ஒரு மனிதன் இரட்சிக்கப்பட்டவுடன் தம் அண்டை அயலாரும் இந்த இரட்சிப்பின் அனுபத்தை அடைய வேண்டும் என்று எண்ணுவது இரட்சிப்பு எனும் கிருபை வரத்தின் சிறந்த சாராம்சம். சுயநல மனிதன் தன் கிறிஸ்தவ விசுவாசத்தின் முதல்-அடியிலேயே பொதுநல சிந்தை உடையவனாய் மாறுவதே ஒரு அதிசயம். சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு பலரும் இரட்சிப்படைய வேண்டும் என்ற மனோநிலை சரியானதே என்றாலும், சுவிசேஷம் அறிவிக்க நாம் எடுத்துக் கொள்ளும் வழிமுறைகள் சரியானது தானா என்று நிதானிக்க வேண்டும். சமீப காலங்களில் வேற்று மத சித்தாந்தங்களை பரிசுத்த-வேதாகமத்தோடு ஒப்பிட்டு நற்-செய்தி அறிவிக்க முயலுகின்றனர். இதுபோன்ற சில கிறிஸ்தவர்கள் தங்கள் அறியாமையினாலும் ஆர்வத்தினாலும் ‘பிராஜாபதி’ என்ற ரிக்-வேதத்தின் அவதார புருஷனை தங்கள் இஷ்டத்திற்கு எடுத்தாழுகிறார்கள். இவர்கள் ‘பிராஜபதியே’ ‘இயேசு-கிறிஸ்து’ என்று வாதிடுவர். அவ்வாதத்தை வலுவூட்ட இவர்கள் செய்யும் மூன்று அறியா தவறுகள்.
சமஸ்கிருத ஸ்லோகங்களுக்கு தவறான வியாக்கியானம்.
இந்து வேதங்களில் இல்லாத ஸ்லோகங்களை அறிமுகப்படுத்துவது.
உணர்ச்சிவசத்தினால் சரியான ஆதாரங்களும், ஆராய்ச்சிகளும் இல்லாமல் கேட்ட (அ) படித்த ஸ்லோகங்களையும் அதன் அர்த்தத்தையும் அப்படியே நம்புவது. நம்பியதை மற்றவரிடத்தில் திணிக்க முயல்வது.
சிலரின் இந்த தவறினால் பெரும்பாலான கிறிஸ்தவர்கள், கிறிஸ்து கன்னியினிடத்தில் பிறந்தது, அவரது பாடுகள், மரணம், உயிர்த்தெழுதல் என எல்லாமே இந்து-மத வேதங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது என்று நம்பும் நிலைக்கு ஆளாகின்றனர். உண்மை என்னவெனில் எந்த இந்து-மத வேதங்களும் கிறிஸ்துவின் வாழ்வையோ, மனு-குலத்தின் பாவத்திற்காக அவர் அடைந்த பாடுகளையோ, அவரது உன்னத தன்மைகளையோ கடுகளவேனும் குறிப்பிடவில்லை.
வேற்று மத-சித்தாந்தங்களை கிறிஸ்துவோடு கலப்பவர்கள் பரிசுத்த-வேதாகமத்தைக் குறித்த தவறான (அ) இழிவான இரு நிலைப்பாட்டிற்குக்குள் சிக்கிக் கொள்கின்றனர்.
பரிசுத்த வேதாகமம் கடவுளால் அருளப்பட்ட தன்னிகரற்ற புத்தகம் அல்ல. பரிசத்த-ஆவியால் அருளப்பட்ட வேறு சில புத்தகங்களில் இதுவும் ஒன்று. இந்து, பௌத்த, சீக்கிய வேதங்களும் பரிசுத்த ஆவியால் அருளப்பட்டது என்னும் நிலைப்பாட்டை காலப்போக்கில் ஏற்றுக் கொள்ளும் மனோ-நிலையை வளர்த்துக் கொள்கின்றனர்.
பரிசுத்த-வேதத்தில் சொல்லப்ட்டிருக்கும் கொள்கைகள், பரிகாரங்கள், பலிகள் என பலவும் ஆரிய வேதங்களில் இருந்து கடன் வாங்கப்பட்டது எனும் கருத்தை பலரது மனதில் பசு-மரத்தாணி போல பதித்து விடுகின்றனர்.
பரிசுத்த-வேதாகமத்தை விசுவாசிக்கும், சுவாசிக்கும், வாசிக்கும் எவருக்கும் மேலுள்ள நிலைப்பாடுகள் அதிர்ச்சியாகவே இருக்கும். ஆனால் வேதம் நமக்கு கற்று தருவதை நினைவில் கொண்டு வாருங்கள்.
வேதத்தை ஒருவர் சித்தரிக்கும் விதத்திலேயே அவர் வேதத்தின் மீது கொண்டுள்ள புரிந்துகொள்ளுதலை எளிதில் கணித்துவிடலாம். வேதாகமத்தை கடவுளின் வார்த்தையாக விசுவாசிபவர் அதை தனித்தன்மையுடையதாய் போற்றுவர். முழு வேதாகமும் பரிசுத்த-ஆவியானவரின் அகத்-தூண்டுதலால் எழுததப்பட்டது என்பதை உணர்ந்து நடுங்குவர். வேதாகமத்தை வேறெந்த புத்தகங்களுடன் ஒப்பிடுவதை சிந்தனையில் கூட நிறுத்த மாட்டர். இவர்கள் தேவ-வார்த்தியினால் உலகத்தின் படைப்பு, பிசாசின் வஞ்சகம், மனிதனின் வீழ்ச்சி, மற்றும் இயேசு-கிறிஸ்துவின் மூலம் ஏற்படுத்தப்பட்ட புதிய உடன்படிக்கை ஆகியவற்றை மனதார விசுவாசிப்பவர்கள்.
சகோதரர்களே, ஒப்பற்றதும் நிகரில்லாததுமாகிய தேவனால் நமக்கு கொடுக்கப்பட்ட கொடையாம் பரிசுத்த-வேதாகமத்தை எந்த ஒரு புத்தகதோடும் (அ) சித்தாந்ததோடும் ஒப்ப்பிட அனுமதிக்கலாமோ?
வேதத்தை வேதத்தைக் கொண்டே அறிமுகம் செய்யுங்கள்... கிறிஸ்துவை பரிசுத்த வேதாகமம் காட்டும் கிறிஸ்துவாகவே பிரசங்கியுங்கள்.. பிரஜாபதியாக அல்ல.