"முல்லா ஒருமுறை தன் வீட்டில் மாட்டுவதற்காக கடிகாரம் ஒன்றை வாங்கி வந்தார். சுவரில் கடிகாரத்தை மாட்ட ஆணி அடிக்கலாமென சுத்தியல் தேடினார். கிடைக்கவில்லை.. பக்கத்து வீட்டுக்காரரிடம் இரவல் கேட்டு வாங்கலாமென நினைத்தார். ஆனால், இந்த இரவு நேரத்தில் பக்கத்து வீட்டு கதவைத் தட்டி சுத்தியல் கேட்டால் அவர் என்ன நினைத்துக் கொள்வாரோ என நினைத்து மறுநாள் காலையில் கேட்டுக் கொள்ளலாம் என்று தீர்மானித்தார்.
ஆனால், மறுநாள் காலையில் பக்கத்து வீட்டுக்கு முல்லா கிளம்பும் போதே ஒரு யோசனை... "சுத்தியலை இரவல் கேட்க காலங்காத்தால வந்துட்டான் பாரு"- னு அவர் நினைச்சிட்டா என்ன பண்றது? சரி.. பிறகு போய் வாங்கிக்கலாம் என்று விட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய்விட்டார் முல்லா.
இப்படி ஒவ்வொரு முறை முல்லா பக்கத்து வீட்டுக்காரரிடம் சுத்தியலை இரவல் வாங்க கிளம்பும் போதும்.. "விளக்கு வைக்கற நேரத்தில சுத்தியல இரவல் கேட்டு வந்திருக்கான் பாரு".... "வெள்ளிக்கிழமை அதுவுமா சுத்தியலை யாரவது கடன் கொடுப்பாங்களா .." பக்கத்து வீட்டுக்காரர் இப்படி எதாவது சொல்லிவிட்டால் அவமானமாக போய்விடுமே என்று தயங்கி தயங்கியே சுத்தியலை இரவல் கேட்காமல் பல நாட்களை கழித்துவிட்டார் முல்லா.
மாட்டப்படாத கடிகாரம் அடிக்கடி முல்லாவின் கண்களில் பட்டு வெறுப்பேற்றிக் கொண்டிருந்தது.
ஒரு நாள் முல்லா விருட்டென்று பக்கத்து வீட்டுக்குச் சென்றார். "யோவ்.. உன் சுத்தியும் வேணாம்.. ஒண்ணும் வேணாம்.. அத நீயே வெச்சுக்கோ" என்று சத்தம் போட ஆரம்பித்தார். பக்கத்து வீட்டுக்காரருக்கோ ஒன்றுமே புரியவில்லை"..
நகைச்சுவை கதையாகத் தெரிந்தாலும் இது தெரிவிக்கும் ஆழமான கருத்தையும் நாம் உணர வேண்டும். இதில் வரும் முல்லாவைப் போலத் தான் கணவன் மனைவி தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாகச் பகிர்வதைத் தவிர்த்து மனசுக்குள்ளேயே போட்டுப் புழுங்குகின்றனர். இறுதியில் உறவை அறுத்து எறியும் அளவுக்கு பெரிய சண்டை அவர்களுக்குள் ஏற்படுகிறது.
இந்த நோய்க்கான வைத்தியமும் முக்கியம், நோயே வராதவாறு தடுப்பு முறைகளை கையாளுவதும் மிக முக்கியம்..