நெட்வொர்க் மாறலாமா, நண்பர்களே ? ஏன் வீண்பேச்சு ? இது அவரவர் தனிப்பட்ட சுதந்திரம் என்பதையும் ஒவ்வொருவருடைய சுயமரியாதையையும் ஏன் எவரும் பொருட்படுத்துகிறதில்லை ? ஒரு பையன் பல இலட்சம் செலவில் ஒரு காலேஜில் சேர்க்கப்பட்டு மூன்றாவது வருடம் ஏதோ பிடிக்காமல் ஒரே பிடியில் நிற்கிறான், இனி காலேஜுக்கே போகமாட்டேன்... இன்னும் ஒரு வருடம் தானே முடிச்சிட்டு வாடா, என்றால் கேட்கிறதில்லை. அவன் காலேஜ் மாற யார் காரணம் ? இந்திய அரசியலைப்பு சட்டத்தில் இனத்தையும் மதத்தையும் எவன் தந்திரமாக இணைத்து வைத்தானோ அவனே முதல் குற்றவாளி என்பேன்.
மதமாற்றம் பற்றிய சூடான பதிவுகளை அடிக்கடி பார்க்க முடிகிறது. கட்டாய மதமாற்றம் என்பது ஆட்சேபனைக்குரிய செயல்தான். அதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை.
ஆனால், பிரச்சினைக்குரிய ஆணிவேரை கண்டறிந்து, அதனை களைய முயலாமல், மதமாற்றம் செய்பவர்களை மட்டும் கண்டிப்பது பொருளற்றதாக ஆகி விடும்.
ஏன் மதமாற்றம் செய்யப்படுகிறது?
இந்து மதத்தில் பன்னெடுங்காலமாக நிலவி வரும் சாதிய ஏற்றத்தாழ்வுகள், பிற மதத்தை தழுவும் இந்துக்களால் மிகப்பெரிய விமர்சனமாக முன்வைக்கப்படுகிறது. சாதியின் பேரைச் சொல்லி, பிறரை தீண்டத்தகாதவனாக தாழ்த்தி வைக்கும் அவலம் இந்து மதத்தில் நிலவுகிறது. மற்ற மதங்களில் உட்கூறுகள் இல்லாமல் இல்லை. இருப்பினும், இந்து மதத்தில் கொஞ்சம் கண்ணை உறுத்தும் அளவு சாதிய பாகுபாடுகள் உள்ளது. இது, மதமாற்றம் செய்பவர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. சுய மரியாதை காரணமாக மக்கள் இலகுவாக மதம் மாறி விடுகின்றனர்.
இரண்டாவது, வறுமை.
வாழ வழியின்றி, வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே சோகையாக போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு காசே கடவுள். அப்படிப்பட்டவர்களிடம், ‘உனக்கு மதம்தான் முக்கியம்; காசு வாங்கி, மதம் மாறி விடாதே’ என சொன்னால் அது அபத்தம்.
ஆக, இந்த இரண்டையும் எதிர்கொள்ள வேண்டியது அவசியம்.
இந்துகளின் உரிமைகளுக்காக போராடுவதாக சொல்லிக் கொள்பவர்களில் எத்தனை பேர் சாதிய கட்டமைப்பை தகர்த்தெறிய தயாராக உள்ளனர்? இந்துக்களை வேறு யாரும் இழிவுப்படுத்தவில்லை; சாதி என்ற பெயரால் இந்துக்களேதான் சக இந்துக்களை இழிவுப்படுத்துகின்றனர். அனைத்து இந்துக்களும் சமம் என்ற நிலையை ஒவ்வொரு இந்துவும் உருவாக்க வேண்டும். கோடி கொடுத்தாலும் இந்து மதத்தை விட்டு, மாற்று மதத்திற்கு மாற மாட்டேன் என்று இந்துவாக பிறந்த ஒவ்வொருவரும் மனதார நினைக்க வைக்க வேண்டும். இது இந்துக்களின் கையில்தான் உள்ளது.
அடுத்து, வறுமையில் வாடும் தங்கள் மதத்தினருக்கு பொருளாதார ரீதியாக உதவுவதற்கு இந்துக்கள் ஏதாவது முறைப்படுத்தப்பட்ட திட்டத்தை வகுக்க வேண்டும். இந்துக்களின் வறுமையை பிற மதத்தினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் நிலையை மாற்றுவதும் இந்துக்களின் கையில்தான் உள்ளது.
மொத்தத்தில், இந்து மதத்தில் இருக்கும் நெருடல்களை களையாமல், மத மாற்றத்திற்காக பிற மதத்தினரை மட்டும் குற்றம் சொல்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.
கிறிஸ்தவ மார்க்கத்தை சீண்டாமல் தீண்டாமையை வளர்க்கமுடியாது என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கிறார், பெரியவர் ராம.கோபாலன். தீண்டாமை எனும் கொடுமைக்கு கிறிஸ்தவமே தடையாக இருக்கிறது என்பதையும் அறிந்து வைத்திருக்கிறார். இத்தனை திறமையும் ஞானமும் இருந்தும் தன் மதத்தின் தீமைகளைக் களைய முயற்சிக்காமல் ஒரு சிறுபான்மை சமுதாயத்தைத் துன்புறுத்தி அதினால் தன்னை வளர்த்துக்கொள்ளும் இழிசெயலில் ஏன் இவர் ஈடுபடுகிறார் என்பதே புரியவில்லை. தமிழனுக்கு சம்பந்தமே இல்லாத முக்கோ(வ)ண காவிக் கொடியைப் பட்டிதொட்டியெங்கும் ஏற்றி நெடுஞ்சாலை ஓரமெங்கும் ஆக்கிரமிப்புகளை அரங்கேற்றி வரும் இவர்கள் இதனால் விபத்துக்களுக்கும் பல்வேறு அப்பாவிகளின் உயிரிழப்புகளுக்கும் காரணமாகிறார்கள். மேலும் எங்கோ ஒரு இடத்தில் - பட்டா நிலத்தில் முறைப்படி அனுமதிபெற்று கட்டப்படும் சிறுபான்மையினரின் தொழுகை ஸ்தலங்களுக்கு விரோதமாக பொய்ப் புகார்களைக் கொடுத்து வன்முறையைத் தூண்டிவிட்டு சமூக நல்லிணத்துக்கு ஊறுவிளைவிக்கிறார்கள். தாயாக பிள்ளையாக உடன்பிறவா சகோதர சகோதரிகளாகப் பழகிய சமுதாயத்தை மதத்தின் பெயரால் கூறுபோட்டு சிதைக்கிறார்கள். இவர் சட்டத்தைப் பற்றியும் தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளைப் பற்றியும் அரசியலமைப்பு சட்டத்தின் கூறுகள் பற்றியும் எடுத்துரைப்பது உள்ளபடியே வேடிக்கையாக இருக்கிறது. அவரே சொல்லுவது போல கைப்புண்ணுக்கு கண்ணாடியா என்பது அவருடைய அறிக்கையை வாசித்தாலே தெரிந்துவிடும். காவி என்றால் தியாகமாம், தியாகத்துக்கும் இந்து மார்க்கத்துக்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை.
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றிய டாக்டர் அம்பேத்கார் அவர்கள் துல்லியமாக கணித்துள்ளார். தன்மானத்தோடு, எதிர்நீச்சல் போட்டு வாழும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் சலுகை இந்துக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். மதமாறினால் அவர்கள் அந்த சலுகையை இழப்பார்கள் என்பது சட்டப்பூர்வமானது. கிறிஸ்தவ மதத்தில் சாதி இல்லை என்றே மதமாற்றப்படுகிறார்கள். அப்படியிருக்கையில் சாதிய ஏற்றத்தாழ்வை நீக்க அளிக்கும் சலுகையில் மதமாறியவர்களுக்கு எப்படி பொருந்தும்?
ஒருவர் எந்த மதத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு அவர்கள் கடைப்பிடிக்கும் சடாங்காச்சாரங்கள்தான் நிரூபணம். அதுமட்டுமல்ல கிறிஸ்தவ சர்ச்களில் பதிவேடு உள்ளது. அதில் பெயர் பதிவு செய்பவர்கள், சர்ச்சால் ஞானஸ்தானம் செய்யப்பட்டவர்கள். அப்படியிருக்கையில் கண்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு, சர்ச் நிர்வாகத்தின் பதிவேட்டை சரிபார்த்தால் அவர் மத மாறியவரா, இல்லையா என்பது தெரிந்துவிடப்போகிறது.
சட்டத்தை ஏமாற்றி சலுகை அனுபவிப்பதை நியாயப்படுத்த முடியாது. சட்டம் என்ன சொல்கிறதோ அதுதான் நீதிமன்றத்தின் தீர்ப்பாகவும் இருக்க முடியும். சென்னை உயர்நீதி மன்றம் ஜெயராஜ் என்பவரது மனு மீது தரப்பட்டுள்ள தீர்ப்பு, இட ஒதுக்கீடு சலுகை சட்டத்திற்கு முரணானதாக உள்ளது என்றே நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
சர்ச் நிர்வாகத்தின் கீழ் உள்ள எந்த கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டு கொள்கை பின்பற்றப்படுவதில்லை. ஆனால் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் பெரும்பாலானவை அரசின் நிதியால் இயங்குகின்றன. அப்படியிருக்கையில் மதமாறிய கிறிஸ்தவர்களுக்கு இந்து எஸ்.சி., எஸ்.டி. சலுகையை வழங்கினால், இந்துக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். அவர்களது உரிமை பறிபோகும்.
இந்தத்தீர்ப்பு, தன்மானத்தோடு வாழும் இந்துக்களின் சமூக நீதியை மறுப்பதற்கு சமமாகும். மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு சர்ச் பின்புலம் இருக்கிறது, தன்மானத்தோடு சமூக நீதிக்காக போராடும் இந்து எஸ்.சி., எஸ்.டி., சலுகையிலும் பறிக்கப்பட்டால், அவர்கள் கட்டாய மதமாற்றத்திற்கு தள்ளப்படுவார்கள். இந்து முன்னணி இந்து எஸ்.சி., எஸ்.டி.க்களுக்கான வாழ்வாதாரத்திற்கு ஆதரவாக போராடும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.