இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாகவும் தமிழ்நாட்டின் தலைநகராகவும் விளங்கக்கூடிய சென்னை நகரத்தில் சிறுபான்மையினரான கிறிஸ்தவ மக்கள் வாரத்துக்கொரு முறை கூடி க்டவுளைத் தொழும் ஸ்தலத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்து வெறியர்கள் முற்றுகையிட்டு கலவரம் செய்து உள்ளே ஆராதித்துக்கொண்டிருந்தவர்களை பூட்டிவைத்திருக்கின்றனர். இதுபோன்ற மத அடிப்படைவாத சக்திகளின் காட்டுமிராண்டித்தனத்தினால் சமுதாயத்தில் அமைதியாக வாழும் மக்களிடையே பதட்டம் அதிகரித்திருக்கிறது. இப்படிப்பட்ட போக்கு உடனே தடுத்து நிறுத்தப்படவேண்டும்.
குடியிருப்பு பகுதியில் ஊழியம் செய்ததால் கிறிஸ்தவர்களை ஆலயத்தில் வைத்து பூட்டிய இந்து முன்னணியினர்
கோயம்பேடு, நவ.10–
கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் 2–வது தெருவில் பெத்தேல் ஜெப ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் 4 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. அங்கு தேவஅன்பு என்பவர் ஊழியம் செய்து வந்தார்.
குடியிருப்பு பகுதியில் புதிய ஆலயம் அமைக்கப்பட்டதற்கு அந்த பகுதி மக்களும் இந்து முன்னணியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அப்போது பேச்சு வார்த்தை நடத்தினர். ஊழியம் செய்வதற்கு கலெக்டர் மற்றும் நீதிபதியிடம் அனுமதி வாங்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து ஆலய நிர்வாகிகள் இனி ஊழியம் செய்ய மாட்டோம். சேவை மட்டுமே செய்வோம் என்றதால் சமரசம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2 வாரமாக இந்த ஆலயத்தில் ஊழியம் செய்யப்பட்டது. இன்று காலை 40–க்கும் மேற்பட்டவர்கள் ஆலயத்துக்குள் இருந்தபடி ஊழியம் செய்தனர். இதையடுத்து இந்து முன்னணி மாநகர பொதுச் செயலாளர் இளங்கோவன் தலைமையில் நிர்வாகிகள் அங்கு திரண்டனர். அவர்கள் 40 பேரையும் கிறிஸ்துவ ஆலயத்துக்குள் வைத்து பூட்டு போட்டு பூட்டினர்.
இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோயம்பேடு பஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சாம் வின்சென்ட் மற்றும் போலீசார் விரைந்து சென்று பூட்டை உடைத்து 40 பேரையும் மீட்டனர்.
இது தொடர்பாக இரு தரப்பினரும் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.