இந்த செய்தியை வாசித்ததும் ஒரு நம்பிக்கை பிறந்தது. இதேபோல ஒவ்வொரு தேசத்தின் அரசும் முனைப்புடன் நின்று செயல்பட்டால் இணையத்தில் பரவியிருக்கும் அனைத்து ஆபாசங்களையும் முடக்கிவிடமுடியுமே ?!
குழந்தைகள் ஆபாசப்படங்கள் இணையதளத்தில் வெளிவருவது தொடர்பாக கனடா நாட்டு காவல்துறை மொத்தம் 348 பேரைக் கைது செய்துள்ளனர்.
குழந்தைகள் ஆபாசப்படங்கள் இணையதளத்தில் வெளிவருவது குறித்த பொதுவான ஒரு குற்றச்சாட்டு இருந்து வந்தது. கனடா நாட்டில் செயல்பட்டுவரும் அசோவ்பிலிம்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் இத்தகைய செயல்பாடுகள் காணப்படுவதாக வந்த தகவலின் பேரில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் காவல்துறையினர் அந்த நிறுவனத்தின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஆரம்பித்தனர்.
அமெரிக்காவின் தபால் புலனாய்வு சேவை இவர்களுக்கு தகவல்கள் அளித்து உதவி புரிந்தது. கடந்த மூன்று வருட விசாரணையைத் தொடர்ந்து டொராண்டோ காவல்துறையினர் இந்தக் குற்றம் தொடர்பாக கனடாவில் 108 பேர், அமெரிக்காவில் 76 பேர், ஸ்பெயின், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் 164 பேர் என்று மொத்தம் 348 பேரைக் கைது செய்துள்ளனர்.
இந்தத் தகவல் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுடன் நெருங்கிய தொடர்பு கொள்ளும் 40 பள்ளி ஆசிரியர்கள் ,9 மருத்துவர்கள்,32செவிலியர்கள், 6 சட்ட அமலாக்க அதிகாரிகள்,9 மத போதகர்கள், 3 வளர்ப்பு பெற்றோர்கள் போன்றவர்களும் இதில் அடங்குவர் என்று செக்ஸ் குற்றவியல் பிரிவின் தலைவரான இன்ஸ்பெக்டர் சோனா பெவன் டெஸ்ஜார்டின்ஸ் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா, ஸ்பெயின், அயர்லாந்து, கிரீஸ், தென் ஆப்பிரிக்கா, ஹாங்காங், மெக்சிகோ, நார்வே மற்றும் அமெரிக்காவில் இருந்து 30காவல்துறைப் படையினர் இந்த விசாரணையில் ஈடுபட்டனர். 3,50,00 லட்சத்திற்கு மேற்பட்ட புகைப்படங்களும், 9,000 வீடியோக்களும் இந்த விசாரணையில் சிக்கியுள்ளன.
இதனைத் தொடர்ந்து இந்த இணையதள நிறுவனம் மூடப்பட்டுள்ளது. கைது நடவடிக்கைகள் தொடர்ந்து வருவதாகக் கூறிய டெஸ்ஜார்டின்ஸ் இதுவரை 386 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் இந்த நடவடிக்கை மூலம் காப்பாற்றப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.