யோவான் 8:7 அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்...
என்று சொன்னார்,இயேசு. ஆனால் அவருடைய வார்த்தைக்கு அன்றும் இன்றும் யார் கீழ்ப்படிந்தார் ? கல்லெறிதல் தொடருகிறது.அன்று அந்த வேசிக்கும் இரக்கம் கிடைத்தது.ஆனால் ஸ்தேவானைக் கல்லெறிதலிலிருந்து காக்க ஒருவரும் இல்லை.
ஆனால் அவர்களிலிருந்து ஒருவனைத் தெரிந்துகொண்டார்,நம்முடைய இரட்சகர். ஸ்தேவானுடைய வீரம் அவன் ஆழ்மனதை உறுத்திக்கொண்டே இருந்திருக்கவேண்டும். தமஸ்குவின் வீதியில் சந்திக்கப்பட்டான். இன்றும் பேசப்படும் நிருபமாகிப்போனான். அதுவே தியாகத்தின் விளைவு.பொறுமையின் பரிசு.மன்னிப்பின் மகத்துவம். பவுலடிகள் இல்லாத புதிய ஏற்பாட்டை யார் கற்பனை செய்யமுடியும் ? உன் வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு காரணமும் அதன் பின்னணியில் தேவனுடைய சித்தமும் உண்டு என்பதை மறந்துபோகாதே. கல்லெறிபவர்கள் இருக்கும் வரை கற்களும் இருக்கும், கல்லெறியப்படுவோரும் இருப்பர். இப்படியே ராஜகுருவைப் போல வலம் வந்த தீர்க்கனான ஏசாயா தன் வாழ்நாளில் உசியா முதல் ஆறு ராஜாக்களைக் கடந்துவந்தவன் எசேக்கியா ராஜாவுக்கு போதகனாக பணியாற்றியவன் மனாசே காலத்தில் நியாயத்தை நியாயமாக சொன்ன ஒரே காரணத்தினால் வாளினால் அறுப்புண்டு மரித்தானாம். ஆனாலும் ஏசாயாவின் பணிக்காலம் முடிந்துபோனதா ? இன்றும் நம் மத்தியில் ஏசாயாவின் புத்தகம் வாசிக்கப்படவில்லையா ? நம்முடைய இரட்சகரே அவன் எழுதியதை வாசித்து அவனை கௌரவப்படுத்தவில்லையா ? இதனால் தீர்க்கதரிசிகளைக் கல்லெறிபவளே என்று ஆண்டவரும் வேதனையுடன் கதறுகிறார்.
மத்தேயு 23:37 எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.
உன் கிரியையைகளுக்கு பலன் உண்டு கர்த்தர் சொல்லுகிறார். பாவத்தின் சந்ததி கல்லெறிந்தாலும் கல்லெறியப்பட்டவர்களின் சந்ததியானது நீதியின் விருக்ஷமாகும்.