உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரப்புவோர் மீதும் பதுக்குவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநில அரசுகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
முன்னதாக, மேற்கு வங்கம், பீகார், மேகாலயம், மிஜோரம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சில மாவட்டங்களில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியதால் ஒரு கிலோ உப்பின் விலை ரூ.300 வரை விற்கப்பட்டது.
இதுகுறித்து, பிகார் மாநில முதன்மைச் செயலாளர் (உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு) ஷிசிர் சின்ஹா வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களின் சில மாவட்டங்களில் உப்புக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதாக வதந்தி பரவியதால் ஒரு கிலோ உப்பு ரூ.150க்கு விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக 21 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதுமான உப்பு கையிருப்பில் உள்ளது. தட்டுப்பாடு இருப்பதாக பரவும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். தொடர்ந்து வதந்தியைப் பரப்புவோர் மீதும், உப்பை பதுக்குவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதுபோல மேற்கு வங்க மாநிலம் டார்ஜீலிங், வடக்கு தினஜ்பூர், தெற்கு தினஜ்பூர், கூச் பெஹர் மற்றும் ஜல்பைகுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு கிலோ உப்பு ரூ.100-க்கு விற்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக மேற்கு வங்க அரசு வெளியிட்ட அறிக்கையில், "மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவுப்பொருள் மற்றும் வழங்கல் துறையின் புள்ளிவிவரப்படி உப்புக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை. சுயலாபம் கருதி வெளியிடப்படும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். வதந்தியைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
இதுபோல, அசாம், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம், மேகாலயம், மிஜோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் வதந்தி காரணமாக ஒரு சில இடங்களில் ஒரு கிலோ உப்பின் விலை ரூ.300 வரை விற்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, போதுமான உப்பு கையிருப்பு இருப்பதாகவும் வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன.