ஐசான் என்ற வால் நட்சத்திரத்தை கடந்த ஆண்டு ரஷிய விஞ்ஞானிகள் டெலஸ்கோப் மூலம் கண்டுபிடித்தனர். இந்த நட்சத்திரம் பூமியை நெருங்கி வந்தது.
ஒளிரும் இந்த நட்சத்திரத்தை நேற்று முன்தினம் இரவு அனைவரும் வெறுங்கண்ணால் பார்க்க முடியும் என அறிவிக்கப்பட்டது. எனவே, அதைப்பார்க்க உலக மக்கள் அனைவரும் ஆவலாக காத்திருந்தனர்.
எதிர்பார்த்தபடி உலகம் முழுவதும் பெரும் பரபரப்புடன் விறுவிறுப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திய ‘ஐசான்’ வால் நட்சத்திரம் சூரியனை நெருங்கியது. அதைத்தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் அதை காணவில்லை. சூரியனை நோக்கி படுவேகமாக பாய்ந்து சென்ற ஐசான் வால் நட்சத்திரம் அதை சுற்றி சென்ற பின்னர் திடீரென மாயமாகிவிட்டது.
அது சூரியனின் வெப்ப அலையில் சிக்கி பொசுங்கி ஆவியாகி அழிந்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதை நாசா மையமும் உறுதி செய்துள்ளது.
இதற்கிடையே சூரியனை நெருங்கி மாயமான பின்னர் ஐசானின் சிதறல் தப்பி இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அது இன்னும் சிறிது காலம் கழித்து ஒளிரத் தொடங்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.
எனவே ஐசான் வால் நட்சத்திரம் முழுமையாக எரிந்து அழிந்துவிட்டதா? அல்லது அதன் சிதறல்கள் சில தப்பி பிழைத்ததா என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.
ஐசான் வால்நட்சத்திரம் சூரியனை வியாழக்கிழமை இரவு மிக நெருக்கமாகக் கடந்து செல்லும்போது சூரிய ஈர்ப்பு விசையிலிருந்து தப்பினால் வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) மாலை 5 மணி முதல் சூரியன் மறையும் வரை வால் நட்சத்திரத்தைப் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
சூரிய மண்டலத்தின் விளிம்புப் பகுதியில் உள்ள ஊர்ட் மேகப் பகுதியிலிருந்து ஐசான் வால்நட்சத்திரம் சூரியனை நோக்கி வருகிறது. சூரியனின் அருகில் செல்லச்செல்ல ஐசான் வால்நட்சத்திரம் அதிகப் பிரகாசமடைந்து காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்த நூற்றாண்டின் மிகப் பிரகாசமான வால்நட்சத்திரமாக கருதப்படும் ஐசான், சூரியனை 12 லட்சம் கிலோமீட்டர் அருகாமையில் கடக்கிறது. சூரியனை மிக நெருக்கமாகக் கடந்து செல்லும் இந்நிலையில், அதன் ஈர்ப்பு விசையால் வால்நட்சத்திரம் பாதிக்கப்படலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சூரிய ஈர்ப்பு விசையில் இருந்து தப்பினால் ஐசானை வெள்ளிக்கிழமை மாலை வரை பார்க்கலாம் என அவர்கள் தெரிவித்தனர்.