித்து எப்படியாகிலும் முக்தியடையவே துடிக்கிறான். ( சில ”பத்தினி” பெண்கள் சந்நியாசிகளுக்கு பாலியல் சேவைசெய்தும் புண்ணியம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்கள். சமுதாயமோ அவர்களை செக்ஸ் சாமியார் என்று இகழுகிறது. (உ.ம்) நித்தியானந்தா சாமியார். )
இப்படி ஷாந்தியடைவதற்காகவும் புண்ணியமடைவதற்காகவும் முக்தியடைவதற்காகவும் போராடிக்கொண்டிருக்கும் இந்திய சமுதாயத்துக்கு கண்கண்ட தெய்வமாகவும் தேடிவந்த தெய்வமாகவும் வரப்பிரசாதமாகவும் வாராதுவந்த மாமணியாகவும் மனிதருள் மாணிக்கமாகவும் மகாத்மாவாகவும் அருட்பெருஞ் சோதியாகவும் தனிப்பெரும் கருணையாகவும் ஜகத்குருவாகவும் பரம்பொருளாகவும் வெளிப்பட்டவரே எம்பெருமான் இயேசுவானவர். அவரை அண்டினோர்க்கு எல்லாமே இலவசமாம். இன்றே அவரையடைந்து மோட்சானந்த பாக்கியத்தையும் வாழ்வில் நிம்மதியையும் ஒரேநேரத்தில் பெறுவதற்காக ஒவ்வொரு இந்தியரையும் கிறிஸ்தவம் வருந்தி அழைக்கிறது. இதுவே பூர்வ பாதை. இதுவே இறைவன் வகுத்து தந்த வழி. இதிலே ஜீவன் உண்டு. இதிலே மரணம் இல்லை.
அப்போஸ்தலர் 4:12 அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.