அருமையானதொரு (சுவிசேஷ) புத்தக ஆய்வு கட்டுரையை படைத்து பதித்திருக்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள். இந்த கட்டுரையின் முக்கியத்துவம் கருதி இது“போதனைகள்” பகுதிக்கு மாற்றப்படுகிறது. இதுபோன்ற ஆக்கப்பூர்வமான கட்டுரைகளைத் தொடர்ந்து பதிக்கவும் வாழ்த்துகிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
மத்தேயு கிறிஸ்துவை யூதர்களுக்கு மாமன்னராக அறிமுகம் செய்கிறார்.
மாற்கு அவரை யெகோவாவின் சேவகனாக ரோமர்களுக்கு அறிவிக்கிறார்.
யோவான் இயேசுகிறிஸ்துவை தேவ குமாரனாக ஆட்சேபனைக்கு இடமின்றி வெளிப்படுத்துகிறார்.
லூக்காவோ அவரை பாவிகளுக்கு மீட்பராக வந்த பழுதற்ற மனிதனாக பாவிகளை மீட்க வந்த,மனுக்குலத்துக்கு தேவமகனாக உணர்ச்சிப்பூர்வமாக அடையாளப்படுத்துகிறார்.
புதிய ஏற்பாட்டில் 28% பகுதியை உள்ளடக்கிய இரண்டு பிரதான நூல்களான மூன்றாம் நற்ச்செய்திநூல் மற்றும் அப்போஸ்தலர் நடபடிகள் ஆகிய இரண்டு புத்தகங்களையும் தேவ ஆவியானவரின் வெளிச்சத்தில் வடித்துக் கொடுத்தவர் லூக்கா. இவர் ஒரு வைத்தியராக இருந்திருக்கக்கூடும் என்றும் கிரேக்கப் பின்னனியத்தைக்கொண்ட ஒரு ரோம பிரஜையாக வாழ்ந்திருக்கக் கூடும் என்றும்,பவுலின் உத்தமக் கூட்டாளிகளில் ஒருவர் என்றும் (‘நாங்கள்’ என்று வரும் பகுதியில் அவரும் ஒருவர் என்றும் – அப்.16:1-17/20:4 – 21:18/27:1-28:16) வேதபண்டிதர்கள் கருதுகிறார்கள். பவுலின் இரண்டு ரோம சிறைவாசத்தின் போதும் இவர் உடன் இருந்தவர் என்றும் கூறப்படுகிறது(பிலி.2:4/2 திமோ.4:11).
கடவுளின் நண்பன் என்று அர்த்தம் கொள்ளும் தியோப்பிலஸ் என்பவருக்குகே இந்த நூல் எழுதப்பட்டதாக அவர் துவக்கும் அழகு அவர் சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் வாழ்ந்த ஒருவராக அவரை நமக்குத் தெரிவிக்கிறது. அவரே புறவினத்தவருக்கு நற்ச்செய்தி வழங்க இந்நூலை எழுத வைத்தியர் லூக்காவை தூண்டியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. எருசலேம் ஆலயம் இடிக்கப்படும் முன் இந்நூல் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது சரித்திர ஆசிரியர்களின் கணிப்பு.
ஆம்! சகலமானவர்களுக்கும் மீட்பு என்பது லூகாவில் எதிரொலிக்கும் செய்தி. யூதரல்லாத புறவினத்தவருக்கும் பூரண மீட்பு வழங்கப்பட்டுள்ளது என்பது லூக்கா ஆசைபொங்க சொல்லும் அருட்செய்தி.
இயேசுகிருஸ்துவின் பிறப்பு, வளர்ப்பு, மனித வாழ்வில்பங்கேற்பு, பாவப் பரிகாரமாக மனுவோடு இணைப்பு, பின் மீட்பு, உயிர்பிப்பு என ஒரு வரலாற்று நூல்போல நுணுக்கமாக, தெளிந்த பார்வையோடு வடித்துத் தந்துள்ளார்.
எபிரேயருக்கு எழுதின நிருபம்போலவே லூக்காவின் இரண்டு படைப்புகளும் அழகிய நடையில், தேர்ந்த கிரேக்க உரைநடையில் எழுதியிருப்பது இந்நூலின் சிறப்பு.
விதவிதமான பல்வேறு மக்கள், முக்கிய நிகழ்வுகள் என எல்லாவற்றையும் உன்னிப்பாகப் பார்த்து எழுதப்பட்டுள்ளது. இவரது இரண்டு நூலும் அவரது ஆய்வுத்திறனுக்குச் சான்றளிக்கிறது.
யூதரல்லாத புறவினத்தவருக்கு என்று தனது நற்செய்தி நூலை எழுதியிருக்கும் இவர் அதை மிக நேர்த்தியாக நிறைவேற்றியுள்ளார்.
மன்னிப்பு பெற்ற கள்வன், ஆட்டு இடையர்கள் வரவு, சகேயுவோடு சந்திப்பு, நல்ல சமாரியன் உவமை, இளைய குமாரன் கதை, எம்மாவுக்குப் பயணமான சீடர்கள் முதலான பல தகவல்கள் வேறு நற்செய்தி நூலில் சொல்லப்படாதவை.
அப்படியே, எலிசபெத், மரியாள், அன்னாள், மார்த்தாள் என்று பல பெண்களுக்கும், சின்னஞ்சிறாருக்கும் இவரது நூலில் தனியிடம் அளிக்கப்பட்டிருப்பதும் கவனிக்கப்பட வேண்டியது.
பாரபட்சமின்றி இயேசு எல்லாருக்கும் மீட்பர் என்பதை வலியுறுத்துவதற்காக அவர் முன் வைக்கும் நிஜ கதாப்பாத்திரங்கள் இவர்கள்.
கிறிஸ்து அனுபவித்த சிலுவைப்பாடுகளை சித்தரிக்கும்போது பிலாத்து இவரிடம் ஒரு குற்றத்தையும் காணேன் என்று மும்முறை அறிக்கை செய்ததை இவர் பதிவு செய்திருப்பதும் இயேசு கிறிஸ்துவை அப்பளுக்கற்ற மனித குமாரனாக அழகுற அவர் படம்பிடித்துக் காட்டுவதற்கு சான்றுகள்.
மரியாளின் சங்கீதம், தூதர்களின் பாமாலை, சகரியாவின் பாட்டு, சிமியோனின்கீதம் என நான்கு பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றிருப்பதும் லூக்கா நற்செய்தி நுலின் தனிச் சிறப்பு.
பாபிலோனிய அடிமைத்தனத்தின்போது கேவலமாக நடத்தப்பட்ட யூதர்கள் புறவினத்தவரை வன்மையாக அருவருத்தனர். அசுத்தரும் கடவுளுக்கு அந்நியருமாக அவர்களைக் கருதினார்கள். என்றாலும், மீட்பின் திட்டத்தில் அவர்களுக்கும் இடமுண்று என்று சொல்லவே மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் துவங்கி சகல தேசத்தாருக்கும் சொல்லப்பட வேண்டும் என்ற விரிந்த அறிவிப்போடு லூக்கா நற்செய்தி நூல் நிறைவு பெறுகிறது.
சீடத்துவத்தின் இலக்கணமும் இந்த நூலிலேயே வடிவாய் சொல்லப்பட்டுள்ளது.
கிறிஸ்துவின் பாடு மரணத்தை தத்ரூபமாக சித்தரிக்கும் லூக்கா கொல்கதா என்ற இடத்தை கல்வாரி என்று புறவினத்தவர் மொழியிலேயே தெரியப்படுத்துகிறார். இவர் மெய்யாகவே நீதிமான் என்ற நூற்றுக்கதிபதியின் உறுதிமிக்க சான்றோடு கல்வாரிச் செய்தி நிறைவுபெறுகிறது.
எருசலேமுக்காக அழுதது, கெத்சமனேயில் அவர் ஜெபித்தபோது இரத்தத்துளிகள் வெளிப்பட்டது, நாயினூர் விதவைக்கு ஆறுதல் சொன்னது போன்ற பல செய்திகள் லூக்காவில் மட்டுமே இடம் பெற்றுள்ளது.
தமது வனாந்திர சோதனையின் போது மனித குமாரனாக பிசாசை ஜெயித்துக்காட்டி விண்ணுலக தந்தையோடு அவருக்கு இருந்த அன்னியோன்னியத்தை மனித கவனத்துக்குக் கொண்டுவருகிறார். சாமானியனும் இந்த தேவ ஐக்கியத்தால், பெரும் தேவ ஆவியின் நிறைவும் வளமையும் நன்மையும் வெற்றி சிறக்கப்பன்னும் என்பது லூக்காவின் முத்திரைச் செய்தி.
கிறிஸ்த்துவின் உயிர்த்தெழுதலை சித்தரிக்கும் பொது அவர் தனிநபருக்கும், இருவர், எழுவர், பதினொருவர், சில பேர் என பலருக்கும் அவர் சாட்சி கொடுத்ததும், அவர்களை ஸ்பரிசித்துப் பார்க்கச் செய்து (24:39) அவர்களோடு சேர்ந்து உண்டதும் (24:42) அழகுற சொல்லப்பட்டுள்ளது.
மீட்பர் மேன்மையோடு சக மானிடரின் பிரதிநிதியாக பிதாவின் வலதுபாரிசம் அமர்த்தப்பட விண்ணுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதோடு இந்நூல் நிறைவுபெறுகிறது.